2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மாலை மணி 6.30.
போர்ட்டிகோவில் அமர்ந்து பள்ளிப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த கைலாஷ், கேட் திறக்கப்படும் ஓசை கேட்டுத் திரும்பினான். அவன் தாய் தாரணி அலுவலகம் முடிந்து சலிப்புடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள். அவளின் முக இறுக்கம் உள் மன கோபத்தை ஊருக்கே பறை சாற்றியது.
அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமில்லாத கைலாஷ், “ஏம்மா…இத்தனை நேரம்?” என்று யதார்த்தமாய்க் கேட்க,
“வாயை மூடிக்கிட்டுப் படிடா… என்னமோ நான் வேணுமின்னே லேட்டா வர்ற மாதிரியல்ல கேக்கறான் கேள்வி!”
சட்டென்று அமைதியான கைலாஷ், “இல்லம்மா… வயிறு ரொம்பப் பசிக்குது… அதான்… கேட்டேன்!” தணிவான குரலில் சொன்னான்.
“பசிக்குதுன்னா… அதா… அந்தப் பூந்தொட்டில இருக்கற மண்ணை அள்ளித் தின்னு!”
முகம் வாடிப் போன கைலாஷ், மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் புத்தகத்தில் பார்வையைப் பரப்பினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் தன் மோட்டார் பைக்கில் வந்திறங்கிய அவன் தந்தை சந்திரன், “என்னடா பயலே…! ரொம்ப அமைதியாய் படிச்சிட்டிருக்கே…! என்னாச்சு?” கேட்க, அவன் வீட்டினுள் கையைக் காட்டினான்.
“ஓ…! அம்மா திட்டிட்டாளா?” என்றவாறே ஷூக்களைக் கழற்றியபடி வீட்டிற்குள் சென்றான்.
உடைகளைக் கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து கிடந்த தாரணியிடம், “என்ன தாரணி… உடம்பு சரியில்லையா?” கேட்டான்.
“உடம்புக்கென்ன கேடு…? அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!”
“அப்புறம் ஏன் இப்படி மூட் அவுட்டாகியிருக்கே…? வழக்கம் போல் மேனேஜர் வசை பாடினானா?”
அவள் மேலும், கீழுமாய்த் தலையாட்டினாள்.
“ப்ச்… விடுடா! ஆபீஸ்ன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்… மேனேஜர்ங்கறவன் தன்னோட பவரை அப்பப்ப ரீசார்ஜ் பண்ணிக்கறதுக்காக கீழ வேலை செய்யறவங்களைத் திட்டத்தான் செய்வாங்க…! லீவ் இட்!”
“இல்லைங்க… என்னோட வேலைல ஏதாவது தப்பிருந்து திட்டினாக்கூட அதை நான் ஏத்துக்குவேன்… அதுல எந்த இடத்திலும் எந்தத் தப்புமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையா வேலை செஞ்சும்… தெனமும் காலைல நேரத்துல லேட்டா ஆபீஸூக்குப் போற ஒரே காரணத்திற்காகத் திட்டு வாங்கறதை நினைச்சாத்தாங்க ரொம்ப வேதனையாயிருக்கு…! ம்ம்ம்… உண்மையைச் சொல்லணும்னா ரொம்பக் கேவலமாயிருக்கு! என்னைத் திட்டித் திட்டி அந்த மேனேஜருக்கே சலிச்சுப் போச்சாம்… இன்னிக்குச் சொல்றார்!”
“ப்பூ… இவ்வளவுதானா உன் பிரச்சினை…? இதுக்கா இத்தனை ஃபீல் பண்றே…? இனிமேல் கரெக்டாப் போயிடு… பிரச்சினை ஸால்வ்டு”
“முடியலைங்க…! நானும் ரொம்ப முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்… எப்படியும் அஞ்சு நிமிஷம்… பத்து நிமிஷம் லேட்டாயிடுது!”
“போடா…நீ பார்த்து நினைச்சா நிச்சயம் போக முடியும்!”
“அய்யோ… அதான் முடியலைங்கறேனே!”
“ம்ம்ம்… அப்பத் திட்டு வாங்கு! என்னை ஆளை விடு”
அவளது புலம்பல் தாங்க முடியாமல் அவசர அவசரமாய்ச் சென்று பாத்ரூமினுள் புகுந்து கொண்டான் சந்திரன்.
மறுநாள் காலை, வழக்கம் போல் கண் விழித்த தாரணி டீப்பாய் மீதிருந்த டைம் பீஸைப் பார்த்தாள். மணி 6.15.
துள்ளியெழுந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். அதுவும் 6.15 என்றது.
“போச்சு… போச்சு… இன்னிக்கும் லேட்தான்!”
சமையலறைக்குள் புகுந்து பரபரப்புடன் இயங்கி, டிபன் தயாரித்து, கணவனுக்கும், கைலாஷூக்கும் டைனிங் டேபிள் மீது எடுத்து வைத்து விட்டு, பாத்ரூமை நோக்கி ஓடினாள்.
பதினைந்தே நிமிடத்தில் வெளியே வந்து அவர்களிருவருக்கும் மதிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்து விட்டு, தனக்கும் ஒரு டிபன் பாக்ஸில் போட்டுக் கொண்டு, உள் அறைக்குள் சென்றாள்.
அவள் டிரஸ்ஸிங் முடித்து, அறையை விட்டு வெளியே வரும் போது, “ஓ.கே! ம்மா… நாங்க கௌம்பறோம்!” கைலாஷைத் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் சந்திரன்.
தொடர்ந்து தானும் பேருக்கு கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டு, மணியைப் பார்த்தாள்.
8.20.
அவசர அவசரமாய்ச் செருப்பை மாட்டிக் கொண்டு, கதவையும் கேட்டையும் பூட்டிச் சாவியை பேக்கில் போட்டுக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி கால்களைச் செலுத்தினாள்.
வழக்கம் போல் பஸ் நிறை மாத கர்ப்பிணியாய் வந்து நிற்க, கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறி, காலை நேர வியர்வைக் கசகசப்பில் சிறிது நேரம் நொந்து விட்டு, தன் அலுவலக ஸ்டாப்பில் இறங்கினாள்.
மணிக்கட்டு தன்னிச்சையாய் மேலே வர, கண்கள் வாட்சைப் பார்த்தன.
8.55
“போச்சு… இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு…” வேக நடையில் சாலையை “பட்..பட்”டென்று மிதித்தாள்.
அலுவலகக் கட்டிடத்தை அடைந்து, லிப்டைப் பார்த்து, மின் தடையைச் சபித்து விட்டு, மாடிப் படிகளில் தாவித் தாவி ஓடிக் கொண்டே வாட்சைப் பார்த்தாள்.
9.05
“ம்ஹூம்… என்னை நேரத்துக்கு வர வைக்க அந்த ஆண்டவனால் கூட முடியாது!” தளர்ந்து போய், நிதான நடையில், மேனேஜர் டேபிளை நெருங்கினாள்.
வுழக்கம் போல் இல்லாமல் மேனேஜர் புன்னகையுடன் வரவேற்க, “என்ன… என்னாச்சு இவருக்கு…! அஞ்சு நிமிஷத்துக்கு மேல லேட்டாயிடுச்சு… மனுசன் சிரிக்கறார்!”
“வெரி குட் தாரணி… கீப் இட் அப்!” என்று அவர் சொல்ல, திரும்பி அலுவலகக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
8.55
“என்னது… ஆபீஸ் கடிகாரம் ஸ்லோவாகிட்டுதா?” யோசனையுடன் சென்று இருக்கையில் அமர்ந்தாள்.
மாலை.
வீடு திரும்பியவளிடம் கைலாஷ் கேட்டான். “மம்மி… நீ இன்னிக்கு லேட் இல்லைதானே?”
“ஆமாம்டா ராஜா…! என்ன அதிசயம்ன்னே தெரியலை… அஞ்சு நிமிஷம் முன்னாடியே போயிட்டேன்!”
“மம்மி… அது… வந்து… நான்தான்… நான்தான்..”
“நீதான்?”
“நான்தான் ராத்திரி உங்களுக்குத் தெரியாம டைம் பீஸிலேயும்… வால் க்ளாக்கிலேயும்… உன்னோட கைக் கடிகாரத்திலேயும்… பதினஞ்சு நிமிஷம் அதிகப்படுத்தி வெச்சிருந்தேன்!”
கூர்ந்து அவன் முகத்தைப் பார்த்த தாரணிக்கு மனசே கனத்துப் போனது.
“ச்சே…! அம்மா திட்டு வாங்கறதைத் தாங்கிக்க முடியாத இந்தச் சின்ன மனசு எப்படியொரு ஐடியா பண்ணியிருக்கு… இவனைப் போய் நான், பூந்தொட்டில இருக்கற மண்ணை அள்ளித் தின்னுன்னு திட்டிட்டேனே!”
இழுத்து அவனை இறுக அணைத்துக் கொண்டவள், மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். “கவலைப்படாத ராஜா… இனிமே அம்மா லேட்டாவே போக மாட்டேண்டா!”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings