in ,

நாய் ஸார் – (சிறுகதை ) நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நாய் கடிபட்டவங்களுக்கு அரசாங்கம் பணம் தருதாம், மக்களே… உஷாரா கேளுங்க… ‘

எஃப்.எம்.மில் ஒரு பெண் சொல்லிக்கொண்டிருக்க துள்ளிக்கொண்டு நிமிர்ந்தான் சேகர்.  

‘ என்ன… நாய் கடிச்சா கவர்ன்மென்ட் நஷ்ட ஈடு தருதா… ‘  எஃப்.எம்.மை உற்றுக் கேட்டான்.

‘ ஆமாம் மக்களே… உங்களை நாய் கடிச்சிடுச்சுனு வெச்சுக்கங்க… அரசாங்கமே நஷ்டஈடு தருது… எவ்வளவுன்றீங்க… ‘

நிமிர்ந்து உட்கார்ந்தான்.

‘ ஒவ்வொரு பல்லுக்கும் பத்தாயிரம் ரூபா… ரெண்டு பல்லு பதிஞ்சா இருபதினாயிரம்… மூணு பல்லு பதிஞ்சா முப்பதினாயிரம்… ‘

சட்டென ரேடியோவை ஆஃப் செய்துவிட்டு மனக்கணக்கு போட ஆரம்பித்தான்.  ‘ மாசத்துக்கு அஞ்சு பல்லு பட்டா… அம்பதினாயிரம்… வருஷத்துக்கு ஆறு லட்சம்… பதினஞ்சே வருஷத்துல கோடீஸ்வரனாயிடலாம் போல இருக்கே… ‘

அப்படியே வெளியே வந்தான்.

‘ ஏங்க… உங்களை வெங்காயம் உரிக்கச் சொன்னேனே. எங்கே ஓடறீங்க  ‘

‘ அட இரு, கொஞ்சம் வர்றேன்… மனுஷனை சம்பாதிக்க விடமாட்டீங்களே… ‘  வெளியே ஓடிவந்தவன்,  ரோடின் இருமருங்கிலும் பார்த்தான். ஒரு நாயைக்கூட காணவில்லை.  

‘ இந்தாங்க அங்கே என்ன பராக்கு… வெங்காயத்தை உரிக்கலையா… ‘

 ‘ கோடீஸ்வரன்டி… கோடீஸ்வரன்… அப்புறம் பாரு… எல்லாத்துக்கும் வேலைக்காரிதான்… துணி துவைக்க ஒரு வேலைக்காரி… பாத்திரம் கழுவ ஒரு வேலைக்காரி… வீடு துடைக்க ஒரு வேலைக்காரி…  ‘

‘ என்ன முனகல்… வெங்காயத்தை உரிச்சுக் கொடுங்க. அறைச்சுப்போட்டு கதகதன்னு வைன்னு சொல்லத் தோணுதில்லே… ‘

‘ நீ பார்த்துக்கிட்டே இரு… பணத்தை சம்பாதிச்சிட்டு வெங்காயம் உரிக்கறதுக்கு கூட ஒரு வேலைக்காரியை வைச்சிடப்போறேன்… ‘

‘ என்ன முனகல் சத்தம்… ‘

‘ ஒண்ணுமில்லை… ‘

சாப்பிடுவதற்கு முன் போய் நாய் கடி வாங்கிடலாமென்று. வெங்காயத்தை வேகவேகமாய் உரித்துக் கொடுத்துவிட்டு, ஓடிப்போய் பழைய லுங்கிக்கு மாறினான். அதைப்பார்த்தால்தான் நாய்கள் ஓடிவரும்.

ரோடிற்கு வந்தான்.  ஒரு நாயும் காணவில்லை.

‘ இன்றைக்கு கடி வாங்கியே ஆகவேண்டுமே… ‘

தெரு முனை வரை வெறியுடன் போனான். ஒரு நாய் அவனைப் பார்த்து குறைத்தது. கொஞ்சம் பயந்து பின்வாங்கினான். அது ஓடி வந்தது. இவனுக்கு திடீரென்று பயம். ஓடினான். துரத்திக்கொண்டு வந்தது அது. மேலும் இரண்டு மூன்று நாய்கள் ஓடோடிவந்தன. 

கவனப்பிசகில் கல்லில் கால்பட்டு தடுமாறி விழுந்தான்.  ‘ லப்… லப்… ‘ என்று ஒரே சத்தம். எத்தனை நாய்கள் கடித்தன என்று தெரியவில்லை. குப்புற விழுந்தவன் வலியுடன் எழுந்து பார்த்தபோது நாய்கள் அவனைச் சுற்றி குறைத்துக்கொண்டு நின்றிருந்தன. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு கல் கிடந்தது. எடுத்து வீசினான்.  கல்லடி தாங்காமல் கத்திக்கொண்டு ஒரு நாய் ஓட எல்லா நாய்களும் அதனுடன் சேர்ந்து ஓடின.

லுங்கியை மேலே இழுத்துவிட்டுப் பார்த்தான். நிறைய கடிகள் இருந்தன. ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது.  அழுவதா…சந்தோஷப்படுவதா…

நொண்டிகொண்டே  வந்து கால்களைக் கழுவினான்.  நான்கு பற்கள் பெரிதாய் ஆழமாய் தெரிந்தன. மேலும் லேசாய் நான்கு கடிகள். இன்னும் கொஞ்சம் கீழே ஆங்காங்கே இரண்டு மூன்று பற்கள்.

‘ பத்து பண்ணிரண்டு பல்லுங்க பட்டிருக்குமோ… குறைஞ்சது ஒரு லட்சமா… ‘ வலியிலும் சிரித்தான்.

‘ அடடா நியூஸ் முழுசா கேட்காம விட்டுட்டோமே… எந்த ஆபீஸ்ல போயி மனு தரணும்னு கவனிக்காம ஆஃப் பண்ணிட்டோமே… ‘

அந்தப்பக்கமாக வந்த ராணி முகத்தைச் சுழித்துக்கொண்டு சத்தம் போட்டாள், ‘ என்ன கண்றாவி இது… கிழிஞ்ச லுங்கியைக் கட்டிக்கிட்டு… ‘ 

அவனோ சொல்லத் தயங்கி, ‘ வர்றேன் இரு… ‘ என்றபடி கதவைத் தாழிட்டுக்கொண்டான். வலியோ தாங்க முடியவில்லை.  விஷயத்தை சொன்னால் திட்டுவாளே.

‘ சாப்பாடு தயார்… ‘ என்று குரல் கொடுத்தால். வயிற்றில் பசி… காலில் வலி… ஒருதட்டில் சாதம் குழம்பு, இன்னொன்றில் கறித்துண்டுகள். ஒரு எலும்பை எடுத்துக் கடித்தான்.

‘ என்ன கன்றாவி இது… உங்க தட்டுலதான் கறி இருக்கே… அதைவிட்டுட்டு,  நான் உறிஞ்சிட்டு போட்ட எலும்பை ஏங்க எடுத்துக் கடிக்கறீங்க… ‘ என்று அவள் திட்டினாள். அப்போபோதுதான் கவனித்தான், அது அவளது தட்டு, அதில் இருந்தவை அவள் உறிஞ்சிவிட்டு போட்ட எலும்புத் துண்டுகளென்று.

‘ அய்யய்யோ… நாயோட குணம் நமக்கு வந்துடுச்சோ… அதுங்கதானே எலும்பைக் கடிக்கும்… ‘  

அப்படியானால் நாய்க்கு உண்டான மற்ற குணாதிசயங்களும் வந்துவிடுமோ… காது முளைத்து… வால் முளைத்து…   

‘ ஐயோ… பின்னால இடுப்புக்கு கீழே என்னவோ குடையுதே… வால்தான் முளைக்குதோ… ‘

‘ என்ன வாலா… என்ன உளர்றீங்க… ‘

அடக்கடவுளே, மனசில் நினைப்பதாக நினைத்து உலறிவிட்டேனோ…

சட்டென சுதாரித்துக்கொண்டவன், ‘ வாலாவது… காலாவது… நீதான் உளர்றே… ‘ என்றபடி எழுந்துவிட்டான்.

உடனே போய் ஒரு டாக்டரிடம் காட்டி ஊசி போட்டுக் கொள்ளவேண்டும். அப்படியே ஒரு சர்டிபிகேட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும், அப்போதுதானே நஷ்ட ஈடுக்கு மனு கொடுக்க முடியும்…  

ராணிடம் சொல்லிக்கொள்ளாமல் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். வலியோ தாங்கமுடியவில்லை. ஆனாலும் எவ்வளவு நேரம்தான் நல்ல பிள்ளை மாதிரி அவள் முன்னால் நடிக்க முடியும்.

xxxxxxxxx

த்தனை நாய் ஸார்… ‘

‘ மூணு… நாலு…. இல்லே அஞ்சு…  ‘

‘ என்ன ஸார் உளர்றீங்க… கரெக்டா சொல்லுங்க… ‘

‘ முதல்ல ஒன்னுதான் வந்துது டாக்டர்… அப்புறம் நிறைய்ய்ய்ய…  ‘

 ‘ நிறைய பல்லுங்க பட்டிருக்கே…. சரி சரி… பேண்ட்டை நல்லா மேலே தூக்குங்க…  ‘

ஏற்றினான். முட்டிக்கு கீழேதான் கடிகள்.

‘ இப்போ பேண்ட்டை கீழே இறக்குங்க… ‘

அந்த வலியிலும் சிரித்தான். ‘ என்ன டாக்டர், முதல்ல ஏத்த சொன்னிங்க… இப்போ இறக்க சொல்றீங்க…  ‘

‘ சிரிக்காதீங்க ஸார், இடுப்புல ஊசி போடணும்… ‘

‘ டாக்டர்… இங்கே…  ‘ தொப்புளைக் காட்டினான்..

‘ நான் என்ன, அங்கே பம்பரமா விடப்போறேன்… ‘

‘ இல்ல டாக்டர்… தொப்புள்ல பதிமூணு ஊசி…  ‘

‘ அதெல்லாம் அந்தக் காலம், இப்போல்லாம் ஒரே ஊசி…  ‘

‘ டாக்டர் எனக்கு காலால காதை சொரிஞ்சுக்கணும் போல இருக்கு… ‘

‘ கவலைப் படாதீங்க… நாய் கடிச்சா அந்த குணாதிசயங்கள் வரத்தான் செய்யும்… கொஞ்ச நேரம் குரைக்காம இருங்க… பேண்ட்டை இறக்குங்க… ‘

இறக்கிக்கொண்டே, ‘ என்ன… நான் பேசறேனா இல்லை குரைக்கறேனா… ஒன்னும் புரியலையே… ‘ என்று முனகியவன்,  ‘ டாக்டர் சர்டிபிகேட்… ‘ என்றான்.

‘ சர்டிபிகேட்டா எதுக்கு… ஓ.. நீங்க ஆபீஸ்ல லீவு அப்பளை பண்ணனுமா… ‘‘

அப்போதுதான் மெல்ல விஷயத்தை விளக்கிச் சொன்னான்.

டாக்டர் விழுந்து விழுந்து சிரித்தார்.

‘ அப்படி போகுதா மேட்டர்… நானும்தான் ரேடியோல கேட்டேன்… ஆனா, நீங்க முழுசா கேட்கலையா… ‘ என்று சிரித்தவர், ‘ இது நம்ம ஊர்லே போட்ட சட்டம் இல்லே ஸார்… பஞ்சாப்ல போட்ட சட்டம்… எஃப்.எம்.ல அதையும் சொன்னாங்களே… ‘ என்றுவிட்டு மொபைலை எடுத்து ஏதோ டைப் செய்து அவனிடம் காட்டினார்.

 “ Dogbite Victims To Get 10,000 For “Each Teeth Mark”: Big Court Order

The court asked Punjab, Haryana and Chandigarh to form a committee to decide on compensation to be paid in cases of accidents caused or attacks by stray animals

India News Reported by Mohammed Ghazali, Edited by Saikat Kumar Bose Updated: November 14, 2023 4:34 pm IST “

சேகருக்கு மயக்கம் வருவது போல இருந்தது.

‘ போச்சா… போச்சா… எல்லாம் போச்சா… லொள் லொள் லொள் லொள்… ‘

பயந்து போன டாக்டர் சொன்னார், ‘ நாய் ஸார்…. இங்கே குரைக்காதீங்க வெளியே போயி குரைங்க…  ‘  

பின்குறிப்பு : நான் கடந்த நவம்பரில் ஒருநாள் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வரும்போது எப்.எம்.மில் கேட்டுவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கூகிலிள் தேடி…. அது உண்மையான செய்தி என்று தெரிந்த பிறகு அதை ஒரு கதையாக புனைந்து, இப்போது இங்கே பதிவிட்டுள்ளேன்.. 

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புது கொத்தனார் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    காத்திருக்கிறாள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு