எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தன் முயற்சியில் சற்றும் மனம்தளராத, ஆனால் உடல் தளர்ந்த லட்சுமி பாட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடக்கும் “குறை தீர்ப்பு நாளில்” தனக்கு முதியோர் உதவி தொகை வழங்க கோரும் மனுவினை அளிப்பதற்காக புறப்பட்டு சென்றாள்.
இதற்காக முந்தய நாளே பத்திரம் எழுதுபவரிடம் மீண்டும் ஒரு மனுவை எழுதி வாங்கியிருந்தாள். அன்றைய தினம் “உலக முதியோர் தினம்” வேறு கொண்டாடப்பட்டது.
புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் அனைவரிடமும் மிகவும் கனிவாக நடந்து கொண்டார்.
அனைவரும் வரிசையில் நின்று தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தனர். அவர்களது மனுவை உடனடியாக படித்து பார்த்த ஆட்சியர், அவர்களிடம் “உங்களது மனுவை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்,” என நம்பிக்கையூட்டும் விதமாக பேசி அனுப்பி வைத்தார்.
லட்சுமிபாட்டியின் முறை வந்ததும் ஆட்சியர், அவளிடம் அம்மா, உங்களுக்கு என்ன வேணும்? என கேட்டார்.
பாட்டியும் உடனே அழுது கொண்டே, நான் ஒரு ஏழை, அநாதை, பசங்க இருந்தும் என்னை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்., நான் ஏதோ கிடைக்கிற வேலையை செஞ்சுகிட்டு என் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன், எனக்கு இந்த முதியோர் உதவித்தொகை கொடுத்தீங்கன்னா இந்த கிளவிக்கு ஏதோ கொஞ்சம் உதவியா இருக்கும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அவளிடம் “அம்மா உங்களுக்கு என்ன வயசாகுது?” என கேட்டார்.
“எழுவது எழுவத்திரண்டு வயசு இருக்குமுன்னு, நினைக்கிறேன் ஐயா இந்த கிழவிக்கு அதெல்லாம் சரியா ஞாபகம் இல்லை” என்றாள் பாட்டி.
நீங்க முன்னாடியே வந்து மனு கொடுத்திருக்கலாமே? என கேட்டார் மாவட்ட ஆட்சியர்.
நான் இதோடு ஆறு, ஏழு தடவ மனு கொடுத்துட்டேன்., எப்போது வந்து கேட்டாலும், ”வரும் போங்க, வரும் போங்க” என சொல்லி விரட்டி அடிக்கறாங்க என்றாள்.
அம்மா, இனி நீங்க அலைய வேண்டாம், இந்தமுறை நான் உங்களுக்கு உதவித் தொகை கிடைக்க ஆர்டர் போட்டுவிடுகிறேன். ஒரு வாரத்துக்குள் வீட்டுக்கு உத்தரவு தபாலில் வந்துவிடும்.,
அடுத்த மாதத்திலிருந்து உங்க வீட்டுக்கு அருகே உள்ள தபால் ஆபீஸ்லிருந்து உங்க ,வீட்டுக்கே வந்து உதவி தொகையை கொடுத்துவிடுவார்கள் .நீங்க கவலைபடாம வீட்டுக்கு போங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்
“ரொம்ப நன்றி ஐயா, நீங்களாவது இந்த வயசான கிழவிக்கு உதவி செய்யுங்க” என்றாள் கைகளை கூப்பியபடி.
மாவட்டஆட்சியர், அருகிலிருந்த அதிகாரியிடம் அந்த மனுவை கொடுத்து இந்த மனுவை பரிசீலித்து, உடனே, முதியோர் உதவி தொகை வழங்க உத்தரவு போட்டு எனக்கு கோப்பினை அனுப்பி வைங்க என்றார்.
மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தப்படியே லட்சுமி பாட்டிக்கு முதியோர் உதவி தொகை வழங்க ஒப்பளிப்பு செய்து, மாவட்ட ஆட்சியரின் உத்திரவு அடுத்த வாரமே தபாலில் வந்து சேர்ந்தது.
அதை அருகில் உள்ள நபரை படிக்க சொல்லி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன், “அந்த மவராசனும், அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும் என மாவட்ட ஆட்சியரை வாழ்த்தினாள் லட்சுமி பாட்டி.
அடுத்த மாதம் வீட்டுக்கு அருகில் முதியோர் உதவி தொகை வாங்கும் சில பெண்களுடன் போஸ்ட் ஆபீஸ் சென்று மற்றவர்களை போல போஸ்ட் மேன் தனக்கும் பணம் தருவார் என்று எண்ணியபடி காத்து கிடந்தாள். ஆனால், அவளுக்கு பணம் வரவில்லை என்று கூறிவிட்டார் போஸ்ட்மேன்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் சென்று விசாரித்த லட்சுமி பாட்டி, மூன்றாவது நாள் சென்று விசாரித்தபோது, எரிச்சல் அடைந்த போஸ்ட்மேன் லட்சுமி பாட்டியிடம், ”ஏம்மா தினமும் வந்து என் உயிரே வாங்குற, பணம் வந்தா நான் தரமாட்டேனா? போ, போய் அந்த ஆபிஸிலேயே விசாரி, அது வரைக்கும் என்னை தொந்தரவு செய்யாதே” என்றார்.
“இனிமே நான் வந்து உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் ஐயா, “ என்று சொல்லிவிட்டு கண்களை துடைத்தபடி தன் விதியை எண்ணி நொந்தபடி வீட்டிற்கு திரும்பினார் லட்சுமி பாட்டி.
அதன்பிறகு அவள் போஸ்ட் ஆபீஸ் பக்கம் போகவில்லை. சுமார் 10 தினங்களுக்கு பிறகு லட்சுமி பாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வந்திருந்தது, அதை பார்த்த போஸ்ட்மேன், பாவம், அந்த கிழவி தினசரி வந்து அலைஞ்சது, அப்போவெல்லாம் இந்த பணம் வரல, இன்னைக்குதான் வந்து இருக்கு, உடனே நேரில் போய் கொடுத்து விட வேண்டியதுதான் என்று நினைத்தபடி அவர் லட்சுமி பாட்டி இருந்த தெருவிற்கு சைக்கிளில் விரைந்தார்.
அவர் வீட்டை நெருங்கியபோது வீட்டு வாசலில் கூட்டமாக இருந்தது. அவர் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, லஷ்மி பாட்டி உள்ளே இருக்காங்களா? என கேட்டார்.
அப்போது அங்கு இருந்தவர்கள், “ அவங்க நேத்திக்கு ராத்திரிதான் இறந்து போயிட்டாங்க,” என்றார்கள்.
அவர் இறந்துவிட்டார் என்பதை கேட்டவுடன் போஸ்ட்மேன் அதிர்ச்சி அடைந்ததுடன், அவர் கண் கலங்கியது.
“ஏன்? எதுக்கு கேக்குறீங்க என அருகில் இருந்தவர் கேட்டார்.
அவங்களுக்கு முதியோர் உதவித்தொகை மொத,மொதலா வந்து இருக்கு, அவங்க பணம் வராத நாட்களிலெல்லாம் அங்கு வந்து “இன்னைக்கு பணம் வந்து இருக்கா? “ என கேட்டபடி இருந்தார், இன்னைக்கு தான் அவங்களுக்கு பணம் வந்திருக்கு, உடனே கொடுத்துடலாமென நினைத்து வந்தேன், முதியோர் உதவித் தொகையை அவங்க பெறுவதிற்குள் அவரது ஆயுளே முடிந்து விட்டதே,என வருத்தத்துடன் கூறினார் போஸ்ட்மேன்.
லட்சுமி பாட்டி உயிருடன் இருந்தபொழுது பலமுறை போராடியும் கிடைக்காத முதியோர் உதவி தொகை “அவர் இறந்தவுடன் வந்துள்ளது, அதை வாங்கி அனுபவிக்கக்கூட அவருக்கு கொடுப்பினை இல்லை, இதுவும் அவரது துரதிர்ஷ்டம் தான். பாவம் லட்சுமி பாட்டி” என அருகில் இருந்தவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.😢😢😢.
எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings