எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ஆட்டோ வந்தாச்சு…‘ என்று குதித்தார்கள் பாபுவும் மஞ்சுவும்.
ஆட்டோவை நிறுத்திவிட்டு கையில் பொட்டலத்துடன் வீட்டுக்குள் வந்தான் சங்கர். குழந்தைகள் பரவசத்துடன் ஓடிப்போய் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு ஓடினார்கள். அப்பா போண்டாவோ வடையோ வாங்கிக் கொண்டிருந்திருப்பார் என்று அவர்களுக்குத் தெரியும். அதில் பங்கு போடுவதில் சண்டை போட்டுக் கொண்டார்கள்.
‘கண்ணுகளா, ஏன் வீணா சண்டை போட்டுக்கறீங்க… அப்பா முதல் நாளா சொந்த ஆட்டோ ஓட்டப் போறேன்ல, கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ஆட்டோவுக்கு மாலை போட்டுட்டு, சாமி கும்பிட்டுட்டு, சூரைத் தேங்காய் உடைச்சிட்டு, உங்களுக்கெல்லாம் மைசூர் பாக்கும் குடுப்பேன். சரியா…’ என்றபடி ‘ராக்காயி எங்கே இருக்கே, வண்டி கொண்டு வந்திருக்கேன், வந்து பாரேன்‘ என்று தன் மனைவியை கூப்பிட்டான்.
புழக்கடை பக்கம் வேலையாய் இருந்தவள், ஓடி வந்தாள். ஆட்டோவைப் பார்த்து பூரிப்படைந்தாள்.
xxxxxxxxxx
கடந்த மூன்று வருடமாய் ஆட்டோ ஓட்டுகிறான் சங்கர். நேற்று வரை கூலிக்கு ஒட்டினான். இன்று முதல் சொந்த வண்டி, ஆட்டோவுக்கு முதலாளி.
பல நாட்கள் அலைந்து திரிந்த பின் ஒரு இடத்தில் 2019 மாடல் கிடைக்கிறதென்று போய் பாத்தால் அந்த வண்டிக்காரன் ஒரு லட்சம் சொன்னான். பேரம் பேசினான்.
நேற்றே ராக்காயி தன் நகைகளை கழற்றிக் கொடுத்து விட்டாள். இவனும் அடமானம் வைத்து பணத்தை எடுத்துக் கொண்டான். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற யோசனையில் விடிந்தும் விடியாததுமாய் போய் பேரம் பேசிய விலைக்கே வண்டியை எடுத்துக் கொண்டு வந்தே விட்டான்.
மாலை போட்டு சூடம் காட்டி சூரைத்தேங்காய் உடைத்தான். குழந்தைகளுக்கு இனிப்பை கொடுத்தான். ராக்காயி சூடாக இட்லி சுட்டு வைத்திருந்தாள். சாப்பிட உட்கார்ந்தான்.
‘ஏங்க, பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் வந்திருக்கில்ல. பையனும் பொன்னும் ஒரே ஸ்கூல்தானாம். ஆட்டோ கிடைக்குமான்னு கேட்டாங்க. நான் நம்ம வண்டிலேயே போய்க்கலாம்னுட்டேன்… ரெண்டாயிரம் கூடுதலா கிடைக்கும். அடுத்த வாரம் ஸ்கூல் திறக்குதாம்… ‘ என்றாள். அவனுக்கும் அதில் சந்தோஷம்.
சாப்பிட்டு முடித்து சவாரிக்கு கிளம்பினான். முதலாளியாக… முதல் நாள்.!
மாரியம்மன் கோவில் ஸ்டேன்ட்டில் தான் அவனது வண்டி நிற்கும். அந்த ஸ்டேண்டில் மொத்தம் மூன்று வண்டிகள். அங்கே ஒரு பழைய உடைந்த சிமென்ட் திண்ணை இருக்கிறது. வழக்கம் போல அங்கே உட்கார்ந்து கொண்டான். நேற்று வரை ஐநூறு ரூபாய்க்கு ஓட்டியிருந்தால் சேட் இருநூற்றைம்பதை எடுத்துக் கொள்வார். இன்று முதல் கிடைக்கிற காசெல்லாம் நமக்கே என்று நினைத்துக் கொண்டான் சங்கர்.
வரிசைப்படி இரண்டு வண்டிகள் கிளம்பியபிறகுதான் இவனுக்கு கிராக்கி கிடைக்கும். ரெண்டு மணி நேரம் கழித்து ஒரு பெரியம்மா ஒரு சிறுமியுடன் வந்தாள். ‘ ஏம்பா ஆட்டோ வருமா’ என்றாள்.
‘வரும் பாட்டி, எங்கே போகணும், ஏறி உட்காருங்க கொண்டு போய் விட்டுடறேன் ‘ என்று சொல்லியபடி டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தான்.
‘ஏம்பா நான் எங்கேன்னே சொல்லலே, நீயும் எவ்வளவு தருவேன்னு கேட்கலை, வண்டியை எடுக்கப் போறியேப்பா ’ என்றாள் அவள்.
‘நான் உனக்கு மட்டும் தனி ரேட்டா பாட்டி சொல்லப் போறேன். எங்கே போறதுன்னு சொல்லு, எவ்வளவு ஆகுமின்னு நான் சொல்றேன்‘ என்றான்.
‘ஆர்.டி.ஓ. வரை போகணும்பா. ஆர்.டி.ஓ. பின்னாடிதான் என் பொண்ணு வீடு. எவ்ளோ கேட்பே. ‘ என்றாள் அவள்.
கூட்டி கழித்துப் பார்த்துவிட்டு, ‘எவ்ளோ பாட்டி குடுப்பே ‘ என்றான்.
‘ஏம்பா வண்டி உன்னோடது, நீதான் சொல்லணும், கட்டுப்படியானா குடுப்பேன், இல்லே வேற வண்டி பார்ப்பேன், இல்லாட்டி பஸ் பிடிப்பேன், அதுவும் இல்லையா பொடி நடையா நடந்தே போய்டுவேன். புதுசாவா போறேன். என்ன வயசாக ஆக கண்ணு பார்வை தடுமாறுது, அதான் பேத்தியை துணைக்கு கூட்டிட்டு போறேன்’ என்றாள்.
இவளது சொந்த கதையெல்லாம் யார் கேட்டார்கள் என்று மனதுக்குள் நினைத்தபடி, ‘எழுபது ரூபா குடு பாட்டி, கொண்டு போய் விட்டுடறேன், ஏறி உட்கார் பாட்டி, பாப்பா ஏறி உட்காருமா ‘ என்றான்.
பேத்தியை இழுத்துப் பிடித்துக் கொண்ட பெரியம்மா, ‘ எனக்கு கட்டுபடியாகாதுப்பா, நான் வர்றேன் ‘ என்று கிளம்பினாள் அவள்.
‘ஏன் பாட்டி கிளம்பறே, நின்னு கொஞ்சம் ‘ என்று கூப்பிட்டான்.
‘இல்லைப்பா, என்னை விடு’ என்றபடி நகர்ந்து போய்விட்டாள்.
‘சாவு கிராக்கி, இதெல்லாம் எதுக்கு ஆட்டோல போக ஆசைப்படுது’ என்று முனகிக் கொண்டே திரும்பவும் போய் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான். வெயில் கொஞ்சம் அதிகமாகவே உறைத்தது. பாட்டி வேறு வந்து கொஞ்சம் சூடேற்றி விட்டு போய்விட்டாள். ஒரு டீ குடித்தாள் தேவலை போல் இருந்தது.
ரோடு தாண்டி எதிர்புறம் பத்து கட்டிடம் தள்ளி ஒரு டீ கடை. அங்கே தான் வழக்கமாய் டீ குடிப்பார்கள். கணக்கும் வைத்திருக்கிறான் அவன். வாரம் ஒரு தடவை செட்டில் செய்து விடுவான். கடையில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டே வண்டியையும் பார்த்துக் கொண்டான். யாராவது வந்து ஆளில்லை என்று போய்விடக்கூடாதே.
நேரம்தான் ஓடியது. வண்டி நகரவில்லை. அதற்குள் சவாரி போன வண்டிகள் வந்து இவனுக்கு பின்னால் நின்றன.
போகிற போக்கை பார்த்தால் மத்தியான சாப்பாட்டு காசுக்கு கூட சவாரி கிடைக்காது போலிருக்கே என்று முணுமுணுத்துக் கொண்டான். யோசித்தபடியே போனை எடுத்தான்.
‘ஏம்பா, நான் லஞ்சுக்கு வீட்டுக்கே வந்துடறேன், சாப்பாடு எனக்கும் சேர்த்து வச்சுடு‘ என்றான்.
மேலும் கொஞ்ச நேரம் கழித்து நான்கு பேர் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் கையில் பையும் நோட்டுமாய் வந்தார்கள். வசூல் வேட்டை செய்கிறவர்கள் என்று புரிந்தது இவனுக்கு. கோவிலுக்கு அன்னதானம் என்று நிறைய பேசினார்கள். இவன் மறுத்தே விட்டான். அவர்கள் விடாமல் நச்சரித்தார்கள். மணியை பார்த்தான். மணி இரண்டு.
‘சரி உங்களால எவ்வளவு தரமுடியுமோ அவ்வளவு தாங்க, பேரை சொல்லுங்க ‘ என்றார் ஒருவர்.
‘என் நிலைமை சரியில்லை, பேசாம போங்க ‘ என்றுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு முன்னதாகவே கிளம்பிவிட்டான்.
xxxxxxxxxxx
சாப்பாடு போட்டபடியே புருஷனைப் பார்த்தாள். கொஞ்சம் சோர்ந்து போய் தெரிந்தான். விசாரித்தாள். விளக்கினான். சமாதானம் செய்தாள் அவள், ‘எத்தனை நாள் ஒரு அம்பது ரூபா கூட இல்லாம வீட்டுக்கு வந்திருக்கீங்க… கவலைய விடுங்க… எல்லாம் கடவுள் பாத்துக்குவார். ‘ என்றாள்.
ஸ்டேண்டிற்கு வந்தான். மற்ற வண்டிகளைக் காணவில்லை. சவாரிக்கு போயிருக்கிறார்களா, சாப்பிடப் போயிருக்கிறார்களா என்று புரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஒரு ஜோடி ரோடை கிராஸ் செய்து ஆட்டோவுக்கு நேராய் வருவது போல தெரிந்தது. எழுந்து நின்றான் இவன். அவர்களோ வலதுபுறமாய் திரும்பி போய்விட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பவும் போய் உட்கார்ந்து கொண்டான்.
ஒருவர் தன் மனைவி மகனுடன் வந்து நின்றார். ‘தம்பி தாமு நகர் போகணும்… ஆடோ வருமா… ‘ என்றார்.
யோசித்தான். நூறு ரூபாய் என்றால் ஓடிவிடுவார் என்று நினைத்து, என்பது ரூபா கொடுங்க… போகலாம்‘ என்றபடி உட்கார சொல்லி சைகை காட்டினான்.
‘எண்பது ரூபாயா… மூணு பேத்துக்கு முப்பத்தாறு ரூபாய்ல பஸ்லையே போய்டலாமே… ‘ என்று சொல்லியபடி இவன் கூப்பிட கூப்பிட தன் மக்களைக் கூட்டிக்கொண்டு போயேவிட்டார் அவர்.
மற்ற இரண்டு வண்டிகளும் வந்து இவனுக்கு பின்னால் நின்றன. நேரம் ஓடியது. சவாரி வரவே இல்லை. எதிர்பக்கம் போய் ஒரு வடை சாப்பிட்டுவிட்டு டீ குடித்துவிட்டு வந்தான்.
மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். ராக்காயிதான் கூப்பிட்டாள் ‘ ஏங்க, ரொம்ப நாளா பசங்க சினிமாவுக்கு போகனும் போகணும்னு சொல்லிட்டிருக்காங்க, இன்னிக்கு பார்த்து காலையிலேயிருந்து நச்சு பண்ணுதுக. நாம புது வண்டி வாங்கியிருக்கோமே, அதுலேயே போலாமேங்குதுங்க…. ‘ என்றாள்.
‘சரி, அஞ்சுமணி போல வந்துடறேன், ரெடியா இருங்க. ஆறுமணி ஷோவுக்கு போய்டலாம்‘ என்றான்.
சொந்த வண்டியில், முதல் சவாரி, சொந்த சவாரியாக கிளம்பியது.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
மனைவியுடன் குழந்தையையும் குடும்பமாக சுமக்கின்றேன். சுமப்பது தான் சுகமென்று மனதுக்குள் ரசிக்கின்றேன்