கூடையில் விதைகளைக் கொண்டு சென்று வயலில் விதைத்து விட்டு திரும்பும்போது கூடைநிறைய மீன்களை வீட்டிற்கு கொண்டு வரும் நெல்லைச் சீமையில் பஞ்சம் தலைவிரித்தாடியது.
தன் பெயரின் பொருளைப் போன்றே கருணை கொண்ட மேரி தென்குமரியிலிருந்து அங்கு தொண்டாற்ற வந்தாள். கன்னியாஸ்திரியான அவள் இயேசுவை வணங்குவதையும் ஏழைகளை நேசிப்பதையும் இருகண்களாகக் கொண்டாள். நாட்டில் எழுத்தறிவினை வளர்க்கும் முதியோர் கல்வி திட்டத்தின் நெல்லைச் சீமைப் பிரிவிற்கு பொறுப்பேற்றாள்.
அத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களாக நியமிக்க பத்தாம் வகுப்பு முடித்தவர்களை கிராமம் தோறும் சல்லடை போட்டுத் தேடியதில் தன் வாழ்வில் எப்படியாவது ஆசிரியராக வேண்டும் என்ற கனவில் இருந்த முத்தம்மாளுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது.
ஊரிலும் தன் வம்சத்திலும் அவள் மட்டுமே முதல் முறையாக பத்தாம் வகுப்பு முடித்தவள். தட்டச்சும் தையலும் அவள் கற்றிருந்தாள்.
தந்தையை சிறுவயதிலே இழந்துவிட்டு நான்கு மாடுகளையும் தன் அண்ணனின் மூன்று பிள்ளைகளையும் தாயுடன் வளர்த்து வந்தாள். அண்ணனோ முதல் மனைவியை இயற்கையிடம் பறிகொடுத்ததால் தன் பிள்ளைகளை தாயிடம் விட்டுவிட்டு இரண்டாவது மணம் புரிந்து கொண்டான்.
இயற்கையாகவே உரத்த சத்தமும் ஆளுமையும் கொண்ட முத்தம்மாளின் வகுப்பு மாணவர்களை அச்சுறுத்தவே செய்தது. ஆனால் அனைவரும் அவளை விட வயதில் மூத்தவர்கள். கரும்பலகையில் அவள் எழுத்துக்கள் முத்து முத்தாக இருப்பதைக் கண்ட மேரி தன்னைவிட இருபது வயது குறைவாகக்கொண்ட முத்தம்மாளுக்கு விசிறியானாள்.
அவளின் உடையும் நகை ஏதுமில்லாத யாக்கையும் மேரிக்கு பரிவு கொள்ள வைத்தது. பயிற்சிபட்டறைகளில் மேரி அவளைப் பாராட்ட மற்ற கிறித்துவ ஆசிரியர்களோ ஆச்சர்யப்பட்டனர்.
மேரி அவளைப் பாராட்டி புதுத் துணியினை வாங்கித் தந்தாள். சில திண்பண்டங்களைக் கொடுக்க அதனைத் தன் அண்ணன் பிள்ளைகளுக்கு கொடுத்தாள். மேரியின் மீது மட்டுமல்ல கிறித்துவ மதத்தின் மீதும் அவளுக்கு ஈர்ப்பு வந்தது. பைபிள் படிக்கவும் ஜெபம் பண்ணவும் ஆரம்பித்தாள்.
மேரியைப்போல் தானும் ஒரு கன்னியாஸ்திரியாக விரும்பினாள். “பிள்ளை” என அழைக்கும் மேரி அவளைத் தன் ஊருக்குக் கூட்டிச் சென்று தன் சொந்த பந்தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவளைத் தன் மகளாகக் கருத ஆரம்பித்தாள்.
திடீரென்று அந்தத் திட்டத்தினை அரசு நிறுத்த திகைத்தாள் முத்தம்மாள். மேரியாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்குப்பின் தாய் சேய் நலத்திட்டம் துவங்க அதன் ஒருங்கிணைப்பாளரான மேரி முதல் ஆளாக முத்தம்மாளைத தேர்ந்தெடுத்த நிகழ்வு கிறித்துவ மக்களின் புருவத்தை உயர்த்த வைத்தது.
மக்கா மாவினை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அளிப்பதுதான் அத்திட்டத்தின் வேலையாகும். தன் ஊரினைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு நடந்தே சென்றாள். சில பெண்கள் வறுமையையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் காட்டி “கொஞ்சம் அதிகமாக போடுங்க தாய்” என்று கேட்க தானும் அந்த நிலைதானே என்று இரங்கி “அள்ளிப் போடுங்க அண்ணே” என ஆணையிடுவாள். இந்தச்செய்தி மேரியின் காதில் எட்ட தன்னைப்போலவே இருப்பதாக நினைத்துக் கொண்டாள்.
அவள் சம்பளத்தின் ஒருபகுதியைப் பிடித்து அவளுக்கு கம்மல் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தாள். அத்திட்டத்தின் கீழ் தன் ஊரைத் தாண்டாத முத்தம்மாள் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்றாள்.
இருவரிடையே இருந்த புரியாத பாசப்பிணைப்பு மேரிக்கு இடமாற்றம் ஆனவுடன் முடிவுக்கு வந்தது. கைப்பேசியோ தொலைபேசியோ வளராத காலத்தில் முத்தம்மாளால் மேரியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற கனவைக் கலைத்த அவள் தாய் அவளின் அண்ணன் மகனுக்கு மணமுடித்து வைத்தாள். சில திங்களுக்குப் பின் அவளை வேலையை விட அறிவுறுத்தினான் அவள் கணவன்.
அவன் அரசுப் பணியில் இருந்தான். அவளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தபின்னர் மீண்டும் வறுமை நச்சுச்சூழலுக்குள் நுழைந்தாள். தன்னால் முயன்ற அளவு தன் பிள்ளைகளை படிக்க வைத்தாள். பிள்ளைகள் வேலைக்குச் சென்ற பின்னர்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
சில நாட்கள் அரசுவேலை பார்க்கும் கணவனின் அடக்குமுறைகளில் சிக்கும்போது தன்னை மாகாராணிபோல் நடத்திய மேரி அம்மாவை நினைத்துக்கொள்வாள். முத்தம்மாளின் கடந்தகாலம் அறியாத அவள் பிள்ளைகள் அவளைக் கிண்டல் செய்யும்போது தன்னை எப்படியெல்லாம் மேரி அம்மா பாராட்டினார் என்று பழங்கதையைச் சொல்ல முற்படுவாள்.
அவளின் மூத்த மகனோ இடைமறித்து அந்த “பஞ்சம் நிறைந்த கதைகளை எத்தனை முறை சொல்வீங்க?” என்று கேள்வி கேட்பான். வாழ்க்கையில் ஒருமுறையாவது மேரி அம்மாவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டிக் கொண்டாள்.
அவள் கணவன் ஓய்வு பெறும் விழாவில் அவனுடன் பணிபுரிந்த ஒருவர், “இவர் இன்று சீரும் சிறப்புடன் ஓய்வு பெறுகிறார் என்றால் அதற்கு முக்கியக் காரணம் முத்தம்மாள் மட்டும்தான். அந்த அம்மாவின் பொறுமையும் திறமையும் மட்டும் தான் அவரின் குடும்பத்தை உயர்த்தியுள்ளது. எனவே இந்த பொன்னாடையை என் உடன்பிறவா சகோதரிக்கு அளிக்கிறேன்” என்று உரையை முடிக்க அவள் கணவனோ முகத்தைச் சுளிக்க சொந்த பந்தங்களோ ஆரவாரமிட விழா நிறைவுற்றது.
இருபதாண்டுகளுக்குப் பின்பு சொந்த ஊருக்கு மீண்டும் சென்று கணவனுடன் விவசாயத்தை கையிலெடுத்தாள். ஊரைச்சுற்றியுள்ள மக்கள் கூடும் சந்தைக்கு செல்லும் போது சிலர் எங்கள் ஆசிரியர் என்று தங்கள் பேரப்பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்த ஆனந்தமடைந்தாள்.
வேறுசில பெண்களோ பஞ்சகாலத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு உணவினை அள்ளிக் கொடுத்த மணிமேகலைத் தாய் என சொல்ல அவள் நெகிழ்ச்சியடைந்தபோதும் அரசாங்கம் கொடுத்தது நான் அதைத்தானே கொடுத்தேன் என்று சொல்ல, “இல்லை தாய் நீங்கள் செய்த தருமம் உங்கள் பிள்ளைகளை வாழ வைத்துள்ளது” என்று சொல்ல அவளோ எல்லாம் கடவுளின் கருணை என்றாள்.
தன் கிராமத்திலிருந்து கன்னியாஸ்திரியான ஒரு பெண் அனுமதியுடன் வீட்டிற்கு வந்த போது அவளிடம் முத்தம்மாள், “மேரி அம்மா எப்படி இருக்காங்க?” என விசாரித்தாள்.
அவளோ, “நல்லா இருக்காங்க, இங்க நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதுரையிலதான் இருக்காங்க” என்றாள்.
“முகவரி கொடுங்க எனக்கும் பார்க்கணும்னு ஆசையிருக்கு” என்றாள்.
“நான் அங்குதான் போறேன் என் கூட வர்றீங்களா?” என கேட்டவுடன் உடனே புறப்பட்டாள்.
மேரிக்குப் பிடித்த பழங்களை வாங்கிக் கொண்டு மதுரை பக்கம் செல்ல செல்ல “மேரி அம்மா தேவதை போல இருப்பாங்க எனக்கே 55 வயசாச்சு அவங்களுக்கு 80 தாண்டியிருக்கும் எப்படி இருக்காங்களோ” என முத்தம்மாள் கேட்க
“அந்த கன்னியாஸ்திரி இப்போதும் அவங்க தேவதை போல் தான் இருக்காங்க” என்றாள்.
மேரி அம்மா இருக்கும் இடத்தை அடைந்தவுடன் முத்தம்மாள் ஓடிச்சென்று மேரி அம்மாவின் கைகளைப் பிடிக்க மேரியோ அவளைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு “என் செல்லப் பொண்ணு என்னைத் தேடி வந்துட்டியே” என்று சொல்ல இருவரின் கண்களும் ஆனந்தக் களிப்பில் குளமாயின.
“என்னைவிட நீ தான் மோசமாக இருக்க” என்று மேரி சொல்ல
அவளோ “விவசாயம் பார்த்தா எப்படி நல்லா இருக்க முடியும்” என்று சொல்லி சிரித்தாள்.
“அண்ணனின் கடைசி மகனுக்குத்தான் தன் மகளைக் கொடுத்திருக்கிறேன். தன் பிள்ளைகள் இருவரும் அரசு வேலையில் இருக்கிறார்கள். மருமகன் இராணுவத்தில் இருக்கிறார்” என்று சொல்லி மகிழ்ந்தாள்.
மகளுக்கு இரண்டு பையன்களும் மூத்தவனுக்கு ஒரு மகளும் இளையவனுக்கு ஒரு மகனும் இருக்கிறார்கள். தான் மேரியுடன் பணிபுரிந்த வசந்த காலத்தை நினைவுகூற உரையாடல் சில மணிநேரம் நீண்டது.
இன்னொருமுறை தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அழைத்து வருவதாகக் கூறி விடைபெற்றாள் முத்தம்மாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings