பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வருடம் 2079 – குடந்தை
அந்தி வானம் சிவந்து அழகாய் காட்சியளித்தது. மெல்ல தென்றலாய் காற்றுத் தாலாட்டியது. காற்றின் ஈரப்பதம் மனதைக் கரைத்தது.
ஜோடிப் புறாக்கள் யாரையும் சட்டைச் செய்யாது காதல் புரிந்தது. காக்கைக் கூட்டம் மதிற்சுவற்றில் வரிசையாய் அணிவகுத்தது. எந்த பள்ளிக் கூடத்தில் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டிருக்கும்.
யார் அறிவார்? ஆனால், காண்பதற்கு இதமாய் வரிசையாய் அமர்ந்து இருந்தது தெளிந்த வானத்தை மெல்ல ரசித்தபடியே தேநீரை அருந்தினாள் சுந்தரி, தன் வீட்டு மாடியில்.
வானத்தை பார்க்கும் பொழுதெல்லாம் சற்றே பொறாமை நான் அவளுக்கு. என்ன தெளிவாக இருக்கிறது வானம். ஆனால் நம்மைப் போன்ற மனித மனமோ குழம்பிப் போன குட்டையாய் தெளிவற்று, அழகற்று அல்லவா இருக்கின்றது. குழப்பத்துடன் தேநீரை அருந்தியபடியே அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மெல்ல நிலவு தன் முகத்தைக் காட்டத் தொடங்கி, பின் கண்ணாம்பூச்சி ஆடியது. நிலவின் குளுமையும், காற்றின் ஈரமும் மனதை லேசாகியது.
சுந்தரி, ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி. கோயில் நகரமாம் குடந்தையில் மடத்துத் தெருவில், வசித்து வருகின்றாள். சுந்தரியின் கணவர், ஸ்ரீநிவாசனும் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி.
இவர்களுக்கு இரு மகன்கள். பெரியவன் ‘அனிஷ் வைத்தியநாதன்’. அறிவில் சிறந்து, படிப்பில் சிறந்து, விண்வெளித் துறையில் பட்டம் பெற்று, சிறந்த தொழில்நுட்ப பொறியாளராக ‘நிலவிலே’ பணிப்புரிகின்றான்.
அனிஷிற்கு நிலவிலே உத்தியோகம் என்பதால், தன் குழந்தை மற்றும் மனைவியோடு ‘நிலவிலே’ செட்டில் ஆகிவிட்டான். நிலவைப் பார்க்கும் பொழுதெல்லாம் சுந்தரிக்கு தன் அன்பு மகன் ‘அனிஷ்’ முகம் தான் தெரியும்.
‘நிலவில்’ அனிஷிற்கு பணி சுமை அதிகம். அங்கு எப்பொழுதும் தேர்தல் பணி, மதப் பிரச்னை, சாதிச் சண்டை, வியாபாரப் போட்டி எனப் பல இடையூறுகள் அவனுக்கு. இருந்தாலும், தன் மனைவி மற்றும் பெண்ணுடன் சிறப்பாக உள்ளான்.
சின்னவன் ‘மனிஷ் வைத்தியநாதன்’ இவன் படுச்சுட்டி. கணக்கியல் துறையில் பட்டம் பெற்று, கணக்கியல் வல்லுநராய் (Jupiter) ஜூப்பிட்டரில் பணிபுரிகின்றான்.
இவன் மனைவி மற்றும் தன் ஒரே மகன் ‘தர்ஷன்’ மூவருமே ஜூப்பிட்டரில் குடியேறி விட்டனர். Jupiter-ல், எந்த பிரச்னையும் கிடையாது. அங்கு வசிப்போர் யாவரும் பழமை மாறாது, பூஜை, புனஸ்கராம், கோயில், அன்னதானம், நவராத்திரி, பண்டிகை என ஒன்றையும் விடாது அனுசரிப்பார்கள்.
இரு மகன்களுக்குமே ‘சுந்தரியின்’ மீது அன்பு அதிகம் உண்டு. இரண்டு பேருமே, எங்களுடன் வந்து விடுங்கள்! என்று கூறிக் கொண்டே இருப்பார்கள்.
‘நிலவு’ மற்றும் ‘ஜூபிடர்’ பிடிக்கவில்லையென்றால், ‘மெர்குரி’யில் நாங்கள் புதிய பிளாட் ஒன்றை வாங்கி தருகிறோம். நீங்கள் இருவருமே அங்கு வந்து தங்கலாம் எனக் கூறுவார்கள், ஆனால் ‘சுந்தரியால்’ தான் இதையெல்லாம் ஏற்க இயலவில்லை.
நிலவிலிருந்து ஜூப்பிட்டருக்கும், இருவருமே குடும்பச் சகிதமாய் அடிக்கடி சென்று வருவார்கள். தடுக்கி விழுந்தால் ‘ஜெட்’ பயணம் தான். ராக்கெட்டில் போதுமான அளவிற்கு பெட்ரோல் நிரபிக் கொண்டால் போதும், சட்டெனப் பறக்கலாம், ஒரு கிரகத்தை விட்டு இன்னொரு கிரகத்திற்கு.
சுந்தரி இந்த வருடம் திட்டவட்டமாக கூறி விட்டாள். ஒருமுறையேனும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு ‘பூமிக்கு வந்து தங்க வேண்டும்’ என்று. இந்த முறை இருவருமே ஒத்துக்கொண்டு பூமிக்கு கண்டிப்பாக வருகிறோம் என்றார்கள்.
மடத்துத் தெருவில் சுந்தரி, அப்பாட்மென்டில் குடியிருந்தாலும், மரம், செடி, வளர்ப்பதை அவள் விடுவதாயில்லை. கிடைக்கும் இடத்தில் எல்லாம், ஒரு சிறிய தொட்டியை வைத்து செடி வைத்து விடுவாள்.
அவளுக்கு உதவி செய்ய மினி ‘ரோபோ’ உண்டு. வீட்டிற்கு ஒரு இயந்திரம் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும். அவரவர் தேவை மற்றும் பொருளாதார நிலைமையை பொறுத்து, அரசு வீட்டிற்கு ஒரு ரோபோவை ஒதுக்கும்.
இவர்கள் இரண்டு பேர் தான் என்பதால் மினி ரோபோவே போதுமானது இவர்கள் மினியின் பெயர் ‘நாநா’ நாராயணச்சாமி என்ற பெயரைச் சுருக்கி ‘நாநா” என்றே கூப்பிடுவார்கள். நாநாவும் இவர்களுடன் இப்பொழுது ஐக்கியம் ஆகிவிட்டது.
அந்த நாளும் வந்தது. அனிஷும், மனிஷும், குடும்பத்தோடு ‘பூமிக்கு’ வந்தார்கள். ஜெட் ஸ்டேசனில் எல்லா வகையான செக் அப்பும் முடிந்து, ‘குடந்தை’ வந்தனர்.
பூமிக்கு வலிக்குமோ என்பதுப் போல இருவரும் மெதுவாய் காலடி வைத்து, கண் கலங்கி மண் தொட்டனர்.
சுந்தரி, தன் சின்ன குடிலை அழகிய தோட்டமாக்கியிருந்தாள். இவர்களுக்கான ‘சாப்பாட்டு மாத்திரைகளை’ விதவிதமாய் தயார் செய்தாள். தண்ணீர் குப்பிகளையும் நிரப்பி வைத்தாள். சுத்தமான காற்றை சுந்தரியின் கணவர், இரண்டு நாள் முன்பே 5 – 6 சிலிண்டரில் வாங்கி நிரப்பி இருந்தார்.
குடந்தை நகரம் முற்றிலுமாய் மாறி இருந்தது. எங்கும் ரோபோக்கள் நெரிசலாய் சென்று கொண்டிருந்தது, காற்று, தண்ணீர், உணவு மாத்திரை எல்லாமே ‘நாநா’ ரோபோ போய் வாங்கி வந்து விடும். இயந்திர பூமியாய் மாறியிருந்தாலும், சுந்தரி தன் வீட்டை மற்றும், பழமை மாறாது போராடி காத்து வந்தாள்.
இலைகள், மரங்கள், செடிகள், நீர் தொட்டிகள் இவற்றையெல்லாம் பார்த்த பேரக்குழந்தைகள் கொஞ்சி குளாவியது. தொட்டு தொட்டு பார்த்து, மரங்களையெல்லாம் தன் ‘விரல் கணினியில்’ ஏற்றிக் கொண்டது.
இலை, செடி இவற்றையே சுற்றி சுற்றி வந்தது. ‘இயற்கை காற்றை’ சுவாசித்ததால் மனிஷிற்கு சிறிது தலைச் சுற்றல் ஏற்பட்டு பின் சரியானான். மண், கல் இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனார்கள் குழந்தைகள்.
நாநாவிற்கும் சுந்தரிக்கு குழந்தைகளோடு நேரம் போனதே தெரியவில்லை. விடுமுறை நாளும் முடிவுக்கு வந்து, அவரவர் அவர்தம் ‘கிரகத்திற்கு’ செல்ல வேண்டிய கட்டாயம் காலத்தின் கோபம், இயற்கையின் சாபம், என் செய்வது, பூமியில் வாழ வழி இல்லாது வேற்றுக் கிரகத்தை நோக்கி செல்கின்றது மனிதக் கூட்டம்.
அனிஷும், மனிஷும், விடைபெறும் நேரத்தில், “எங்களுடன் வந்து விடு மாம் ப்ளீஸ்” என்றனர்.
ஆனால் சுந்தரி, திட்டவட்டமாய் சொல்லி விட்டாள், “அந்த வேப்பமரத்தின் கடைசி இலை கருகும் வரை, நான் இந்த பூமியை விட்டு வரமாட்டேன்” என்று.
“இது என் பூமி, என் மண், என் தாய், என் பிள்ளை, என் உயிர், என் வாழ்வு” என்றாள் கண்ணீருடன்.
“காலத்தின் கோலத்தால், இயற்கைச் சீற்றத்தால் வேற்று கிரகவாசி ஆனீர்கள் நீங்கள், ஆனால் என்னால் முடியாது” என்றாள்.
சுந்தரி குழந்தைகளை கட்டிக்கொண்டு, “குழந்தைகளா, உங்கள் ஜூபிடர்லும், மூனிலும், தயவு செய்து இயற்கையை உருவாக்குங்கள், மீண்டும் உயிர் கொடுங்கள். அடுத்த தலைமுறையான உங்கள் கரங்களிலே தான் ‘இயற்கை அண்னை’ அடிமையாய் உள்ளான். அவளுக்கு விடுதலை அளியுங்கள். மரம் நடுங்கள்! டவிகளை உருவாக்குங்கள்!! பிரபஞ்சம் செழிக்கும்!! செய்வீர்களா செல்லங்களே” என்றாள்.
அவள் மொழி புரியாது போனாலும், அவள் மனம் புரிந்து, புன்னகையோடு தன் கையில் உள்ள ‘வேப்ப இலைகளை’ ஆட்டியது பிஞ்சுக்கள் இரண்டும்.
அவரவர் ஜெட், ‘வீர்ர்ர்’ என்று வந்து இறங்கியது, பூமியை முற்றிலும் அழிக்க கிளம்பிய ‘ஜெட்களையே’ வெறுமையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் சுந்தரி பாட்டி.
இயற்கை அன்னை மீண்டும் பிறப்பாள்!
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings