மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)
நான் என் பிள்ளை மருமகள் குழந்தைகளுடன் வார இறுதிக்கு நியூயார்க் செல்ல திட்டமிட்டோம். ஞாயிறு காலை ஏழு மணி அளவில் கிளம்பினோம். காலை சிற்றுண்டியை வீட்டிலேயே முடித்துவிட்டு, போகும் வழியில் சில இடங்களை பார்த்துக் கொண்டே சென்றோம்
பகல் ஒரு மணிக்கு நியூயார்க் நகரில் உள்ள ‘டைம் ஸ்கொயர்’ என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலையிலிருந்து அலைந்ததால், பசி வயிற்றை கிள்ளியது. எனவே டைம் ஸ்கொயர் அருகிலிருந்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்
நாங்கள் உள்ளே நுழையவும் ஒரே சிரிப்பு ஒலியுடன் தமிழும்ஆங்கிலமும் கலந்த பேச்சைக் கேட்க நேர்ந்தது. நியூயார்க்கில் தமிழா என, ஆச்சரியத்துடன் சத்தம் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தேன்
என்ன ஆச்சரியம்? சென்னையை சேர்ந்த என் சினேகிதி ஜெயந்தி அவர் குடும்பத்தாரும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தான், அந்த சத்தத்தின் நாயகர்கள
உடனே நான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, “ஹாய் ஜெயந்தி, எங்கே இங்கே?” என கேட்கவும், அவள் என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டாள்
அவள் குடும்பத்தினரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர், “என் பெண் அனுஷா என் மாப்பிள்ளை ஜோசப் என் பேத்தி நந்தினி” என்று கூறினாள்
ஜோசப் கருப்பு இனத்தவர் என்று தெரிந்தது. அப்புறம் நாங்கள் பேசிய பேச்சைப் பற்றி கேட்க வேண்டுமா? சாப்பிட்டு முடித்ததும் கிளம்பினோம்.
அப்போது ஜெயந்தியின் பெண், “நாங்களும் நியூஜெர்சியில் தான் இருக்கிறோம், உங்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு அரைமணி நேரம் டிரைவ் தான். நான் நாளைக்கு ஆபீஸ் போகும் போது அம்மாவை உங்கள் வீட்டில் கொண்டு விடுகிறேன். உங்கள் வீட்டில் எல்லோரும் ஆபீஸ் போய் விடுவார்கள், நீங்கள் தனியாக தானே இருக்கிறீர்கள், இருவரும் ஆசை தீர பேசுவதற்கு நல்ல சந்தர்ப்பம். நன்றாக அனுபவித்து பேசுங்கள்” என்று கூறி சிரித்தாள்
எங்களுக்கு இதைக் கேட்டதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மறுநாள் எப்போது வரும் என்று நாங்கள் இருவரும் காத்துக் கொண்டிருந்தோம்
காலை 10 மணிக்கு காரின் ஹாரன் சத்தம் கேட்டது. நான் கதவை திறக்க, ஜெயந்தி நின்று கொண்டிருந்தாள்
அனுஷாவும் அவள் கணவனையும், “உள்ளே வாருங்கள்” என்றழைத்தேன்
அதற்கு அவள், “நாங்கள் ஆபீசுக்கு போக வேண்டும், மாலையில் வருகிறோம்” என்று கூறி விடைபெற்றார்கள்
நான் ஜெயந்திக்கு காபியும் ஸ்னாக்ஸும் கொடுத்தேன். பிறகு ஊர் கதைகளை பேச ஆரம்பித்தோம்
“நான் ஒன்று கேட்பேன், தவறாக நினைக்காதே. மனதில் பட்டதை கேட்கிறேன் ஜெயந்தி” எனவும்
“கேளு” என்றாள்
“அனுஷாவின் கல்யாணத்திற்கு நான் வந்திருந்தேன், அன்று மாப்பிள்ளை என நீ அறிமுகப்படுத்தியது வேறு ஒருவர் என்பதை பார்க்கும் போது கேட்கத் தோன்றியது. அந்தக் கல்யாணம் முறிவு ஏற்பட்டு விட்டதா?”
நான் இதைக் கேட்டதும், விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் ஜெயந்தி
“நான் தவறாக கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்” என்று நான் கூற
“நீ ஒன்றும் தவறாக கேட்கவில்லை, சரியாக தான் கேட்டாய். என் மன பாரத்தை யாரிடமாவது சொன்னால் குறையும்” என்று சொல்லி கூற ஆரம்பித்தாள் ஜெயந்தி
“முதலில் என் கல்யாணத்தைப் பற்றி கூறுகிறேன். எனக்கு கல்யாணம் ஆகும் போது வயது 18. என் கணவர் என் தாய் மாமன் பிள்ளை, உறவு விட்டுப் போகக் கூடாது என்று என்னை அவருக்கு திருமணம் செய்வித்தார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்திருந்தேன். என் கணவர் எம்.பி.ஏ படித்து ஒரு பெரிய கம்பெனியில் டைரக்டராக இருந்தவர்.
எனக்கும் அவருக்கும் அறிவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் குடும்ப வாழ்க்கை நன்றாக ஓடியது. நாங்கள் வேலூரில் குடியிருந்தோம். என்னை அவர் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார். ஆனால் ‘ஆற்காட்டிற்கு ஆறு மைல்’ என்று தான் கூப்பிடுவார்” எனவும்
“ஏன் அப்படி?” என்று நான் கேட்க ஜெயந்தி
“நான் பிறந்த ஊர் திமிறி. அது மிகவும் பட்டிக்காடு கிராமம், நான் அங்கு வளர்ந்ததால் மிகவும் பட்டிக்காட்டு பெண்ணாக இருந்தேன். என்னை பட்டிக்காடு என்று கூப்பிட்டால் ஒரு மாதிரி பார்ப்பார்கள், எனவே என் ஊர் பெயரை சொல்லி கூப்பிட்டார். இது எனக்கு முதலில் தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது. குழந்தைகள் பெரியவர்களானதும் இதைப் பற்றி கேட்டார்கள், அப்போது தான் எனக்கே என் பெயர் விவகாரம் தெரியும்”
“இதைக் கேட்டு உனக்கு கோபம் வரவில்லையா?” என நான் கேட்க, அதற்கு பதிலாக அவள் கபடமின்றி சிரித்தாள்
“எதற்கு கோபம் வர வேண்டும் நான் பிறந்தது திமிறி தானே? எப்படியோ நானும் அவரும் குடும்பம் நடத்தி இரண்டு ஆண் இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் பெற்றோம். குழந்தைகள் நால்வரும் என்னைப் போல் இல்லாமல், அப்பாவை போல் அறிவில் சிறந்தவர்கள்
வளர வளர, அவர்களுக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமி, வாழ்ந்தால் அங்கு தான் வாழ வேண்டும் என்பதை சொல்லி சொல்லி வளர்த்தார் என் கணவர். என் இரண்டு பெண்களும் மாநில அளவில் நல்ல மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இரண்டு பிள்ளைகளும் அவர்களுடைய அப்பாவைப் போல எம்.பி.ஏ படித்து டெல்லியில் பெரிய கம்பெனியில் வேலை சேர்ந்தார்கள்
அவர்களுடைய திறமையை பார்த்து கம்பெனியில் அமெரிக்காவிற்கு அனுப்பினார்கள். இதற்கு இடையில் என் பெரிய பெண் அனுஷாவிற்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளை வரன் கிடைத்தது. திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நீதான் அதற்கு வந்திருந்திருந்தாயே. மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
என் பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்கா சென்றார்கள். என் பெண் அமெரிக்காவில் மேலே படிக்க ஆரம்பித்தாள். வருடங்கள் ஓடியது, அவள் ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள். குழந்தைக்கு முடி இறக்க இந்தியாவிற்கு வந்தாள். மாப்பிள்ளை தீலீப் அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை. பேத்தியை பார்த்தும் அவர்களுக்கு தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை வந்தது.
பிள்ளையை இந்தியாவிற்கு வரச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தார்கள். அவரும் பெங்களூரில் உள்ள செயின்ட் ஜான் ஹாஸ்பிடலில் ஹார்ட் சர்ஜன் ஆக பதவி ஏற்றார். அனுஷாவும் அங்கேயே பணியில் சேர்ந்தாள்
அவளுக்கு நாளாக நாளாக அமெரிக்காவில் படித்த படிப்பை முடிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. எனவே குழந்தையை மாமியாரிடம் விட்டுவிட்டு, அமெரிக்கா சென்றாள். திடீரென்று மாமியாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் படுத்த படுக்கையாக ஆகி விட்டார்கள்
எனவே குழந்தையை பார்க்க அனுஷா வர வேண்டியிருந்தது. படிப்பு பாதியில் இருந்ததால் குழந்தையை எடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்று, அங்கேயே குழந்தையை வளர்க்க ஆரம்பித்தாள். படிப்பு முடிந்ததும் வரும்படி மாப்பிள்ளை அவளை கூப்பிட்டார். ஆனால் அவளுக்கு அமெரிக்க வாசம் பிடித்திருந்ததால் வருவதற்கு மனமில்லை
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறுகள் வர ஆரம்பித்தது. அது முற்றிப் போய் விவாகரத்தில் முடிந்தது. மாப்பிள்ளை அவர்கள் பெற்றோரின் விருப்பப்படி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். என் பெண் பட்டமரம் போல் தனித்து நின்றாள்
அவள் அதைப் பற்றி கவலைப்படாமல் தன் குழந்தை நந்தினியை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தினாள். என் பிள்ளைகள் இருவரும் இங்குள்ள அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் அமெரிக்க பிரஜையாக வாழ்கிறார்கள்
அவர்களுக்கு அப்பாவின் அமெரிக்காவின் மண்வாசம் தான் பிடித்திருக்கிறது. என் இரண்டாவது பெண் அக்காவைப் பின்பற்றி அமெரிக்காவில் மேலே படிக்க வந்தாள், அவளும் தன்னுடன் படித்த அமெரிக்க பிரஜையான சந்தோஷ் என்ற வட இந்தியனை திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். என் பிள்ளைகள் நால்வரும் அப்பாவின் விருப்பப்படி அமெரிக்காவில் வாழ்க்கை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்” என ஜெயந்தி நிறுத்த
“அது சரி, உன் கணவர் என்ன செய்கிறார்?” என்று நான் கேட்க
“அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு நான் தனியாக இருக்க என் பிள்ளைகள் விடவில்லை. அமெரிக்காவில் என் பிள்ளைகளிடம் மாறி மாறி இருக்கிறேன், ஆனால் என் மனது முழுவதும் அனுஷாவை பற்றியே இருந்தது.
தன் அம்மாவை மறுமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தாள் நந்தினி. அனுஷா அதற்கு சம்மதிக்கவில்லை, அவளுக்கு இசை என்றால் விருப்பம். எனவே எங்கு கச்சேரி நடந்தாலும் போய் விடுவாள். அப்படி போன இடத்தில் வயலின் வித்வான் ஜோசப்பை சந்திக்க நேர்ந்தது, இருவரும் இசை பற்றி மணிக்கணக்காக பேசுவார்கள்.
இப்படியாக அவர்கள் நட்பு வளர்ந்தது. அதைப் பார்த்த என் பேத்தி நந்தினி, அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினாள்.
‘எனக்கு 50 வயது ஆகப் போகிறது, இப்போது திருமணம் செய்தால் உலகம் என்ன சொல்லும்’ என்று கூறி மறுத்தாள் அனுஷா
ஆனால் நந்தினி, ‘வயதான காலத்தில் தான் ஒருவருக்கொருவர் துணை வேண்டும்’ என்று கூறி சம்மதிக்க வைத்தாள்.
இருவரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள், இருவருக்கும் நன்றாக ஒத்துப் போகிறது. இவர்கள் எல்லோரும் அமெரிக்க பிரஜையாக இருந்தாலும் நான் எப்பொழுதும் ‘ஆர்க்காட்டுக்கு ஆறு மைல்’ என்ற பட்டிக்காட்டு ஜெயந்தியாக தான் இருக்கிறேன்” என்று கூறி முடித்தாள் ஜெயந்தி
“ஜெயந்தி உன் குடும்ப வாழ்க்கை மூலம், எனக்கு இதுவரை தெரியாது இருந்த வினாவிற்கு விடை கிடைத்தது” என நான் கூற
“என்ன வினா? என்ன விடை?” என்று கேட்டாள் ஜெயந்தி
“நம் ஊர் இளைஞர்கள் அமெரிக்காவிற்கு படிக்கவும் வேலை நிமித்தமும் வந்தால் திரும்ப இந்தியாவிற்கு வருவதில்லை, இங்கு தங்கி விடுகிறார்கள். ஏனென்றால் ‘அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்’ என்று பெரியோர்கள் சொல்வார்கள். அது போல, நம் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் அமெரிக்க மண்ணின் வாசத்தை சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள்
அதன் காரணமாக அவர்கள் இந்த மண் வாசத்தை விட்டு வர விரும்புவதில்லை என புரிகிறது. நம்மை போன்றவர்களுக்கு தமிழ்நாடும் கோயில் குளங்களும் கலாச்சாரங்களும் சொர்க்கம் என்பதே எழுதப்படாத உண்மை இல்லையா ஜெயந்தி? நம் மண் வாசம் வாசம் தான்” என்று நான் கூற, இருவரும் சந்தோஷத்துடன் சிரித்தோம்
#ads – Amazon Great Indian Festival Deals 👇
தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings