இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஆரம்பத்தில் தங்கள் தொலைக்காட்சியின் நேயர்களுக்கு வணக்கம் கூறி விட்டு, என்னைப் பற்றியும், மனிதவள மேம்பாட்டுத் துறையில் என் சாதனைகள் பற்றியும் நேயர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, என்னைப் பார்த்து கேள்விகள் கேட்கத் துவங்கினாள்.
சம்பிரதாயக் கேள்விகளை முடித்து விட்டு, “உங்கள் பார்வையில் மனிதர்கள் வளங்களா?… இல்லை சொத்துக்களா?” என்றொரு கேள்வியை அப்பெண்மணி என் முன் வைக்க
சில நிமிடங்கள் யோசித்த நான், “கணக்கியல் பார்வையில், மனிதர்கள் வளங்களா அல்லது சொத்துகளா என்பதைக் கண்டுபிடிப்பது உண்மையில் மிகவும் கடினம். மனிதர்கள் சந்தைப்படுத்த முடியாதவர்களாகவோ அல்லது எந்தவொரு சமூகத்திற்கும் சொந்தமானவர்களாகவோ அல்லது சமூகத்திற்கு சேவை செய்யக் கட்டுப்பட்டவர்களாகவோ இல்லாவிட்டாலும், அவர்கள்—தனிநபர்களாகவோ அல்லது குழுவாகவோ—சமூகத்தின் ஒட்டு மொத்த நலனுக்காக ஏதாவது பங்களிக்கிறார்கள். எனவே, என் பார்வையில் மனிதர்கள் வளங்கள் மற்றும் சொத்துக்கள் இரண்டாகவுமே கருதலாம்” என்றேன்.
அடுத்தபடியாக, “வாழ்க்கைப் பயிர் செழிக்க வந்த வான் மழை அவனே”ன்னு உங்களால் யாரையாவது குறிப்பிட முடியுமா?… இந்தக் கேள்வியை நான் ஏன் உங்ககிட்ட கேட்கிறேன்னா… நீங்கள் ஒரு மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரிந்தவர் என்பதால்… நிச்சயமாக உங்களால் நல்லதொரு மனிதரை அடையாளம் காட்ட முடியும் என்பதால் கேட்கிறேன்!” என்று தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி கேட்க
ஒரு மெல்லிய புன்னகையோடு சில நிமிடங்கள் யோசித்த நான், “ம்… குறிப்பிட முடியும்… ஆனால் அதுக்காக ஒரு நீளமான ஃப்ளாஷ் பேக்குக்குப் போகணும்!… பரவாயில்லையா?” திருப்பிக் கேட்டேன்.
“ம்… தாராளமா”
“ஒருநாள் காலையில் எதேச்சையா டீப்பாயின் மீது கிடந்த செய்தித்தாள் மீது என் பார்வை விழ, அதில் வெளியாகியிருந்த அந்த நபரின் புகைப்படம் என்னை ஈர்த்தது.
****
“வெடுக்”கென்று அதை எடுத்து உற்றுப் பார்த்தேன். “அட… இவன் என் கூட காலேஜில் படித்த திவாகர் ஆச்சே?”
வெளிநாட்டில் வியாபார சம்மந்தமான ஒரு செமினாரில் கலந்து கொண்டு நாடு திரும்பும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து, பல நிறுவனங்களும், பல அமைப்புக்களும் விளம்பரம் வெளியிட்டிருந்தன.
அன்று என்னுடைய கல்லூரித் தோழனாக இருந்த திவாகர் இன்று ஒரு பெரிய தொழிலதிபராக, நகரத்தின் ஒரு முக்கியப் புள்ளியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. “ராஸ்கல்!.. கல்லூரி நாட்கள்ல கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல்… வகுப்பிற்கே வராமல்… அரியர் மேலே அரியர்ன்னு வாங்கிக் குவிச்ச பயல்… இன்னிக்கு சிட்டில பெரிய தொழிலதிபர்!… லைன்ஸ் கிளப் கவர்னர்!… வாட் எ மிராக்கிள்?”
எப்படியாவது ஒரேயொரு முறை அவனை நேரில் சந்தித்து, பழைய நினைவுகளைப் பேசி, சந்தோஷமாய் ஒரு அரைமணி நேரத்தைக் கழிச்சிட்டு வரணும், என்று பலமுறை நினைத்ததுண்டு, ஓரிரு முறை முயற்சி செய்ததுமுண்டு.
“ஸாரி சார்!… எம்.டி.வெளிநாடு போயிருக்கார்?… வர இன்னும் பத்து நாளாகும்”
“எம்.டி. கஸ்டமர்ஸ் மீட்டிங்கில் இருக்கார்!… இன்னிக்கு முழுவதும் அவரோட பேச முடியாது சார்”
இது போன்ற எதிர்மறை பதில்களே தொடர்ந்து வர, என் ஆசை நிறைவேறாமலே போய்க் கொண்டிருந்தது. ஆனால், என் முயற்சிகள் என்னைப் பலமுறை கை விட்டாலும், நான் அதை ஒருமுறை கூட கை விட்டதில்லை, அதன் விளைவாய் ஒரு நாள் எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தே விட்டது.
“எம்.டி.சார் உங்களை காலை பதினோரு வரச் சொல்லியிருக்கார் சார்” என்று அந்த ரிசப்ஷனிஸ்ட் போனில் சொன்ன போது, நான் புளகாங்கிதமானேன்.
ஆடிட்டர் ஆபீஸில் என் வருமான வரிக்கணக்கு வழக்குகளை சமர்ப்பித்துக் கொண்டிருந்த நான், “ஆடிட்டர் சார்… ஒரு அவசர வேலை… உடனே போயாகணும்!… போயிட்டு… சாயந்திரம் நாலு மணி வாக்குல வர்றேனே?” தர்ம சங்கடமாய்க் கேட்டேன்.
“இட்ஸ் ஓ.கே… போயிட்டு வாங்க”
அவசர அவசரமாய் வெளியேறி, என் இரு சக்கர வாகனத்தை உசுப்பி செய்து, நேரே திவாகரின் கம்பெனியை நோக்கிப் பறந்தேன்.
மனதிற்குள் இனம் புரியாத ஒரு குறுகுறுப்பு. ‘அந்த திவாகர் இப்ப எப்படியிருப்பான்?… கல்லூரியில் இருந்தது போலவே இர்ப்பானா?… இல்லை மாறியிருப்பானா?… நிச்சயம் மாறி இருப்பான்… ஏன்னா… அப்ப அவன் கொஞ்ச்மும்க் பொறுப்பில்லாத இளைஞனா இருந்தான்… இப்ப சமூகத்தில் ஒரு பெரிய புள்ளியாய் உயர்ந்திருக்கான்… நிச்சயம் பழைய மாதிரி இருக்க வாய்ப்பில்லை”
சரியாக பத்து ஐம்பதுக்கு கம்பெனி மெயின் கேட்டில் நின்றிருந்தேன். என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டு அங்கிருந்த நோட்டில் பதிவு செய்த செக்யூரிட்டிக்கு சுமார் அறுபது வயதிருக்கும். வெள்ளை முறுக்கு மீசை, போலீஸ் ஸ்டைலில் ஹேர் கட்.
‘என்ன இது?… ஒரு வயதான மனிதரை செக்யூரிட்டியாய் போட்டிருக்கான்?’ எனக்குள் ஒரு நெருடல்.
“ஒ..கே..சார்!… இப்படியே இடது கைப் பக்கமா போனா… டூ வீலர் ஸ்டாண்ட் இருக்கும்!… அங்கே வண்டியை நிறுத்திட்டு… கொஞ்சம் நடந்தீங்கன்னா “ரிசப்ஷன்”னு போர்டு இருக்கும்… அங்கே போய் கேளுங்க!” என்றார் செக்யூரிட்டி.
அவர் சொன்னபடியே சென்று, வண்டியை பார்க் செய்து விட்டு, நிதானமாய் அந்தக் கட்டிடத்தை நோட்டமிட்டேன்.
‘அடேங்கப்பா… கட்டிடமே ரொம்ப பிரம்மாண்டமா இருக்கே?… பயல் ரொம்பவே வளர்ந்திட்டான்!’
கார் பார்க்கிங் ஏரியாவில் நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன. காலியிடங்களில் சின்னச் சின்ன நந்தவனங்கள் அமைக்கப்பட்டிருக்க சில பெரியவர்கள் அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டும், செடிகளைச் சீரமைத்துக் கொண்டுமிருந்தனர். நிதானமாய் நடந்து ரிசப்ஷனை அடைந்தேன்.
ஒரு அழகான இளம் யுவதியை எதிர்பார்த்து அந்த ரிசப்ஷனை அடைந்தவன் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளானேன். அங்கே ஒரு மூத்த பெண்மணி அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும், “யூ ஆர் மிஸ்டர் செல்வம்?” என்று கேட்டாள்.
“யெஸ் மேடம்” என்றேன். ‘ஹும்… செயூரிட்டிதான் வயசானவர் என்றால்… இங்கே ரிசப்ஷனிலும் ஒரு மூத்த பெண்மணி’
“எம்.டி. இப்ப பத்து நிமிஷத்துல வந்திடுவார்… நீங்க அந்த சோபாவில் வெய்ட் பண்ணுங்க” என்றாள்.
அவள் கை காட்டிய இடத்திற்குச் சென்று அங்கிருந்த “மெத்…மெத்”சோபாவில் புதைந்தேன். என் பார்வை அந்த இடத்தின் பணக்காரத்தன்மையை ஆராய்ந்தது. ‘ஆபீஸை சூப்பரா ஃபாரீன் கம்பெனி ஆபீஸ் மாதிரி வெச்சிருக்கான்!.. இண்டீரியர் டெக்கரேஷனுக்கு காசை இறைச்சிருக்கான்… ஆன ரிசப்ஷன்ல ஒரு கிழவியை உட்கார வெச்சிருக்கானே?… இது என்ன பாலிஸி?’
மாறி மாறி போன்கள் வந்து கொண்டிருப்பதையும், அவற்றை அப்பெண்மணி சமாளிக்கும் விதத்தையும், ஆச்சரியத்துடன் கவனித்தபடி அமர்ந்திருந்தேன். மனிதவள மேம்பாட்டுத்துறையில் நீண்ட காலம் பணி புரிந்த காரணத்தினாலே என்னவோ எனக்குள் அந்த மூத்த பெண்மணி மீது ஒரு இரக்கமே பிறந்தது.. பாவம் இந்தப் பெண்மணி… வயதான காலத்திலும் சம்பாதித்தே தீர வேண்டுமென்கிற நிலையில்தான் இருப்பாள் போலிருக்கு”
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings