இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலை மணி ஆறு.
வழக்கத்தை விட சற்று முன்னதாகவே எழுந்து அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்கள் என்று நான் சொன்னது “ஆதவன் தொலைக்காட்சி” ஆட்களை.
அதிகாலை ஐந்தரை மணிக்கே எனக்கு போன் செய்து, “சார்… நாங்க கோயமுத்தூர் வந்திட்டோம்… அநேகமா ஒன்பதரை… பத்து மணிக்கு உங்க வீட்டுல இருப்போம்” என்றார் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் சுந்தரவதனம்.
ஒரு பெரிய நிறுவனத்தில் மனிதவள மேபாட்டுத் துறையின் மேலாளராக சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து தற்போது “ஈஸி ஜாப் கன்ஸல்ட்டன்ஸி” என்று சுயமா ஒரு ஹெச்.ஆர்.கன்ஸல்ட்டன்ஸி நிறுவனத்தைத் துவக்கி இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், இளைஞிகளுக்கு எஞ்சினீரிங், ஐ.டி.துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, என்று பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக பணி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதோடு, பணியிலிருந்தபடியே மேற்படிப்பினைத் தொடரவும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளேன். என்னைப் பற்றியும், என் நிறுவனத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு, என்னிடம் ஒரு பிரத்யேக நேர்காணல் நடத்துவதற்காகத்தான் ஆதவன் தொலைக்காட்சி நிறுவனக் குழு என் இல்லம் நோக்கி வந்து கொண்டுள்ளது.
“சார்… நீங்க மொத்தம் எத்தனை பேர் வர்றீங்கனு எனக்குச் சொல்லிட்டீங்கன்னா… நான் எல்லோருக்கும் என் வீட்டிலேயே காலை டிபன் ஏற்பாடு பண்ணிடுவேன்” என்றேன் நான்.
“ஐய்யய்ய… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார்… நாங்க காலை டிபனுக்கு வேறொரு இடத்துக்கு வர்றதா வாக்குக் குடுத்திட்டோம்… அதனால நீங்க எதுவும் செய்ய வேண்டாம்” இயக்குனர் சொல்ல
“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?… எங்க வீட்டுக்கு வர்ற உங்களை நான் எப்படி சார் சும்மா அனுப்ப முடியும்?.. கோயமுத்தூர்க்காரங்க விருந்தோம்பல் பற்றி உங்களுக்குத் தெரியாதா?… இல்லேன்னா… மதிய சாப்பாடாவது ஏற்பாடு பண்ணிடவா சார்?” விடாமல் கேட்டேன்.
“அது கூட அவசியமில்லை சார்!… ஏன்னா… நாங்க டைட் ப்ரோகிராம் ஷெட்யூல்ல வந்திருக்கோம்!… இரண்டு மணி நேரத்தில் உங்க இண்டர்வியூவை முடிச்சிட்டு… ஒரு ஆன்மீகத் தொடருக்காக உங்க ஊரிலுள்ள ஒரு ஆதீனத்தைச் சந்திச்சு அவரையும் நேர்காணல் பண்ணப் போறோம்”
“ஓ.கே.சார்… இதுக்கு மேலே நான் என்ன சொல்ல முடியும்?… அட்லீஸ்ட் ஒரு காஃபி… கொஞ்சம் ஸ்நாக்ஸ் சாப்பிடலாமே?”
“உங்க விருப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது” சொல்லி விட்டு இயக்குனர் இணைப்பிலிருந்து வெளியேற, என் மனைவி ஜோதி என்னை நெருங்கி வந்து, “என்ன சொல்றாங்க?” கேட்டாள்.
“காலை டிபன் வேற எங்கியோ சாப்பிடறாங்களாம்… மதிய சாப்பாட்டுக்கு இன்னொரு இடத்துக்குப் போயிடுவாங்களாம்… அதனால காஃபி… ஸ்நாக்ஸ் மட்டும் போதுமாம்” என்றேன் சோகமாய்.
“அவ்வளவுதானே?… அதை நான் ஏற்பாடு பண்ணிடறேன்… நீங்க முன்னாடி ஹாலை சுத்தம் பண்ணுங்க…. உள்ளார வெச்சிருக்கற ஷீல்டையெல்லாம் எடுத்து வந்து ஹால் ஷோ-கேஸ்ல வரிசையா வையுங்க… உங்களை இண்டர்வியூ பண்ணும் போது பின்னாடி அதெல்லாம் தெரியற மாதிரி எடுக்கட்டும்” சொல்லிவிட்டு ஜோதி நகர, நான் ஹாலை அளந்தேன்.
அவள் சொன்னது போலவே நான் வாங்கியிருந்த ஷீல்டுகள் சிலவற்றைக் கொண்டு வந்து ஹால் அலமாரியில் வைத்தேன். சுவரோரமாயிருந்த சோபாக்களை நகர்த்தி நடுஹாலில் வைத்தேன். ஹால் அரேஞ்ச்மெண்டை ஓரளவிற்கு முடித்து விட்டு, உள்அறைக்குச் சென்று நான் உடை மாற்றினேன்.
சரியாக பத்தே காலுக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். வரும் போதே காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வந்தார் இயக்குனர் சுந்தரவதனம். ஒரு இயக்குனர், இரண்டு கேமராமேன்கள், பேட்டி எடுக்க ஒரு இளம்பெண் என எல்லோரும் ஹாலுக்குள் வர நானும் ஜோதியும் முகமலர்ச்சியோடு வரவேற்றோம்.
வந்தவர்கள் ஒரு சம்பிரதாயமாய் எங்கள் வரவேற்பை ஏற்றுக் கொண்டு சோபாக்களை மாற்றிப் போட்டனர். கேமரா மேன்கள் ஹாலிலிருந்த எல்லா லைட்டுகளையும் எரிய விட்டு, வெளிச்சத்தை ஆராய்ந்தனர்.
“டைரக்டர் சார்… லைட்டிங் கொஞ்சம் குறைவாயிருக்கே சார்” என்றார் ஒரு கேமராமேன்.
“ப்ச்… அதுக்குத்தான் நான் ஒரு ஃப்ளாஷ் லைட்டையும், ரிஃப்லேட்டரையும் எடுத்திட்டு வரலாம்னு சொன்னேன்” கடுப்பானார்.
இடையில் புகுந்த நான், “சார்… ஜன்னல் ஸ்கிரீனையெல்லாம் ஒதுக்கு விட்டு, ஜன்னல்களைத் திறந்து விட்டால் இன்னும் வெளிச்சம் வருமே சார்” என்றேன்.
இயக்குனர் கேமராமேன்களைப் பார்க்க, ஒருத்தர் ஓடிச் சென்று ஜன்னல் ஸ்கிரீன்களை ஒதுக்கி, கதவுகளைத் திறந்து விட்டார்.
“என்ன அபிஷேக்… இப்ப வெளிச்சம் ஓ.கே.வா?” இயக்குனர் கேட்க, “ஓ.கே..சார்… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்றார் கேமராமேன்.
“சார்… எல்லோரும் பயணக் களைப்பில் இருப்பீங்க… காஃபி… ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு பேட்டியை ஆரம்பிக்கலாமா சார்?” நான் கேட்டேன்.
“நோ ஃபார்மாலிட்டீஸ்… எனக்கு வேலை முடியணும்… அதான் முக்கியம்… காஃபியெல்லாம் அப்புறம் பார்க்கலாம் சார்” என்ற இயக்குனர் அந்த இளம்பெண்ணைப் பார்த்து, “என்ன லதா… கேள்விகள் ரெடியா?” கேட்டார்.
“ரெடி சார்”
“ஒரு ரெண்டு மூணு தடவை பேசிப் பார்த்து பிராக்டீஸ் பண்ணிக்கோ”
“ஓ.கே.சார்”
அடுத்த பத்தாவது நிமிடம் நேர்காணல் துவங்கியது.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings