பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் வேலைகளை முடித்து உட்கார்ந்த மாலதிக்கு, பீரோவை ஒழித்து துணிகளை அடுக்கி வைத்து தேவையில்லாத துணிகளை சாயங்காலம் வரும் பாத்திரக்காரனிடம் போடுவதற்கு சரி பார்க்க தொடங்கினாள்.
ஒவ்வொரு புடவையும் ஒரு கதை சொன்னது. மஞ்சள் கலர் முதல் கல்யாண நாளுக்கு அவர் ஆசையாக வாங்கி கொடுத்தது. பச்சை நிற புடவை பர்த்டே என ஒவ்வொன்றிற்கும் ஒரு பிளாஷ்பேக் வந்தது.
ஒரு வழியாக வேண்டாத புடவைகள் மற்றும் தன் இரண்டு வயது ஷாலுவின் கவுன்கள் சின்ன சின்ன சாக்ஸ்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பிரித்து கணவனின் நைந்து போன ஷர்டுகள் பேண்ட்கள் ஒரு சில வேட்டிகள் அனைத்தையும் ஒன்றாக ஒரு மூட்டை போல் கட்டி ஓரமாக வைத்தாள்.
கடிகாரத்தை பார்த்தாள். மணி மூன்று என்றது. அவள் அந்த பகுதிக்கு குடி வந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றது. ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
அது சமீபமாக தான் கட்டி முடிக்கப்பட்ட அபார்ட்மெண்ட். இன்னும் செக்யூரிட்டி யாரையும் போடவில்லை. அதனால் வாசல் கதவை எப்போதும் தாழ்ப்பாள் போட வேண்டிய சூழல்.
யாராவது சேல்ஸ்மேன். அட்ரஸ் தெரியாமல் வரும் கூரியர் ஆட்கள் இப்படி யாராவது கதவை தட்டி கொண்டே இருப்பார்கள்.
இப்படித்தான் அன்று காலை இடுப்பில் குழந்தையுடன் வந்த ஒரு பெண், “அம்மா நான் கட்டிக்க ஏதாவது பழைய புடவை இருந்தா தாம்மா. ரொம்ப கிழிஞ்சி போய் உடம்பெல்லாம் தெரியுது” என்று அழாத குறையாக கெஞ்சினாள்.
அவளால் நிற்க கூட முடியவில்லை. “சாப்பிட ஏதாவது கொடுங்கம்மா” என்று ரொம்பவும் பலஹீனமான குரலில் கேட்டாள்.
“ஒண்ணுமில்லே போயிட்டு வாம்மா” என்று சொல்லி கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள் மாலதி.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பாத்திரக்காரனின் குரல் கேட்டது. துணி மூட்டையை வாசல் அருகே வைத்து விட்டு கதவை திறந்தாள். பாத்திர கூடையை இறக்கி வைத்துவிட்டு அவன் மூட்டையை பிரித்து உதறி எடுத்துக்கொண்டான்.
கடைசியில் வெளிர் நீல புடவை ஒன்று அதில் அங்கங்கே நட்சத்திரம் போல டிசைன்ஸ். அதை எடுக்கும் போது மட்டும் அவள் சட்டென, “ஏம்பா அந்த புடவையை மட்டும் கொடுத்துடு. தெரியாமல் வந்துருச்சு. அது நல்ல புடவை” என்று வாங்கி கொண்டாள்.
எப்போதுமே பாத்திரக்காரர்கள் எவ்வளவு துணி போட்டாலும், “வேற ஏதாவது இருந்த போடுங்கம்மா” என்று கேட்பதுண்டு.
அதே போல இவனும், “அந்த புடவையும் சேர்த்து போடும்மா. இந்த எவர்சில்வர் டப்பாவை கொடுத்து விடுகிறேன்” என்றான்.
டப்பாவை பார்த்தவுடன் அவள் மனம் மாறி, “சரி இந்தாப்பா” என்று அரை மனதுடன் அந்த புடவையை கொடுத்தாள்.
எல்லா துணிகளையும் மூட்டை கட்டி சைக்கிளில் வைத்துக் கொண்டு கிளம்பி போனான். உள்ளே வந்தவள் அந்த டப்பாவை பார்த்தாள்.
நல்ல பெரிய டப்பா. எப்படியும் ஒரு ஐந்து கிலோ சர்க்கரை பிடிக்கும். ஏமாந்து கொடுத்துட்டான் என்று மனதில் நினைத்தபடியே உள்ளே வைத்து விட்டு திரும்பியவள் எதேர்ச்சியாக ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.
காலை புடவை கேட்டு கதவை தட்டிய பெண் தன்னுடைய நீல புடவையை கையில் வைத்துக் கொண்டு தன்னோட குழந்தைக்கு ஷாலு குட்டியின் பழைய கவுனை மாட்டிக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் பாத்திரக்காரன் சைக்கிளை மிதித்தபடி போய் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் மாலதி தன்னுடைய செய்கையை எண்ணி வெட்கி தலைகுனிந்தாள்
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings