2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
சுந்தர் முகத்தில் முதன்முறையாகச் சிறு புன்னகை மலர்ந்தது. “அவன் திட்டங்களை நான்… ரசித்தேன்னுதான் சொல்லணும். இரண்டு புலிகள் மோதிக் கொள்வதைத் தள்ளியிருந்து பார்க்கின்ற உணர்வு! நான் எப்படி ரியாக்ட் பண்ணணும்ங்கறதைவிட, இந்த வீட்டில் எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு பார்க்கிற ஆர்வம் தானிருந்தது.”
தர்ஷினி இடைமறித்தாள். “எக்ஸ்க்யூஸ் மீ, இது நீங்களும் சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே! உங்க மனைவி இதனால் அஃபெக்ட் ஆகியிருக்காங்க, உங்ககிட்ட விவாதம் பண்ணியிருக்காங்க…”
மறுபடி ஒரு அமைதி. எல்லாக் கேள்விகளுக்குமே சுந்தர் சிந்தித்துப் பதில் சொல்கிறான் என்பதைத் தர்ஷினி உணர்ந்தாள். இது அவனுடைய இயல்பா, அல்லது இது போலீஸ் விசாரணை என்பதனால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வா?
அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே சுந்தர் பதில் சொல்ல ஆரம்பித்தான். “ஆச்சரியமா இருக்கு, இந்தக் கோணத்தில் நான் யோசிக்கவேயில்லை. டிஸிண்டெரெஸ்டெட் அப்ஸர்வர் – விஷயத்தில் சுய ஆர்வம் இல்லாத பார்வையாளர் – ஆக இருப்பது எத்தனை கஷ்டம்னு இப்போ புரியுது. வெல்… ஷீலா எங்கூடச் சண்டை போட்டா, தனியாப் போயிடணும்னு. உடனே அப்படிச் செய்ய முடியாதுன்னு அவளுக்கு விளக்கினேன். அவ புரிஞ்சுக்கலை. மாமனார் வீட்டோடத் தங்கியிருக்கறது எனக்கு அவமானம், அதனால என்ன கஷ்டம் இருந்தாலும் சகிச்சுக்கிட்டுத் தனியாத்தான் வாழணும்னு பிடிவாதம் பிடிச்சா. ஸில்லி கர்ள்! பிறந்ததிலிருந்து சௌகரியமா வாழ்ந்து பழகினவ அவ. தனியா போனா என்னைவிட அவளுக்குத் தான் சமாளிக்கறது கஷ்டம். இதை அவளுக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணினேன்.”
தர்ஷினியின் முகத்தில் கீற்றுப் போல் சிறிய புன்னகை உதயமானது. “ஓகே, மிஸ்டர் சுந்தர்” என்றாள்.
இன்ஸ்பெக்டர் சிவசரண் தவித்துக் கொண்டிருந்தார். “என்ன வேஸ்டா பேசிக்கிட்டிருக்காங்க, கேஸைத் துப்பறிய விடாம” என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. “மிஸ்டர் சுந்தர், யார் என்ன நினைச்சாங்க, எப்படி ரியாக்ட் பண்ணினாங்கன்னே பேசிக்கிட்டிருக்கறதால ஒரு கேள்வி கேட்டுடறேன். ஜெயக்குமார் தற்கொலை செய்துக்க வாய்ப்பு இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களா?” என்று கேட்டார்.
மீண்டும் சற்று யோசித்துவிட்டு “நிச்சயம் இல்லை சார். அவன் வாழ விரும்பினவன். ஜெயிக்க ஆசைப்பட்டவன். அப்படியே தற்கொலை பண்ணிக்கிட்டிருந்தா ஏதோ திடீர் அதிர்ச்சி அவனைத் தாக்கியிருக்கணும்” என்றான் சுந்தர்.
“நல்லது. ஜெயக்குமார் கீழே விழுந்தபோது நீங்க எங்கே இருந்தீங்க?”
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வெகுநேரம் எடுத்துக் கொண்டான். “கூட்டத்தில்தான் இருந்தேன். யாரோடு பேசிக்கிட்டிருந்தேன்னு நினைவில்லை” என்றான்.
“ஷீலாவோடு சண்டை போட்டதா சொன்னீங்களே?” என்றாள் தன்யா.
“அது முன்னாடி. அப்புறம் அவ வந்திருந்த பெண்களோட பேசப் போயிட்டா” என்றான் சுந்தர்.
“நல்லது” என்றார் இன்ஸ்பெக்டர் மறுபடியும். “நீங்க போலாம். மிஸ்டர் சம்பத்தை வரச் சொல்லிட்டுப் போங்க” என்றார்.
சுந்தர் தலையாட்டிவிட்டு எழுந்தான்.
*****
“ஜெயக்குமார் என் தம்பின்னாலும் அவனைப் பார்த்து ரொம்பநாள் ஆகிடுச்சு. இருந்தாலும் பரஸ்பரம் பாசம் இருந்தது. அவன் இப்படி திடீர்னு போயிடுவான்னு நாங்க யாருமே நினைக்கல” என்றான் சம்பத்குமார். குரல் லேசாகத் தழுதழுத்தது.
“வீட்ல எத்தனை வேலைக்காரங்க இருக்காங்க?” என்றாள் தன்யா.
இந்தக் கேள்வி இன்ஸ்பெக்டரை ஆச்சரியப்படுத்தியது என்றாலும் ஆட்சேபிக்கவில்லை.
“மூணு பேர். சமையல்காரம்மா வீட்லயேதான் இருப்பாங்க. ரூம் கொடுத்திருக்கோம். செல்வி வீட்டு வேலை எல்லாம் செய்வா. அவ அவுட் ஹவுஸ்ல இருக்கா. வேலு. அவன் இங்கே மானேஜர் மாதிரி. எல்லா வேலையும் செய்வான். சாமான் வாங்கிப் போடுவான். மேற்பார்வை பார்த்துப்பான். ரொம்ப விசுவாசமானவன். அவன் காலையில வந்துட்டு ராத்திரி அவன் வீட்டுக்குப் போவான். அவசியம்னா இங்கே தங்குவான்” என்றான் சம்பத்.
“ஆல்ரைட். அதிர்ச்சியிலிருந்தும் சோகத்திலிருந்தும் கொஞ்சம் தெளிவாகிட்டீங்கன்னு புரியுது. மிஸ்டர் சம்பத்குமார், உங்களுக்கும் ரொம்ப நாளைக்கப்புறம் இங்கே வந்த ஜெயக்குமாருக்கும் என்ன மனஸ்தாபம்னு சொல்ல முடியுமா?” என்று தன்யா கேட்டாள்.
“என்ன சொல்றீங்க? ஒரு மனஸ்தாபமும் கிடையாது!” என்று அதிர்ச்சியுடன் வேகவேகமாக மறுத்தான் சம்பத்.
“ப்ளீஸ். நிச்சயமாக உங்களுக்குள் ஏதோ சண்டை வந்திருக்கு, அதற்கு அடிப்படை மகாபலிபுரத்தில் நடந்த ஏதோ சம்பவம் என்கிற வரைக்கும் எங்களுக்கு ந்யூஸ் வந்தாச்சு. சொல்லிடுங்க ப்ளீஸ்” என்றாள் தன்யா.
“அதுக்கும் என் தம்பியோட தற்கொலைக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல நீங்க யாரு? உங்க கேள்விகளுக்கு நான் ஏன் பதில் சொல்லணும்” உஷ்ணமாகக் கேட்டான் சம்பத்.
“தட் வில் டூ, மிஸ்டர் சம்பத்குமார். அவங்க போலீஸ் சார்பாகத்தான் துப்பறியறாங்க. பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை” என்றார் இன்ஸ்பெக்டர் சிவசரண். ‘இந்த வளைக்குள் ஏதோ எலி இருக்கிறது’ என்று மோப்பம் பிடித்திருந்தது அவருடைய பூனைப் புத்தி.
சம்பத் எழுந்து உலவினான். “எங்க லாயரைக் கொஞ்சம் கூப்பிட்டுக்கலாமா?” என்றான்.
“ஓ தாராளமா. அவரையும் நாங்க எப்படியும் விசாரிக்கணும். அவரைக் கூப்பிடுங்க” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் “அவர் ஒரு நிமிஷம் அவர் வீட்டுக்குப் போயிருக்கார். ஏதோ டொமெஸ்டிக் ப்ராப்ளம். உடனே வந்துடுவார்” என்றான்.
“பசி” என்று நினைத்துக் கொண்டார்கள் எல்லோரும்.
“சரி, அவர் வரட்டும். உங்க ஸிஸ்டர் ஷீலாகிட்டப் பேசலாமா?” என்றார் இன்ஸ்பெக்டர, கொஞ்சம் தயக்கத்துடன்.
“வரச் சொல்றேன்” என்று எழுந்த சம்பத், “நாம பேசற விஷயம்…” என்று இழுத்தான்.
“தேவையில்லாம வெளியே தெரியாது” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் சங்கடத்துடன் “என் பேரில் தப்பு ஒண்ணும் இல்லை சார். லாயர் வந்ததும் அதை நீங்க புரிஞ்சுப்பீங்க. எங்க அப்பா அதைத் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு. அவர் இருக்கற காலம் நிம்மதியா இருக்கட்டும்னுதான் இதைக் கேட்கிறேன்” என்று கூறிவிட்டு விலகினான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings