2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
“ஹலோ இன்ஸ்பெக்டர்” என்றவாறே உள்ளே நுழைந்த மனிதரைத் தன்யா தன் பார்வையால் ஸ்கேன் செய்தாள்.
சௌகரியமான, வளமான வாழ்க்கை என்பதை அவர் வருவதற்கு முன் உள்ளே வந்த தொந்தி பிரகடனம் செய்தது. முகத்தில் மெலிதான வருத்தம். இயற்கையானதா, வரவழைத்துக் கொண்டதா?
“உட்காருங்க, பாண்டுரங்கன். இந்த ஜெயக்குமாரை உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்?” என்று உடனே கணக்கைத் தொடக்கிவிட்டார் சிவசரண்.
பாண்டுரங்கன் புன்னகைத்தார். “என் கண்ணெதிரே வளர்ந்த பையன் சார்.”
“அவன் வீட்டைவிட்டுப் போகும் வரை…”
“ஆமா. அப்புறம் அவன் மியூசிக் டைரக்டர் ஆனதும் அவனைப் பற்றிய செய்திகள் எனக்குக் கிடைச்சுட்டுதான் இருந்தது.”
“இப்போ ஜெயக்குமார் திரும்பி வந்ததே உங்க முயற்சியாலதான்னு சொல்றாங்களே, உண்மைதானா மிஸ்டர் பாண்டுரங்கன்?”
பாண்டுரங்கன் “பெருமையா ஆமாம்னு சொல்லியிருப்பேன், இந்த அசம்பாவிதம் நடக்காம இருந்திருந்தா. இப்போ வருத்தத்தோடு சொல்றேன்” என்றார்.
“எதனால் அந்த முயற்சி எடுத்தீங்க, சார்?” தன்யா மெதுவாகக் கேட்டாள்.
“ஸாரி?” என்று அவள் பக்கம் திரும்பினார் பாண்டுரங்கன். அவர் பார்வையில் இவள் யார் தலையிட என்ற கோபமோ வியப்போ இருக்கவில்லை. எனவே தர்மா, தன்யா, தர்ஷினி பற்றி ஏற்கெனவே அவருக்குச் சம்பத் தெரிவித்திருக்க வேண்டும்.
“இல்லை, என்ன காரணத்தால் அவரை இன்வைட் பண்ணச் சொன்னீங்க?” என்று விளக்கம் கொடுத்தாள் தன்யா.
“வாட் நான்சென்ஸிகல் கொஸ்டின் இஸ் திஸ்? அவங்க குடும்பம் மறுபடியும் ஒற்றுமையாகணும்னு நான் ஒரு நல்ல நண்பனா ஆசைப்படறது தப்பா?”
“நிச்சயமா தப்பில்லை. சொல்லப் போனா பாராட்டுக்குரிய எண்ணம். ஆனா திடீர்னு நீங்க ஜெயக்குமாரை வரவழைக்கணும்னு விஷ்ணு சார் கிட்டச் சொன்னது, ஜஸ்ட் ஒரு ரேண்டம் எண்ணம்தானா, அல்லது, அதற்கு ஏதாவது பின்புலம் உண்டா என்பதுதான் என் கேள்வி” என்று இன்னொரு விளக்கம் கொடுத்தாள் தன்யா.
“ரேண்டம்னு சொல்ல முடியாது. ரொம்ப நாளாகவே ஜெயக்குமாரைப் பற்றிய விஷயங்கள், அவன் திரைத்துறையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் கேட்கக் கேட்க, தேவையில்லாம அப்பாவும் பிள்ளையும் அடிச்சுக்கறாங்களேன்னு நான் நினைச்சது உண்டு. அதான் அவங்களை ஒத்துப்போக வைக்க ஒரு முயற்சியா அவர்களை நேரில் சந்திக்க வெச்சேன்.”
“விமல்குமார் ஆதித்யா என்ற பெயரை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா, மிஸ்டர் பாண்டுரங்கன்?” என்று திடீரென்று தர்ஷினி இடைமறித்தாள்.
வக்கீலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “இல்லை. யார் அந்த ஆதித்யா?”
“ஸ்ட்ரேஞ்ச்” என்றாள் தர்ஷினி. “உங்க ஊரைச் சேர்ந்த ஒரு பெரிய லா ஃபர்மோட ஜூனியர் பார்ட்னர், அப்கமிங் அட்வொகேட்டை உங்களுக்குத் தெரியாதா? அவர் நேற்று பார்ட்டிக்குக்கூட வந்திருந்தாரே!”
“பார்த்திருக்கலாம். பேரெல்லாம் தெரியாது” என்றார் பாண்டுரங்கன் விட்டுக்கொடுக்காமல்.
“சரி, பரவாயில்லை. நானே அவரைப் பற்றி உங்களுக்குத் தேவையானதெல்லாம் சொல்றேன். மிஸ்டர் விஷ்ணுகுமார் சில மாதங்களுக்கு முன்னால் ஆதித்யாவோட ஆஃபீஸ்க்கு வந்து, ஒரு உயில் எழுதணும்னு கேட்டிருக்கார். அவருக்கு உதவ ஆதித்யா நியமிக்கப்பட்டிருக்கார். ஒரு உயில் எழுதப்பட்டு ரிஜிஸ்டரும் செய்யப்பட்டிருக்கு” என்றாள் தர்ஷினி.
வக்கீல் மௌனமாக இருந்தார்.
“முன்பு உங்களைக் கொண்டு அவர் எழுதிய உயிலுக்கு மாற்றாக, இதில் ஜெயக்குமாருக்கும் பாகம் கொடுக்கப்பட்டிருக்கு. இன்னும் வேறு சில மாற்றங்கள். இந்த விஷயங்கள் உங்களுக்கும் கசிஞ்சிருக்கு. எங்கே விஷ்ணுகுமாரின் மனது ஜெயக்குமார் பக்கம் சாய்கிறதோன்னு பயந்துதான் நீங்க ஜெயக்குமாரை இங்கே வரவழைச்சிருக்கீங்க, சரியா?”
“அவர் ஜெயக்குமார் பேரில் சொத்து எழுதி வெச்சா எனக்கு என்ன பிரச்சனை?” என்றார் வக்கீல் பலகீனமாக.
“சார், இன்று காலை எங்களால் விசாரிக்க முடிந்த சொற்பம் விஷயங்கள், ப்ளஸ் ஜெயக்குமார் எங்கள் நண்பர் என்ற ரீதியில் நாங்கள் அறிந்த சில தகவல்களை வைத்து நாங்கள் ஊகித்ததுதான் இப்போ சொல்லப் போவது. சம்பத் குமாரும் நீங்களும் சேர்ந்து சில பிஸினஸ்களிலும் இன்வெஸ்ட்மெண்ட்களிலும் ஈடுபட்டிருக்கீங்க, விஷ்ணுகுமாருக்குத் தெரியாமல்!” தர்ஷினி முத்தாய்ப்பு வைத்தாள்.
“ஷட் அப்!” சீறினார் வக்கீல். “உங்க ஊகங்களுக்குப் பதில்சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. உங்க குற்றச்சாட்டுகளை நிரூபிச்சுட்டு அப்புறம் பேசுங்க!”
“கோபப்படாதீங்க அங்கிள், அவங்க கேட்கறதுக்குப் பதில் சொல்லிடுவோம்” என்றவாறே உள்ளே வந்தான் சம்பத்குமார்.
“சம்பத்! என்ன பேத்தற நீ? நாம என்னடா தப்புப் பண்ணினோம், இவங்க நம்மைக் குற்றவாளி மாதிரி நடத்தறதுக்கு? போலீசைக் கண்டு பயந்துட்டியா?” பாண்டுரங்கன் பொரிந்தார்.
“இல்ல அங்கிள். நாம எந்தத் தப்பும் பண்ணலைன்னு நிரூபிக்க இது ஒரு சான்ஸ். இதைப் பயன்படுத்திப்போம். என் தம்பி இறந்தது ஒரு விபத்து அல்லது தற்கொலை…”
“ஹலோ மிஸ்டர் சம்பத்! உங்க வீட்டுப் பாரபெட் சுவரை நீங்களே பார்த்ததில்லையா? உங்க தம்பி தவறிக் கீழே விழுவதற்குச் சான்ஸ் மிகமிகக் குறைவு. இது தற்கொலை, அல்லது கொலையா இருக்கத்தான் தொண்ணூற்றி ஒன்பது சதவீதம் சான்ஸ்” என்றார் சிவசரண்.
“பார்த்தீங்களா அங்கிள். என் தம்பியை எங்களில் யாராவது ஒருத்தர் தள்ளிவிட்டிருப்போமோ என்ற சந்தேகம் இவங்களுக்கு வந்தாச்சு. அதான் சொல்றேன், இவங்க ஊகத்தின் பேர்ல கேள்வி கேட்டாலும், நாம அவங்களுக்குப் பதில் சொல்லிடுவோம்” என்றான் சம்பத்.
“மிஸ்டர் சம்பத், எங்க ஊகத்தின்படி நீங்க ஜெயக்குமாரைக் கொல்வதற்குச் சரியான காரணம் இருக்கு. நீங்களும் லாயர் சாரும் ஒருமுறை மகாபலிபுரம் கோல்டன் ஸாண்ட்ஸ் ரிஸார்ட்டுக்குப் போயிருந்திருக்கீங்க, உங்க அப்பாவுக்குத் தெரியாமல்” என்றாள் தர்ஷினி மொபைலைப் பார்த்தவாறே.
அச்யுத் செய்யும் அற்புதம் இது என்று எண்ணினான் தர்மா. அச்யுத் அவர்கள் நிறுவனத்தில் வேலைசெய்கிறான். வேகமாகத் தகவல்கள் சேகரிப்பதில் கில்லாடி.
“ரிஸார்ட்டுக்குப் போறது ஒரு தப்பா?”
“அது ஜெயக்குமாருக்குத் தெரிஞ்சிருக்கு. இதைப் பற்றின இன்ஃபர்மேஷன் அவனுக்குக் கிடைச்சப்போ, நாங்களும் பக்கத்திலே இருந்தோம்” என்றாள் தன்யா.
தர்மா தன்யாவை வியப்பாகப் பார்த்தான்.
ஒருவேளை அவனுக்கு இந்தத் தகவலைக் கண்டுபிடித்துச் சொன்னதே சதுரா தானோ? ஜெயக்குமார் ஏஜன்சிக்கு அடிக்கடி வந்தது, வேலை கொடுத்தது எல்லாம் அவன் சினிமாத் துறையை ஒட்டிய வேலை என்றல்லவா நினைத்திருந்தேன்?
“இதோ பாருங்க, உங்களுக்கு இந்த விஷயம் விளக்கமாகவே சொல்லிடறேன். எங்க பிஸினஸில் அனாமத்தா கொஞ்சம் பணம் கிடைச்சது. அதோடு என் அம்மா என் மனைவிக்கு இருக்கட்டும்னு சொல்லிக் கொடுத்த நகைகளும் இருந்தது. இதைத் தவிர நானா சேர்த்து வெச்ச பணமும் கணிசமா இருந்தது. இதை வெச்சுத்தான் மகாபலிபுரத்தில் நான் ஒரு வில்லா வாங்கினேன்” என்றான் சம்பத்.
“இதில் என்ன தப்புன்னு எனக்குப் புரியலியே” என்றார் சிவசரண்.
“சாதாரணமா தப்பு இல்லைதான் சார். ஆனா இந்த வீட்டில் இது பெருங்குற்றம்! இவங்க அப்பாவுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது. பர்சனல் பெயரில் எந்தச் சொத்தும் யாரும் வாங்கக் கூடாது! ஆனா அதை சம்பத் பண்ணியிருக்காரு. இது அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா…” தன்யா சொல்லிக் கொண்டு வரும்போதே சம்பத்தின் உடல் தூக்கிவாரிப் போட்டது.
“இதுக்கே தூக்கிவாரிப் போட்டா எப்படி? வில்லா வாங்கணும்னா, பில்டர் ஆஃபீஸ்க்குப் போகணும். வேறு ஒரு க்ரூப் நடத்தும் ரிஸார்ட் போக வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்குப் பதில் இன்னும் சுவாரசியமா இருக்குமே!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் தர்ஷினி.
எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“சொல்லுங்க சம்பத்! என்னைப் பார்த்தா என்ன அர்த்தம்? ஒரு ரிஸார்ட்டில் தங்கியிருந்தீங்க, அது உண்மைதானே?” என்று கேட்டாள் தர்ஷினி.
“உண்மை. அதுக்கு என்ன இப்போ? ஏதாவது ஒரு இடத்தில் தங்கத்தானே வேணும்? இந்த ரிஸார்ட்டில் இடம் கிடைச்சது, தங்கினோம்” என்றான் சம்பத்.
“தங்கினீங்க, ஆனா ரெகார்ட்ஸ்ல உங்க பேரே இல்லை. லாயர் சார் பேரில்தான் காட்டேஜ் எடுக்கப்பட்டிருக்கு.”
“ஒரு முன்னெச்சரிக்கையா…”
“சரி. உங்களுக்கு அடுத்த காட்டேஜில் யார் தங்கியிருந்தா லாயர் சார்?” என்று அப்பாவியாகக் கேட்டாள் தர்ஷினி.
“ஓகே, அங்கே நானும் போனேனான்னு செக் பண்றீங்க. போயிருந்தேன். எங்களுக்கு அடுத்த காட்டேஜில் தங்கியிருந்தது… சரியா நினைவில்லை. யாரோ பாப் பாடகின்னு சொன்னாங்க.”
“ஆச்சரியமா இருக்கே! எங்க இன்ஃபர்மேஷன்படி அங்கே தங்கியிருந்தது ஸாம் என்ற நபர், 35 வயது. அவரையா பாப் பாடகின்னு சொல்றீங்க?” அமைதியாக அடுத்த குண்டை வீசினாள் தர்ஷினி.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings