2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
இவர்கள் யோசனையில் ஆழ்ந்திருந்தபோது “உன் அண்ணன் கீழே விழுந்தபோது நீ எங்கே இருந்தாய் ஜானவி?” என்று விஷயத்திற்கு வந்தார் சிவசரண்.
“மொட்டை மாடிலதான்” என்றாள் ஜானவி.
“ஆப்வியஸ்லி. அதைக் கேட்கலை. மொட்டை மாடில எங்கே? யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருந்தியா?”
ஜானவி யோசித்தாள். “இல்லை, வாட்டர் டேங்க்குக்குப் பக்கத்தில். அங்கே கொஞ்சம் இருட்டா இருக்கும். ஒரு மெசேஜ் பார்த்துக்கிட்டிருந்தேன்…”
ஏன் தயங்குகிறாள் ஜானவி?
“அங்கிருந்து பார்த்தால் உன் அண்ணன் நின்றுகொண்டிருக்கும் இடம் தெரியுமா?”
“தெரியும், ஆனா நான் அங்கே பார்க்கலை. மொபைல் பார்த்துக்கிட்டிருந்ததா சொன்னேனே. என் அண்ணன் கீழே விழுந்த சப்தம் கேட்டதும் சடாரென்று நிமிர்ந்தேன். யார் விழுந்தான்னுகூட எனக்குத் தெரியாது. பாண்டுரங்கன் அங்கிள் சப்தம் போட்டதுக்கு அப்புறம்தான்…” கண்களில் மறுபடி நீர் கட்டிக் கொண்டது.
“அப்புறம் என்ன செய்தாய்?”
“அம்மா பாரபெட் சுவர்கிட்ட ஓடி வந்தாங்க. அவங்களோட போய்ச் சேர்ந்துக்கிட்டேன்.”
“அம்மா தனியாகவா ஓடிவந்தாங்க? இல்லை, அப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்தாங்களா?”
“இல்லை, தனியாதான் வந்தாங்க.”
சிவசரண் அவளைச் சந்தேகமாகப் பார்த்தார். ஒருவிநாடி கூட விஷ்ணுகுமாரின் மனைவி அவரை விட்டு விலக மாட்டாள் என்பது அந்த வீட்டில் மட்டுமல்ல, அந்தப் பகுதியிலேயே பிரசித்தமான செய்தி.
“உங்க அப்பா எங்கே இருந்தார் அப்போ?”
“நான் கவனிக்கலை சார்.”
ஜானவி தலைகுனிந்தாள்.
“ஜானவி, ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா?” என்று கேட்டாள் தன்யா.
“யெஸ் மேம்” என்றாள் ஜானவி.
“உங்க அண்ணா கீழே விழுந்துட்டான்னு பாண்டுரங்கன் சார் கத்தின அந்த விநாடியை மனதிற்குக் கொண்டுவாங்க. அப்போ நீங்க என்ன பார்த்தீங்களோ, அதை அப்படியே ஒரு ஓவியமா வரைஞ்சு கொடுக்க முடியுமா? பென்சில் ஸ்கெட்ச் போதும்” என்றாள் தன்யா.
“மேம்! நான் ஒண்ணுமே பார்க்கலைன்னு சொல்றேனே! என் அண்ணா கீழே விழுந்ததற்கப்புறம்தான் நான் நிமிர்ந்தே பார்த்தேன்” அழுகைக் குரலில் சொன்னாள் ஜானவி.
“புரியுதும்மா. நீங்க நிமிர்ந்ததற்கு அப்புறமும் உங்களால எதையும் உள்வாங்கியிருக்க முடியாது. ஏன்னா, மிக அதிர்ச்சியான ஒரு செய்தியைக் கேட்கறீங்க. ஐ சப்போஸ், இதுதான் உங்க வாழ்வில் நீங்க பார்த்த முதல் மரணம்னு…”
ஜானவி தலையசைத்தாள்.
“ஆனா உங்க கண்கள் தங்களுடைய வேலையைப் பார்த்துட்டுதான் இருந்திருக்கும். உங்க ஸப் கான்ஷியஸ் மைண்ட்ல அந்த விவரங்கள் பதிஞ்சு போயிருக்கும். கொஞ்சம் எங்களுக்காக ஞாபகப்படுத்தி வரைஞ்சு பாருங்க. அது என்ன நடந்ததுன்னு புரிஞ்சுக்க எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். ப்ளீஸ்” என்றாள் தன்யா.
ஜானவி தயக்கமாய் “சரி, ட்ரை பண்றேன்” என்றாள்.
====================
அவள் வெளியேறியதும் “ஓவியம்லாம் எதுக்கு வரையச் சொல்றீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் சிவசரண்.
“சார், இந்தப் பொண்ணு ஒரு ஐ-விட்னஸ். ஏதாவது தன்னையறியாமல் கவனிச்சிருக்கலாம், அது மறுபடி நினைத்துப் பார்க்கும்போது நினைவு வரலாம். இது ஒரு மெமரி எக்ஸர்சைஸ்” என்றாள் தன்யா.
“இவ்வளவு கஷ்டப்பட வேண்டாமே, அங்கே வந்திருந்தவங்கள்ள சில பேராவது அந்தப் பக்கம் பார்த்திருக்கச் சான்ஸ் இருக்கு. ஏன், பலபேர் காமிரா, மொபைல் வெச்சுக்கிட்டு ஃபோட்டோ எடுத்திருக்கக்கூட சான்ஸ் இருக்கு. இது ஒரு செலிப்ரிட்டி டெத், இல்லையா?” என்றார்.
“அதை நீங்க தரோவா விசாரிச்சுடுவீங்க, ரிசல்ட்டை எங்களுக்கு அப்டேட் பண்ணுங்க” என்றாள் தன்யா புன்னகைத்தவாறே.
“நிச்சயமா” என்றவர் “பட் இதெல்லாம் எதற்காகன்னுதான் எனக்குப் புரியல. தற்கொலைக்குக் காரணம் தேடறீங்களா, இல்லை இது தற்கொலை இல்லையோன்னு சந்தேகப்படறீங்களா?” என்று ஆர்வமாகக் கேட்டார்.
இதுவரை மௌனமாகவே இருந்த தர்மா இடைமறித்தான். “இன்ஸ்பெக்டர், ஜெயக்குமார் என்ற க்ளையண்ட்டைத்தான் இவர்களுக்குத் தெரியும். ஆனால் ஜெயக்குமார் என்ற மனிதனை எனக்கு நல்லா தெரியும். அவனுக்குத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ரொம்ப ஜாஸ்தி. சொல்லப் போனா பக்திகூடத் தன்னுடைய கையாலாகாத்தனத்தை ஒத்துக்கற ஒரு செயல்தான் என்பது அவனுடைய எண்ணம். ஆன்மீகப் பத்திரிகையான என்னுடைய பாரத புத்ராவில் இன்னும் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் இருக்கணும்னு அடிக்கடி சொல்வான். அவன் வீட்டு ஹாலில் உள்ள, அவனே டிஸைன் பண்ணிய போஸ்டர் இதோ என் மொபைல்ல பாருங்க” என்று காட்டினான்.
ஜெயித்து வாழ்க!!!
பிரச்சனைகளை.
சோகங்களை.
பகையை.
லட்சியங்களை.
வாழ்வை!
வயதை!!
விதியை!!
மரணத்தை!!
கடவுளை!!!
“‘மரணத்தை மட்டும் மனிதனால் ஜெயிக்க முடியாது ஜெய்’ என்பேன். ‘இதுவரைக்கும்’ என்று பதில் சொல்வான் சிரிச்சுக்கிட்டே. இவனா தற்கொலை பண்ணிப்பான்னு நினைக்கறீங்க?”
சிவசரண் அயர்ந்து போயிருந்தார்.
இதுவரை ஜெயக்குமாரின் மரணம், ஜெயக்குமாரின் உறவினர்கள், ஜெயக்குமாரைச் சுற்றி நடந்தவைகள் என்றே யோசித்து வந்திருக்கிறார். முதன்முதலாய் ஜெயக்குமார் என்ற கேரக்டர் அவருக்குப் பிரசன்னமாகியிருக்கிறான். அந்தக் கேரக்டர் மரணமடையவில்லை, அவனுக்கு மரணமே கிடையாது. அவனுடைய தங்கை, நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் மனதில் அவன் இருந்துகொண்டேயிருப்பான், மரணத்தை ஜெயித்துவிட்டான் என்றெல்லாம் ஒரு போலீஸாக இதுவரை அவருக்கு வந்திராத சிந்தனைகள் மனதில் ஊர்வலம் போயின.
ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்து “சார், வக்கீல் பாண்டுரங்கன் சார் வந்துட்டாரு. உள்ளே வரச் சொல்லவா?” என்று கேட்க, திடுக்கிட்டு நிமிர்ந்தார் சிவசரண்.
“வரச் சொல்லு” என்றார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings