2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அஞ்சனா! ரெடியாகிட்டயா அம்மா?” கேட்டவாறே உள்ளே நுழைந்த சுகவனத்தைப் பார்த்துப் புன்னகைத்தாள் அஞ்சனா.
பிரபல சினிமா நட்சத்திரம். அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டாள். அவார்ட்கள் வாங்கிக் குவித்து விட்டாள். இந்த ஆண்டின் தேசிய விருது அவளுக்குக் கிடைத்திருப்பதாக இரண்டு நாட்கள் முன்பு அரசாங்க வாசனை வீசிய பேப்பரில் டைப் செய்யப்பட்ட கடிதம் வந்திருந்தது.
“ரெடியாகிட்டேன்ப்பா” என்றாள்.
சுகவனம் அவள் அப்பா அல்ல தான். ஆனால் அதற்குப் பல மடங்கு மேலாக அவள்மீது பாசமும் அக்கறையும் கொண்ட கார்டியன். அவரும் ஒரு படத்தயாரிப்பாளராக இருந்தவர்தாம். அழகும் திறமையும் அபரிமிதமாக இருந்த, குணத்தில் பத்தரை மாற்றுத் தங்கமாய் ஜொலித்த அஞ்சனா என்ற அந்தப் புதுமுக நாயகியின் குருவாக, பாதுகாப்பாளராக, பின் தந்தையாக மாறிப் போனவர்.
அன்று புதுப்பட ஷூட்டிங் தொடங்கியது. ஒரே ‘டேக்’கில் காட்சியைச் சரியாக நடித்துக் கொடுத்த அஞ்சனாவை இயக்குனர் பிரமிப்புடன் பார்த்தார்.
“யூ ஆர் நாட் ஜஸ்ட் அ ப்ரெட்டி ஃபேஸ்!” என்று வியந்தவர், “என்னோட அடுத்த ப்ராஜக்ட் மலையாளத்தில். நீங்கதான் ஹீரோயின். மம்முட்டி சார்க்கு நல்ல காம்பெடிஷன் கொடுப்பீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. எல்லாமே சரியா செய்யறீங்க நீங்க” என்று மனதாரப் பாராட்டினார்.
“ஆனா நான் சொன்ன விஷயத்தில் மட்டும் சரியா செய்யாத நீ” என்று செல்லமாகக் கடிந்து கொண்டார் சுகவனம்.
“என் கல்யாண விஷயம் தானேப்பா?” என்று அமைதியாகக் கேட்டாள் அஞ்சனா.
“அம்மா, மூன்று தலைமுறையா தெலுங்கு ஃபீல்டுல பிரபலமானவங்க குமார ரெட்டி குடும்பம். அவங்க பேரன் வெங்கட் குமார ரெட்டிக்காக உன்னைக் கேட்டு வலிய வந்து சம்பந்தம் பேசினாங்க, நீ பிடியே கொடுக்கலை. அப்புறம் இந்த அபிஷேக் நடராஜன்? அவனுக்கு என்னம்மா குறைச்சல்? சிங்கப்பூர்ல ஷாப்பிங் மால் வெச்சிருக்கான். கோடி கோடியா சம்பாதிக்கறான். கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னைத்தான் பண்ணிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிக்கறான்…”
“அபிஷேக் நடராஜனாச்சே! அதான் ஒற்றைக் காலில் நிக்கறார் போலிருக்கு!” மென்மையாகச் சிரித்தாள் அஞ்சனா.
“உனக்கு ஜோக் வேற கேக்குதா? இங்கே ஒருத்தன் தவியாகத் தவிக்கிறேன். இத்தனை நாள் முடிவு சொல்லாம விட்டுட்டு இப்போ என்னவோ உன் முந்தின படத்துக்கு இசையமைச்ச ஜெயக்குமாரைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் கால்ல நிற்கிறே…”
“நானுமா? நான் நடராஜன் இல்லையே” மீண்டும் சிரித்தாள் அஞ்சனா.
“விளையாடாதே அஞ்சனா! இது உன் வாழ்க்கைப் பிரச்சனை. எவ்வளவோ நல்ல நல்ல இடங்கள் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அப்ரோச் பண்ணறாங்க. ஜெயக்குமார் இப்போதான் இரண்டாவது படம் இசையமைக்கறான். இன்னும் மேன்ஷனில் தான் தங்கியிருக்கான். அவனைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றியே, ஏன்?”
அஞ்சனா சிறிதுநேரம் மௌனமாக இருந்தாள். பிறகு “அப்பா! இந்த லைன்ல இருக்கற பெண்கள் எல்லோராலும் எப்படிப் பார்க்கப்படறாங்கன்னு உங்களுக்குத் தெரியும். கவர்ச்சியாக ஆடை அணிஞ்சுக்கறோம், ஹீரோவோட டூயட் பாடறோம், ஆனா எங்களுக்கும் கற்பும் கண்ணியமும் இருக்கு.”
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாம்மா?”
“உங்களை மாதிரி என்னைப் புரிஞ்சுக்கிட்ட, என்னை மதிக்கிற ஒருவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். அப்பா, போன பட ஷூட்டிங் போது, அவரை என்னோட ஸோலோ சாங்குக்குப் போட்ட டியூனைப் பாடிக்காட்டச் சொல்லி என்கிட்ட அனுப்பினார் இயக்குனர். அப்போ… நான் உடை மாற்றிக்கிட்டிருந்தேன்…”
“என்ன? என்னம்மா சொல்ற?” பதறிப்போய்க் கேட்டார் சுகவனம்.
“ஸாரி மேடம், அப்புறம் வரேன்னு குனிஞ்ச தலை நிமிராமச் சொல்லிட்டு உடனே விலகிட்டார்ப்பா. படம் முழுக்க என்னைப் பார்க்கும் போதெல்லாம், என்னை என்ன, எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், கண்ணிலே, பேச்சிலே அந்தக் கண்ணியம் குறையவேயில்லை அப்பா. ஹி இஸ் அ பர்ஃபக்ட் ஜெண்டில்மேன்!” ஆச்சரியமாகச் சொன்னாள் அஞ்சனா.
“அவன் தங்கமான பையன் தான்மா. இந்த இண்டஸ்ட்ரிக்கே தெரியும். அதுக்காக, இன்னும் முன்னுக்கு வராத ஒருத்தனைக் கட்டிக்கிட்டு கஷ்டப்படப் போறியா?” உஷ்ணமாகக் கேட்டார் சுகவனம்.
“ஏம்ப்பா? பெரிய நடிகர்கள் வீட்ல கல்யாணம் பண்ணினா மட்டும்தான் நல்லாயிருக்க முடியுமா? இங்கே எல்லாருக்கும் கடன் பிரச்சனைகள் இருக்குப்பா! கொஞ்ச வருஷம் ஆனா, மறுபடி நடிக்க வர வேண்டியதுதான்! பணத்துக்குக் குறைச்சல் இல்லாத வீட்ல கல்யாணம் பண்ணினா நான் ஒரு அடிமையா, அலங்காரப் பொம்மையாதான் வாழ முடியும். ஏதோ இத்தனைநாள் நடிச்சாச்சு, நல்ல பேரும் வாங்கியாச்சு. இனி, ஒரு நல்ல மனிதனைக் கல்யாணம் பண்ணியிருக்கோம்ங்கற திருப்தியோட, நல்ல குடும்பப் பெண்ணா, அவன் முன்னேறப் பக்கபலமா நின்னு, அவனுக்கு உதவவும் உற்சாகப்படுத்தவும் சிறந்த தோழியா இருந்து, அவன் குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும்னு ஆசைப்படறேம்ப்பா! ஜெயக்குமார் எனக்குச் சரியான கணவரா இருப்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!” உறுதியாகச் சொன்னாள் அஞ்சனா.
சுகவனம் மௌனமானார்.
டைரக்டர் அறைக்குள் சன்னமான கிடார் ஒலியும் இனிய குரலில் பாட்டும் கேட்டன. அஞ்சனா ஆர்வமாகப் பார்த்தாள்.
“என்ன பார்க்கறே? உன் ஜென்டில்மேன் ஹீரோதான். மியூசிக் டிஸ்கஷன் போயிக்கிட்டிருக்கு” என்றார் சுகவனம். “இப்போதான் கச்சேரியையே ஆரம்பிச்சிருக்கான், அதுக்குள்ள வித்வான்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டே” என்றார் புன்னகையுடன்.
“முதல் பாட்டிலேயே பாடகரை கணிச்சுடலாம்ப்பா. கம்பீரமா ஹம்ஸத்வனியிலே ஆரம்பிச்சிருக்கார். ஹம்ஸம் தண்ணீரிலிருந்து பாலைப் பிரிக்கும் சக்தியுள்ளதாச்சே!” என்றாள் அஞ்சனா.
“அஞ்சனா! சத்தியமா சொல்றேன், நீ தேசிய விருது வாங்கியிருக்கேன்னு தெரிஞ்ச நாளைவிட இன்னிக்குத் தாம்மா நான் ரொம்ப சந்தோஷப்படறேன். நீயும் அந்தத் தம்பியும் நீடுழி வாழணும். என்றைக்கும் ஒற்றுமையா, சந்தோஷமா இருக்கணும்” குரல் தழுதழுத்தது சுகவனத்திற்கு.
ஒரு மனிதனைத் தேவனாகவும் மனிதனாகவும் மிருகமாகவும் ஆக்குவது பெண்களிடம் அவன் நடந்துகொள்ளும் முறைதானே! சீலம் இருக்குமிடத்தில் சிறப்பு தானாக வந்து சேருகிறது. எண்ணியெண்ணிப் பெருமை கொண்டது சுகவனத்தின் மனம்.
அறைக்குள் இன்னும் ஜெயக்குமாரின் கிடாரிலிருந்து ஹம்ஸத்வனி கொட்டிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings