2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த மான்?
சிறுவயது முதலே லோகனுக்கு உள்ள பிடிவாதம் என்னவென்றால், ஒன்றை மனதில் நினைத்து விட்டால், அதை உடனே அடைய வேண்டும். அந்த குணம் அவனை விட்டுப் போகாததால்தான், லாவண்யாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியவுடன், பக்கத்தில் உள்ள டிராவல்ஸ் ஒன்றில் நுழைந்து அடுத்த நாள் போர்ட்பிளேயருக்கு ஒரு விமான டிக்கெட் புக் செய்தான்.
அந்த வீதியில் இருந்த மிகப் பெரிய ஜவுளிக்கடையில் நுழைந்து விலையுயர்ந்த கோட், சூட், தொப்பி போன்ற பொருட்களை வாங்கிக் குவித்தான். அங்கேயே விலையுயர்ந்த சூட்கேஸ், டிராலி போன்றவற்றை வாங்கி, துணிகளைப் பெட்டிகளில் அடைத்துக் கொண்டான்.
ஜவுளிக்கடை மேனேஜரை அழைத்து, தனக்கு ஒரு டாக்சி வேண்டும் என்றும் அந்த டாக்சியில் வாங்கிய பொருட்கள் ஏற்றப்பட வேண்டும் என்றும் கட்டளை இட்டான். இவனின் பில் தொகையைப் பார்த்ததும் மானேஜர், வாயெல்லாம் பல்லாக அவன் கட்டளையை நிறைவேற்ற ஓடினார்.
வண்டி வருவதற்குள், வாங்கியதில் இருந்து ஒரு நல்ல கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். தொப்பியும், ஷூவும் அணிந்து கொண்டதும் அவனுக்கு ஒரு கனவானின் கம்பீரத் தோற்றம் வந்துவிட்டது.
டாக்சியில் ஏறியதும் அந்த நகரத்தில் இருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வண்டியை விடச் சொன்னான். ஹோட்டல் அறையை அடைந்தவுடன், ஒரு நல்ல குளியல் போட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டான். எழுந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது.
நேற்றைய இரவு உணவுக்குப்பின், தான் எதுவும் சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அந்த நேரத்திலும் கூட அந்த ஹோட்டல் ரெஸ்ட்டாரண்ட் கூட்டமாக இருந்தது.
போர்ட்பிளேயரில் இதேபோல் இருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டில் தான் முதன் முதலில் லாவண்யாவைச் சந்தித்தான் லோகன். மோதலில் ஆரம்பித்திருக்க வேண்டிய சந்திப்பு, லாவண்யாவின் அறிவுக் கூர்மையினாலும், நேர்மையினாலும் இனிமையாக முடிந்தது.
நடந்தது இதுதான். உள்ளூரில் அலுத்துப்போய், வெளியூரில் தன் தொழில் திறமையைச் சோதித்துப் பார்க்க அந்தமான் வந்திருந்தான் லோகன். வந்ததும் வேலையை ஆரம்பிக்காமல் அங்குள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு லோக்கல் டிராவல்ஸில் புக் செய்திருந்தான்.
அவர்கள் சுற்றிக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டிருந்த ரோஸ் தீவு என்ற ஒரு மினி தீவை அந்த டிராவல்ஸ் சுற்றிக் காண்பிக்கவில்லை. லோகன் கோபமாக அந்தக் கம்பெனியில் காரணம் கேட்டபோது, நேரில் வந்து விளக்கம் அளிப்பதாக அவனைச் சமாதானப்படுத்தினர் அந்தக் கம்பெனியினர்.
அன்று மாலை, ரிசப்சனில் இருந்து அவனைப் பார்ப்பதற்காக ஒருவர் வந்திருப்பதாகப் போன் வந்ததும், ரூமிலிருந்து ரிசப்சனுக்கு வந்தான் லோகன். கோட் சூட் அணிந்து கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதரை எதிர்பார்த்து, கண்களால் சுற்றிலும் தேடினான் லோகன். ஒரு பெண்ணின் மென்மையான குரல் அவன் பின்புறம் கேட்டது, ‘மிஸ்ட்டர் லோகன்?’.
திரும்பிய அவன் எதிரில் கருநீல சுடிதார் அணிந்து நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண். பெண்களை எப்போதும் அலட்சியக் கண்ணோடு நோக்கும் லோகனுக்கு, இந்தப் பெண்ணை ஏனோ அப்படிப் பார்க்கத் தோன்றவில்லை.
அந்த ஈர்ப்பின் காரணம் அவளின் எளிமையான அலங்காரமா? அல்லது சீராக வாரி விடப்பட்டிருந்த அவளின் கூந்தலா? அல்லது எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் நேராக நோக்கிய அவளின் கண்களா? தெரியவில்லை அவனுக்கு.
‘எஸ்’ என்றான் அவளை நோக்கி. தன் பெயர் லாவண்யா என்றும், டிராவல்ஸ் கம்பெனியில் இருந்து வந்திருப்பதாகவும், தற்போது பேசுவதற்கு அவன் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா? என்றும் பணிவுடன் கேட்டாள்.
அவள் கேட்ட விதமே மறுக்க முடியாத தொனியில் இருந்தது. வாழ்க்கையில் இதுவரை எந்தப் பெண்ணிடமும் கேட்காத ஒன்றை லோகன் லாவண்யாவிடம் கேட்டான்.
‘காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா?’.
எந்தவித உணர்ச்சியுமின்றி உடன் பதில் தெறித்து வந்தது அவளிடம் இருந்து.
‘ஷ்யூர்… உங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீது என்ன குறை?’ என்று அழகான ஆங்கிலத்தில் கேட்டாள்.
‘உங்கள் நிறுவனம் எங்களை ரோஸ் தீவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்கள். அந்தத் தீவை நான் பார்த்தே ஆகவேண்டும், உங்களின் வாக்குறுதிப்படி’.
இன்னும் கடுமையாகப் பேச நினைத்திருந்தாலும், அவள் முகத்தைப் பார்த்துப் பேசும்போது ஏனோ கடுமை வரவில்லை. அவளின் சீராக்கப்பட்டிருந்த புருவம் மாத்திரம் லேசாக ஏறி இறங்கியது.
‘அன்று அந்தத் தீவுப்பகுதியில் கடுமையான மழை. பயணிகளின் பாதுகாப்புக் கருதி யாரையும் அழைத்துச் செல்லவில்லை. நீங்கள் இன்னும் ஒரு வாரம் இங்கு தங்கியிருப்பீர்கள் என்றால் பருவநிலை பார்த்து உங்களை அந்தத் தீவிற்கு எங்கள் செலவில் அழைத்துச் செல்கிறோம்’.
அவள் பேசும்போது அவளின் அசையும் உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்தான் லோகன். லேசாக உதட்டுச் சாயம் பூசப்பட்ட அவளின் இதழ்கள், பேசும்போது அவ்வப்போது தெரிந்து மறைந்த அவளின் வெண்பற்கள் அவனின் கவனத்தைச் சிதறடித்தன.
இதுவரை எந்தப் பெண்ணின் அருகாமையிலும் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தது இல்லை என்ற உண்மையும் உறைத்தது. ‘தங்களின் காஃபிக்கு மிகவும் நன்றி. மீண்டும் உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்’ என்று எழுந்தாள்.
எழுந்து நின்று அவளை வழியனுப்பினான் லோகன். பெண்களை அலட்சியமாகக் கையாளும் தான், இந்தப் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரிசப்சனில் இருந்து அவளின் தொலைபேசி அழைப்பு வந்தது. அன்றும் ரோஸ் தீவில் கால நிலை சரியில்லை என்றும் அடுத்த நாள் மீண்டும் வருவதாகக் கூறி போனை வைத்து விட்டாள். இன்னும் கொஞ்ச நேரம் அவள் பேசியிருக்கலாம் என்று தோன்றியது லோகனுக்கு.
அன்று அவனுக்கு வேலை இருந்தது. தொழில் முறையில் ஒரு நண்பனைச் சந்தித்து அவனுக்கு ஒரு வேலை கொடுக்கவேண்டியிருந்தது.
தெருவின் ஓரத்தில் இருந்த அந்த மூன்றாம் தர தேநீர் விடுதியில் அறிமுகம் இல்லாதவர்கள் போல் அமர்ந்திருந்தனர் அவனும், அவனின் லோக்கல் நண்பனும். தேநீர் குடித்து முடித்துவிட்டு, சுருட்டப்பட்ட ஒரு காகிதத்தை நண்பனிடம் வீசிவிட்டு வெளியேறினான் லோகன்.
அந்தக் காகிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி, நண்பன் ஒரு பெண்ணுடன் அந்த நகரில் இருந்த பிரபல நகைக்கடைக்குச் சென்று, நகைகள் வாங்க வந்திருப்பதைப் போல நடித்து, விலையுயர்ந்த ஏதோ ஒரு நெக்லசை அதன் அடையாள எண் பொறிக்கப்பட்டிருக்கும் அட்டையுடன் தெளிவாக புகைப்படம் எடுத்து வந்து கொடுக்கவேண்டும்.
அந்த அட்டையில் அதன் எடை, தரம், விலை போன்றவை குறிப்பிடப்பட்டு இருப்பதால் அதன் புகைப்படம் முக்கியம். இதை கடைக்காரர்களுக்கு சந்தேகம் வராத வகையில் செய்ய வேண்டும். கொடுத்த வேலையை இரண்டு நாட்களுக்குள் அவன் நண்பன் சிறப்பாகச் செய்து முடித்து, அதற்கான தாராள சன்மானம் பெற்றுச் சென்றான்.
அடுத்து லோகன் பார்த்தது, நகைகள் வேலை செய்யத் தெரிந்த அவனது இன்னொரு நண்பனை. லோகனின் நட்புச் செயினில் ஒரு ஸ்பெசல் என்னவென்றால், அவனின் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகாதவர்கள். பின்னாளில், காவல் துறையினர் ஒரு ஆளைப் பிடித்தாலும் அடுத்த ஆளை இந்தச் செயின் பிரேக்கினால் பிடிக்க முடியாது.
போட்டோக்களைக் காண்பித்து அச்சு அசல் இதே போல், இதே எடையில் ஒரு கில்ட் நகை உருவாக்கச் சொன்னான். இந்த ஆசாரியின் திறமை லோகனுக்கு நன்கு தெரியும். மேலே பூசும் தங்கப்பூச்சை கொஞ்சம் அதிகமாகவே பூசுவான். உரசிப் பார்ப்பவர்கள் கூட ஏமாந்து விடுவார்கள்.
வேலைப்பாடு அதிகம் உள்ளதால் ஒரு வாரம் விட்டு வரச் சொன்னான் அவன் நண்பன். முழுப்பணத்தையும் அவன் கேட்டதற்கும் அதிகமாக அப்போதே கொடுத்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தான் லோகன்.
அடுத்த நாள் சரியாக ஒன்பது மணிக்கு ஹோட்டலுக்கு வந்து அவனைத் தொலைபேசியில் அழைத்தாள் லாவண்யா. அன்று ரோஸ் தீவு செல்ல காலநிலை நன்றாக இருப்பதால், அவனுக்கு செளகரியப்பட்டால் அப்போதே கிளம்பலாம் என்றாள். கில்ட் நகை வரும் வரை லோகனுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லாததால், உடனே கிளம்பினான்.
நீல நிற கால்சட்டையும், அதே நிறத்தில் துப்பட்டாவும், வெள்ளை நிறத்தில் மேல்சட்டையும் அணிந்து வந்திருந்தாள் லாவண்யா. அவளின் அருகில் நெருங்கும்போது மென்மையான ஒரு வாசனை காற்றோடு வந்து அவனைக் கடந்து சென்றது. அவனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து குளிரூட்டப்பட்ட காரில் அவனை அமர்த்தி, தானும் அமர்ந்தாள்.
‘என்னோடு கூட யார் வருவார்கள்?’.
அவனின் கேள்விக்கு ஆச்சரியமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள் அவள்.
‘ஏன்? நான்தான்… எனி பிராப்ளம்?’ என்றாள்.
‘நோ..நோ.. இட்ஸ் மை பிளசர்’ என்றான் அவசரமாக.
உண்மையிலேயே மனம் ஒரு முறை குதித்து அடங்கியது. டிராவல்ஸ் கம்பெனி தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவனின் கோபத்தைத் தணிக்கக் கூறியிருப்பதாகக் கூறினாள். அவளின் அருகாமையில் அந்த முழுநாள் கழியப்போகிறது என்பதே அவனுக்கு உற்சாகமூட்டியது.
உண்மையில் அந்த நாள் அவனுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத நாளாகவே இருந்தது. ஒரு பெண் இவ்வளவு புத்தியும், அழகும், கம்பீரமும் கொண்டிருப்பாள் என்று அவன் நம்பியதில்லை. பழகப் பழக அவளிடம் ஆர்வம் அதிகமாயிற்றே தவிர, சலிப்புத் தோன்றவே இல்லை. இடையில் அவளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் அவள் மலையாளத்தில் பேசியதும் அவன் ஆர்வம் தாங்காமல் தமிழில் கேட்டான்.
‘நீங்க மலையாளியா?’.
‘அம்மா மலையாளி..ஓ..நீங்க தமிழா?’ என்றாள்.
அவளின் தமிழ் வேற்றுமொழிக் கலப்பில்லாமல் சுத்தமாகவே இருந்தது. அதன்பின் அவர்களின் மொழி மலையாளமும், தமிழுமாக தொடர்ந்தது. அந்தப் பயணம் ஏன் அவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று உள்ளுக்குள் கோபப்பட்டுக் கொண்டான் லோகன்.
காரை விட்டு இறங்கியதும் தன்னையறியாமல் உளறினான் லோகன்.
‘மறுபடி எப்போ பார்க்கலாம்?’.
புன்முறுவலுடன் பதலளித்தாள் லாவண்யா, ‘உங்களுக்கு வசதி என்றால் நாளை இரவு உணவுக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கள்’.
‘ஷ்யூர்’ என்று உடன் வெட்கமில்லாமல் ஒத்துக்கொண்டான். ஏனோ லாவண்யா முன்பு அவன் தன் கம்பீரத்தை இழந்து ஒரு பள்ளிச் சிறுவனைப் போல நடந்து கொண்டான்.
அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து, படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான் லோகன். இது என்ன புது அவஸ்தை என்று அவனுக்குப் புரியவில்லை. அன்று காலையில் இருந்து லாவண்யாவோடு கழித்த நிமிடங்களை அசை போட்டுக் கொண்டிருக்கும்போதே உறக்கம் அவனைத் தழுவ ஆரம்பித்தது.
மறுநாள் குறிப்பாக எந்த வேலை இல்லை என்றாலும், மனம் பரபரப்பாகவே இருந்தது. பெரிய வேட்டையில் இறங்கும் நாளன்றுகூட இந்தக் கிளர்ச்சியும், மெல்லிய பயமும் அவனுக்கு வந்ததில்லை. கண்கள் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தன. இரவு ஏழு மணிக்கு ரிசப்சனிலிருந்து லாவண்யாவின் அழைப்பு வந்ததும் துள்ளி எழுந்து விரைந்தான், அந்த இனிய இரவை எதிர்பார்த்து.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings