in

லோகன் (குறுநாவல் – பாகம் 1) – சின்னுசாமி சந்திரசேகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

யார் இந்த லோகன்?

அந்த பிரம்மாண்டமான அதிநவீன நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தான் லோகன். அவன் பின்னால் அவனின் லக்கேஜுகளைத் தூக்கிக்கொண்டு அடிமை போல் பெட்டிகளைச் சுமந்து வந்து கொண்டிருந்தான் ஹோட்டலின் பெல்பாய் ஒருவன்.

லோகன் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடைகளும், காலணியும், கண்களில் ஒட்டிக் கொண்டிருந்த நவீன கூலரும், அவனின் கம்பீரத்தோற்றமும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரைப் போலக் காட்டியது. சாதாரணமானவர்கள் நுழையவே முடியாத அந்த ஹோட்டலில் நுழையவே ஒரு தகுதி வேண்டும் என்பது அங்கு வந்து தங்கிச் செல்பவர்களுக்கே தெரியும்.

‘ஐ ஹேவ் மை புக்கிங்’ என்றான் ரிசப்சன் அழகியிடம். ஏழு பாஷைகள் சரளமாகப் பேசும் திறமையுள்ளவன் லோகன். அதில் தமிழும், ஆங்கிலமும் மாத்திரம் எழுதவும், படிக்கவும் தெரியும். பல ஊர்களில் சுற்றித் திரிந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாஷைகள் பல இக்கட்டான சமயங்களில் அவனுக்கு உதவியிருக்கிறது.

ரிசப்சனில் வேலைகளை முடித்துக் கொண்டு லோகன் அறை எண் 819ல் நுழைந்தான் பெல்பாய் சகிதமாக. ஒன்பதாம் எண் அவனுக்கு ராசி என்பதால் எப்போதும் அறை எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே வாங்குவான்.

லக்கேஜ்களை இறக்கி வைத்த பெல்பாயிடம் அவன் எதிர்பார்த்ததற்கு மேலாக ஒரு தொகையை டிப்சாகக் கொடுத்தான். ஹோட்டலில் வேலை செய்யும் பெல்பாய்கள் அவன் தொழிலுக்கு பல நேரங்களில் மிக உதவியாக இருப்பார்கள் என்பதால் இந்த தாராள டிப்ஸ். டிப்ஸ் நன்றாகவே வேலை செய்தது.

‘சார், மதுபானம் ஏதாவது வேண்டுமா?’ என்றான். வேண்டாம் என்று நாசூக்காக மறுத்து விட்டு, அவனை வெளியேற்றினான் லோகன்.

செக் இன் செய்யும் கஸ்டமர் நுழைந்தவுடன் மதுவிற்கு ஆர்டர் செய்தால் உடனே அந்தத் தகவல் அந்த ஸ்டார் ஹோட்டலின் அக்கெளண்ட் ஆபீசருக்கு அனுப்பப்படும். உடனே அக்கெளண்ட் செக்சன் அலர்ட் ஆகி கஸ்டமர் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விடுவார். சிலர் ஹோட்டல் கணக்கில் முட்டக் குடித்து விட்டு, ஹோட்டலுக்கு ஒரு பெரிய தொகையை நிலுவை வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

கதவைத் தாளிட்டுவிட்டு, ஆடைகளைக் களைந்து, சொகுசு மெத்தையில் சாய்ந்தான் லோகன். மெல்லிய ரீங்காரத்துடன் ஓடும் குளிர்சாதனப் பெட்டி அவன் நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

தண்ணீருக்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஏழைத் தாய் தந்தைக்குப் பிறந்து தான் பட்ட இன்னல்களையும், அவமானங்களையும் நினைத்துப் பார்த்தான் லோகன்.

எட்டாம் வகுப்பு முடித்தவுடன், அவனால் அந்த ஏழ்மை வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் திருட்டு ரயில் ஏறி கோவாவிற்கு வந்தது, கைடாக இருந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிப் பழகியது, நாகரிக உடைகள் உடுத்தப் பழகியது எல்லாம் நினைவில் நிழலாடியது.

அதன் பின் லோகன் சுற்றித் திரிந்த கல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களும் சிங்கப்பூர், சைனா போன்ற வெளிநாடுகளும் அவனுக்குக் கல்லூரிகள் கற்றுத் தராத பல நுட்பங்களை, குறிப்பாக தற்கால தொழில் நுட்பக்குறுக்கு வழிகளைக் கற்றுக் கொடுத்தன.

முக்கியமாக, பெங்களூருவில் லோகன் கழித்த நான்கு வருடங்கள் அவன் குருவின் தயவால் எந்த ஒரு பூட்டையும் சாவியின் உதவியோடும், சாவி இல்லாமலும் திறக்கும் வித்தையைக் கற்றுக் கொள்ள உதவியது.

இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும், கம்பீரத் தோற்றத்தில் செல்வந்தனாகக் காட்சியளிக்கும் நம் நாயகன் லோகன் கள்ளச்சாவி போட்டுத் திருடும் ஒரு நவீனத் திருடன் என்று. அது மாத்திரம் அல்ல.. எங்கே தனது சொந்தப் பெயரான ‘லோகநாதன்’ என்ற பெயர் தனது பூர்வீக அடையாளத்தைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று ‘லோகன்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவன்.

ஏதோ ஒரு திருட்டில் மூண்று வருடம் ஜெயில் தண்டனை கிடைத்து வெளியே வந்தபோது லோகன் ஒரு சபதம் எடுத்தான். அதாவது, இனி எக்காரணத்தைக் கொண்டும் ஜெயிலுக்குப் போகக் கூடாது. காரணம் அவன் அங்கே அனுபவித்த மூட்டைப்பூச்சி மற்றும் கொசுக்கடித் தொல்லைகள். நாற்றம் பிடித்த சிறுநீர் வாடையுடன் கூடிய கழிவறை. நாகரிகமற்ற கைதிகள். இரக்கமற்ற ஜெயிலர்கள்.

அடி வாங்கிப் பழக்கப்படாத மென்மையான உடம்பும், மனமும் கொண்ட லோகனுக்கு ஜெயிலை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் சொகுசான வாழ்க்கையும், கை நிறையக் காசும் கிடைக்கும் இந்தத் தொழிலை விட மனமில்லை. மூளைக்கு வேலை கொடுத்து, நல்ல திட்டத்தோடு, பொறுமையாக செயல்படுவதன் மூலம் மாட்டிக்கொள்ளாமல் இந்தத் தொழிலைச் செய்ய முடியும் என்று உறுதியாக நம்பினான் லோகன்.

அதன் விளைவுதான் இந்த நட்சத்திர ஹோட்டலுக்கு அவனின் இன்றைய விஜயம். அன்று அவன் குறி வைத்திருந்த அறை அவனின் அறைக்குச் சற்றுத் தள்ளி எதிரில் இருந்த அறை. அறை எண் 891 என்பது கூட அவனுக்குச் சாதகமாக இருந்தது. மாட்டிக் கொண்டால் கூட தன் அறை எண் 819 என்று நினைத்து உள்ளே நுழைந்ததாகச் சொல்லிக் கொள்ளலாம்.

அந்த அறையில் ஒரு வயதான தம்பதிகள் மட்டுமே இருந்ததை கவனித்துக் கொண்டான். செல்வத்தில் மிதப்பவர்கள் என்பதை அவர்களின் உடையும் அந்த மூதாட்டி அணிந்திருந்த டைமண்ட் நகைகளும் பறை சாற்றின. இரண்டு நாட்கள் கண்குத்திப் பாம்பாகப் பார்த்ததில், மாலை ஏழு மணி வாக்கில் இருவரும் வெளியே சென்றால், டின்னர் முடித்துக்கொண்டு இரவு பத்து மணிக்கே அறைக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டான்.

முகத்தை மறைக்கும் தொப்பியும், கண்ணை மறைக்கும் கண்ணாடியும் அணிந்து கொண்டு ஒரு பேப்பரை வாசிப்பது போல லாபியில் அமர்ந்திருந்தான் லோகன். பார்வை முழுதும் ரிசப்சன் டேபிளில் இருந்தது. ஏழு மணிக்கு ரிசப்சன் டூட்டி மாறும் என்பது அவனுக்குத் தெரியும். அவன் எதிர்பார்த்தது போலவே, 891 அறை வயதான தம்பதியினர் ரிசப்சனில் சாவி கொடுத்து விட்டு வெளியேறினர்.

லோகுவின் நெஞ்சு அடித்துக் கொண்டது. இன்னும் இரண்டு காரியங்கள் நடக்க வேண்டும் அவன் எதிர்பார்ப்புப்படி. ஒன்று ரிசப்சன் ஸ்டாப் டூட்டி மாறுதல். மற்றொன்று ரிசப்சனில் கொஞ்சம் கூட்டம் சேர வேண்டும்.

புதிதாக ரிசப்சன் டூட்டிக்கு ஆட்கள் வந்து விட்டனர். அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது போலும். ஏதோ கான்ஃபரன்சுக்கு வந்த கூட்டம் ரிசப்சனை மொய்க்கும்போது உள்ளே நுழைந்து, ‘கீ 891 ப்ளீஸ்’ என்றவுடன் புது புக்கிங்கில் பிசியாக இருந்த‌ ஒரு இளைஞன் முகத்தைக் கூடப் பார்க்காமல் 891 ன் சாவியை எடுத்துக் கொடுத்தான்.

தன் அதிர்ஷ்டத்தை மனதுள் சிலாகித்துக் கொண்டே துரித நடையில் தன் அறையான 819ல் நுழைந்து தயாராக வைத்திருந்த கிளவுசை அணிந்து கொண்டு, ஒரு டிராலியையும் எடுத்துக் கொண்டான். கொஞ்சம் பிராண்டியை தன் உடம்பில் தெளித்துக் கொண்டான். மாட்டிக் கொண்டால் குடிபோதையில் தவறுதலாக அறைக்குள் நுழைந்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாம்.

வராண்டாவில் ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு 891 ல் நுழைந்தான். பூனை போல் நடந்து எந்த அறையிலும் ஆட்கள் இல்லை என்பதை உறுதியாக்கிக் கொண்டான். பரபரப்புடன் இயங்கியதில் அலட்சியமாக வீசப்பட்டிருத‌ மூதாட்டியின் நகைகள் அவனுக்கு உற்சாகமூட்டியது.

இன்று அதிர்ஷ்டமான நாள் என்று அவன் உள்ளுணர்வு பெருமிதம் கொண்டது. விலையுயர்ந்த கோட்டும், கடிகாரமும் மற்றும் பல பொருட்களையும் மின்னல் வேகத்தில் டிராலியில் இட்டு மெதுவாக வெளி வந்து வராண்டாவில் ஆட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு 891 பூட்டினான். அவன் அறையான 819க்கு வந்தவுடன் தான் லோகனுக்கு வியர்வையே வெளிவந்தது.

எத்தனை திருட்டுக்கள் செய்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த படபடப்பு வராமல் இருந்ததில்லை. சமாளித்துக் கொண்டு தன் அறையைப் பூட்டிக் கொண்டு, 891ன் சாவியை எடுத்துக்கொண்டு ரிசப்சனை அடைந்தபோது இன்னும் கூட்டம் குறையாமல் இருந்தது. டேபிளின் ஓரத்தில் வைத்த 891ன் சாவியை ஒருவன் எடுத்து அதன் நம்பர் எழுதியிருந்த ஸ்லாட்டில் வைத்ததும் நிம்மதியாயிற்று லோகனுக்கு.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் தன் சொந்தக் காரில் பக்கத்து மாநில எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து அறைக்கு வந்து பொருட்கள் காணவில்லை என்று அந்த வயதான தம்பதிகள் புகார் கொடுப்பதற்குள் லோகன் காற்றோடு காற்றாகக் கலந்து விடுவான்.

கொள்ளையடித்து வந்த பொருட்களும் நண்பர்கள் மூலம் நல்ல விலைக்கு விற்றுக் காசாக்கி விடலாம். இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜ வாழ்க்கை வாழலாம். தன் அதிர்ஷ்டத்தை நினைத்து நினைத்துப் பூரிப்படைந்தான் லோகன்.

திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் வேகம் குறைந்து மெதுவாகச் செல்லத் தொடங்கின. காரணம் தெரியவில்லை. ஆங்காங்கே போலீஸ் தலைகள் தென்பட்டன. பகீரென்றது லோகனுக்கு.

அதிலும் குறிப்பாக சிவப்பு வர்ணம் கொண்ட கார்களை மட்டும் ஓரம் கட்டச் சொல்லிவிட்டு மற்ற கார்களை அனுப்பிக் கொண்டிருந்தனர் போலீசார். தன் காரும் சிவப்பு நிறம் என்பது அவனுக்கு உறைத்ததும், லேசாக வியர்க்கத் தொடங்கியது லோகனுக்கு. டிக்கியில் ஸ்டெப்னிக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் நகைகளும் மற்ற பொருட்களும் நினைவில் ஊஞ்சலாடியது.

அருகில் வந்து கண்ணாடியைத் தட்டிய காவலரைக் கேட்டான்,

‘ஏனாயித்து சார்?’.

அவர் சொன்னது, பத்து கிலோமீட்டருக்கு முன்பாக சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு அம்மாவையும், பெண்ணையும் ஒரு சிவப்பு நிறக் கார் மோதியதில் இருவரும் அந்த இடத்திலேயே மரணம். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர்தான் மோதிய காரின் நிறம் சிவப்பு என்று தெரிவித்துள்ளார். எனவே எல்லா சிவப்பு நிறக் காரையும் செக் செய்யச் சொல்லி உத்தரவு.

அவனை இறக்கி விட்டு விட்டு, காரின் முன்பக்கம், உள்ளே முழுவதும் இஞ்ச் இஞ்ச்சாகத் தடவினார். கார் மோதியதற்கு உள்ளே ஏன் தேட வேண்டும் என்று கேட்டதற்கு, ‘எங்களுக்கு உத்தரவு அப்படி’ என்றார் கறாராக.

‘கொஞ்சம் டிக்கியைத் திறங்க’ என்றவுடன் சப்த நாடியும் ஒடுங்கியது லோகனுக்கு. இதுவரை கூட வந்த அதிர்ஷ்டம் இனியும் தொடருமா?

‘கொஞ்சம் ஸ்டெப்னியைத் தூக்குங்க..’ என்றார் போலீஸ்காரர். ஜெயிலில் வீசும் சிறுநீர் வாடை காற்றோடு கலந்து வருவது போல் தோன்றியது அவனுக்கு.

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சேகரும் செல்வியும் ❤ (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    தரை டிக்கட் (சிறுகதை) – நாகராஜா சுப்ரமணியன், சென்னை