2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்த மணி அழுதுகொண்டே வந்தான். அவனைப் பார்த்ததும் மல்லிகாவுக்குத் தாங்கமுடியவில்லை. மகனை இழுத்தணைத்தபடி, ‘ ஏன்டா கண்ணு அழுதுகிட்டே வர்றே..’ என்று கேட்டாள். ‘ டீச்சர் அடிச்சுப்புட்டாங்கம்மா ‘ என்று கையைக் காண்பித்தான். இடது கை லேசாய் சிவந்திருந்தது. தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.
‘ச்சே… என்ன இப்படி போட்டு அடிச்சிருக்காங்க என் புள்ளையை… நான் கூட இப்படி அடிச்சதில்லையே… யாருடா அந்த டீச்சர்… ’ என்றாள்.
‘கணக்கு டீச்சர்மா ‘ என்றான். ‘ ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு வரலைனு அடிச்சிட்டாங்கம்மா ‘ என்றான் சிணுங்கலாய் கையை உதறியபடி.
‘சரி சரி.. சோப்பு போட்டு முகம், கை கால் அலம்பி வா. பால் கொடுக்கறேன். நல்லெண்ணெய் சூடேத்தி கைல வேது வைச்சு விடறேன்… சரியாகிடும்… ஹோம் ஒர்க் பண்ணலைங்கறதுக்காக கையில இப்படி போட்டு அடிக்கறதாவது… ’ முனகிக் கொண்டே போய் பாலை ஒருபக்கமும் இரும்புக் கரண்டியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மறுபக்கமும் வைத்து சூடேற்றினாள்.
‘ இவளெல்லாம் புள்ளைகுட்டி பெத்திருக்க மாட்டாளா, நான் டீச்சரா இருந்து இவள் குழந்தையை இப்படி போட்டு நான் அடிச்சிருந்தால் இவள் சும்மா விட்டுடுவாளா. புள்ளைக்கு கை சிவந்து போறளவுக்கு அடிச்சிருக்காளே பாவி… இவளெல்லாம் நல்ல இருப்பாளா… ’ திட்டிக்கொண்டே பாலை டம்ளரில் ஊற்றிவிட்டு, எண்ணெய் சூடேறிய கரண்டியை இறக்கி வைத்தாள்.
அதற்குள் மணி சோப்பு போட்டு முகம் கைகால் கழுவி விட்டு, துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வந்து நின்றான். அவனிடம் பாலை ஆற்றிக் கொடுத்துவிட்டு, கையை காட்டச் சொல்லி ஒரு மெல்லிய துணியால் எண்ணெயைத் தொட்டுத் தொட்டு அவனது கையில் லேசாய் ஒத்தடம் கொடுக்கலானாள்.
இதற்குமுன் பெஞ்ச்சின் மேல் ஏறி நின்றிருக்கிறான். முட்டி போட்டிருக்கிறான், வகுப்புக்கு வெளியே கூட நின்றிருக்கிறான். ஆனால் இப்படி கைசிவக்க அடி வங்கிக் கொண்டு வந்ததில்லை.
‘ ஆனாலும், ரொம்பவும் ராங்கிக்காரியா இருப்பா போலிருக்கே, நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குப் போய் அவளை உண்டு இல்லைனு ஆக்கறேன் பார்… ‘ என்று தனக்குள்ளேயே சபதமிட்டுக்கொண்டாள்.
மகனது கைக்கு எண்ணெய் வேது வைத்தபிறகு, செல்லமாய், ‘ சரி.. போய் இன்னிக்கு என்னென்ன வீட்டுப் பாடம் கொடுத்திருக்காங்களோ எலாத்தையும் மறக்காம செய்… நாளைக்கும் அடி வாங்காதே… சரியா… ‘ என்று அவனை செல்லமாய் எச்சரித்து அனுப்பினாள்.
xxxxxxxxx
காலையில் மகனை பள்ளிக் கூடம் அனுப்பிவிட்டு, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குளித்து உடை மாற்றிக்கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்ப மணி பதினொன்று தாண்டிவிட்டது.
முதலில் வகுப்பில் போய் பார்க்கவேண்டும். அந்த டீச்சர் வகுப்பில் இருந்தால், அங்கேயே ஒரு பிடி பிடிக்கவேண்டும். ஒருவேளை, வகுப்பில் இல்லாமல் டீச்சர்களின் ஓய்வறையில் இருந்தாலும் அங்கே போயும் திட்டவேண்டும். அவள் எதிர்த்து ஏதாவது பேசினால் ப்ரின்சிபாலிடம் போய் சொல்லிவைக்கவேண்டும், ‘ பிள்ளைகளை இப்படி அடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் ‘ என்று எச்சரித்துவிட்டு வரவேண்டும்.
வாச்மேனிடம் ஐந்தாவது வகுப்பு ஏ செக்ஸன் போகவேண்டும் என்று சொல்ல, அவன் உள்ளே போக விட்டான். ஒவ்வொரு அறையிலும் வெளியே எந்த வகுப்பு என்று எழுதிப் போட்டிருந்தார்கள்.
பார்த்துக்கொண்டே மெல்ல நடந்தவள், மணியின் வகுப்பறையை கண்டுபிடித்து விட்டாள். ஆனாலும் உடனே உள்ளே போகவில்லை. மெல்ல நின்றாள். தலையை நீட்டிப் பார்த்தாள். அப்போது இரண்டாவது வரிசையில் மணி உட்கார்ந்திருப்பதையும் டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருப்பதையும் பார்த்து விட்டாள்.
‘ யாரெல்லாம், ஹோம் ஒர்க் பண்ணலையோ அவங்களாம் கையைத் தூக்குங்க…’ என்றார் டீச்சர்… ஒரு பையன் மட்டும் கையைத் தூக்கினான்.
‘ யாரு, கோபியா…நீ தினமும் கைத் தூக்கறே… உன்னை முட்டிப்போட வச்சு பார்த்தாச்சு, பெஞ்ச் மேல நிக்கவைச்சு பார்த்தாச்சு, வெளியே நிக்க வச்சி பார்த்தாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு. ஒருநாள் ஒரு அடி வெச்சதுக்கே உங்கப்பா, அம்மா ரெண்டுபேரும் சண்டைக்கு வந்திட்டாங்க… நீங்க நல்லா படிக்கணும், டாக்டர், வக்கீல், இஞ்சினீயர் மாதிரி பெரிய ஆளுங்களா வரணும்னுதான் நான் பார்க்கறேன்… ஆனா நீங்க ஒழுங்கா படிக்கமாட்டேங்கிறீங்களே…. ‘ என்றவள், ‘சரி சரி… யாரெல்லாம் படிச்சு டாக்டராகணும்னு விரும்பறீங்க, கையைத் தூக்குங்க பார்ப்போம்… ’ என்றார்.
மணியும் இன்னொருவனும் மட்டும் கைத்தூக்கினர். ‘ வெரிகுட்… மணியும் சுப்பையாவும் டாக்டராகப் போறாங்க… எல்லாரும் கிளாப் பண்ணுங்க…’ என்றார். வகுப்பே அதிரும் அளவுக்கு கைத்தட்டல் சத்தம் கேட்டது.
மண்டை மேல் யாரோ குட்டியது போல உணர்ந்தாள் அவள்..
‘ நம்ம பையன்கள் ஒழுங்காய் படித்தால் டீச்சர் ஏன் தண்டனை தரப்போகிறார்கள் ‘ என்று யாரோ கேட்பது போலவும் இருந்தது.
வந்த சுவடு தெரியாமல் திரும்பிநடந்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings