in

குடம்பி (சிறுகதை) – ✍ நிழலி

குடம்பி (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தோட்டத்தின் ஒரு புறத்தை ஆக்கிரமித்து செழித்து படர்ந்திருந்த கனகாம்பர செடியில் நாள் தவறாமல் பூப்பறித்து தொடுத்து தனது அக்காவிடம் சமர்ப்பிக்கும் பணியை அவள் தவறவிட்டதே இல்லை. அத்தனை பிரியம் அக்கா மீது இருந்ததோ இல்லையோ தெரியவில்லை அத்தனை காதல் கனகாம்பரத்தின் மீதிருந்தது என்றே சொல்லலாம்.

மாலை சூரியன் மறையும் நேரம் அந்த மஞ்சள் கனகாம்பரம் நட்சத்திர புள்ளிகளாக தோன்றுவதில் தான் அத்தனை மயக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். மறுநாள் மலர்ந்து விரியும் நிலையுடைய பூக்களை காம்புடையாமல் பறித்து சுவை கொள்வாள். இரவே தொடுத்து கூரை மேல் வைத்த கனகாம்பரம் காலை பனியோடு அக்கா சூடிக்கொள்ளும் அழகில் காற்றை சுவாசிக்க மறந்து நின்ற நாளெல்லாம் என்றாவது ஒருநாள் விரல் தொடுத்த பூக்கள் தலை சேராதா என்ற ஏக்கம் கண்ணாடியில் மறைந்து கிடக்கும் பாதரசமாய் கனவு கண்ட நாட்கள் அக்கா சூடி எறிந்த காய்ந்த பூக்களின் எண்ணிக்கையை விட மிகுந்திருந்தது.

எப்போதுமான மாலையை கையில் பிடித்து கொண்டு கதை பேசியபடியே கனகாம்பரத்தின் காம்பு தேனை உறிஞ்சி விட்டு பூக்களை பாத்திரத்தில் போட்டு கொண்டிருந்தாள். கழுத்துப் பகுதியில் என்னவோ ஊர்வது போல உணர்ந்தவள் கைகளால் தட்டி விட திட்டு திட்டான கருமை நிறமும் முள் போன்ற வனப்பும் உடலைசுற்றி நெளிய புழுவொன்று கீழே விழுந்தது.

“ச்சீ … புழு…” என்றவாறு வெறுத்து பார்த்தவள் சில நிமிடங்கள் செல்ல மீண்டும் அதனை கையிலெடுத்து வைத்தாள். ஓரிரு வாரங்கள் ஆகியிருக்கலாம்.

“நல்லா கொழுத்து பெரிய புழுவால இருக்கு. பாக்க கொஞ்சம் அருவெறுப்பா தான் இருக்க நீ. இப்படி தான் என்னையும் பார்க்குறாங்க. ஒவ்வொரு நாளோட பொழுத கடக்கும் போதும் இப்போ நீ கீழ விழுந்து துடிச்ச மாதிரி தான் நானும் துடிச்சிட்டு இருக்கேன். சொல்ல போன நீயும் நானும் ஒன்னு தா போல. இந்த மாதிரி யார் மேலனா ஏறுனா உன்னைய நசுக்கி தூக்கி எறிஞ்சிடுவாங்க பாத்துக்க. வா உன்ன பத்திரமா வைக்குறேன்” என்றபடி அருகிலிருந்த புங்கன் மரத்தின் கிளை நடுவே வைத்தாள்.

“இங்கேயே இரு. உனக்கு தான் உடம்பிருக்குனு உருண்டுட்டு இருக்காத. நா தினமும் இங்க வருவேன். இனி வரும்போதெல்லாம் உன்னைய வந்து பாத்துக்குறேன் சரியா, வரவா… வரேன் வரேன்…” குழந்தையிடம் விடைபெற்று செல்பவள் போல பின்நோக்கியே நடந்து பூக்கள் நிறைத்த பாத்திரத்தை கையிலெடுத்தபடி கொல்லைப்புற கதவை தாழிட்டு வீடு நுழைந்தாள்.

இரவெல்லாம் புழுக்கள் நெளியும் கனவு தான். கருப்புப் வெள்ளையும் பூசிக்கொண்டிருந்த புழு தன்னை போல பெண்ணாக உருமாறி தன்னிடம் பேசுவதாக இரவின் பாதியை துண்டித்து எழுந்து கொண்டாள். 

இரவின் மீதியை கடப்பது அத்தனை எளிதாக இல்லை அவளுக்கு. எத்தனையோ இரவுகள் அப்பாவின் அம்பு துளைத்த வார்த்தைகளில் உறங்காமல் உறங்கிய கணங்கள் நிழலாக வந்து கொண்டிருந்தது அவளுக்கு. இமை சிமிட்டும் கணங்களை எண்ணியபடியே இரவை நகர்த்தி கொண்டிருந்தாள்.

விடியல் எப்போதும் உற்சாகம் தந்ததில்லை. சுயமற்று நகரும் காலை வேளைகளில் அப்பாவின் முன் எதிர்படாமல் அடைந்தே கிடக்கும் காலையின் வெளிர்கதிர்கள் வேதனையாக தான் இருக்கும். இன்று அப்படி அவளுக்கு தோன்றவில்லை. இனம் புரியாத விடியலை நோக்கியே பார்வையை நகர்த்தினாள். மனம் முழுவதும் மாலை தோட்டத்திற்கு செல்ல ஒத்திகை பார்த்து கொண்டிருந்தது. 

வழக்கமான நேரத்தை விட முன்னதாகவே தோட்டம் தேடி ஓடினாள். வெயில் தேடும் நிழலாக புங்கமரத்திடம் வந்தே கால்கள் நின்றன. அவள் விட்டு சென்ற புழுவை காணவில்லை. அது கடந்து சென்ற பாதையின் ரேகையாவது கிடைக்குமா என்பது போல சுற்றிலும் தேடத் துவங்கினாள். சருகென கிடந்த குப்பைகளை கிளறிய போதும் பயனில்லை. ஒவ்வொரு இலைகளாக ஆராய்ந்து பழுத்து போனாள். 

“தெரியும் எனக்கு தெரியும். நீ இங்க இருக்க மாட்டேனு எனக்கு தெரியும். நா நெனச்ச மாதிரியே நீ போயிட்ட. எனக்குனு எப்பவும் யாருமே இருந்தது இல்ல . நா தான் நீ இருப்பனு ஓடி வந்து ஏமாந்து நிக்கிறேன். கூட வாழுற மனுசங்களே என்னய ஒதுக்கும் போது நீ மட்டும் இருப்பனு நெனச்சது என்னோட தப்பு தான்”

நீண்ட நாள் உறவாடிய உயிரை பிரிந்தது போல மனமுடைந்து நின்றவளின் கண்களில் நீர் கூடியது.  அப்போது தான் தெளிவாக ஒன்றை பார்த்தாள். தன்னை சுற்றியே அரண் அமைத்து புதிதாக துளிரும் கிளையின் அடிபாகத்தில் மறைந்திருந்த கூட்டை. 

“இது நீ தான்… நீயே தான்… எனக்கு தெரியும்… நீ என்ன விட்டு போகல… நா கேள்விப்பட்டிருக்கேன். அப்போ நீ பட்டாம்பூச்சியா மாற போறியா … நா தான் சொன்னேன்ல நீயும் என்ன மாதிரி தான்னு . உனக்கு தெரியாதுல. நானே சொல்லுறேன். நீ முட்டையில இருந்து ஒரு புழுவா வெளிய வந்து உன்ன சுத்தியே ஒரு கூடு கட்டி பட்டாம்பூச்சியா மாறுர மாதிரி தான் நானும் ஒரு ஆணா பிறந்தேன். இப்போ என்ன சுத்தி என்னோட பெண்மை ஒரு கூடா உருவாகி இருக்குறத கொஞ்சம் கொஞ்சமா உணர்ந்திட்டு இருக்கேன். ஆனா ஒரு வித்தியாசம் இருக்கு. நீ பட்டாம்பூச்சியான உன்ன எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குது. என்ன யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது. என்னோட பிறப்ப என்னால எப்படி மாத்த முடியும். நானா தேடியது இல்ல தானே. 

உன்ன மாதிரியே நானும் என்னோட கூட்ட ஒடைச்சி ஒரு பட்டாம்பூச்சியா சீக்கிரம் பறந்து போகத்தான் நினைக்கிறேன். யாருமே என் உணர்வுக்கு மதிப்பு தரலையே. உன்னப் போல விடுதலை எனக்கு இந்த இயற்கை தரலையே. வாசல எட்டி பார்த்த கூட புது தொடப்பம் வாங்குற செலவு வருமே. அக்காவுக்கு பூப்பறிச்சி கட்டுற ஒரு வேலை தான் எனக்கு கிடைக்குற ஒட்டு மொத்த நிம்மதி.

ஆனா பாரேன் ஒரு நாள் கூட அத வச்சி பார்க்க எனக்கு தகுதி இல்ல. ஒருமுறை சும்மா தலையில வச்சி பார்த்தப்போ அப்பா வந்துட்டாரு. அவ்ளோ தான் அன்னைக்கு என் தல மொட்ட தல ஆனது. இன்னைய வர சீப்பு போட வளர்ந்தா கூட திருப்பி மொட்ட தான். அம்மா கூட அதிகமா பேசுறது இல்ல. ரொம்ப பாசமா இருந்த அக்காவும் ஏதோ மருந்துக்கு நாளு வார்த்த பேசுறா.

எதுக்காக இந்த வாழ்க்கைய வாழுறேனு தெரியாம தான் நானும் வாழ்ந்துட்டு இருக்கேன். மனசு விட்டு பேச யாருமே இல்லனு அழுத நாளெல்லாம் மஞ்சள் கனகாம்பரம் சாயம் இல்லாம தான் அக்கா தலையில இருக்கும். இந்த பொறப்போட சாபம் இப்புடி தான் போல. ஊனமா பொறக்குற உசுரையும் மனவளர்ச்சி இல்லாம பொறக்குற உசுரையும் கூட எம்புள்ள எம்புள்ளனு ஏத்துக்குற பெத்தவங்க மனசு ஆணா பொறந்து பொண்ணா வாழுற பொறப்ப மட்டும் ஏத்துக்க மாட்டேன்னு வெறுத்து வாழுறது எதனாலனு தான் எனக்கு தெரியலை.

நீயே சொல்லு நீ இப்படி தான் பொறப்பனு உனக்கு தெரியுமா. எனக்கு மட்டும் எப்படி தெரியும். கால போக்குல வர மாற்றத்துக்கு நானா பொறுப்பு.  சரி சரி நா போயி பூப்பறிச்சிட்டு போறேன். இல்லனா என்ன இம்புட்டு நேரமுனு இங்கையும் அனுப்ப மாட்டாங்க. அப்பறம் உள்ளதும் போச்சி நொள்ள கண்ணானு  வூட்டுக்குள்ளயே கிடக்கற மாதிரி ஆகிடும். நாளைக்கு பாக்குறேன், வரேன்”

புது உலகம் பார்த்தவளாய் பூக்களோடு வீடு சென்றாள். கிழமைகளும் மாதங்களும் ஓடிக் கொண்டிருந்தன. உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த கூட்டுப்புழுவைப் போலவே அவளும் முழுவதும் மாறிக் கொண்டிருந்தாள். நாள் தவறாமல் புங்க மரத்திடம் வருகை பதிவு செய்து கொண்டாள்.

வழக்கமான மாலையில் அவள் வந்த போது அன்று வெறும் கூடு மட்டும் கிடந்த ஒரு கணம் இமை உடைந்தாள். அவரவருக்கான   விடுதலையை அவர்களே தான் உருவாக்கி கொள்ள வேண்டுமென அப்போது தான் அவளுக்கு தோன்றியது. சமுதாயத்தின் கோர பற்களை எதிர்கொள்ள தன்னை முழுமையாக பெண்ணாக்கி

கொள்ள துடித்தாள். என்றாவது கூட்டை உடைத்து தானே ஆக வேண்டும். அவளின் கூடும் உடைய துணிந்தது. 

கூடு உடைத்த வண்ணத்துப்பூச்சியை ஒருவன் பிடித்து ரசிக்க அவன் பிடி விடுவிடுத்து போராடி பறந்தது. அதன் வண்ணம் அவனிடம் ஒட்டி கொள்ள இன்னும் இன்னும் பார்ப்பவர்கள் எல்லாம் பிடித்து கொண்டு தான் இருந்தார்கள். இறுதியில் வண்ணம் இழந்து  பறக்க தொடங்கியது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 17) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை