in ,

கொட்டாதே… ! (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கோவிந்தனுக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது. அடிக்கடி பக்கத்து ஊரிலிருந்து டிராக்டர் கூட்டி வந்து உழவு செய்வார்.

ஒருநாள் உட்கார்ந்து யோசித்தார். ‘ நாம் ஏன் சொந்தமாக ஒரு டிராக்டர் வாங்கக் கூடாது…? நம்முடைய வயலிலும் உழுது கொள்ளலாம், கூடவே சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளையும் வளைத்துப் போட்டுக்கொள்ளலாம்… செலவு மிச்சம்… கூடுதல் வருமானமும் கூட… ’

டிராக்டர் வாங்குமளவுக்கு தேவையான பணம் கையில் இருக்கிறது. ஆனாலும், யாரோ ஒருவர், பேங்க்கில் லோன் வாங்கி டிராக்டர் வாங்கினால் பின்னால் எதாவது ஒரு கட்சி திடீரென்று விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்போது இதையும் தள்ளுபடி செய்துவிடுவார்களே, ஏன் நம் கைக்காசை போட்டு வாங்கவேண்டும் என்று.

உட்கார்ந்து யோசித்தார், அதுவும் சரியே என்று கிளம்பிவிட்டார், பேங்க்கிற்கு. அவர்கள் கேட்ட பட்டா சிட்டா அடங்கல் மற்ற பேப்பர்களெல்லாம் கொண்டுபோய் கொடுத்து லோன் போட்டு டிராக்டரை வாங்கி வீட்டு ஓட்டிவந்து நிறுத்தியும்விட்டார்.

மறுநாள் முதல் தனது புல்லட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராக போய் சுற்றுவது, எல்லா விவசாயிகளையும் பார்த்து பேசுவது, வெளி டிராக்டருக்கு கொடுக்கும் கூலியை விட கொஞ்சம் குறைத்தே கொடுத்தால் கூட போதும், அதிலும் பாதியை உடனே கொடுத்துவிட்டு, மீதத்தை அறுவடை செய்யும்போது பணமாகவோ பொருளாகவோ கொடுத்தாலும் கூட போதும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மடக்க முடிவு செய்து கொண்டார்.

முதலில் உள்ளூரில் இருந்து ஆரம்பிப்போம் என்றும் முடிவு செய்துகொண்டார். உள்ளூரிலும் அவரைப் போல பெரிய விவசாயிகள் இல்லாவிட்டாலும் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் அதிகம் பேர், ஒரு ஏக்கரே இருந்தாலும் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டார்.

எல்லாவற்றையும் விட பக்கத்து வீட்டில் முதலில் பேசுவோம் என்றும் முடிவுசெய்து கொண்டார். பக்கத்து வீட்டில் ஒரு பங்காளி இருக்கிறான். பெயர் வீரமலை. அவனிடம் நான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது. அவனிடம் போய் நெய் ஒழுக பேசினார்.

ஆரம்பத்திலிருந்தே பிடிகொடுக்காமல் பேசினான் அவன். கடைசியில், ‘ என்னிடம் யானை மாதிரி இரண்டு காங்கேயம் காளைகள் இருக்கின்றன. ஒன்றுக்கு நான்கு கழப்பைகள் இருக்கின்றன. நான் எதற்கு பணச்செலவு செய்து மிஷினை விட்டு உழவு செய்யவேண்டும். வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கூலியில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பதாகப் பேசினார். அப்படியும் மசியவே இல்லை.

வெறுத்துப் போனார் கோவிந்தன்.  முதல் பார்ட்டியே கவிழ்த்துவிட்டானே என்று. இனி மற்ற விவசாயிகள் எல்லாம் எப்படி வரவேற்பார்களோ என்ற அவநம்பிக்கையை விதைத்துவிட்டானே என்று அவன் மேல் கோபம் கூட வந்தது.

மேற்கொண்டு எங்கேயும் போகவேண்டாம், மறுநாள் போய்க்கொள்ளலாம் என்று வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.  கோபமாயும் வந்தது, இப்படியே எல்லாரும் சொல்லிவிட்டால் எப்படி என்ற கவலையும் வந்து ஒட்டிக்கொண்டது. யோசிக்க யோசிக்க மண்டை ஜிவ்வென்றது.

‘ மவனே… உன்னிடம் காளைகள் இருப்பதால்தானே டிராக்டர் வேண்டாம் என்கிறாய்… அதுவும் காங்கேயம் காளைகள்….  நீ எப்படி அந்தக் காளைகளை வைத்து உழவு செய்கிறாய் என்று  நானும் பார்த்துவிடுகிறேன்…மவனே…  ‘ என்று தனக்குள் கறுவிக்கொண்டார்.

XXXXXXXX

விடிந்ததும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். பூச்சி மருந்தை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் அவனது மாடுகள் குடிக்கும் கழுநீர் தொட்டியில் கலந்துவிடுவது. அவைகள் அதைக் குடித்துவிட்டு செத்து மடிவது… அவன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு அழுவதை பார்த்து சந்தோசப் பட்டுக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டார்.

ஆனால் அதை எப்படி செயல் படுத்துவது என்றும் யோசித்தார். அவனது வீட்டுப்பக்கம் போய் நாம் மருந்தை கலக்கும்போது, அதை யாராவது பார்த்துவிட்டால், பின்னால் அது சிக்கலில் போய் முடிந்துவிடாதா… என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று யோசித்து யோசித்து குழமிபியே போனார்.

புல்லட்டை எடுத்துக்கொண்டு கடைவீதிப் பக்கம் போனார்.  ஓரிரு பேரிடம் தான் டிராக்டர் வாங்கியிருப்பதை சொல்லிவிட்டு, அவர்களது வயலுக்கு குறைந்த கூலியில் உழவு செய்து கொடுப்பதாக உறுதி கூறி, அவர்களை சம்மதிக்க வைத்தார்.

இடையிடையே வீரமலையின் நினைவு வந்து கோபம் கொப்பளிக்கத்தான் செய்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒரு டீ கடையில் டி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது பார்த்து வீரமலையின் மகன் மருதை எதிர் வரிசை கடைப் பக்கம் தனது சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினான். கேரியரில் சாக்குப் பை வைத்திருந்தான். உற்று நோக்கினார். அவன் பையை எடுக்கும்போதுதான் தெரிந்தது அவன் இரண்டு பைகள் கொண்டுவந்திருக்கிறான் என்று. மேலும் உற்று பார்த்தார். அவன் மாட்டுத் தீவனக் கடையை நோக்கி நடந்தான்.  புரிந்துபோனது அவன் மாடுகளுக்கு புண்ணாக்கு வாங்கத்தான் வந்திருக்கிறான் என்று.

அந்தக் கடைக்கு அடுத்த மூன்றாவது கடை ஒரு உரக்கடை.  அவரது கிரிமினல் மூளையில் ஒரு மின்னல்.

மெல்ல உரக்கடைக்குப் போய், காய்கறிச் செடிகளில் பூச்சிகள் வந்துவிட்டன, அதற்கு பூச்சி மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டு, வீரமலை புண்ணாக்கு வாங்கிக்கொண்டு வந்து சைக்கிளில் வைக்கும்போது அவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே அவனுக்குத் தெரியாமல் பாக்கெட்டைத் திறந்து மருந்தை புண்ணாக்கில் ஊற்றிவிடுவது. அல்லது அவன் ஒரு பையை தொங்கவிட்டுவிட்டு அடுத்த பையை எடுக்க போகும்போதாவது மருந்தை கலந்துவிடுவது என்று.

அவன் வீட்டுக்குப் போய் மருந்து கலந்த புண்ணாக்கை கழுநீர் தொட்டியில் கலந்துவிட்டால் அதைக் குடிக்கும் காளைகள் நுரை தள்ளி செத்து மடியும். அப்புறம் என்ன, அவன் வயல் வேலைக்கு நம்மிடம் வந்துதானே ஆகவேண்டும். இப்போது மழைகாலம் வேறு ஆரம்பித்துவிட்டது. இன்னும் ஒரிருவாரத்தில் எல்லோரும் உழவை ஆரம்பித்துவிடுவார்களே. இவன் திண்டாடட்டும்.

யோசிக்காமல் எழுந்தார். எதிர்வரிசைக்குப் போய் உரக்கடையில் ஒரு மருந்து பாக்கெட்டை வாங்கிக்கொண்டார். அவருக்குத் தெரியும் மருந்தும் புண்ணாக்கு கலரிலேயேத்தான் இருக்குமென்று. தனது கூறிய நகங்களாலேயே பாக்கெட்டை கிழித்து தயாராய் ஜிப்பா பாக்கீட்டுக்குள் வைத்துக் கொண்டார். மெல்ல தீவனக் கடைப் பக்கம் வந்தார். அப்போதுதான் தூக்கமுடியாமல் பையைத் துக்கொண்டு வந்தான் வீரமலை.

அப்போதுதான் கவனித்தார், அவன் ஒரு பையை மட்டும்தான் தூக்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். இன்னொன்றை கடையிலேயே விட்டிருந்தான். அப்போது புரிந்தது, அந்தப் பையை மாட்டிவிட்டுப் போய் அப்புறம்தான்  அந்த இன்னொரு பையையும் துக்கொண்டு வந்து மாட்டுவான் என்று. பிறகுதான் கிளம்பவும் செய்வான்.

அவர் எதிர்பார்த்தது போலவே அவன் ஒரு பையை தூக்கமாட்டாமல் கூக்கிண்டு வந்து மாட்டிவிட்டுத் திரும்பினான். கொகொஞ்சம் வேகமெடுத்து நடந்தவர் ஜிப்பாவுக்குள் கைவிட்டு அவசரமாய் பாக்கெட்டைத் திறந்து சுற்றிலும் பார்த்து யாரும் கவனிக்கல்வில்லை என்று தெரிந்ததும பவுடரை புண்ணாக்கில் தூவிவிட்டு அப்படியே ஒன்றும் தெரியாததுபோல நகரந்து போய்விட்டார்.  பத்து பதினைந்து கட்டிடங்கள் வரை நடந்தவர் எதிர் பக்கம் வந்து புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

XXXXXXX

கண்ணம்மா கொஞ்சம் கோபத்துடன் பேசினாள், ‘ இந்தாங்க எங்கேயாவது போனா சொல்லிட்டுப் போறதில்லை… ‘

‘ ஏன் என்னாச்சு… ஏதாவது பிரச்சினையா… ‘

‘ மாடுகளுக்கு எதைப் போட்டு தண்ணீர் காட்ட… காலையிலேயே சொன்னேன், புண்ணாக்கு வேணும்னு… நீங்க காதுலையே போட்டுக்கலைதானே… ‘

‘ சரி சரி… விடு… முனகாதே… இப்போ போய் வாங்கிட்டு வந்துடறேன். அஞ்சு கிலோ போதும்தானே… ‘

‘ ஒன்னும் வேணாம். மருதை வாங்கிட்டு வந்துட்டான். நானும் புண்ணாக்கை உடைச்சி கழுநீர் தொட்டியில கொட்டி ஊற வச்சிட்டேன். போயி காளைகளை பிடிச்சுக்கிட்டு வந்து தொட்டியில காட்டுங்க… அதுக குடிக்கட்டும்…. ‘

திகீர் என்றது. ‘ ஐயய்யோ… ‘ என்று சத்தமும் போட வாயைத் திறந்துவிட்டார், பிறகு சட்டென மூடிக்கொண்டார். அப்போதுதான் பார்த்தார், மருதை பைக்குள் இருந்து புன்னாக்குகளை அள்ளி அவர்களது கழுநீர் தொட்டியில் கொட்டிக்கொண்டிருந்தான்.

கடவுளே, நாம எந்தப் பையில மருந்தை கலந்தோம்னு தெரியியாலையே… அந்தப் பையா… இந்தப் பையா… இந்தப் பையா… அந்தப் பையா… மண்டை குழம்பினார்.  

உடனே, ‘ கொட்டாதே… ‘ என்று கத்திகொண்டே அவனைப் பார்த்து ஓட்டமெடுத்தார்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தந்திர மூளை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    மன்னிப்பு…! (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு