in

கூண்டுக்கிளி (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

கூண்டுக்கிளி (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ப்போதும் போல் பொழுது விடிந்தாலும், பூங்கொடி கிராமம் மிகச்சிறிய கிராமம் என்பதால், மச்சு வீட்டு பெரியவர் மறைவே அன்றைய கிராமம் முழுவதும் பேச்சாக இருந்தது. 

மச்சு வீடு… தட்டிப் பந்தல் போடப்பட்டு உறவுகளால் நிரம்பி வழிந்தது. பெரியவர் உடல் மயானத்திற்கு எடுத்துப் போகப்பட, உள்ளூர் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

எல்லாம் முடிந்து இரவு வந்தது. வந்திருந்த உறவுகள் எல்லாம் அலுப்பில் கிடைத்த இடத்தில் படுத்துத் தூங்க.. அம்மா அமர்ந்திருந்த உள்ளறைக்கு மகன்கள் இருவரும் வந்து அமர்ந்தனர்.

“அப்பாவோட 16-ம் நாள் காரியம் முடிஞ்ச கையோட நான் டெல்லி கிளம்புறேன் நாகராஜ்… போகும்போது அம்மாவையும் கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன்” என்றான் பெரியவன் கதிர்.

“எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லை அண்ணா.. அம்மா வருவான்னா கூட்டிட்டுப் போ…”

“நான் டெல்லி போன பிறகு, எத்தன தடவ அம்மா, அப்பா வந்திருக்காங்கன்னு சொல்லு… அப்பா இருந்தவரைக்கும் நாற்று, நடவு, அறுவடைன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லிகிட்டு வரமாட்டார். இப்ப அவர் இல்ல.. அம்மா இங்கயிருந்து என்ன பண்ணப் போறா.. என் கூட வரட்டும்”

“நீ என்னம்மா சொல்ற..” நாகராஜ் கேட்க

“தம்பி.. அப்பாவுக்கு இன்னைக்கு கொள்ளி வச்சுட்டு வந்திருக்கீங்க… நாளைக்கு சாம்பல் கரைக்கணும்… அதுக்குள்ள இத முடிவு பண்ணனுமா?” என்றாள் வருத்தத்தோடு.

“முடிவு பண்ணினால் தான் பிளைட் டிக்கெட் புக் பண்ண முடியும். கப்பல் மாதிரி பெரிய வீடு கட்டியிருக்கேன். உன்னை வசதியா வச்சுக்கணும்னு நினைக்கிறேன். நீ இந்த கிராமத்தில தான் இருப்பேன்னு அடம் பிடிச்சா இரு…” என்று சற்று கோபத்தோடு பேசினான்.

கதிர் வார்த்தைகள் நாகராஜை புண்படுத்தியிருக்குமோ என்ற கவலையுடன் மகனை கல்யாணி ஏறிட்டுப் பாக்க, “அம்மா! அண்ணன் ஆசையாத்தான் கூப்பிடறான், போயிட்டு வாயேன்” என்றான் நாகராஜ் முகமலர்ச்சியோடு.

அந்தப் பேச்சு அத்துடன் முடிவுக்கு வர, 16 ஆம் நாள் காரியம் முடிந்ததும், கல்யாணி… மகன் கதிர், மருமகள் ரஞ்சனா, பேரப்பிள்ளைகள் அர்ஜுன், அனன்யாவுடன் டில்லிக்கு கிளம்பினாள்.

விமானத்தில் பயணிப்பது ஒரு பிரமிப்பான அனுபவமாக இருந்தது. ஏர்போர்ட்டுக்கு கார் வர, எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டை பார்த்ததும் கல்யாணி பிரமித்துப் போனாள். மகன் கூறியது போல, பெரிய வீடுதான். முன்பு இருந்த சின்ன வீட்டிற்கு, அவள் கணவனுடன் வந்திருக்கிறாள்.  இந்த வீடு கட்டிய பிறகு வரவில்லையே.. என்று வருத்தப்பட்டாள்.

“என்னம்மா! பிரமிச்சு போயிட்டியா? வீடு எப்படி இருக்கு?”

“அருமையா இருக்குப்பா! உங்கப்பாவுக்குத் தான் வர கொடுத்து வைக்கவில்லை” என்றாள் ஆதங்கத்துடன்.

எரிச்சலோடு ஒரு பார்வை பார்த்தாள் ரஞ்சனா

“அர்ஜுன், அனன்யா… புக்ஸ்ஸை எல்லாம் எடுத்து வைங்க  நாளைக்கு ஸ்கூல் போகணும்”

“பாட்டிக்கு வீட்டை சுத்தி காண்பிக்கிறேம்மா”

“பெரிய எக்ஸிபிஷன்… சுத்தி காட்டப் போற. எல்லாம் அவங்க இங்க தானே இருக்கப் போறாங்க.. மெதுவா பார்த்துக்கலாம்” என்றாள் எரிச்சலோடு.

“அம்மா! நீ  கீழே உள்ள ரூம்ல இருந்துக்கோ. உன் சாமானையெல்லாம் இந்த கப்போர்டில் அடுக்கி வச்சுக்கோ. ஹீட்டர் இருக்கும்மா… வெந்நீர் போட்டு குளி..” என்றான் மகன் கதிர் வாஞ்சையோடு.

எல்லா வசதிகளும் ரூமிலேயே இருந்தது. என்ன… நாகரீகமான அந்த உபகரணங்களை பயன்படுத்த கொஞ்சம் திணறித்தான் போனாள் கல்யாணி. ஒவ்வொரு தடவையும் ரஞ்சனாவை அணுகி கேட்க, அவள் எரிச்சலோடு பதில் சொன்னாள்.

வாரக்கடைசியில் பிள்ளைகளுக்கு லீவு வர… எல்லோரும் வெளியே கிளம்பினர். அம்மாவுக்கு டெல்லியை ஆர்வமாக சுற்றிக் காட்டினான் மகன். கல்யாணிக்கும் அது புதிய அனுபவமாகவே இருந்தது.

பிள்ளைகளுடன் வெளியே வந்தது சந்தோஷமாக இருந்தது. கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்தவளுக்கு அந்த வாழ்க்கை பிரமிப்பாக இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல… ரஞ்சனாவின் எரிச்சல் அதிகமாகத் தான் செய்தது. கல்யாணி டெல்லி வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. சனிக்கிழமை பிள்ளைகளோடு வெளியே போவது சந்தோஷமாக இருந்ததாலும், அவள் அப்படியொரு வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்பதாலும் சனிக்கிழமை எப்போதும் வருமென ஆவலோடு எதிர்பார்க்கலானாள்.

அந்த சனிக்கிழமை காலை எல்லோரும் கிளம்ப, “உங்கம்மாவுக்கு வயசாயிடுச்சு… நம்மளோட சேர்ந்து அவங்களும் அலைய முடியுமா? பேசாம வீட்டிலே ரெஸ்ட் எடுக்கட்டும்”

“அம்மா வீட்டில தனியாகத்தானே இருப்பா… நம்மளோட வரட்டுமே..” கதிர் மெதுவாக சொல்ல

“வேல பாக்குற தரணி இன்னைக்கு லீவு. மாவுவேற ஊற வச்சிருக்கேன்… மிஷினில் துணி போட்டிருக்கேன்… காயப் போடணும். எல்லாரும் கிளம்பினால் வேலை எப்படி நடக்கும்?” என்று கடுகடுக்க… கதிரும் தலையாட்டினான்.

கல்யாணி எல்லா வேலையையும் முடித்து விட்டு ஹாலில் உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களிலேயே கதிரும் ரஞ்சனாவும் மாறி விட்டது புரிந்தது. அந்த வீட்டிற்கு சுமையாக தான் இருப்பது போல தோன்றியது. அன்னியப்பட்டது போல உணர்ந்தாள்.

வருடக்கணக்காக நாகராஜோடு இருந்த போது தோன்றாத உணர்வு இப்போது தோன்றியது. பிள்ளைகளைக் கூட  தன்னோடு ஒட்ட விடாமல் ரஞ்சனா தடுப்பது வேதனையாக இருந்தது.

முந்திய நாள் நடந்தது மனதில் நிழலாடியது. ரஞ்சனா வெளியே போய்விட… பள்ளியிலிருந்து பிள்ளைகள் இருவரும் வந்தனர். இருவரையும் சாப்பிட அழைத்தாள் கல்யாணி.

“அப்புறமா சாப்பிடுகிறோம் பாட்டி “

“கண்ணுங்களா நாகராஜ் சித்தப்பா வீட்ல மீனு குட்டியும், நந்துவும், சாப்பிட மாட்டேன் அடம்பிடிக்கும் போது பாட்டி மண் சட்டியில சோறு பெசஞ்சு, நெய் விட்டு, ரசம் ஊத்தி, நாலு அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, காய் சேர்த்து கதை சொல்லிக்கிட்டே உருட்டி கையில் போடுவேன். ஒரு மாயத்தில் சாப்பிட்டு போய்டுவாங்க. நாயன்மார்கள், ஆழ்வார்கள் கதைங்க அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி”

“ஓகே பாட்டி… எங்களுக்கும் அதே மாதிரி பிசைஞ்சு தாங்க” என்று கூற, வெள்ளிக் கும்பாவில் சாதம் எடுத்து பிசைந்து கதை சொல்லி ஊட்டி விட்டாள்.

அந்த நேரம் ரஞ்சனா வர, “அத்தை என்ன செய்றீங்க? கைய போட்டு பெசஞ்சு… டர்ட்டி திங்ஸ்… என் பிள்ளைங்க பிளேட்டில் ஸ்பூன் போட்டு கொடுத்தா தான் சாப்பிட்டு வாங்க. நான் நல்லா பழக்கி வைச்சிருக்கிற குட் ஹேபிட்சையெல்லாம் கெடுத்திருவீங்க போலிருக்கே” 

“பாட்டி கொடுத்தது ரொம்ப டேஸ்ட். சாமி கதை சோ இன்ட்ரஸ்டிங்…” என்ற அர்ஜுன் கூற, ரஞ்சனா கோபம் எல்லை மீறியது.

“எதுத்தா பேசுற” பளாரென  அறைந்தாள்.  பிள்ளைகள் இருவரும் அழுதபடி போக, கல்யாணம் மனம் வாடி போனாள்.

குழந்தைகள் அடி வாங்கியதை தாங்க முடியவில்லை. ரஞ்சனாவிற்கு தான் அங்கு இருப்பது பிடிக்கவில்லை என்பது தெளிவாக புரிந்தது. கதிரும் அவளை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாமல் தவிப்பது புரிந்தது.

நாகராஜ் வீட்டில் சின்ன டிவியில் சுதந்திரமாக சீரியல்கள் பார்த்தது நினைவுக்கு வந்தது. நாகராஜ் மனைவி காயத்ரி பிள்ளைகளை “கொஞ்ச நேரம் பாட்டி டிவி பாக்கட்டும். நாம வெளியே போய் படிப்போம்” என்று திண்ணைக்கு இழுத்துப் போய் விடுவாள்.

இங்கு கதிர் அவள் ரூமில் டிவி வைத்துக் கொடுத்திருந்தாலும், பிள்ளைகள் படிப்பை காரணம் காட்டி டிவியை போட விட மாட்டாள் ரஞ்சனா.

“அம்மா பாவம் வயசானவ… பொழுது போக வேண்டாமா?” கதிர் மெதுவாக கூற

“இந்த அநியாயம் எங்கேயாவது உண்டா? வயசு காலத்தில  ராமாயணம், மகாபாரதம் படிக்கணும்… ஸ்லோகம் சொல்லணும். அத விட்டுட்டு டிவி பார்த்தா உருப்படுமா?”

அதன் பின் கல்யாணி டிவியை தொட மாட்டாள்.. சண்டை வேண்டாமென தவிர்த்து விடுவாள்.

மறுநாள் ஞாயிறு காலை சோம்பலாக விடிந்தது. 10 மணி அளவில் ரஞ்சனாவின் சினேகிதிகள் வர, கதிரும் ரஞ்சனாவும்  பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஜூஸை கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி கல்யாணி எடுத்துவர, ரஞ்சனாவின் சினேகிதி…”   ஊரிலிருந்து இந்த அம்மாவை  உதவிக்கு கூட்டிட்டு வந்திருக்கியா?”

“ஆமாம்… அதவிடு. லயன்ஸ் கிளப் மீட்டிங் இந்த மாதம் என்னைக்கு?”

ரஞ்சனா தன்னை மாமியார் என்று சினேகிதி களுக்கு அறிமுகப்படுத்தப் விரும்பவில்லையென்றால்… கதிரும் அதை கவனிக்காத மாதிரி பாவனை பண்ணியது கல்யாணியை இன்னும் வேதனைப்படுத்தியது.

மறுநாள் நாகராஜ் அண்ணனிடம் பேச, ஏதோ நிலத்தை விலைக்கு கொடுக்கும் விஷயமாக பேசுகிறார்கள் என்பதை யூகித்துக் கொண்டாள் கல்யாணி.

“தம்பி! ஊருக்குப் போறியா?”

“ஆமாம்மா.. அப்பா என் பேர்ல எழுதி வைத்திருந்த இடத்தை தம்பிய விக்கச் சொல்லியிருந்தேன். யாரோ  கேக்குறாங்க போல.. அதான் அத முடிச்சு ரிஜிஸ்டர்  பண்ணி கொடுத்துட்டு  பணத்தை வாங்கிட்டு போ’ன்னு நாகராஜ் சொல்றான். இனிமே எனக்கு அங்க என்ன வேலைம்மா”

‘தான்.. தன் குடும்பம்.. என சுயநலமாக வாழ்பவர்களுக்கு அங்கு என்ன வேலை இருக்கப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டாள் கல்யாணி. தானும் இந்த மாய உலகில் சில நாட்கள் மயங்கியிருந்தது குறித்து வெட்கமாக இருந்தது.

எவ்வளவு வசதிகள் இருந்தாலும், அந்த வீடு ஒரு தங்கக் கூண்டு என்பது புரிந்தது. சட்டென முடிவெடுத்தாள்.

“தம்பி கதிர்! நானும் உன்கூட வர்றேன்.  இந்த ஊர் குளிர் எனக்குத் தாங்கல… நான் நாகராஜ்  கூடயே இருந்துக்கிறேன்”

கதிருக்கு அம்மா மனநிலை புரிய.. அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள தன்னால் முடியாது என்று தோன்ற, “சரிமா! உன்னை நாகராஜ் வீட்டிலேயே கொண்டு போய் விட்டுடுறேன்” என்றான் குற்ற உணர்வோடு.

இதுதான் சரியான முடிவென  கல்யாணிக்கும் தோன்றியது. கூண்டை விட்டு பறக்க தயாரானது கிளி.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 28) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்