அது ஓர் அழகிய கிராமம்
அந்த ஊரில் மதி, சுசிலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு அருள்மொழி, அகிலன் என்ற இரு குழந்தைகள் இருந்தனர்
அருள்மொழி ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். அகிலன் முன்றாம் வகுப்பு படித்து வந்தான். அவ்விரு குழந்தைகளும் நல்ல பண்பும் அறிவாற்றலும் மிக்கவர்கள்
அவர்கள் பெற்றோர் அந்த குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை நன்கு கற்றுக் கொடுத்தனர்
அந்த குழந்தைகளும் ரொம்ப புத்திசாலிகள். யாருக்கு எந்த உதவி என்றாலும் மனம் கோணாமல் செய்வார்கள். அக்கம் பக்கம் உள்ள அனைவரும், தங்கள் பிள்ளைகளை பாராட்டுவதைப் பார்த்து, மதியும் சுசிலாவும் பெருமிதம் கொள்வர்
இரண்டு பேரும் படிப்பில் சிறந்து விளங்கி, பள்ளி ஆசிரியரிகளிடமும் பாராட்டு பெற்றனர்.
அதுமட்டுமின்றி பெரியவர்களை மதிப்பது, அடுத்தருக்கு உதவுவது என, அனைத்திலும் சிறந்தவர்களாக இருந்தனர்
அருள்மொழியும், அகிலனும் வீட்டில் அம்மா, அப்பாவுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வார்கள்
அம்மாவுக்கு கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவது, அப்பாவுக்கு செய்தித்தாளை எடுத்துக் கொடுத்து உதவுவது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என அனைத்து வேலைகளையும் செய்வார்கள்
அக்காவும், தம்பியும் மிகவும் பாசமாக இருப்பார்கள். சண்டையே போட்டுக் கொள்ள மாட்டார்கள். தன்னுடைய புத்தக பையை தானே சுத்தம் செய்வது, பள்ளிக்கு செல்லும் போது பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைப்பது என்று அவர்கள் வேலையை அவர்களே செய்து அம்மாவுக்கு உதவுவார்கள்
ஒரு நாள், வழியில் ஒரு பார்வையற்றவர், வழியை கடக்க முடியாமல் திணறினார். இதைப் பார்த்த அருள்மொழியும், அகிலனும் “அய்யா! நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்” என்று கூறி வழியை கடக்க உதவினார்கள்
அந்த பெரியவர் அவர்களை ஆசிர்வதித்து, “இப்படியொரு நல்ல பிள்ளைகளைப் பெற்ற பெற்றோரும் வாழ்க” என வாழ்த்தினார்
ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்ல கிளம்பிய போது, தோட்டத்தில் செடிகளை சீர் செய்து கொண்டிருந்த அவர்களின் தந்தை, கையில் அரிவாள் வெட்டி இரத்தம் கொட்ட மயங்கி விழுந்தார்
இதைப் பார்த்த அருள்மொழி, அகிலன் இருவரும் ஓடி வந்து அப்பாவை தாங்கிப் பிடித்தனர். பிறகு 108 என்ற அவசர ஊர்திக்குப் போன் செய்து, அப்பாவை மருத்துவமனையில் சேர்ந்தனர்
அதிர்ச்சியில் பயந்து நின்ற, தங்கள் அன்னைக்கும் ஆறுதல் கூறி சமாதானம் செய்தனர்
அதன் பின், “தந்தைக்கு ஒன்றும் இல்லை, வீட்டுக்குச் செல்லலாம்” என மருத்துவர் கூறிய பின், இருவரும் பள்ளி செல்ல புறப்பட்டனர்
பள்ளியில் நுழைந்ததுமே, “லேட்டா வர்றவங்க ஹெட் மாஸ்டர் ரூமுக்கு வர சொல்லி இருக்காங்க” என்றார் வாயிலில் நின்றிருந்த காவலாளி
தலைமையாசிரியர் அறைக்கு சென்றதும், “ஏன் இவ்வளவு தாமதம்? போய் வெளியில் நில்லுங்கள்!” என கடுமையாக பேசினார் அவர்
அதற்கு அருள்மொழி, “அய்யா எங்கள் அப்பாவுக்கு கையில் அரிவாள் வெட்டியதால் மயங்கி விழுந்து விட்டார். அவருடன் மருத்துவமனைக்கு சென்று வந்ததால், பள்ளிக்கு வர நேரமாகி விட்டது” என்றாள்
அக்காவை தொடர்ந்த அகிலன், “சென்ற வார நீதி போதனை வகுப்பில், நீங்கள் தானே அய்யா ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற கொன்றை வேந்தன் பாவை பற்றி கூறினீர்கள். அதனால் தான் நாங்கள் இவ்வாறு செய்தோம். எங்களை மன்னியுங்கள்” என்றான்
விஷயம் அறிந்ததும், பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொண்டதை உணர்ந்து, மகிழ்ந்து நின்றார் ஆசிரியர்
அதோடு நில்லாமல், மறுநாள் மாணவர்கள் எல்லோரும் மைதானத்தில் ஒன்றுகூடும் காலை வழிபாட்டின் போது, அருள்மொழி மற்றும் அகிலனை மேடை ஏற்றினார்
எல்லோர் முன்னும் இவர்கள் செய்த செயலை பற்றிக் கூற, எல்லோரும் கைதட்டி பாராட்டினார்
தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர், “இதில் இருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், ஒரு விஷயத்தை அல்லது நீதியை கற்றதோடு நில்லாமல், அதை வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும். நீங்கள் எல்லோரும், அருள்மொழி அகிலன் போல ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற கொன்றை வேந்தன் நீதி மொழியின் படி நடப்பீர்களா?” என கேட்க
“நடப்போம் அய்யா” என பிள்ளைகள் ஒரே குரலாய் கூறினர்
(முற்றும்)
வாழ்த்துக்கள்
கொன்றை வேந்தன் போட்டியில் வெற்றி பெற்ற, தேனி மாவட்டத்தை சேர்ந்த யாஷினிக்கு, எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என படிப்பதோடு நில்லாமல், அதை வாழ்வில் கடைபிடித்தல் அவசியம் என உணர்த்திய பாங்கு, பாராட்டத்தக்கது
இந்த கதையில் வரும் அருள்மொழி அகிலன் போல, யாஷினியும், அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கி, பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
குழந்தைகள் நல்ல முயற்சி செய்கின்றனர். அருமையாக எழுதுகின்றனர். வாழ்த்துகள் இந்தக் குழந்தைக்கும்! தொடர்ந்து படிப்பிலும் முன்னிலை வகிக்கவும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்! அழகாக கதை அமைத்த யாஷினிக்கு பாராட்டுகள்..வாழ்த்துகள்.
நன்றிங்க ஆதி
வளரும் பயிர் முளையிலே தெரியும் என்பர் . குழந்தை யாஷினிக்கு வாழ்த்துகள் . வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு .
மிக்க நன்றி