பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
காரிருள் சூழ்ந்த கானகம் போல்
ஊரெங்கிலும் பெரும் நிசப்தம்
இயற்கை அன்னையவளின் படைப்பில்
பிறவி பெருங்கடலை நீந்த-அரையும்
குறையுமாய் உண்டுறங்கும் உயிர்கள்
அரையும் பிறையுமாய்
எட்டிப்பார்க்கும் வெண்மதியையும்
மறைத்தன கார்முகில் சொந்தங்கள்
எப்போதும் மதியவளின் ஒளியில்
ஊர்ந்திடும் உயிர்க்கெல்லாம் சிறுவருத்தம்
ஓலைக்குடிசை பட படக்க
மண் வாசம் மணமெடுக்க
கார்முகிலை தென்றல் வருட
வானம் பார்த்த புழுதிகாட்டில்
விழுந்தன உயிர்த் துளிகள்
மழைமகள் சாரலெடுக்க
திண்ணையில் புரண்டவரெல்லாம்
புகுந்தனர் வீட்டிற்குள்
தூக்கம் கலைந்த கிழவிகள் எல்லாம்
நடுநிசியிலும் ரசித்தனர் மழைமகளை
மழை மகளின் எதிர்பாரா வருகையில்
சற்றே குளித்து முடித்தன கால்நடைகள்
இன்னும் கொஞ்ச நாழி அவ கருணை
இருந்தா நாளை ஏறு கட்டலாமுனு இருக்கும்
மண்ணோடு போராடும் உழுகுடிகள்
மழை மகளின் தீண்டலில்
எழுந்த வானம்பாடிகள் கூச்சலிட
மெல்ல மெல்லமாய்
வானம் பார்த்த பூமியை விட்டு
விலகி சென்றாள் “கோடை மழை” மகள்
மண்ணும் மனமும்
அனல்காத்து வீசுதடி
கானல் நீர் ஓடுதடி
மாரி மழை பொய்ச்சு போச்சு
காடு கர காஞ்சு போச்சு
ஐப்பசி மழைல
ஐம்பசியும் தீர்ந்துபுடும் – ஆன
அடை மழ காலத்துல
கோட வெயில் காய்ச்சுதடி
பாட்டன் பூட்டன்
நட்டு வச்ச மரத்த எல்லாம்
வெட்டிவிட்டா மாரி
மழ எங்க வரும்
ஊருக்கே கஞ்சி
ஊத்துன காலம் போயி
ஒரு வேள கஞ்சிக்கே
வழியில்லாம போச்சுதடி
ஐப்பசியில நாத்து விட்டு
முப்பது நாள் மேல சென்று
ஏர் மாடு கட்டி உழுது
வயக்காடு கட்டி மிதிச்சு
வேப்பம் தழ சேத்துப்
போட்டா நாத்து நட நல்லாருக்கும்
வரப்போரம் எட்டிப்பார்த்தா
நண்டு குஞ்சு பொறிச்சுருக்கும்
நல்ல நாளு பாத்து நாத்து நட
ஏழ மனம் நெறையுமடி
கள பறிக்கும் நேரம் வந்தா
நண்டு குழம்பு கொதிக்குமடி
இராப்பகலா தண்ணி பாச்சும்
வேலயெல்லாம் நீராணி பாத்துக்குவான் ,
அறுவடை நேரத்தில
நெல்லளந்து குடுத்துடலாம்
நெற்பாலு வந்திடுச்சு, நெற்த்தாளு
பழுத்துடுச்சு
கருக்கருவா கொண்டு வாங்கடா
கருது அறுத்து களம் சேக்கலாமென
பாட்டன் சொன்ன சொல்லு இன்னும் நிக்கலயடி
மழ வெயிலு பாக்காம
பாடு பட்டதெல்லாம் ஓடிபுடும்
நெல்லுமூட்ட கட்டையில
யானை கட்டி போரடிச்ச காலம் போயி
எந்திரமெல்லாம் கொண்டு வந்தாங்க
ஏழ வேலய கொரைக்குறோமுனு
கொஞ்சம் நெஞ்சம் பெஞ்சாலும்
ஆடு மேச்சி பொழச்சிகலாம்
காடுகர காஞ்சி போச்சு, அருவம்
புல்லு செத்துப்போச்சு
மனுச மக்க பசி தாங்கிடலாம்
வாயில்லா சீவனது வயித்துக்கு என செய்ய
வந்த விலைக்கு வித்துபுட்டு
பஞ்சம் பொழைக்க போயிடலாம்
அங்கேயும் பஞ்சமுனா
எங்க போயி நா அழுக
கடைசி மூச்சு நிக்கும் வரை
எம் மண்ண விட்டு எங்க போவேன்
காசு பணம் இல்லனாலும்
தன்மானம் போலயடி
அம்பேத்கர்
வையத்தில் மனிதர் பிறப்பதெல்லாம்
ஒரு நிகழ்வே -ஆங்கே
மாமனிதர் பிறப்பதே சரித்திரம்
சாதியக் கொடுமைகள்
புரையோடிய
காலனிய மண்ணில் சமத்துவம்
விதைக்கும் சாமானியராய் வளர்ந்தவர்
பிறப்பினில் தாழ்ச்சி கண்ட மூடர்கள்
பிறருக்கெல்லாம் கல்வி ஏனென
வஞ்சித்தனர் காலம் காலமாய்
இயற்கை அன்னையவள் உலகு தனில்
பிறப்பினில் உயர்ச்சி தாழ்ச்சி
இல்லை என முழங்கியவர்
பிறப்பால் மறுக்கப்பட்ட
கல்வியில் சாதித்திட
தேசம் பல கடந்து மேதையானவர்
கற்பி ஒன்றுசேர் போராடு என முழங்கி
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
பகுத்தறிவு ஊட்டியவர்
சட்டம் பயின்று மேதையானவருக்கு
வளமாய் வாழ வாய்ப்புகள் வந்தாலும்
வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காகவே வாதாடியவர்
சுயமரியாதை மறுக்கப்பட்ட
சமயத்தில் இருந்து விலகி
புரட்சி செய்த புத்தன் இவர்
அரசியலமைப்பின் தந்தையானவருக்கு
கிடைக்கப்பெற்ற காலம் கடந்த விருதினில்
இருக்கிறது ஆயிரம் சாதிய மனநோய்
மேலை நாடுகள் போற்றும் அண்ணலை
சிறை கூண்டுகளில் அடைத்தே வைத்திருக்கிறது
எஞ்சி இருக்கும் சாதிய வன்மம்
இருண்ட சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாய்
வாழ்ந்திட்ட ஒற்றை மனிதரின்
பெயரில் ஒளிந்திருக்கிறது
ஓராயிரம் புரட்சி
“அம்பேத்கர்”
மழை மகளின் வீடு
செல்வம் படைத்த மாநகரமாம்
நவ நாகரிக மனிதர்களாம்
வானுயர் கற்குவியல்களாம்
ஆங்கே கழிவுப் பெருவெள்ளமாம்
கல் மர நிழல் உண்டு
அதனால் மழையுண்டோ
நீர்நிலை பல உண்டு
ஆங்கே நீச்சல் தானுண்டோ
தலைநகரின் தலைவிதியது
சிறுமழையில் பெருவெள்ளமாம்
சித்திரையின் கொடையது
அங்கே எப்போதும் செல்ல பிள்ளையாம்
கடற்கரைகள் பரந்த
நகரம் பல உண்டு
பல தேசம் கொண்ட நீராழியவள்
ஆங்கே கழிவுநீரான கதையும் உண்டு
மரம் வளர்த்தோம்
மழைமகளை பெற்றோம்
அவளுக்கென மாளிகை போல்
ஆங்கே ஏரி,குளமும் அமைத்தோம்
மக்கள் வெள்ளம் பெருகிடவே
மனிதம் அல்லா உயிர்கள் நாம்
ஆங்கே மனிதம் காக்கும் மழைமகளின்
வீடுகளை பறித்து கொண்டோம்
கழனி அழித்து காரை குழைத்து
நகர் பல படைத்தோம்
ஆங்கே மழைமகளவள் வந்துவிட்டால்
வயிற்றுக்கும் வானம் பார்த்தோம்
சுயநலமே பொதுநலமாய்
மாறிப்போன மனிதர்களிடம்
“மழைமகளின் வீடு” தான்
கிடைத்திடுமோ?
ஆங்கே அவள் கோபம் தான்
கரைந்திடுமோ?
ஒற்றைப் பனையும் தூக்கணாங்குருவியும்
வானம் பார்த்த பூமியில்
வானுயர் ஒற்றை பனையது
பொட்டல் புழுதியில் கால் அயர்ந்த
ஈர மனங்களுக்கு ஒற்றை “குடை”யது
சின்னஞ் சிறகினில் வானளக்கும்
வானம்பாடியவளின் ஒற்றை கூடு அது
கற்றை கூந்தலை முடிந்தாற்போல்
அழகே அழகு தான் அவள் கூடு
அவள் குழந்தைகளுக்கு ஓர் அறையாம்
தானியம் சேர்க்க ஓர் அறையாம்
விளக்குகளாய் மின்மினிகளாம்
அவைகளை வரவேற்க களிமண் மெத்தைகளாம்
பருவ மழை பெய்யும் திசையறிந்தே
கூட்டிற்கு வாசல் வைத்தவள்
ஒரு வார்த்தை சொல்லாமல்
எங்கோ வலசை போனதேனோ
அவளில்லாமல் காற்றிலே மெல்லமாய்
அசைந்தாடும் அந்த கூட்டிலே சீவன் ஏது?
அவள் காணத்தில் காலம் கழித்த
அந்த ஒற்றைப் பனைக்கும் தான் வசந்தம் ஏது?
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings