அன்பு மாணவ மாணவிகளே,
உங்களுக்கு எனது இனிய வணக்கம். பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறீர்களா? சற்று சிரமம் தான் இல்லையா?
விரைவில் நிலைமை சீராகி, பழையபடி பள்ளிக்கு சென்று, உங்கள் நட்புகளுடன் அளவளாவி மகிழும் நாள் வரும் என நம்புவோம்
அது சரி, உங்களுக்கு வாசிப்பு பழக்கம் இருக்கிறதா? அப்படியெனில், என்னுடைய கை தட்டல் உங்களுக்கு
இல்லையெனில், இன்றிலிருந்து தினமும் ஒரு பக்கமேனும், பாட சம்மந்தமான வாசிப்பு தவிர, வேறு எதையேனும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
அதற்காக எந்நேரமும் கதை புத்தகமும் கையுமாய் இருப்பதும் தவறு. பாடங்களை பயில்வதும், மதிப்பெண்களை பெறுவதும், நம் எதிர்கால வாழ்விற்கு மிகவும் முக்கியம், சரியா?
வாசிப்பீர்கள் சரி, எழுதும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இருக்கிறதெனில், மீண்டும் ஒரு கை தட்டல் உங்களுக்கு
எழுதும் பழக்கம் இல்லையென்றாலும், இந்த சிறுகதை போட்டி வாய்ப்பை பயன்படுத்தி, அந்த முயற்சியை செய்து பாருங்கள்
பங்கு பெறும் அனைவருக்கும் “பங்கேற்பு சான்றிதழ்” (Participation Certificate – eCertificate) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்
வெற்றி பெறுவது இரண்டாம் பட்சம், பங்கேற்பதே முக்கியம்
இனி, போட்டிக்கான விதிமுறைகளை பார்ப்போமா…
விதிமுறைகள்
- இந்த சிறுகதைப் போட்டியில் 8 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவியர் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
- இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒரு Surprise Gift காத்திருக்கிறது. உங்களுக்கு தான் சர்ப்ரைஸ் என்றால் பிடிக்குமே 🙂
- இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டில் இருப்போரும் கலந்து கொள்ளலாம்
- பங்கு பெறும் அனைவருக்கும் “பங்கேற்பு சான்றிதழ்” (Participation Certificate – eCertificate) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்
- பரிசு பெறும் கதைகள் மட்டுமின்றி, மேலும் சில சிறந்த கதைகளும் தேர்வு செய்யப்பட்டு, மின் நூலாக (Ebook) Amazonல் வெளியிடப்படும்
- கதைகளை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பவும்
- கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள், ஆகஸ்ட் 31, 2020
- சிறுகதை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள, கொன்றைவேந்தன் என்ற நீதி நூலில் உள்ள 91 பாக்களில், ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை மையக்கருத்தாய் கொண்டு, நீங்கள் சிறுகதையை எழுத வேண்டும்.
- சிறுகதை 400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம் (Minimum 400 Words, Maximum 600 Words)
- கதைக்கு பொருத்தமான தலைப்பை நீங்களே தேர்ந்தெடுத்து அளிக்கவும்
- கதையை அனுப்பும் போது, Email Subject lineல் “உங்கள் பெயர் – வகுப்பு – கொன்றை வேந்தன் சிறுகதைப் போட்டி 2020” என்ற விவரத்தை மறக்காமல் எழுதவும்
- சிறுகதையை Word Documentஆக அனுப்ப வேண்டும்
- இதுவரை தமிழில் தட்டச்சு (type) செய்து பழக்கமில்லாதவர்கள், “How to type in tamil” என கூகிளிடம் கேட்டால், அது பல வழிகளை காட்டும். அதில் எது உங்களுக்கு பொருந்துமோ, அதை தேர்ந்தேடுத்து செய்யுங்கள். முதலில் கதையை தயார் செய்து வைத்துக் கொண்டு, பின் இதை முயலுங்கள்
- முயன்றும் முடியவில்லையெனில், நீங்கள் எழுதிய கையெழுத்து பிரதியை போட்டோ எடுத்து அனுப்பலாம்
- போட்டி முடிவுகள் வெளியாகும் வரை, உங்கள் கதைகளை, Whatsappலோ, Facebookலோ, வேறு எங்கும் யாரிடமும் பகிர வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்
எழுதுங்கள், வெல்லுங்கள்
போட்டியில் வெற்றி பெற உங்களை மனமார வாழ்த்துகிறேன்
கொன்றை வேந்தன் பாக்கள்
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- ஆலயம் தொழுவது சாலவும் நன்று
- இல்லறம் அல்லது நல்லறம் அன்று
- ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் [ஈயார் = பிறக்குக் கொடாதவர்]
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு [உண்டி = உணவு]
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
- எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும் [எண் = கணிதம்; எழுத்து = மொழியிலக்கணம்]
- ஏவா மக்கள் மூவா மருந்து [ஏவு = வேலைசெய்யென்று கட்டளையிடு; மூவா = மூக்காத, பெற்றோர் மூக்காத, வயதாகாத]
- ஐயம் புகினும் செய்வன செய் [ஐயம் = பிச்சை]
- ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
- ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
- ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு [ஔவியம் = பொறாமை, வஞ்சனை; ஆக்கம் = செல்வம், நன்மை]
- அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்; சிக்கென = உறுதியாக, சிக்கனமாக; வீண்செய்யாமல் தக்கவைக்குமாறு]
- கற்புஎனப் படுவது சொல்திறம் பாமை
- காவல் தானே பாவையர்க்கு அழகு
- கிட்டா தாயின் வெட்டென மற [கிட்டாதாயின் = கிடைக்காதானால்; வெட்டென = உறுதியாக]
- கீழோர் ஆயினும் தாழ உரை
- குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
- கூரம்பு ஆயினும் வீரியம் பேசேல்
- கெடுவது செய்யின் விடுவது கருமம்
- கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
- கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
- கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
- கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
- கௌவை சொல்லின் எவ்வெவர்க்கும் பகை
- சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை
- சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
- சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
- சீரைத் தேடின் ஏரைத் தேடு
- சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
- சூதும் வாதும் வேதனை செய்யும்
- செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் [கைதவம் = கபடம், பொய்]
- சேமம் புகினும் யாமத்து உறங்கு
- சைஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
- சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
- சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
- தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
- தீராக் கோபம் போராய் முடியும்
- துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
- தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
- தெய்வம் சீறின் கைதவம் மாளும்
- தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
- தையும் மாசியும் வையகத்து உறங்கு
- தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
- தோழ னோடும் ஏழைமை பேசேல்
- நல்இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்
- நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
- நிற்கக் கற்றல் சொல்திறம் பாமை
- நீரகம் பொருந்திய ஊரகத்திரு
- நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
- நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
- நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை
- நேரா நோன்பு சீர் ஆகாது
- நைபவர் எனினும் நொய்ய உரையேல் [நைபவர் = வருந்துபவர், கேட்டு வருந்துபவர்; நொய்ய = கீழானவை]
- நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் [நொய்யவர் = சிறியவர், மெலிந்தவர், வலிமையற்றவர்; வெய்யவர் = எல்லாரும் விரும்பத்தக்கவர், மதிக்கத்தக்கவர்]
- நோன்பென் பதுவே கொன்றுதின் னாமை [நோன்பு = தவம்]
- பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்
- பாலோடு ஆயினும் காலம்அறிந்து உண்
- பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்
- பீரம் பேணில் பாரம் தாங்கும் [பீரம் = தாய்ப்பால்; பேணில் = ஊட்டிக்கவனித்தால்; பாரம் = சுமை]
- புலையும் கொலையும் களவும் தவிர்
- பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் [பூரியோர் = கயவர், கீழானவர்; சீரிய = உயர்ந்த]
- பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும் [பெற்றோர் = முற்றிய அறிவு; செற்றம் = தீராக் கோபம், கறுவல்]
- பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
- பையச் சென்றால் வையம் தாங்கும்
- பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
- போனகம் என்பது தான்உழந்து உண்டல் [போனகம் = விருந்து, உணவு; உழந்து – உழைத்து; உண்டல் = உண்ணுதல்]
- மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
- மாரி அல்லது காரியம் இல்லை
- மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
- மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
- மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
- மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
- மேழிச் செல்வம் கோழை படாது
- மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
- மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
- மோனம் என்பது ஞான வரம்பு
- வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துஉண்
- வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
- விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
- வீரன் கேண்மை கூர் அம்பாகும்
- உரவோர் என்கை இரவாது இருத்தல்
- ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
- வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
- வேந்தன் சீறீன் ஆம் துணை இல்லை
- வைகல் தோறும் தெய்வம் தொழு
- ஒத்த இடத்து நித்திரை கொள்
- ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
GIPHY App Key not set. Please check settings