எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ரமா.. நாம முன்னாடி வாடகைக்கு இருந்தோமே.. அதுக்கு பக்கத்து வீட்டில சிவா னு ஒரு பையன் இருந்தான்.. ஞாபகம் இருக்கா..?”
சுந்தர் தன் மனைவி ராமலக்ஷ்மியிடம் கேட்டார்.
“நல்லாவே ஞாபகம் இருக்கு.. அவனோட அம்மா பேரு கூட கலைச்செல்வி..”
“ஆமாமாம்.. அவங்களைப் பத்தி ஒரு விஷயம் பேசத்தான் இப்போ பேச்சை ஆரம்பிச்சேன்..”
“கலைச்செல்வி பத்தியா..? என்ன?.. சொல்லுங்க..”
ஆர்வமாக கேட்டாள் ரமா.
“அவங்க வீட்டில கணவன் – மனைவி ரிலேஷன்ஷிப் நல்லாத் தானே இருக்கு..?”
“நீங்க ரிடயர் ஆகிட்டு வீட்டில பொழுது போகாம இருந்தா இப்படி தேவையில்லாம அடுத்தவங்க வீட்டு விஷயத்தை ஆராய்ச்சி பண்ணனுமா..?”
“இல்லம்மா.. தினமும் சாயந்திரம் நான் ஏரிக்கரைக்கு வாக்கிங் போகும்போது தான் அவங்களும் வருவாங்க..”
“சரி..”
“அந்த ஏரிக்கரைல ஒரு சுத்து முடிக்கணும்னா அரை மணி நேரம் ஆகும்..”
“ஆமா.. அதனாலென்ன..?”
“அந்த அரை மணி நேரமும் அவங்க காதில ஃபோன் வைச்சி பேசிக்கிட்டே தான் நடப்பாங்க..”
“இதுல என்ன இருக்கு..? அவங்க அம்மா கிட்ட கூட பேசியிருக்கலாம்..”
சுந்தர் என்னும் சுந்தரவதனனுக்கு அந்த பதில் திருப்தியாய் இல்லை.
“இல்ல.. அது எப்படி தினமும் ஏரிக்கரைக்கு வாக்கிங் வரும்போது பேசணும்னு தோணும்..? வீட்டில இருக்கும்போதே பேசியிருக்கலாமே..? அப்படியென்ன கணவருக்குத் தெரியாம பேச வேண்டி இருக்கும்..? இல்லன்னா ஒருவேளை அவங்க பையனுக்கு கல்யாணம் ஆகி, மருமகள் பத்தி யார்கிட்டயாவது கோள்
சொல்லிக்கிட்டு இருக்காங்களோ?..”
“உங்க சிந்தனையை கொஞ்சம் நிறுத்துறீங்களா..? அவங்க கணவர் செங்கல்பட்டு ல வேலை பாக்கிறார்.. காலையில சீக்கிரமா கிளம்பி போய்ட்டு நைட்டு லேட்டாத் தான் வருவார்.. அவங்க பையன் சிவா நம்ம பையன் வயசு தான், இப்போ தான் வேலைக்குப் போயிருக்கான்.. இன்னமும் கல்யாணம் ஆகல்ல..”
மனைவி சொல்வதில் லாஜிக் இருந்தாலும், தினமும் கலைச்செல்வி ஃபோன் பேசிக் கொண்டே இவரைக் கடந்து போகும்போது, இவர் மனதுக்குள் ஒரு சந்தேகம் தொடர்ந்து இருந்தது.
***
அதன் பின் ஒரு நாள் சுந்தர் மனைவியுடன் கோவிலுக்கு சென்றிருந்த போது, தற்செயலாக கலைச்செல்வியை சந்திக்க நேர்ந்தது.
ரமாவும் கலைச்செல்வியும் வணக்கம் பரிமாறிக் கொண்டபின், ரமா பேச்சைத் தொடங்கினாள்.
“ரொம்ப நாளாச்சி உங்கள பார்த்து.. இவரு தான் டெய்லி வாக்கிங் ல உங்களைப் பாக்கிறதாக சொல்லுவாரு..” என கணவரை கைகாட்டி சொன்னாள்.
கலைச்செல்வியும் சிரித்தபடியே..
“ஆமாமாம்.. நானும் கவனிப்பேன்.. என்னை நேருக்கு நேராப் பார்த்தா சிரிக்கக் கூட மாட்டாரு.. ஏதோ யோசனை யா போறது மாதிரி கடந்து போய்டுவாரு..” என்றாள்.
“அவரு யோசனை யே உங்களைப் பத்தி தான்..” சிரித்துக் கொண்டே ‘பொசுக்‘ கென்று சொல்லிவிட்டாள் ரமா.
சுந்தரவதனன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடுத்தவர்கள் முன் மனைவி தன் காலை வாருவாள் எனத் தெரியும். ஆனால் பொது இடத்தில்…?
கலைச்செல்வியோ ஆர்வமாக..
“என்னைப் பற்றியா..? என்ன யோசனை..?” என்றாள்.
“இல்ல.. நீங்க வாக்கிங் போகும் போது தினமும் தவறாம ஃபோன் பேசிக்கிட்டே போவீங்களாமே..?
“ஹ ஹா.. நீங்களும் ஏமாந்தீங்களா..?” என்று சுந்தரைப் பார்த்து சிரித்தபடியே தொடர்ந்தாள்..
“வேற ஒண்ணுமில்ல.. நான் இப்போ ஒரு சிறுகதை எழுத்தாளர் ஆயிட்டேன்.. fb ல எழுதுறேன்.. மொபைல்ல Gboard தமிழ் மொழி செட் பண்ணிட்டு அதுல மைக் ஆன் பண்ணி பேசிக்கிட்டே இருந்தா அதுவே டைப் பண்ணிக்கும்.. அப்புறம் வீட்டுக்கு வந்து பாரா மட்டும் பிரிச்சிக்கிட்டா போதும்..” என்றாள்.
கணவரின் சந்தேகத்தை முழுதும் தீர்க்க முடிவு செய்தது போல ரமா அடுத்த கேள்வியையும் கேட்டாள்..
“அதை ஏன் வாக்கிங் அப்போ செய்யணும்னு..” என முடிக்கும் முன்பே கலைச்செல்வி இடைபுகுந்து..
“வீட்டில நாலு சுவத்துக்குள்ள சிந்திக்கிறதை விட ஏரிக்கரையில திறந்த வெளியில
நல்லா சிந்தனை வருது..” என முடித்தாள்.
பெண்கள் இருவரும் சிரித்துக்கொள்ள, ‘ஙே’ என விழித்தபடி இருந்தார் சுந்தரவதனன்.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings