in

காவியத் தலைவன் (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்

காவியத் தலைவன் (சிறுகதை)

சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்.

வரணவாசிபாளையம்  காசிராஜன் – செண்பகவல்லி தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லை. இதனால் மிகவும் மன வேதனையுற்ற அரசர், ஒரு முனிவரின் ஆலோசனைபடி, ஈசனை வேண்டித் தவமிருந்தார்

தவத்தின் பலனாய், கைலாயத்தில் வீற்றிருக்கும் பரம்பொருளான ஈசனும் பார்வதியும் காட்சியளித்தனர்

அரசனும், அரசியும் வணங்கி வேண்ட, இறைவன் தம்பதியருக்கு  குழந்தை வரம் அருளினர்

“சுந்து வீரன், சந்திவீரன், ஆகாசவீரன், உச்சிவீரன், உரிமைவீரன், ஏமவீரன், காமவீரன் ஆகிய ஏழு வீரர்களும் சேர்ந்து உனக்கு ஒரு குழந்தையாகப் பிறக்கும்” என வரமளித்தார் ஈசன்

வரம் பெற்ற மகிழ்ச்சியில் காசிராஜன் நாட்டு மக்களுக்கு தான தர்மங்களை வாரி வழங்கினான். பத்து மாதங்கள் கடந்து காசிராஜன் மனைவி செண்பகவல்லிக்கு தெய்வீக லட்சணம் பொருந்திய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் தனது ஆஸ்தான ஜோதிடர்களான பிராமணர்களை வரவழைத்த காசிராஜன், “குழந்தை பிறந்த நேரத்தைப் பார்த்து ஜாதகத்தை எழுதி, அதன் பலன்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டார்

அதன்படி குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்களுக்கு, பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அந்தக் குழந்தையின் கிரக பலன்களின் படி, பிராமணர்களின் வம்சத்தை வேரறுக்க பிறந்துள்ளான் என்பதை அறிந்தனர். இதனால் பிராமண ஜோதிடர்கள் தங்களுக்குள் கலந்து பேசிய பிறகு மன்னரிடம் திரிக்கப்பட்ட ஒரு கதையைச் சொன்னார்கள்

“மாலை சுற்றிப் பிறந்த குழந்தையால் மன்னனுக்கு ஆகாது. கொடி சுற்றிப் பிறந்த குழந்தையால் கோட்டைக்கும் ஆகாது” என்று அவர்கள் சொல்ல, மன்னனும் அவரது மனைவியும் மனம் கலங்கிப் போனார்கள்

“என்ன செய்யலாம்” என மன்னன் அந்த ஜோதிடர்களிடமே கேட்க, அவர்களின் ஆலோசனைப்படி, குழந்தையை காட்டில் கொண்டு போய் வீசிவிட்டு வருமாறுபடி உத்தரவிட்டான். 

தவமிருந்து ஈசன் வரத்தால் பெற்ற பிள்ளையைப் பிரிய மனமில்லாமல் துடிதுடித்து அழுதாள் அரசி செண்பகவல்லி.

வீரர்கள் ஒரு தங்கத் தாம்பாளத்தில் குழந்தையை வைத்து,காட்டிலுள்ள ஒரு வீரி மரத்தின் கீழே, புற்றின் அருகே வைத்து விட்டு வந்துவிட்டனர்.

அதே வேளையில் திருச்சிராப்பள்ளி அருகே கோனேரிபட்டினம் என்ற பகுதியை, பொம்மன நாயக்கர் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.

அவரிடம் சின்னான்  என்ற வீரர், பணியாளராக வேலை செய்து வந்தார். அப்போது பொம்மன நாயக்கரின் பட்டியில் இருந்த இரண்டு மாடுகள் இறந்து போயின.

அதன் தோலை உரித்து குதிரைகளுக்கு அங்குசம், கடிவாளம் போன்றவற்றைச் செய்யச் சொல்லி பொம்மன நாயக்கர் சின்னானுக்கு உத்தரவிட்டார்.

வீட்டுக்கு வந்த சின்னான் தன் மனைவி சின்னாத்தியிடம் காட்டுக்குச் சென்று ஆவாரம் பட்டைகளை வெட்டி வருமாறு கூறினார்.

அதன் படி காட்டுக்குச் சென்ற சின்னாத்தி, ஆவாரம் பட்டைகளை சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்கும் போது, நடுக்காட்டில் ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது

“இந்த காட்ல குழந்தை அழுகுரலா”னு சுற்றும் முற்றும் பார்த்த சின்னாத்தி, அழுகுரல் கேட்ட திசை நோக்கி ஓடினாள்.

சிறிது தொலைவிலேயே, வீரி மரத்தடியில் புற்றுக்கு முன்பாக தங்கத் தாம்பாளத்தில் மின்னியது குழந்தை. குழந்தையை ஆசையோடு வாரியெடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் சின்னாத்தி

என்ன அதிசயம்! சின்னாத்தி தான் பெற்றெடுத்த குழந்தையின் உணர்வை அப்போது அடைந்தாள்.

தலையில் ஆவாரக் கட்டோடும் மடியில் குழந்தையோடும் வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்த சின்னாத்தியைக் கண்ட சின்னானுக்கு ஆச்சரியமாகிப் போனது. “ஏதடி குழந்தை?”னு மனைவியைக் கேட்க, அவள் நடந்ததை விளக்கினாள்

32 தெய்வ அங்கலட்சணங்கள் பொருந்திய அந்தக் குழந்தையை கண்டு, இருவரும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர்

சின்னானின் அப்பா பெயரான முத்துவையும், சின்னாத்தியின் அப்பா பெயரான வீரனையும் இணைத்து “முத்துவீரன்” என்று பெயர் சூட்டினர்.

ண்டுகள் கடந்தன. சிறுவன் முத்துவீரன், இளைஞனாக வளர்ந்தான். விளையாட்டு, கல்வி, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கினான்

மகாபாரத்தில் கர்ணன், “தேரோட்டி மகன்” என கூறிக் கொள்வது போல், “சின்னானின் மகன்” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்

அந்த காலகட்டத்தில், கோனேரிபட்டினத்து பொம்மன நாயக்கருக்கு ‘பொம்மி’ என்ற அழகான மகள் பிறந்து வளர்ந்து பருவமடைந்தாள். 

அரச வழக்கப்படி, பருவவயது வந்த பெண்ணை,  ஒரு நாளைக்கு ஒரு குடிசை கட்டி, 32 நாட்கள் தங்கவைத்து சடங்கு செய்து, பிறகு அரண்மனைக்கு அழைக்க வேண்டும்

அதுபடி, பருவ வயது வந்த பொம்மியை 32 நாட்கள் காட்டில், ஒரு நாளைக்கு ஒரு குடிசை என்று கட்டி அதில் தங்க வைத்து, பாதுகாப்பு அளித்து, 32 நாட்களுக்குப் பிறகு சடங்கு செய்து அரண்மனைக்கு அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது

இதற்காக சின்னான் காட்டிலே ஒரு நாளைக்கு ஒரு குடிசை கட்டி, அதில் பொம்மியை தங்க வைத்து இரவு-பகல் காவல் இருக்க நியமிக்கப்பட்டான்

மறுநாள் விடிந்ததும் அன்று தங்கிய குடிசையைக் கொளுத்திவிட வேண்டும். காவல் இருக்கும் நேரத்தில், பெண்ணின் முகத்தை பார்க்க கூடாது, குடிசைக்குள்ளும் செல்லகூடாது.

இதன்படி ஒவ்வொரு நாளும் குடிசை கட்டி அதில் பொம்மியைத் தங்க வைத்து காவலிருந்து வந்தான் சின்னான். இப்படி இருபத்தி ஒன்பது நாட்கள் கடந்து விட்டன.

முப்பதாம் நாள் இடி, மின்னலுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. அதில் நனைந்தபடி காவலிருந்த சின்னானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதைக் கண்ட மகன் முத்துவீரன், “அப்பா! இன்னும் இரண்டு நாட்கள் தானே, உங்களுக்குப் பதிலாக நான் குடிசை கட்டி காவலிருக்கிறேன்”என்று கூற, பதறிப் போனான் சின்னான்

“மகனே! வாலிப வயது பிள்ளை நீ, இளவரசியின் காவலுக்கு நீ போகக் கூடாது. மன்னருக்குத் தெரிந்தால் ஆபத்தாகிவிடும்” என மறுத்தார்

“நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களைப் போலவே கண்ணும் கருத்துமாக மன்னனின் மகளுக்கு காவலிருப்பேன்” என தந்தைக்கு உறுதி கூறிவிட்டு, பாதுகாப்பு ஆயுதம் ஏந்தி குடிசை கட்டி காவலிருக்க காட்டுக்குச் சென்றான் முத்துவீரன்

அவன் குடிசை கட்டிக் கொடுக்க, உள்ளே திரையிட்டு யார் முகத்தையும் பார்க்காமல் தங்கியிருந்தாள் பொம்மி. அன்றும்  இடி, மின்னலுடன் மழை கொட்டியது.

மழையில் நனைந்த முத்துவீரன் குடிசைக்குள் இருந்த பொம்மியிடம் தங்கிக் கொள்ள கொஞ்சம் இடம் கேட்டான்.

திரைமறைவில் இருந்த பொம்மியோ, “ஆண்கள் முகத்தையே நான் பார்க்கக் கூடாது. அப்படியிருக்க என் குடிசையில் தங்குவதா? முடியவே முடியாது” என மறுத்தாள்

பின்னர் மனமிரங்கி முத்துவீரனுக்கு குடிசைக்குள் இடமளிக்க, அவனது அழகைக் கண்டு, முத்துவீரன் மீது காதல் கொண்டாள் பொம்மி

கடைசி நாளும் முடிந்தது, சடங்குகள் செய்து மகளைக் கூட்டிவர பெரும் சேனையுடன் புறப்பட்டார் பொம்மன நாயக்கர்.

சடங்கு வைபோகம் நடக்கும் சமயம், குடிசையில் இருந்த மணிவிளக்கை முத்துவீரனிடம் கொடுக்கும் போது, ஆசையோடு அவனது கையைத் தழுவியபடி பொம்மி கொடுக்க, இந்தக் காட்சியை நாயக்கர் பார்த்து விட்டார்

பொம்மியும் முத்துவீரனும் காதல் வயப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட நாயக்கர், உடனே சின்னான் சின்னாத்தியை அழைத்து மிரட்டினார்

பயந்து போன இருவரும் முத்துவீரனை எச்சரித்தனர். ஆனால் முத்துவீரனும், பொம்மியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.

மகளுக்கு வேறு மாப்பிள்ளை தேடி மணமுடிக்கும் ஏற்பாடுகளில் பொம்மன நாயக்கர் இறங்கினார்

அப்பொழுது பொம்மி முத்துவீரனுக்கு தகவல் சொல்ல, முத்துவீரன் வாள் ஏந்தி, குதிரை மீதேறி கோட்டைக்குள் புகுந்து பொம்மியைத் தூக்கிச் சென்றான்.

கோனேரிபட்டினத்திலிருந்து தெற்கு நோக்கிப் பறந்தது அந்த குதிரை. இத்தனை காவலை மீறி தன் மகளை தூக்கி சென்ற முத்துவீரனின் தலையை கொய்து வர பக்கத்து நாட்டு அரசன் உதவியை நாடினார் பொம்மன நாயக்கர்

காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆமுர் மடுவு கருங்கல் பகுதியில் காதலர்கள் இருவரும் தங்கினர். முத்துவீரன்-பொம்மி இருவரையும் தேடிப் புறப்பட்ட பொம்மன நாயக்கர் படை, கருங்கல் பகுதியில் அவர்களைக் கண்டுபிடித்தனர்

அந்தப் படைவீரர்களோடு வாள் வீசி, மோதி அனைவரையும் வெட்டி வீழ்த்தினான் முத்துவீரன். அந்த வெற்றியோடு பொம்மியை திருமணம் செய்து கொண்டு திருச்சி நகருக்குச் சென்றான்.

அப்போது எதிர்பாராத விதமாக நகர்வலம் வந்த மன்னர் விஜயரங்க சொக்கலிங்க நாயக்கரை, கள்வர்கள் சூழ்ந்து தாக்க முற்பட்ட போது, அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த  முத்துவீரன், கண்ணிமைக்கும் நேரத்தில் வாள் வீசி அனைவரையும் வீழ்த்தினான்

அவனின் வீரத்தை கண்ட திருச்சி மன்னர் விஜயரங்க சொக்கலிங்க நாயக்கர், தனது படையில் சேர்த்துக் கொண்டார்

முறுக்கு மீசையில் வெள்ளைக்குதிரையில் முத்துவீரன் போகும் அழகு, அந்த நகர பெண்களை காதல் கொள்ள வைத்தது

அந்நிய படையெடுப்புகளில் எதிரிக்கு சிம்மசொப்பனமாக இருந்த முத்துவீரனின் வீரதீர செயல்களைக் கண்ட மன்னர், தனக்கு நம்பிக்கையான தளபதியாக நியமித்துக் கொண்டார்

துரை நகரில் சுற்றியிருக்கும் சிறு கிராமங்களின் நிலப்பரப்பு முழுவதையும் கைப்பற்றி ஆண்ட திருமலை நாயக்கரின் பெரும்படைகளை மீறி, அவரது ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அவரது நாட்டு செல்வங்களையும், குதிரைகளையும், கால்நடைகளையும் களவாடி செல்லும் ‘சங்கிலி கருப்பன்’ தலைமையிலான கள்வர் கூட்டம், திருமலை நாயக்கனுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்தது 

மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்த, யாராலும் வெல்ல முடியாத மாவீரன் சங்கிலி கருப்பனையும், அவனது கள்வர் படைகளையும்   வெற்றி பெற, விஜயரங்க சொக்கலிங்க நாயக்கரிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினார் திருமலை நாயக்கர்

அதன்படி சொக்கலிங்க நாயக்கர் தனது படைத்தளபதி முத்துவீரனை மதுரைக்கு அனுப்பி, கள்ளர்களிடம் போரிட்டு அவர்களை வெற்றி பெற்று வருமாறு கட்டளையிட்டார்

தன் மக்களுக்காக மன்னரை எதிர்த்து பொருள் களவாடும் சங்கிலி கருப்பன் கொள்கையில் நியாயம் இருந்தாலும், தனது மன்னரின் உத்தரவுபடி, தன் மனைவி பொம்மியுடன் மதுரைக்கு வந்து, திருமலை நாயக்கருக்கு உதவ அவர் படையில் சேர்ந்தான் முத்துவீரன்

திருமலை நாயக்கர் சபையில் நாட்டியக்காரியாக இருந்த வெள்ளையம்மா வீட்டில் கொள்ளை நடக்க, அதை தடுக்கச்  சென்றான் முத்துவீரன்

தக்க சமயத்தில் குதிரையில் வந்து வாள் வீசி, கள்வர்களை விரட்டி ஓடவிட்ட அவனின் வீரம், வெள்ளையம்மாளின் மனதை கவர்கிறது. அவன் மீது காதல் கொள்கிறாள்

திருமலை மன்னருக்கு வெள்ளையம்மாள் மீது காதல், அதனால் அவள் முத்துவீரனை விரும்புவது அவருக்கு தெரியவர, கோபம் கொள்கிறார் 

“பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்க வேண்டும்” என முத்துவீரனுக்கு கெடு விதிக்கிறார் நாயக்கர்

மாறுவேடத்தில் பல இடங்களில் கண்காணித்து, அழகர் மலைப்பகுதியில் ‘சங்கிலிக் கருப்பன்’ தலைமையில்  கொள்ளைக் கூட்டம் பதுங்கியிருப்பதை தெரிந்து கொண்டான் முத்துவீரன்

அவர்களை பிடிக்க திட்டம் வகுத்து,பெரும்படையுடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைத்தான் 

மலைப்பகுதியில் சங்கிலி கருப்பனின் கள்ளர் படையினர் தீரத்துடன் போரிட்டாலும், யானைப்படை, குதிரைப்படை, 5000 சிப்பாய்கள் பீரங்கி என நவீனமாகவும் வலிமையாகவும் விளங்கிய முத்துவீரனின் படையால், கள்ளர்படை பெரும் சேதத்தை சந்தித்தது

நேருக்கு நேர் பலத்த தாக்குதலில் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் சங்கிலி கருப்பன் மட்டும் தப்பினான்

குதிரைகளையும், கால்நடைகளையும் பல பொருட்களை மீட்கிறான்.

பத்து நாள் கெடு கூட முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக மன்னரிடம் ஒப்படைத்தான் முத்துவீரன்

கிட்டத்தட்ட நாலாயிரம் கொள்ளையர்களின் அட்டகாசத்தை அடக்கி, அவர்களின் தலைவன் சங்கிலி கருப்பனையும் நேருக்கு நேர் சந்தித்து கடுமையாக போர் புரிந்து வீழ்த்தி வெற்றி கொண்டான் முத்துவீரன்

முத்துவீரனின் அந்த செயலால், மதுரை நகரில் அமைதி திரும்பியது. இதனால் மகிழ்ந்த மன்னர்,  முத்துவீரனை “மதுரை வீரன்” எனச் சிறப்பித்து பெருமைப்படுத்துகிறார்.

தெற்கு சீமை எங்கும் முத்துவீரன் புகழ் பரவுகிறது. முத்துவீரனின் புகழ் மன்னருக்கு பொறாமையை உண்டாக்குகிறது.

தனக்கு வர இருந்த ஆபத்திலிருந்து தன்னை காத்த முத்துவீரனுக்கு விருந்தளிக்க எண்ணி, தனது வீட்டிற்கு அழைக்கிறாள் வெள்ளையம்மாள்.

மகிழ்ச்சியாக பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் செல்கிறான் முத்துவீரன். இந்த செய்தி மன்னருக்கு தெரியவர முத்துவீரனுக்கும், வெள்ளையம்மாளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார்.

இதனால் கோபமடைந்த அவர், முத்துவீரனையும் நாட்டியக்காரி வெள்ளையம்மாளையும் விசாரணைக்கு வர உத்தரவிட்டார். அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் முத்துவீரன் அவளை விரும்பவில்லை. குற்றச்சாட்டே உண்மையாக இருந்து விட்டுப் போகட்டும் என்று எண்ணிய நாட்டியக்காரி வெள்ளையம்மாள், மௌனமானாள்

இதையெல்லாம் கண்ட நாயக்கர், “திருமணமான ஆண் இன்னொரு பெண்ணை அடைய நினைப்பது குற்றம், அதுவும் என்னுடைய ஆட்சியில் இதை நான் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு அச்சுறுத்தல் வேண்டும். எனவே தகாத செயலைச் செய்த முத்துவீரனை மாறுகை மாறுகால் வாங்குக” என தண்டனையளித்தார்

முத்துவீரன் தரப்பு நியாயத்தை விசாரிக்க அவர் தயாராக இல்லை.

அதன்படி முத்துவீரனை கொலைக்களத்திற்கு கொண்டு போனார்கள் வீரர்கள். அங்கு முத்துவீரனின் இடது கை, வலது காலை வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த நேரத்தில் பொம்மியும், வெள்ளையம்மாளும் கதறி அழுதபடி ஓடிவந்து, முத்துவீரனின் இருபுறமும் விழுந்து புரண்டு அழுது இறந்தனர்.

(முற்றும்)

#ad

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அந்தக் காலங்களில் எம்ஜிஆர் புகழ் பெறக்காரணமாக இருந்த கதை! எல்லாக் கோயில்களிலும் அநேகமாய் மதுரை வீரன் சிலையை பொம்மி/வெள்ளையம்மளோடு பார்க்கலாம். இங்கேயும் சமயபுரத்துக்கு அருகே பழைய கண்ணனூர்க் கோயிலில் பார்க்கலாம். இந்தக் காலச் சிறுவர்கள் அறிய வேண்டிய கதையும் கூட.

கண்ணான கண்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன்

முள்முறுக்கு – 👩‍🍳 சியாமளா வெங்கட்ராமன்