2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அன்று கார்த்திகை தீபம். எல்லா வீட்டு வாசலிலும், சில வீடுகளின் மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றிலும் நடன அசைவுகளுடன் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஒளியில் மின்னிக் கொண்டிருந்த நகரத்தைக் கடந்து புறநகர் நோக்கித் தன் பைக்கைச் செலுத்திக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.
“டேய்… இந்தக் கார்த்திகைலதான் முடியலை, அடுத்த கார்த்திகையிலாவது இந்த தீபங்களை ஏத்த ஒரு மருமகளைக் கொண்டு வாடா”. அம்மா சொன்ன வார்த்தைகள் மனதினுள் வந்து போக, மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்டார்.
அப்போது அவரது கண்கள் தொலைவில் தெரிந்த அந்தக் காட்சியைக் கண்டதும் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்டார்.
தலைவிரி கோலத்துடன் ஒரு இளம்பெண் சாலையை ஒட்டிச் செல்லும் அந்த ரயில் தண்டவாளத்தில் ஓடிக் கொண்டிருந்தாள். எதிரே எக்ஸ்பிரஸ் ரயில் அவளைச் சாய்க்கும் ஆவலுடன் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது.
வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி அப்படியே தரையில் சாய்த்து விட்டு முள் பாதையின் குறுக்கே புகுந்து தண்டவாளத்தின் மீது ஏறி அவள் பின்னால் ஓடினார்.
கத்திக் கொண்டே ஓடி வரும் அவரை நின்று திரும்பிப் பார்த்த அப்பெண் தன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினாள். ஆனால் பயிற்சி பெற்ற ஓட்டக்காரரான இன்ஸ்பெக்டர் அவளை எளிதில் எட்டிப் பிடித்து தண்டவாளத்திற்கு வெளியே இழுத்தபடி விழுந்தார். அவள் சுதாரித்து எழுவதற்குள் ரயில் அவர்களைக் கடந்து மறைந்தது.
“இந்தாம்மா… தற்கொலை முயற்சிக்கு என்ன தண்டனை தெரியுமா?” விறைப்பாய்க் கேட்டார்.
“ம… புடிச்சிட்டுப் போங்க… ஏற்கனவே ஒரு தடவை உங்க ஸ்டேஷனுக்குள் நுழைஞ்ச பாவத்துக்குத்தான் தண்டவாளத்துல ஓடிக்கிட்டிருக்கேன்” என்றாள் அவள் விழிகளைப் பெரிதாக்கி,
“என்ன சொன்னே… நீ தற்கொலை பண்ணிக்கப் போனதுக்குக் காரணம்… நாங்களா? அதாவது போலீஸ்காரங்களா?”
“ஆமாம்… ஆமாம்…” என்று சொல்லி விட்டு தொடர்ந்து பேச இஷ்டமில்லாதவளாய் நடந்தவளை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர், “த பாரும்மா.. நான் கொஞ்சம் கண்டிப்பானவன்… நீ தவறில்லாதவள்ன்னா ஒழுங்கா மரியாதையா என்ன நடந்ததுன்னு விவரமாச் சொல்லு”
அவரது பேச்சில் லேசாக நம்பிக்கை வர, “என் பேரு கார்த்திகா…” அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
*********
போலீஸ் ஸ்டேஷன்.
“சார் இருட்டிடுச்சு… எங்க வீட்டுல எங்களைத் தேடுவாங்க.. நாங்க போறோம்” கார்த்திகாவும் விசாலாட்சியும் போலீஸ்காரரிடம் கேட்க,
“த பாருங்கம்மா.. இன்ஸ்பெக்டர் வந்துடறேன்னு போன் பண்ணியிருக்கார்… வந்ததும் விசாரணையை முடிச்சுட்டு உங்களை அனுப்பிடறோம்… அதான் உங்களுக்குத் துணையா ஒரு பெண் போலீஸ் இருக்காங்கல்ல அப்புறமென்ன?”
வாசலில் வந்து நின்ற சைக்கிளிலிருந்து இறங்கி வந்த தன் அண்ணனைப் பார்த்ததும் “அண்ணா… எங்களைக் காப்பாத்துண்ணா” கதறினாள் விசாலாட்சி.
“என்னம்மா நடந்தது?” பதறினான் அண்ணன்.
“அண்ணா… நாங்க வேலை பார்க்கற ஜவுளிக்கடைல கல்லாவுல இருந்த ஐயாயிரத்தக் காணோமாம்…. மொதலாளி கம்ப்ளைண்ட் குடுத்திருக்கார். அந்த சமயத்துல நாங்க ரெண்டு பேரும்தான் கடைல இருந்தோம்’ன்னும் சொல்லியிருக்கார், அதனால எங்க மேல சந்தேகப்பட்டு இங்க கூட்டிட்டு வந்திட்டாங்க” அழுது விட்டாள் விசாலாட்சி.
அந்தப் போலீஸ்காரரைத் தனியே அழைத்துச் சென்ற விசாலாட்சியின் அண்ணன் சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வர விசாலாட்சி மட்டும் அவனுடன் அனுப்பப்பட்டாள்.
மணி பத்தாகியும் இன்ஸ்பெக்டர் வராது போக கலவரமாகிப் போன கார்த்திகாவிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாய் பெண் போலீஸ், “எழுந்திரிம்மா போகலாம்… இன்ஸ்பெக்டர் வரலையாம்… இப்பத்தான் போன் வந்தது… உனக்காகத்தான் நானும் இத்தனை நேரம் இருக்க வேண்டியதாப் போச்சு” தன் ஸ்கூட்டியில் கார்த்திகாவை அவள் வீட்டிற்கே கொண்டு போய் விட்டு விட்டுச் சென்றாள் அந்தப் பெண் போலீஸ்.
“உள்ளார வராதடி சனியனே” சித்தியின் அடித் தொண்டைக் கத்தலைக் கேட்டு மிரண்டு போய் வாசல்படியிலேயே நின்றாள் கார்த்திகா. அக்கம்பக்கத்து வீடுகளின் ஜன்னல்களும் கதவுகளும் அந்தக் கத்தலில் திறந்து கொண்டன.
“சித்தி… என்ன சொல்லறீங்க?” அழுதவாறே கேட்டாள் கார்த்திகா.
“திருட்டுக் கேஸ்ல போலீஸ் ஸ்டேஷன் போனவளை வீட்டுக்குள்ளார சேர்த்துக்க நாங்க என்ன எதுவுமில்லாதவங்களா? எங்களுக்கும் மானம் மரியாதை கவுரவம் இருக்குடி” சண்டைக் கோழியாய் சீறினாள் சித்திக்காரி.
“என்ன இங்க சத்தம்?” கேட்டபடியே வெளியே வந்தார் கார்த்திகாவின் தந்தை. அப்பாவைக் கண்டதும் அவள் அழுகை இன்னும் அதிகமானது.
“அப்பா… அப்பா.. சித்தி உள்ளார வரக் கூடாதுன்னு சொல்றாங்கப்பா”
அவர் தன் மனைவியைப் பார்க்க அவள், “பின்னே?… திருட்டுக்கேஸ்ல போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டு ராத்திரி பதினோரு மணிக்கு வர்றா.. எந்த நம்பிக்கைல இவளை வீட்டுக்குள்ளார அனுமதிக்கறது?” வரம்பில்லாது பேசினாள் சித்தி.
அதைக் கேட்டு தந்தையும் அமைதியாயிருக்க நொறுங்கிப் போனாள் கார்த்திகா. “அப்பா… நான் எந்த தப்பும் செய்யலைப்பா” கதறினாள்.
தெருவே வேடிக்கை பார்த்தது.
“அது செரி… தப்பானவ ‘நான் தப்புக்காரி’ன்னு ஒத்துக்குவாளா?” கார்த்திகாவின் சித்தி கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, அனைவரும் அவள் சொல்வது ‘சரி’யென்றே தலையாட்டினார்கள்.
இதற்கு மேலும் அங்கு நின்று அவர்களோடு வாதாடிப் பிரயோஜனமில்லை என்பதைப் புரிந்து கொண்ட கார்த்திகா, தன் விதியை நொந்தபடி இருட்டில் ஓடினாள்.
எப்படியாவது அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டு, கார்த்திகாவிற்கு வந்திருக்கும் அந்த நல்ல வரனை தன் மகளுக்கு முடித்து விட வேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்த சித்திக்காரி, கிடைத்த சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி விட்ட திருப்தியில் வீட்டிற்குள் திரும்பினாள்.
“அப்பாடா… சனியன் ஒழிஞ்சது. இனி அந்த புரோக்கர் கொண்டு வந்த அந்த மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்குத்தான்…”
*****
“சொல்லுங்க சார்… இதுக்கு மேலேயும் நான் உயிர் வாழனுமா சார்? இல்ல வாழத்தான் முடியுமா? ஊருக்குள்ளார போனா என்னையப் பார்த்து காறித் துப்ப மாட்டாங்களா?” கார்த்திகா ஆவேசமாய்க் கத்தினாள்.
நீண்ட நேரம் அமைதி காத்த இன்ஸ்பெக்டர் கார்த்திக் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவராய், “உனக்கு என் மேலே நம்பிக்கை இருந்தா என் கூட வா… நிச்சயமா உனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டறேன்”
ஆரம்பத்தில் மறுத்தவள் அவர் பேசிய பேச்சில் நம்பிக்கை கொண்டு அவருடன் செல்லச் சம்மதித்தாள்.
*****
வாசலில் அமர்ந்து அணைந்து போயிருந்த தீபங்களுக்கு, எண்ணை ஊற்றி தொடர்ந்து எரிய வைத்துக் கொண்டிருந்த கார்த்திகாவின் சித்தி, மாலையும் கழுத்துமாய் வாசலில் வந்து நிற்கும் கார்த்திகாவையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்து அதிர்ந்து போய், “இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா?” என்று கத்த தெருவே கூடி விட்டது.
“ச்சே… சத்தம் போடறதைக் கொஞ்சம் நிறுத்து” தனது கம்பீரக் குரலில் இன்ஸ்பெக்டர் அதட்ட, சட்டென்று அமைதியானாள் அவள்.
“போலீஸ் ஸ்டேஷன்னா கேவலமான இடம்’னும், போலீஸ்காரங்க எல்லாருமே கெட்டவர்கள்’னும் நெனச்சிட்டிருக்கீங்களே, அதை இன்னையோட மாத்திக்கங்க. தப்பே செய்யாத இந்தப் பொண்ணு மேலே திருட்டுக் குற்றம்.. வேற வேற குற்றங்களைச் சுமத்தி அவளைத் தற்கொலை வரைக்கும் கொண்டு போயிட்டீங்க. அந்தப் பொண்ணைத் தடுத்து அவளுக்கு வாழ்வு கொடுத்த நானும் ஒரு போலீஸ்காரன்தான்… இனிமேலாவது போலீஸ்காரங்க நல்லவங்கனு தெரிஞ்சுக்கங்க” என்ற இன்ஸ்பெக்டர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி, “ஏம்ப்பா இந்தப் பொம்பளைதான் இல்லாததையும் சொல்லிட்டுத் திரியதுன்னா கேட்கற உங்களுக்கெல்லாம் கூட அறிவில்லையா?”
கூட்டத்தினர் தலை குனிந்தவாறே நகரத் துவங்கினர்.
இன்ஸ்பெக்டரும் பைக்கை ஸ்டார்ட் செய்து, “ஏறும்மா” என்று சொல்ல, பெருமையுடன் ஏறி அமர்ந்தாள் கார்த்திகா.
அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவின் சித்தி யோசித்தாள். “இந்த இன்ஸ்பெக்டர் முகம் எங்கியோ பார்த்த மாதிரியே இருக்கே”
சட்டென்று ஒரு ப்ளாஷ் அடிக்க, வேகமாகச் சென்று பெட்டியைத் திறந்து புரோக்கர் கொடுத்திருந்த ஜாதகத்தையும் போட்டோவையும் எடுத்துப் பார்த்து அதிர்ந்தாள். போட்டோவில் இருந்தது இதே இன்ஸ்பெக்டர் கார்த்திக்.
“அடப்பாவமே… இந்த மாப்பிள்ளையை எம்பொண்ணுக்கு முடிச்சுடலாம்ன்னுதான் இந்தச் சனியனையே வீட்டை விட்டுத் துரத்தினேன்… கடைசில அந்த மாப்பிள்ளை அவளுக்குக் கெடைக்கறதுக்கு நானே காரணமாயிட்டேனே” தனக்குத்தானே புலம்பினாள்.
“இன்னார்க்கு இன்னாரென்று… எழுதி வைத்தானே தேவன் அன்று” பாடல் காற்றில் மிதந்து வந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
கடைசி twist அருமை.