2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
அப்போது ஒருவர் உள்ளே வந்தார்.
“யாருங்க நீங்க? எப்டி உள்ள வந்தீங்க?”
“லேபர் டிபார்ட்மெண்ட்ல இருந்து வரோம். நீங்க யாரு?”
“நான் வாட்ச்மேன்”
“உங்க இன்சார்ஜ் எங்க?”
“கீழ இருப்பாருங்க”
“உங்க பேர் என்ன?”
“கனகராஜன்”
“எவ்வளவு நாளா இங்க வேல பார்க்கறீங்க?”
“25 வருஷமா”
“எவ்வளவு சம்பளம்?”
“அதெல்லாஞ் சொன்னா திட்டுவாங்க”
“சும்மா சொல்லுங்க, நாங்க உங்களுக்கு நல்லது செய்றதுக்கு தான் வந்திருக்கோம்”
“200 ரூபா”
“200 ரூபாயா?! எத்தன மணி நேரம் வேல பார்க்கிறீங்க?”
“நான் சும்மாதான இருக்கேன். குளிச்சிட்டு, சாப்பிட்டு வர நேரம் போக இங்கியேதான் இருப்பேன் ”
“அடக்கடவுளே 24 அவர்ஸ்! ஃபேமிலி, ரெஸ்ட், பொழுது போக்குனு எதுவுமே தேவையில்லையா?”
ஆய்வு அறிக்கையை நிரப்பி, “இதில ஒரு கையெழுத்து போட்றீங்களா?” என்றாள்.
“முதலாளிட்ட கேட்காம போட முடியாதுங்க” என்றார் அவர்.
விருந்தினர் மாளிகை அருகில் ஜீப் ஒன்று நின்றிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் தொப்பியணிந்த ஒருவர் அமர்ந்திருந்தார். இன்னொருவர் மாளிகை வாசலில் நின்றிருந்தார். குட்டை காஃபி செடிகளிலேயே பச்சையும் சிவப்புமான காஃபி பழங்கள் கொத்துக் கொத்தாய் காய்த்துக் கிடந்தன.
“எப்படி இவ்ளோ சின்ன செடியில இவ்ளோ காய்ச்சிருக்கு?” என்று கேட்டாள், ஆச்சரியம் தாங்காமல்.
“வியட்நாமிலிருந்து இறக்குமதி செஞ்சதுங்க. சீக்கிரம் காய்ச்சிடும். ரொம்ப சீக்கிரம் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும்” என்றார் அவர்.
“நீங்கதான் மேனேஜரா?”
“இல்ல. நான் ஓனரோட ஃப்ரெண்ட். நான் வந்து மூணு நாள்தான் ஆச்சு. எனக்கு எதுவும் தெரியாது”
“ம்… கேட்காமலே எதுவும் தெரியாதுங்கிறீங்க! அப்போ உங்களுக்கு நான் யாரு, எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும்? சரி… அப்போ மேனேஜர் யாரு? ”
“எனக்குத் தெரியாது”
“ஜீப்ல உட்கார்ந்திருக்றது யாரு?”
“அது டிரைவர்”
“சரி… ஓனர்க்கு கால் பண்ணுங்க”
“வெளியூருக்கு போயிருக்கிறார். கால் அட்டெண்ட் பண்ண மாட்டார்”
“ஓ!. சரி, ஓனர் பேரு, டீடெயில்ஸ் சொல்லுங்க”
“தெரியாது”
“ஓனரோட ஃப்ரெண்ட். ஆனா, எதுவும் தெரியாது. இங்க எதுவுமே சரியில்ல. இன்ஷ்ஃபெக்ஷனுக்கு ஒதுழைக்கலைனா ஒரு செக்ஷன் எக்ஸ்ட்ரா வரும்… அவ்வளவுதான்…” என்று கூறிவிட்டு,
“சரி வாங்க, நாம போகலாம்” என்று செந்திலிடமும் ஆனந்திடமும் கூறியபடியே மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.
மூவரும் நடந்து தேயிலைத் தோட்டத்திற்கருகில் வந்தனர்.
பசுமையாகவும், செழிப்பாகவும், ஒரே மாதிரி கவாத்து செய்யப்பட்டிருந்த தேயிலைச் செடிகளின் நடு நடுவே சில்வர் ஓக் மரங்களில் மிளகுக் கொடிகள் படரவிடப்பட்டிருந்தன. சில இடங்களில் ஓரங்களில் ஆரஞ்சு மரங்களில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
பனியினாலோ, வறட்சியாலோ, பூச்சிகளாலோ தேயிலைச் செடிகளில் பாதிப்பு எற்படும் சமயங்களில் அவற்றின் கிளைகளை கத்தரித்து விடுவார்களாம். இதைத்தான் கவாத்து செய்தல் என்கிறார்கள். கவாத்து செய்யும் காவல் / படை வீரர்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நிற்க வைப்பதுபோல் தேயிலைச் செடிகளின் பக்கக் கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துதல்!. மீண்டும் 90 நாட்களில் துளிர்விடும் இலைகள் செழிப்பானதாக இருக்குமாம்.
ஒரு புறம் புதிய செடிகளை நடவு செய்ய ஏதுவாக பழைய தேயிலைச் செடிகள் வேறோடு பிடுங்கிப் போடப்பட்டிருந்தன. அவற்றை தேயிலைத் தயாரிக்கும் செயல்முறையின் போது தேயிலையை உலர வைக்க எரிபொருளாக பயன்படுத்துவார்களாம்.
ஒரு ஓரத்தில் தகரக் கூடாரம் போடப்பட்டிருந்தது.
“எல ஷெட்டுங்க மேடம், ஆளுங்க பறிச்ச தேயிலைய இங்கதான் கொண்டு வந்து எடை போடுவாங்க” என்றார் செந்தில்.
உள்ளே சென்று பார்த்தனர். நைலான் சாக்குகளில் பெண்கள் பறித்துக் கொண்டு வந்த இலைகள் எடை போட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கேயும் துருப்பிடித்த எடைக்கருவிதான் இருந்தது.
“இன்சார்ஜ் யாரு? “ என்று கேட்டாள்.
”முதலாளி இப்போ தாங்க வந்துட்டு போனாரு” என்றார் அங்கிருந்த மேற்பாவையாளர்.
“இப்போவா? நாங்க ரொம்ப நேரமா இங்க உள்ளதான இருக்கோம்!”
“இப்போதான் ஜீப்ல இந்தப் பக்கமா போனாருங்க. உங்களுக்கு எதிர்ல தான் போயிருப்பாருங்க”
“என்ன ஜீப்லயா? தொப்பி போட்ருந்தவரா?”
“ஆமா”
“அடப்பாவி! டிரைவர்னு சொன்னாங்களே!”
“அது மாத்ரம் இல்லிங்க மேடம்! நம்மகிட்ட பேசினாருல்லைங்க, ஓனர் ஃபிரண்டுன்னு, அவர்தாங்க மேனேஜர். மூணு வருஷம் முன்ன நாங்க வந்தப்பவும் இப்டிதான் சொன்னாருங்க.” என்றார் செந்தில்.
“நீங்க ஏன் இத முதல்லயே சொல்லல?” என்று கேட்டாள், சற்றே கடுமை தொனிக்க.
“இவங்கள ஒண்ணும் பண்ண முடியாதுங்க, மேடம். இவங்க ரொம்ப பவர்ஃபுல்லுங்க, மேடம். யாரும் எதிர்க்க முடியாத பெரிய அரசியல் தலைவரே இந்த எஸ்டேட்ட வாங்க ட்ரை பண்ணி முடியலீங்க. இதுவர எந்த ஆஃபீஸரும் இங்க கேஸ் போட்டதில்லீங்க, மேடம். ”
“யாரும் போடலண்ணா நானும் விட்டுடணுமா? எத்தன பேரோட நலன் பாதிக்கப் பட்ருக்கு!”
“எந்த பெனிஃபிட்டும் இல்லாம, எப்டி இப்டி வேல பாக்கறீங்க?“ என்று கேட்டாள் சூப்பவைஸரிடம்.
“என்னங்க பண்றது? எங்களால இநத மலைய விட்டு கீழ இறங்க முடியாதுங்க. உப்புசம் அடிக்கும். பில்ஜினம்மா கஷ்டப்பட்டு கவர்ன்மெண்ட் வேல வாங்கி கொடுத்தவங்களே, தூரமா போட்டுட்டாங்கன்னு போகலியாமே, நாங்க போய் என்ன பண்றதுங்க?“
“உப்புசம்னா என்ன?“
“வேர்க்கறதுங்க“ என்றார் ஆனந்த்.
“பில்ஜினம்மா யாரு? “
“லண்டன்ல நர்ஸா இருந்தாங்களாம். பரங்கிப்புண்ல எங்க தொதுவ எனமே அழிஞ்சத கேள்விப்பட்டு, இந்தியாவுக்கு வந்து, நேருகிட்ட சொல்லி காப்பாத்துனாங்களாமே? ஒத்தக்கல்மந்து பேரத்தான் வைக்கணும்னு போராடினாங்களாம். அனாதையான ஒம்பது பேர தத்து எடுத்து வளத்ததுருக்காங்க. அதுல ஒன்னுதான் குமாரி, அதான் சோலைக்குயில்ல நடிக்கும்போது நடிகர் கார்த்திக் கட்டிக்கிட்ட ராகினி“.
“அது என்ன ஒத்தக்கல்மந்து?“
“எங்க மல பெருமைய கேள்விப்பட்ட அப்பத்திய மெட்ராஸ் கவர்னர் தாமஸ் மன்றோ, கோயம்புத்தூர் கலக்டர் ஜான் சல்லிவன்ட விசாரிக்கச் சொன்னாராங்க. அவரு சிறுமுகைலருந்து ரொம்ப கஷ்டப்பட்டு ரோடு போட்டுட்டு வர வழியில, பல பேரு கீழ விழுந்து செத்துட்டாங்க. மேல வந்து எங்க மக்கள் ஏற்கெனவே இங்க வாழ்ந்திட்டிருக்கறத பாத்து அசந்துட்டாருங்க. எடத்து பேரக் கேட்டதுக்கு ஒத்தக்கல்மந்துனு சொல்லிருக்காங்க. மந்துன்னா எங்க பாஷையில ஊருங்க. சல்லிவன் மன்றோகிட்ட, நீங்க சொன்ன மலைக்கு வந்துட்டேன். மேகத்த முத்தமிட்டுகிட்டு எழுதறேன். இது சுவிட்ஸர்லாந்த விட அழகாயிருக்கு. ஒட்டகமண்ட்னு பேர்னு லட்டர் எழுதிட்டாருங்க. அப்புறம் தமிழ்நாடு கவர்ன்மெண்டு உதகமண்டலம்னு மாத்தி எங்க பெருமைய மறைச்சிட்டாங்க. அதான் போராடியிருக்காங்க“.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings