in ,

கண்ணனாய் வா! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால்  புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது” என தொலைக் காட்சியில் முக்கிய செய்தியாக மீண்டும், மீண்டும் அவசர இசையுடன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.                                                          

“என்னத்தப் போட்டு ஓயாமச் சொன்னதேச் சொல்லிகிட்டு கெடக்கான். சேனல மாத்துட்டி“ என்று தன் மகளிடம் கூறுகிறாள் சங்கரன் மனைவி இசக்கி. “க்கும்…“ என்றபடி சிரித்தவாறே துள்ளியெழுந்து சேனலை மாற்றி சூப்பர் சிங்கரை வைக்கிறாள் ராணி.

உள்ளே இசை மழையும், வெளியே இயற்கையின் ஆங்கார மழையும் பொழிய ஆரம்பித்தது. இசைமழை ஓய்ந்து விட்டது. இயற்கையின் ஆங்காரம் ஓய்ந்த பாடில்லை. கரையோரங்களிலும் பள்ளமான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அல்லது அரசு முகாம்களுக்குச் செல்லுமாறு அலைபேசிகளுக்கு செய்திகள் வந்தன. மின்சாரம் துண்டிக்கப் பட்டது.

“அப்பா பொயலு பெருசா வரப் போவுதாம்பா. பாதுகாப்பான எடத்துக்கு போவச் சொல்லி கவர்மெண்ட்லருந்து மெசேஜ் போட்ருக்காம்பா“ என்றாள் ராணி.

“அவனுவளுக்கு என்ன வேல? ச்சும்மா ப்பயமுறுத்துவானுவ. நம்ம வூடு மேட்லதான இருக்கு. நமக்கென்ன ப்பயம்? இருக்க அரிசிய காச்சி குடிச்சிபுட்டு மழ வுடுதவரைக்கும் வூட்டுக்குள்ள கெடக்க வேண்டியதான்“ என்றான் சங்கரன்.

தொலைதொடர்புகள் துண்டிக்கப் பட்டன. மழையின் வேகம் குறைந்தபாடில்லை. அருகாமையிலிருந்த மாமன் வீட்டார் படுக்கையையும், துணிமணியையும் சுமந்து கொண்டு இவர்கள் வீட்டுக்கு வந்தனர்.       

ஏ… என்ன மாமா?“ 

“என்னத்த ல ச்சொல்ல? எங்க வூட்டுக்குள்ள தண்ணி வந்துட்டு ல“.  

“வூட்டுக்குள்ள வந்துட்டா?“   

“ஆம ல. நாங்களும் சாக்கு மூட்டயெல்லாம் போட்டு தடுத்துப் பாத்தோம், தண்ணியக் கோரி வெளிய ஊத்திப் பாத்தோம். ஒண்ணும் நடக்கல ல. கடகடன்னு தண்ணி உள்ள வந்துட்டு. நீ தான ஒசரத்துல வூடு கெட்டிருக்க. அதான் ராத்திரிக்கு இங்கன கெடந்துட்டு காலைல பாப்போமுன்னுட்டு வந்துட்டோம்“. 

விடிய விடிய அடாது மழை விடாது கொட்டியது .பாபநாசம், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அனைத்து அணைகளும் அதிகபட்ச கொள்ளளவை எட்ட, வேறு வழியில்லாமல் சிறிது சிறிதாக தண்ணீர் திறந்து விடப்பட, இவர்கள் வீட்டுக்குள்ளும் மழை நீர் உள்நுழைய, பதற்றம் அதிகரித்தது.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த இவனது தாயாரையும் தூக்கிக் கொண்டு மாடியில் ஏறி இருந்தனர். நல்ல வேளை யாக ஊருக்குள் இருப்பவர்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு படையினர் படகுகளோடு வர, பெண்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதல் படகில் ஏற்றிவிட்டு, சங்கரன் அடுத்த படகில் ஏறினான்.

பின்னால் திரும்பிப் பார்த்தால் வீடு சடசடவென இடிந்து விழுந்து கொண்டிருந்தது. அதிர்ந்து, ஐயோவென தலையிலடித்துக் கொண்டு, படகைத் திருப்பச் சொல்ல, “ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப் போறாங்க. ஆற்றங்கரையோரம் இருக்கிறவங்கள உடனடியாக மீட்க கலெக்டர் உத்தரவு போட்ருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, நாம எல்லாருமே செத்ருவோம். உயிரோட இருந்தா மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். கொஞ்சம் அமைதியா இருங்க“ என்று சொல்லி விட்டனர்.

ஊரைத்தாண்டி தோப்புகளுக்கருகில் படகு செல்கையில் வெள்ளம் மேலும் பெரிதாக அடித்துக் கொண்டு வர, படகு சுழலில் மாட்டி, சுழன்று குப்புறக் கவிழ்ந்தது. சங்கரன் வேகமாக நீரோட்டத்திற் கெதிராய் நீந்த முயல, தென்னந் தோப்பில் தேங்காய் உரிக்க வைத்திருந்த இரும்புக் கருவி நீரோட்டத்தில் வேகமாக  அடித்து வரப்பட்டு  இவனுடைய நெஞ்சில் செருகியது.

“அம்மா“ என அலறிக் கொண்டு நீரில் மூழ்க எத்தனிக்க, மீட்புப் படையினர், படகைத் திருப்பிக் கொண்டு வந்து, இவனை மீட்டனர். நெஞ்சில் சடாரென அடித்தது போல் உணர்ந்தாலும், தண்ணீருக்கு வெளியே வரவும் தான் முழுமையான வலி தெரிந்தது. அந்தக் கருவி, அப்படியே செருகி நின்றிருந்தது. மீட்புப் படையினர் முதலுதவி செய்தனர். உடல் வெடவடவென நடுங்கியது, வியர்த்துக் கொட்டியது, உணர்விழந்தது. 

வெள்ளம் வடிந்து சூழ்நிலை சரியான பின் உறவினர் வீட்டில் அமர்ந்து செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தனர், சங்கரன் குடும்பத்தினர். நெஞ்சில் கட்டுடன் சோர்வாக, காலை நீட்டிக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து கிடந்தான் சங்கரன். 

“ … வ்வளவு பெரிய வெள்ளத்துக்குக் காரணம் மணற்கொள்ளை என்றே கருத வேண்டியுள்ளது.  நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் குவிந்துள்ள செங்கல் சூளைகளுக்காக குறுமணல் எனப்படும் சவட்டு மண் ஆற்றின் கரைகளைச் சேதப்படுத்தி அதிகளவில் அள்ளப்படுகிறது. எரிபொருளுக்காக ஆற்றின் கரைகளிலுள்ள மரங்களும் அதிகளவில் வெட்டப்படுவதால் மண்ணரிப்பும் ஏற்பட்டு வெள்ளம் வரக் காரணமாகிறது.  கட்டுமானப் பணிகளுக்காகவும், மிக அதிக அளவில் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.

ஆற்று மணலிலுள்ள ஃபைடோப்ளாங்டன்களும், ஜூப்ளாங்டன்களும் நீரிலுள்ள அழுகிய, மட்கிய பொருட்களை உட்கொள்ளுவதால் சூழ்நிலை மண்டலத்தைச் சுத்தம் செய்கின்றன. தண்ணீரின் ஹைட்ரஜன் செறிவைக் கட்டுப் படுத்துவதன் மூலம் நீரின் அமில, கார தன்மையை சீர்படுத்துகின்றன.  வளி மண்டலத்திலுள்ள கார்பன் சுழற்சியை நிலை நிறுத்துவதிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆற்று மணல் இயற்கை வடிகட்டியாகயும், இயற்கை நீர்தேக்கமாகவும் செயல்பட்டு நன்னீரை நிலத்தடி நீராக சேமிக்கிறது. மூன்றடி மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் நாற்பதடி வரை மணல் தோண்டப் படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டுக்கும், விவசாயம் அழியவும் காரணமாகிறது. கட்டுமானத்திற்கு, மணலுக்கு மாற்றாக அதைவிட வலிமை தரக்கூடிய தாமிர கசடுகள், இரும்பு வெடிப்பு உலைக் கசடு, குவாரி தூசுக்கள், அனல்மின் உலை சாம்பல், எம்-சான்ட், கட்டுமானக் கழிவுகளை மறு சுழற்சி செய்தல் போன்றவை ஏராளமாக உள்ளன.கடற்கரையோர தாது மணல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, கொரியா, அரேபியா, ஜெர்மனி, நியூஸிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதால் கடல்நீர் உட்புகுதலும், சுனாமியும், புயல் தாக்கமும் ஏற்படுகின்றன.நமக்கு சுவாசம் தரும் மரங்களை அழித்தும், இயற்கையைப் பாதுகாத்து, நமது உயிர் காக்கும் ஆற்று மணலை கொள்ளையடித்தும், பணம் சம்பாதிக்க முனைவது, தாயின் மடியை அறுத்து பால்குடிப்பது போன்றதும், கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போன்றதும், செவியை விற்று இசை வாங்குவது போன்றதும், உயிரை விற்று உணவை வாங்குவது போன்றதும், நமது சந்ததிகளின் கருவறையை நாமே கிழிப்பது போன்றதும் ஆகும்.

அன்று பாஞ்சாலியின் துகில் உரியப்பட்ட போது, மானம் காக்க கண்ணன் வந்தான். பூமிதாயின் துகில் உரியப் படாமல் காக்க ஊர்மக்கள், உள்ளாட்சி அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள் ஒன்று கூட வேண்டும், அவர்களை சிறைப்படுத்தி, உரிய சாட்சி, ஆதாரங் களுடன் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். செய்தி, தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களுடன் கைகோர்க்க வேண்டும்“. 

ன்று:

“ஏலேய் சங்கரா! இன்னைக்கு நம்ம சேம்பருக்கு சவட்டு மண் அள்ள வேண்டாமுல. கேரளாவுலருந்து ஒரு பார்ட்டி பேசுனான். யூனிட்டுக்கு பதிமூணாயிரம் தரேங்காமுல. நம்ம லாரிவள பூராம் அங்கிட்டு திருப்பி விடு. வாடகைக்கும் எட்சா பத்து லாரி ஏற்பாடு பண்ணியிருக்கேன். சேத்துக்கோ. அம்பதாயிரம் கடன் கேட்டில்ல? போய்ட்டு வந்து வாங்கிக்க“ என்றார் அவன் வேலை செய்யும் செங்கல் சூளை முதலாளி. இரவில் ஆற்றின்  கரைகளை உடைத்துக் கொண்டு சரக்குந்துகளை (லாரி) உள்ளிறக்கினான். நடு ஆற்றுப் பகுதியில் வேகவேகமாக ஈர மணல் தோண்டியெடுத்து சரக்குந்துகளில் ஏற்றப்பட்டது.  வண்டியை தாசில்தார் மடக்கிப் பிடிக்க, முதலாளிக்கு ஃபோன் செய்தான்.

“போட்ருல. அம்பதாயிரத்த கடனா இல்ல. எனாமா வாங்கிக்க. திருப்பித் தரவேண்டாம்“ என்றார் அவர்.

தாசில்தாரை ஜீப்போடு எரித்தான்.                                                  

வனது தாயின் உருவில் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. சங்கரன் புடவையை உரிகிறான், கதறுகிறாள். கண்ணனாய் காப்பாற்ற தாசில்தார் வருகிறார்.கழுத்தறுத்து போட்டுவிட்டு, மீண்டும் உருவுகிறான். ஆற்றுத் தாய் ஆங்காரமெடுத்து, தேங்காய் உரிக்கும் கருவி கொண்டு இவன் நெஞ்சில் செருகுகிறாள்.

ங்கரன் நெஞ்சைப் பிடிக்கிறான். மூச்சு திணறுகிறது. வியர்த்துக் கொட்டுகிறது.  கண்கள் மேல்நோக்கி நிலைகுத்துகின்றன. ராணி, “அப்பா…“ என அலறும் சத்தம் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் கேட்டு காற்றில் கரைகிறது.

எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 18) – ஜெயலக்ஷ்மி

    அவங்கள வாழ வைக்கத்தானே எல்லாம்! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி