எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அடுத்த வாரத்தில் கைபேசி தினம் வருகிறது. அதற்காக நம்முடைய மாவட்டத்தில் ஒரு போட்டி வைத்திருக்கின்றார்கள். அந்தப் போட்டியில் பள்ளி மாணவிகள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உங்களுக்கான தலைப்பு கைபேசி. இதைப் பற்றிய கதையோ கவிதையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கலந்து கொள்கிறவர்கள் மட்டும் உங்களுடைய பெயரை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்றார் நளினி ஆசிரியை.
குமார் என்ற மாணவன் எழுந்து டீச்சர் நான் ஒரு கதையாக எழுதிக் கொண்டு வரட்டுமா எனக் கேட்க
எழுதிக் கொண்டு வா என அன்புடன் சொன்னார் நளினி ஆசிரியை.
செல்வி என்ற மாணவி எழுந்து கைபேசி எங்கள் வீட்டில் இல்லை. எப்படி எழுதுவது எனக் கேட்க
கைபேசியை பற்றி உனக்கு என்ன தெரியுமோ அதை பற்றி எழுது என்றார் ஆசிரியை.
வேற எதுவும் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன் என ஆசிரியை கேட்க, மாணவ மாணவிகள் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். பள்ளியில் மணி அடித்ததும் அவரவர் வீட்டுக்கு செல்வதற்கு கிளம்ப தயாரானார்கள்.
மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல விதத்தில் யோசனை செய்து கைப்பேசியின் நன்மைகள், தீமைகள், கதை, கவிதை என அடுத்த நாளே தன் மனதில் உள்ளதை அழகாக எழுதிக் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு மாணவ மாணவியின் எழுத்துக்களை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியப்பட்டு தான் போனார் நளினி ஆசிரியை.
அதிலும் குறிப்பாக சுமதி என்ற மாணவி கைபேசி இருப்பதினால் தன்னுடைய குடும்பத்தில் அம்மா, அப்பா அக்கா இவர்களின் அன்பை இழந்து விட்டேன், கைபேசியாக இருந்திருக்கலாமோ என எழுதியதை படிக்கும் போது ஆசிரியைக்கு கண்ணில் கண்ணீர் வடிந்தது.
சுமதி என்ற மாணவி வசதியான பணக்கார வீட்டு பெண். பள்ளிக்கு காரில் தான் வந்து விட்டுப் போவாள். வீட்டில் அனைத்துக்கும் வேலையாட்கள். ஓஹோ என்று படிக்கா விட்டாலும் சுமாராக படிப்பாள் சுமதி. மனதில் இவ்வளவு பெரிய பாரத்தை வைத்திருக்கும் போது சுமதியால் எப்படி படிக்க முடியும் என மனதுக்குள் கவலையுடன் அமர்ந்திருந்தார் ஆசிரியை.
மதிய உணவுக்காக பள்ளி மணியடித்ததும் உணவை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் மாணவ மாணவிகள். அப்போது நளினி ஆசிரியை சுமதியை சாப்பிட்டு முடித்து என்னுடைய அறையில் வந்து என்னை பார் என சொல்லிவிட்டு சென்றார்.
சுமதியும் ஆசிரியை நம்மை எதுக்காக கூப்பிடுகிறார் என யோசனை செய்து கொண்டே அவசர அவசரமாக சாப்பிட்டு ஆசிரியையின் அறைக்கு சென்றாள் சுமதி.
சுமதியை பார்த்த ஆசிரியை அருகில் கூப்பிட்டு அமர வைத்து நீ எழுதிய கைபேசி கட்டுரையை படித்தேன். என்னம்மா பிரச்சனை உனக்கு? என்று கேட்க சுமதி கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது.
வசதி வாய்ப்புகள் இருந்தும் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து அன்பு என்பது கிடைக்கவில்லை டீச்சர். சாயங்காலம் பள்ளி விட்டு வீட்டுக்கு சென்றால் பள்ளியில் என்ன நடந்தது? மதிய சாப்பாடு சாப்பிட்டியா? தேர்வு ஒழுங்காக எழுதினியா என என்னுடைய அம்மா அப்பா இருவருமே என்னை எதுவும் கேட்பது கிடையாது டீச்சர். வேலை செய்கிறவர்கள் தான் எனக்கு பால் கொண்டு வந்து கொடுப்பது சாப்பிடுவதற்கு ஏதாவது எடுத்து வந்து கொடுப்பது என அவர்கள் தான் செய்கிறார்கள்.
எனக்கு என்ன பிடிக்கும் என்பது கூட எங்க அம்மாவுக்கு தெரியாது. காரணம் இந்த கைபேசி தான். கைபேசியாக இருந்தால் கூட பரவாயில்லை அவர்கள் என்னை விட்டு பிரியாமல் இருப்பார்கள், என்னை எப்போதும் அனைத்து கொண்டே இருப்பார்கள் தானே என சுமதி மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய நளினி ஆசிரியையிடம் சொல்ல
கவலைப்படாதே சுமதி, விரைவில் அனைத்தும் சரியாகிவிடும். நீ கவலைப்படாமல் படிப்பில் கவனம் செலுத்து எனக்கூறி சுமதியை வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.
தன்னுடைய கைபேசியில் இருந்து சுமதியின் அம்மாவுக்கு அழைப்பு கொடுக்க உடனே எடுத்துப் பேசினார் சுமதியின் அம்மா.
சுமதி தன்னிடம் பேசியதை அனைத்தும் சுமதியின் அம்மாவிடம் சொல்லிவிட்டு இப்படியே போனால் சுமதி மன அழுத்தத்துக்கு ஆளாகி விடுவாள். அவளுக்கு 10 வயது தான் ஆகிறது. மிகவும் சின்ன பொண்ணு. அவளை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அவளுடைய ஏக்கம் அனைத்தும் நீங்கள் சுமதியை கண்டு கொள்வதில்லை, கைபேசி மட்டும் தான் அவர்களுக்கு தேவை என சொல்வதால் நீங்கள் சுமதி வீட்டுக்கு வந்தவுடன் அவளுடன் மனம் விட்டு பேசுங்கள் என சொன்னார் ஆசிரியை நளினி.
அச்சோ! இவ்வளவு ஏக்கங்களை வைத்துக் கொண்டிருக்கிறாளே, நானும் எதுவும் தெரியாமல் இருந்து விட்டேனே, எனக்கு பணம் காசு முக்கியம் இல்லை, எனக்கு குழந்தை தான் முக்கியம். இனிமேல் நான் கவனமாக என்னுடைய குழந்தை சுமதியை பார்த்துக் கொள்கிறேன் டீச்சர். மிகவும் நன்றி என சொன்னதும், நளினி ஆசிரியை மிகவும் சந்தோஷமாக தன்னுடைய வகுப்புக்கு செல்ல தயாரானாள்.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings