in ,

கல்லும் கடவுளும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலையிலிருந்தே  பர்வதம் மாமி மிகவும் பதட்டமாக இருந்தாள். சும்மாவே ஆடுவாள், இன்றோ காலில் சலங்கைக் கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள். காரணம் அந்த கிராமத்திலேயே மிகவும் பணக்கார மிராசுதாரர், அந்த வீட்டு தண்டச்சோற்றை  அவர்கள் மகனுக்குப் பெண் பார்க்க வரப்போவது தான்.

தண்டச்சோறு என்பது அந்த வீட்டில் உள்ள அவள் நாத்தனார் பெண் தான். அவளுடைய அம்மா, அப்பா குழந்தையில் அவளுக்கு ஆசையாக வைத்த பெயர் உமா மகேஸ்வரி. இருவருமே உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக கௌரவமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவளுடைய போறாத நேரம் உமாவின் பெற்றோர், அவளுடைய மூன்று வயதிலேயே, ஒரு பஸ் ஆக்ஸிடென்டில் ஒன்றாகத் தவறிவிட்டதால், அவள் பெயர் அன்றே, சனியன், விடியாமூஞ்சி, துக்கிரி என்று மாற்றி விட்டாள் பர்வதம். கெஸட்டில் தான் பதிவு செய்யப்படவில்லை.

உமாவின் அம்மாவும் அப்பாவும் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், ஏதாவது ஒரு மலை வாசஸ்தலம் போவது வழக்கம். அப்படித்தான் அந்த வருடமும் மூன்று வயதான குழந்தை உமாவுடன், சொகுசு பஸ்ஸில் கொடைக்கானல் சென்றனர்.  அங்கிருந்து திரும்பும் போதுதான் பயங்கர மழையால் நிலச்சரிவில் அவர்கள் வந்த பஸ் கவிழ்ந்து நிறைய மக்கள் இறந்து விட்டனர். அதில் உமாவின் அம்மாவும், அப்பாவும் அந்த இடத்திலேயே இறந்துவிட குழந்தை உமா மட்டும் பஸ் நிர்வாகத்தினராலும், அரசாங்கத்தாலும் காப்பாற்றப்பட்டு அவளுடைய தாய்மாமனான பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

பர்வதம் முதலில் அந்த குழந்தயை தன் மூன்று மகன்களுடன் சேர்த்து வளர்க்க ஒத்துக் கொள்ளவில்லை.  ஆனால் உமாவின் அப்பா பெயரில் உள்ள இருபது ஏக்கர் நன்செய் நிலமும், பதினைந்து ஏக்கர் புன்செய் நிலமும் ஏரிக்கரை பாய்ச்சலில் அதில் விளையும் பொருட்களையும் பற்றி பர்வதத்திற்கு விவரித்தார் பாஸ்கர்.

அதிலிருந்து வரும் பொருட்கள் உமாவின் செலவிற்கு மட்டும் அல்லாமல் அந்தக் குடும்பத்தின் செலவையே தாங்கிக் கொள்ளும். அதுவும் இல்லாமல் உமாவின் பெற்றோர் ஆபீஸ் லோன் போட்டு கட்டிய வீட்டில் இருந்து வரும் வாடகைத் தொகையைப் பற்றியும் கூற, பர்வதம் வாயை மூடிக் கொண்டாள்.

ஆனாலும், அந்த கிராமத்தில் போய் யார் விவசாயம் செய்ய முடியும், அதனால் அந்த நிலங்களை விற்று வரும் பணத்தை வங்கியில் போட்டு ஆட்டையைப் போட்டு விடலாம் என்று மனப்பால் குடித்தாள். அந்த நிலங்களை விற்க வேண்டுமென்று கணவனை வற்புறுத்தினாள், ஆனால் அது மைனர் பிராப்பர்ட்டி என்றும், அதில் கை வைக்கக் கூடாது, அதில் விளையாடினால் ஜெயிலில் களிதான் சாப்பிட  முடியும் என்றும்  பயமுறுத்தினார் பாஸ்கர்.

என்னதான் பணவரவு தலைக்கு மேல் இருந்தாலும், உமாவைப் படிக்க வைத்தது என்னவோ கார்ப்பரேஷன் பள்ளியில் தான். மேற்படிப்பும் தமிழக அரசின் ஆர்ட்ஸ் அண்ட் சையன்ஸ் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் தான்.

அதற்கே அவள் மாமி, “போதும் படித்துக் கிழித்தது, எங்காவது வாத்திச்சி வேலை தேடிக்கொள்” என்று உறுமினாள்.

வீட்டில் யார் மேல் கோபம் வந்தாலும் அது உமாவின் மேல் தான் வெடிக்கும். பர்வதத்தின் மூன்று பிள்ளைகளும் உமாவிடம் ஒரு தங்கையைப் போல் தான் பழகுவார்கள். உமாவும் அவர்கள் சொல்லும் வேலைகள் எல்லாம் செயவாள். ஆனால், அண்ணன்கள் தானே என்று நினைத்து அதிசயமாக்க் கொஞ்சம் சிரித்துப் பேசி விட்டால் போச்சு.

அதோடு ஊரில் உலகத்தில் உள்ள எல்லா கெட்ட பாஷைகளும் அவள் வாயில் மிக சுலபமாக வரும். “என் மகனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டு, இந்த வீட்டிலேயே இருந்து விடலாமென்று பார்க்கிறாயா?” என்று கரித்துக் கொட்டுவாள். அதனால் உமாவும் சிரிக்க மறந்து பல மாதங்களாயின.

அடுத்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் ஒரு இடைநிலைப் பள்ளியில் அவளுக்கு தமிழ் ஆசிரியையாக வேலை கிடைத்து சேர்ந்தும் விட்டாள். அந்த ஊருக்குப் போக வேண்டுமென்றால், பஸ்ஸில் தான் போக வேண்டும்.

அப்படி பஸ் ஸ்டேண்டில் நின்றுக் கொண்டிருக்கும் போது தான் அந்த மிராசுதாரர் மகன் அஷோக், உமாவைப் பார்த்திருப்பான் போல் இருக்கிறது. அஷோக் அவளைத் தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான். ஒரு வழியாகப் பிடிவாதம் பிடித்து பெற்றோரையும் பெண் பார்க்க சம்மதிக்க வைத்து விட்டான்.

பெரிய சொத்துக்கு ஒரே பிள்ளை என்பதனால் கெட்ட பழக்கங்களும் நிறைய இருக்கும் போல் இருக்கிறது. படிப்பு மட்டும் மெக்கானிக்கல் எஞ்ஜினீயரிங் டிகிரி முடித்திருக்கிறான் என்று சொன்னார்கள்.

ஒரே பிள்ளையானதால் அவனை வெளியூருக்கு வேலைக்கெல்லாம் அனுப்ப மறுத்து விட்டனர் பெற்றோர். பட்டணம் போனால் பிள்ளை கெட்டு விடுவானாம். எல்லா வழியிலும் தான் கெட்டாயிற்றே, புதிதாகக் கெட்டுப் போக என்ன இருக்கிறது. இவனால் பட்டணம் கெட்டுப் போகாமல் இருந்தால் சரி என்று உமா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அந்த அஷோக்கிற்காகத் தான் அன்று அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உமாவிற்கு ஒன்றும் விருப்பமும் இல்லை, வெறுப்பும் இல்லை. அவளுடைய மாமா பிள்ளைகளுக்கும் அவனைப் பற்றி ஒன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லை.

“நீ என்னம்மா சொல்கிறாய்?” என்று கேட்டார் மாமா.

“அவளை என்ன கேட்பது? கோடி கோடியாய் சீர் செய்து வைரங்களாக பூட்டி அனுப்பப் போறோமா? இந்த தரித்திரம் பெற்றவர்களையே முழுங்கி விட்டது, அங்கே போய் யார் யாருக்கு என்ன ஆகுமோ? நானே இந்த சனியன் என்னை விட்டுப் போனால் போதும் என்று நினைக்கிறேன். பிள்ளை வீட்டாரும் எந்தவிதமான வரதட்சிணையும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆகவே இந்தத் திருமணம் முடியும் வரை யாரும் வாயைத் திறக்கக் கூடாது” என்று கட்டளையிட்டாள் மாமி. மாமியின் வார்த்தைக்கு மறுவார்த்தை ஏது?

அஷோக் வீட்டிலிருந்தும் வந்து பெண் பார்த்து, அப்போதே பிடித்து விட்டது என்றும் சம்மதம் தெரிவித்து ஒப்புத்தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின்னர் நல்ல நாள் பார்த்து, மாப்பிள்ளை வீட்டாருக்கு சொந்தமான கல்யாண மண்டபத்திலேயே நிச்சய தாம்பூலமும் திருமணமும் பெரிய அளவில் செய்து விடலாம் என்று பேசி முடித்து விட்டார்கள்.

உமா மட்டும் ஆங்கிலத்தில் ஒரு பழமொழியை அதாவது, ‘ப்ரம் பிரையிங் பேன் டு பையர்’ என்று நினைத்துக் கொண்டாள்.

நிச்சயதார்த்தமே திருமணம் மாதிரி நடந்தது. அவர்கள் வாங்கிய ஆடை ஆபரணங்களும் நகைகளும் உமாவிற்கு பயம் தான் கொடுத்தது. கல்யாணமோ கேட்கவே வேண்டாம், ஏதோ ஒரு மஹாராஜா வீட்டுத் திருமணம் போல் நடந்தது.

பணமும் நகையும் கொடுத்து ஒரு பெண்ணை விலைக்கு வாங்கியது போலவே இருந்தது. பர்வதத்திற்கோ ‘இந்த தரித்திரத்திற்கா இப்படி ஒரு செல்வாக்கு’ என்று உள்ளுக்குள் வயிற்றெறிச்சலாக இருந்தது.

திருமணத்திற்கு சில நாட்கள் முன் ஒரு நாள் திடீரென்று அஷோக் வீட்டிற்கு வந்தான்.

“மாமா, நான் உமாவைக் கொஞ்சம் வெளியில் அழைத்துச் செல்ல விரும்புகிறேன் அனுப்புவீர்களா?” என்று கேட்டான்.

“இன்னும் சில நாட்களில் திருமணம், அதற்குள் என்ன மாப்பிள்ளை அவசரம்?” என்றார்.

“நிச்சயதார்த்தம் முடிந்தாலே பாதி திருமணம் முடிந்தாற் போல். நீங்கள் அழைத்துப் போங்கள் மாப்பிள்ளை, ஆனால் சீக்கிரம் திரும்பிவிடுங்கள்” என்று உத்தரவு கொடுத்தாள் மாமி.

அவர்கள் வீட்டில் இருக்கும் கார்களில் சிறிய காரை எடுத்து வந்தான். அந்த ஊர்களிலே உள்ள தெருக்களில் சிறிய கார்கள் தான் போக முடியும். அன்று தான் உமா அவனை நன்றாகப் பார்த்தாள்.

நிச்சயதார்த்தத்தின் போது கூட அவன் முகம் முழுவதும் தாடியும், மீசையுமாகத் திருடன் போல் இருந்தான். கிட்டத் தட்ட ரௌடி போல் தான் இருந்தான்.

சில சமயங்களில் உமா பஸ்ஸில் போகும் போது ஒயின் ஷாப் வாசலில் கூட அவனைப் பார்த்திருக்கிறாள். ‘அப்போது கூட மீசையும் தாடியுமாகக் கரடி போல் தான் இருந்தான். இப்போதும் அப்படியே தான் இருக்கிறான். இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. சிகரெட் நாற்றம் வேறு . குடி , சிகரெட் பழக்கம் இருக்கிறது. வேறு என்னென்ன பழக்கங்கள் இருக்கிறதோ தெரியவில்லை’ என்று நினைத்துக் கொண்டாள்.

இவளைத் திரும்பிப் பார்த்த அஷோக், “என்ன யோசனை பலமாக இருக்கிறது?” என்றான் லேசாக சிரித்துக் கொண்டு.

‘ஒன்றுமில்லை’ என்பது போல் லேசாகத் தலையாட்டினாள்.

“முதன் முதலில் உன்னைப் பார்த்தவுடன், உன்னைப் போல் ஒரு பெண் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். வீட்டில் என் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவோ, உன்னைப் பார்த்தவுடன், நீ மட்டும் தான் அவர்களின் மருமகளாக வேண்டும் என்று  உறுதியாக சொன்னார்கள். பிறகு தான் உங்கள் மாமாவிடம் திருமணம் பற்றிப் பேசினோம்” என்றான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஏதும் பேசாமல் அமைதியாகத் தலைகுனிந்து உட்காரந்திருந்தாள்.

“உமா நீ தமிழ் ஆசிரியை தானே, ஏதும் பேசாமல் அமைதியாக இருக்கிறாய். முதன் முதலில் என்னைப் பார்த்தவுடன் உனக்கும் ஏதாவது தோன்றியதா சொல்” என்றான்.

கொஞ்சமும் யோசிக்காமல், “பயம் தான் வந்தது” என்றவள், பயத்துடனே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஸாரி, யோசிக்காமல் சொல்லி விட்டேன்” என்றாள். பயத்தால் அவள் இமைகள் படபடக்க அவனையே உறுத்துப் பார்த்தாள், அவனோ கடகடவென்று சிரித்தான்.

“மனதில் ஒன்றுமில்லாதவர்கள் இப்படித்தான் யோசிக்காமல் பேசுவார்கள். உனக்கு ஏன் என்னைப் பார்த்து பயம் வந்தது? பயப்படாமல் சொல். கணவனிடம் மனைவிக்கு எப்போதும் பயம் இருக்கக் கூடாது” என்றான்.

அவனையே சிறிது நேரம் பார்த்தவள், “முகமே தெரியாமல் மொத்தமாக மூடியிருக்கும் தாடியும் மீசையும் பார்த்தால், டெரரிஸ்ட் மாதிரி இருந்தது. ஆனால் இப்போது இது தான் நாகரிகம் போல் இருக்கிறது. ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றாள்  மெதுவாக.

“இதில் தவறு ஒன்றமில்லை” என்றவன், ஒரு கையால் ஸ்டியரிங் வீலைப் பற்றிக் கொண்டு, ஒரு கையால் சிகரெட் பற்ற வைத்தான்.

உமா அதன் நாற்றம் பிடிக்காமல் முகம் சுளித்தாள். அதை கவனித்த அஷோக், வாயிலிருந்த சிகரெட்டைத் தூக்கி வெளியில் எரிந்தான்.  அவளை ஒரு நல்ல ஹோட்டலிற்கு அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்த டிபனும் ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுத்தான்.

குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணமும் நடந்தது. பர்வதம் மாமிக்குத் தான் திட்டுவதற்கு ஆள் இல்லாமல் போனது. திருமணத்திற்குப் பிறகும் உமா, கணவன் வீட்டிலும் யாருடனும் அதிகமாக நெருங்கிப் பழகாமல் கொஞ்சம் அமைதியாகவே இருந்தாள். ஆசிரியர் வேலையையும் விடவில்லை.

ஒரு நாள் அஷோக்  உமாவிடம், “உமா, உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டான்.

இப்போது அவன் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. தாடி மீசையெல்லாம் எடுத்து விட்டு பார்க்கவே சுத்தமாகவும் அழகாகவும் தெரிந்தான். உமாவிற்குப் பிடிக்காது என்பதனால் குடி, சிகரெட் எல்லாம் கட்.

முகம் சிவக்க, “மிகவும்” என்றாள் சிரிப்புடன்.

“அவ்வளவு கெட்ட பழக்கங்களுடன் இருந்த என்னை, வெறுக்காமல் வேண்டாம் என்று சொல்லாமல் எப்படி ஏற்றுக் கொண்டாய்?” என்றான் அவள் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு.

“நான் அதிகம் வற்புறுத்தாமல், சிகரட் நாற்றம் எனக்குப் பிடிக்காதென்று முகம் சுளித்ததைப் பார்த்து விட்டு விட்டீர்கள். அதே மாதிரி தான் இந்தக் குடிப்பழக்கத்தையும் விட்டீர்கள். அது எப்படி உங்களால் முடிந்தது?” என்றாள் அவனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டு.

“உன்னிடம் எனக்கிருந்த அன்பினால் தான்” என்றான் அஷோக்.

“அன்பிற்கு மட்டும் தான் இந்த அதிசய சக்தி இருக்கிறதென்று எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பினேன்.  சிலர் வெறும் கல் என்று சொல்கிறார்கள், அதற்கே விபூதி குங்குமம் எல்லாம் வைத்து நாம் கடவுள் என்று வணங்கவில்லையா? தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலை தான். உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் பாடவில்லையா? அப்படித்தான் எல்லாம். என் மாமி என்னை சனியன், துக்கிரி என்று கண்டபடி பேர் வைதார்கள். ஆனால் இங்கே அத்தையும் நீங்களும் என்னைக் கொண்டாடுகிறீர்கள் இல்லையா? கல் கடவுளாக மாறினாற் போல்தான் கெட்டப் பழக்கங்களை ஒழித்த நீங்கள் எனக்கு” என்ற உமா கடவுளுக்கு அர்ச்சிக்கப்பட்ட பூவாய் மலர்ந்து சிரித்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மன்னிப்பாயா பெண்ணே (சிறுகதை) – Susri, Chennai

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை