சோமு எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். படிப்பில் கெட்டிக்காரன், தேர்வில் எப்போதும் முதல் மதிப்பெண் வாங்குவான்
ஆனால் கொஞ்சம் சோம்பேறியாக இருந்தான். தினமும் பள்ளிக்குத் தாமதமாகத் தான் கிளம்புவான்.
அவன் பெற்றோர் கடிந்து கொண்டால், “நான் கொஞ்ச நேரம் லேட்டா போனா என்ன இப்ப? வானம் கீழ விழுந்துடுமா? நான் தான் நல்லா படிச்சு முதல் ரேங்க் வாங்கறேன்ல, அப்பறம் என்ன உங்களுக்கு?” என விதண்டாவாதம் பேசுவான்.
பள்ளியில் ஆசிரியர்களும், அவன் நன்கு படிக்கும் மாணவன் என்பதால் அவனுடைய சோம்பேறித்தனத்தை சகித்துக் கொண்டனர்.
அன்று சோமுவின் வகுப்புக்கு பழைய அறிவியல் ஆசிரியர் மாற்றலாகிப் போனதால், புதிய ஆசிரியர் வந்தார்
அவர் தன்னை மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட பின், “என் வகுப்புக்கு நீங்கள் எல்லாரும் சரியான நேரத்திற்கு வர வேண்டும். நான் சொல்லும் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்” என கண்டிப்புடன் கூறினார்.
அதுமட்டுமின்றி, “இதுக்கு தனியா உங்களுக்கு மதிப்பெண்கள் உண்டு. நீங்க சிறுவயதிலிருந்தே நேரம் தவறாமையை கடைபிடிக்க பழகினால் பெரியவர்களாகும் போது அது உங்களுக்கு நன்மை தரும்” என்றும் சொன்னார்
ஆனால் சோமு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல பள்ளிக்கு வரும் நேரம், கையேடுகளை ஆசிரியர்களிடம் சமர்ப்பிப்பது என எல்லா வேலைகளையும் தாமதமாகவே செய்தான்.
அந்த முறை நடந்த மாதந்திர தேர்வுகள் எல்லாவற்றிலேயும் சோமு மிக நன்றாக செய்து இருந்தான். ஆனால் இரண்டு மதிப்பெண்களில் முதல் இடத்தை தவற விட்டிருந்தான்.
அதற்கு காரணம் என்ன என ஆராய்ந்த போது, எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றிருந்த சோமு, அறிவியலில் மட்டும் தவறான பதில்களுக்காக இரண்டு மதிப்பெண்களும், தாமதமாக கையேடு சமர்ப்பித்ததற்காக இரண்டு மதிப்பெண்களுமாக நான்கு மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருந்தான்
ஆசிரியர் சும்மா சொல்கிறார் மதிப்பெண் குறைக்க மாட்டார் என விட்டேத்தியாய் இருந்த சோமு, மதிப்பெண் குறைந்ததில் மிகவும் வருந்தினான்
தன் சோம்பேறித்தனத்தால் முதல் ரேங்க் தவறிப் போனதை உணர்ந்த சோமு, அன்றே தன் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்யத் தொடங்கினான்
குட்டீஸ்… நீங்களும் எறும்பு மாதிரி எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கணும். வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்
#ad
A nice story.