சஹானா
தொடர்கதைகள்

ஆழியின் காதலி ❤ (பகுதி 7) -✍ விபா விஷா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கீழே விழுந்ததில் உடம்பில் பட்ட மணற்துகள்களைத் தட்டியவாறே நிமிர்ந்தவர்கள், இமைகளைச் சிமிட்டவே மறந்தனர். அவர்கள் மறக்காமலிருந்தாலும் அந்த ஈரிரண்டு விழிகளும் இமை சிமிட்ட மறத்திருக்கும்.

ஏனெனில், அவர்கள் கண்ட காட்சியின் அற்புதம் அப்படி

மெல்ல மெல்ல நிமிர்ந்தவர்களின் கண்களின் முதலில் பட்டது மலையருவி. அடேயப்பா.. எவ்வளவு பெரிய மலை.. அதன் உச்சி முகடு எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியவில்லை.

அவ்வளவு பெரிய மலையிலிருந்து ஆகாயக் கங்கை போல ஒரு பேரருவி. சமுத்திரத்தில் சேரும் மொத்த நீரும் இந்த அருவியில் இருந்து தான் வருகின்றதோ என்னும் அளவிற்கு மிகப் பெரும் அருவி

சட்டென்று மனதில் உந்துதல் தோன்ற, அந்த அருவிக்கு அருகில் செல்லலாமென நினைத்தார்கள். ஆனால் சற்று தொலைவிலேயே அருவியிலிருந்து சிதறிய நீர்த்திவலைகள் இவர்கள் மேனி நனைத்து, உடலை சிலிர்க்கச் செய்து, சுவாசத்தை சிறை பிடித்தது

அனிச்சையாய் அவ்விடம் விட்டு நகர்ந்தவர்கள், அப்பொழுது தான் கீழே கவனித்தார்கள்

பொன் மணற்பரப்பு கண்களை பறித்தது. வார்த்தையில் மட்டுமல்ல, நிஜமாகவே உருக்கிய பசும்பொன் துகள்கள் நிலத்தில் விரவி இருந்தன.

பின்னர் மேல் நிமிர்ந்து வானை நோக்க, முழு வானமும் இளஞ்சிவப்பு நிறத்தில் சிற்சில மேகக்கூட்டங்களைத் துணையெனக் கொண்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் இவ்விடத்திற்கு வந்ததிலிருந்தே ஒரு அருமையான சுகந்தம்.. தாழம்பூ மனமும், மகிழம்பூ மனமும் சேர்ந்தாற் போல் ஒரு நறுமணம் நாசியைத் துளைத்து மனதை கிறங்கச் செய்தது 

இதில் ஓயாது செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது ஓம் எனும் ஓசை

மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் போல இருவரும் அந்த ஒலி வந்த திக்கை நோக்கி நடந்தனர். அவர்கள் செல்லும் வழியெங்கும் வானுயர்ந்த மரங்களும் ஒளியை வாரி இறைக்கும் மலர்களும் கொண்ட பாதை வழியே சென்றனர் 

சற்றுத் தொலைவு சென்றதும் அங்கு இருந்தது பிரமிடு போன்ற ஒரு அமைப்பு. ஆனால் அதன் உச்சி மட்டும் கூர்மையாக இல்லாது சதுரமாக அமைந்திருந்தது.

ஆம் அது ஏதோ கோவிலாகத் தான் இருக்க வேண்டும். இதென்ன அதிசயம்… இங்கு இரவு பகல் எதுவும் இல்லை என்பது போலக் கோவிலின் வலப்புறம் இளஞ்சூரியனும், அதற்கு எதிராகக் கோவிலின் இடப்புறம் முழுப் பௌர்ணமி நிலவும் பேரெழிலுடன் காட்சியளித்தன.

இதென்ன ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருக்கிறது என எண்ணியவாறே உள்ளே நுழைந்தவர்களை வாயிலில் இருந்த பூதகணங்கள் வரவேற்கிறதா, இல்லை மிரட்டி விரட்டி அடிக்கிறதா என்று புரியாத குழப்பத்தில் சென்றனர். அப்பொழுதும் கூட, அவர்கள் கால்கள் உட்புறம் நோக்கிச் செல்லத் தயங்கவில்லை.

உள்ளே செல்ல, அங்கு வானுயரம் கூட இவன் பாத தூளி தானோ என்பது போல நெடிந்துயர்ந்த அந்த அரன்.. வார்ச்சடையினில் கங்கையவள், அமிழ்தினை ஊற்றாகப் பொழிய, தனது திருக்கரங்களில் திரிசூலமும், திருமேனியில் திருநீறும் தரித்து, இதழ்கடையில் குமிழ் சிரிப்புடன் காட்சியளித்தான்.

நண்பர்கள் இருவரும் மொத்தமாகத் தங்கள் சிந்தையை மறந்தவர்களாக, பார்த்த விழிகள் பார்த்தபடி இருக்க, கூப்பிய கரங்கள் கூப்பியபடி நின்றிருந்தனர்

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தனர் என தெரியவில்லை. எங்கேயோ ஒரு குதிரையின் குரல் கேட்டு நனவுலகம் வந்தவர்கள்.. மீண்டும் அந்த ஈசனை நோக்கிச் சிரம் மேல் கரம் கூப்பி வணங்கி விட்டு வெளியே வந்தனர்.

அவர்களுக்கு அந்த நாளின் ஆச்சரியம் மிச்சம் இருந்தது போலும்.. ஏனெனில் அவர்களை நோக்கி ஒரு வெண்புரவி வந்து கொண்டிருந்தது

விழிகளைக் கசக்கி வான் நோக்கியவர்களுக்கு விடையாக, தன் சிறகுகளை விரித்து வான் வழியே அந்தப் புரவியில் வந்தவள் சாமினி தான். அதுவும் மிக ரௌத்திரமாக

அவர்களுக்கு அருகே வந்து இறங்கியவள், இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு அர்னவை நோக்கி கையை ஓங்கினாள்.

அடுத்த கணம் அவள் கைகள் பின்னால் சேர்க்கப்பட்டு, அர்னவின் பிடியில் இருந்தாள். அதற்குள்ளாக அந்த தீவின் மக்கள் அனைவரும் அங்கே வந்துவிட, சாமினி தன் முழுப் பலத்தையும் பிரயோகித்து அர்னவை தன் தலை மேல் தூக்கி கீழே வீசி, அவன் மார்பின் மேல் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியவாறு அமர்ந்தாள்.

அவர்கள் அருகில் வந்த இளந்திரையன் சாமினியைக் கண்டிக்க முயலும் போதே, கீழே விழுந்திருந்த அர்னவால் தூர தூக்கி எறியப்பட்டு, ஒரு மரத்தில் மோதி கீழே விழுந்தாள் சாமினி

இருவரும் ரௌத்திரமாகப் பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர். ஒருபுறம் கீழே இருந்த அர்னவை விக்ரம் தூக்கிவிட முயல, மறுபுறம் சாமினியை அணுகவே அனைவரும் பயந்து நின்றனர் 

இவர்கள் இருவரையும் பார்த்து விக்ரம் மனதிற்குள் அதிர்ந்து தான் போனான். இவ்வளவு மென்மையாக இருக்கும் பெண் உடற்பயிற்சி செய்து உடம்பெல்லாம் கடினப்படுத்தி வைத்திருக்கும் ஆணுடன் எவ்வளவு திறமையாகச் சண்டையிடுகிறாள் என்றால், அர்னவோ யார் எவரென்றே தெரியாத காட்டுவாசி கூட்டத்தில் தன்னந்தனியாக அகப்பட்டு இருக்கும் போதும், மிகத் தைரியமாக அந்தக் கூட்டத்தின் தலைவரின் பெண்ணையே அடித்திருக்கிறான்.

இதெல்லாம் எங்குப் போய் முடியப் போகிறதோ” என எண்ணிக் கொண்டான்.

மிகுந்த சீற்றத்துடன் விழுந்த அதே இடத்தில் அமர்ந்திருந்த சாமினியின் அருகில் வந்தார் கயாகர மூப்பர்.

“உனக்கு எத்துணை முறை உரைப்பது அம்மா.. பொறுமையை கைவிடக் கூடாது என்று. ஆனால் நீ எள் முனை அளவு கூடப் பொறுமையை கை கொள்வதில்லை” என்றார் சற்று கோபத்துடன்

அதற்குச் சற்றும் சளைக்காத ஆத்திரத்துடன், “என்ன மூப்பரே புரியாது பேசுகிறீர்கள். இவர்களை எவ்வளவு சிரமப்பட்டு அந்தச் சமுத்ராவிடமிருந்து காப்பாற்றி, மேக்கில் மட்டும் செல்லக் கூடாது என மொழிந்திருந்தும் கூட, அதை மதியாது இங்கு வந்திருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு திண்ணக்கம்” என்றாள் சாமினி

“அது தான் நானும் கூறுகிறேன் சாமினி, இவர்கள் எவ்வாறு நம் மந்திரக் கட்டினை தாண்டி இவ்விடம் வந்தார்கள்” எனக் கூறியதும், சட்டென அதிர்ந்து போயினர் அனைவரும்

விக்ரம் அர்னவ் இருவருக்கும் கூடச் சற்று ஆச்சர்யமாகத் தான் இருந்தது

” என்ன மந்திரக்கட்டா” என குழப்பத்துடன் இருவரும் மூப்பரைக் காண, அவர் சாமினியிடம் மேலும் கூறினார், 

“இவர்கள் இருவரும் யாரென்று தெரிகிறதா? அவர்களின் கரங்களைக் கண்ணுற்றாயா நீ? முதலில் உன் சினத்தினைத் தூர எறிந்துவிட்டு யோசி” என்று கூறவும், அவர்கள் அருகில் வேகமாக வந்த சாமினி, இருவரின் கரங்களையும் பற்றிப் பார்த்தாள்

அர்னவின் வலது மணிக்கட்டினைப் பார்த்தவள், ஆனந்தத்தில் விழிகளில் உவர்நீர் பெருக, அவன் கைகளைக் கண்களில் வைத்து கதறினாள்

அவளது கதறலை கண்ட மற்றவர்கள், “ஈசா ஈசா…” என அரற்றியவாறு அவரவர் இருந்த இடத்திலிருந்தவாறே நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து அர்னவைத் தொழுதனர்.

சற்று முன் சரிக்குச் சமமாக அவ்வளவு சினத்துடன் சண்டையிட்டவள், இப்பொழுது இப்படிக் கையைப் பிடித்த்துக் கொண்டு ஏன் கதறுகிறாள் என புரியாமல் அர்னவும், விக்ரமும் அதிர்ந்து போய்ச் சிலையெனச் சமைந்தனர்.

 வாழும் தேசம் தாண்டி, கடல் கடந்து, தனது கனவினை அடையத் துடித்தவன் இப்படி ஏதோ ஒரு தீவினில் இந்த விசித்திர மனிதர்களிடம் மாட்டிக் கொண்டோம் என எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தான் அர்னவ்.

ஆனால் இப்பொழுதோ இந்த மக்கள் இவனைத் தொழுது, “நீரே எம் இறை” எனவும், குழம்பிப் போனான்

அதிலும் சாமினி வேறு அவன் கை பற்றி அழவும், எதிர்த்து சண்டையிட்ட போது அவள் மீது அவனுக்கு இருந்த பிரம்மிப்பு, இப்பொழுது கோபமாக மாறியது

சட்டென அவள் பற்றியிருந்த தன் கையை உதறியவன், “இப்ப இங்க என்ன நடக்குதுனு சொல்றீங்களா? எல்லாரும் எதுக்காக என் கால்ல விழறீங்க? நீங்கல்லாம் யாரு? அத முதல்ல சொல்லுங்க” எனக் கேட்டவன்

சாமினியின் பக்கம் திரும்பி, “ஹே போதும். உன் அழுகையை நிறுத்திட்டு இங்க என்ன நடக்குதுனு எந்தவித பொய் பூச்சும் இல்லாம சொல்லு” என கடுப்புடன் மொழிந்தான்

அப்பொழுது தான்,  தான் கட்டுப்பாடின்றி உணர்ச்சிவயப்பட்டு அழுதத்தை எண்ணி வெட்கிய சாமினி, அவன் கோபமாகக் கொட்டிய வார்த்தைகளினால் ஆத்திரம் அடைந்தாள்.

“இதோ பாருங்கள், எங்கள் சாபத்தினைப் போக்கும் வல்லமையுடையவர் என்று எண்ணியே உமக்கு இந்த மரியாதை. ஆனால் நீர் வார்த்தைகளின் கண்ணியம் தவறிப் பேசினால், உமது வினையே உம்மை அறுக்கும் என்பதையும் மறவாதீர்” எனச் சாமினி கூறியதும்

பதறிப் போய் அவளருகினில் வந்த மூப்பர், “என்ன சாமினி… ஏன் இந்த ஆத்திரம்? ஏன் தான் இப்படி நிதானமிழக்கிறாயோ? ஏற்கனவே ஒருத்தி தனது நிதானத்தை இழந்ததால் நாம் தொலைத்தது என்னவென்று மறந்துவிட்டதா என்ன?” எனக் கேட்டார்.

“யான் பேசிய வார்த்தைகளில் உள்ள குறை தான் தங்களுக்குத் தெரிகிறதா மூப்பரே? அவர் எவ்வளவு பெரிய தேவாம்சம் பொருந்தியவராயிருப்பினும், யான் யாருக்கும் அடிபணிய விழையேன். என்னிடமுள்ள நேர்மை என்னை இப்படித் தான் இருக்கக் கற்றுத் தந்திருக்கிறது. யான் ஒன்றும் தன்னிலை இழந்து வெறி பிடித்த மிருகமென மாறி விடமாட்டேன். அதுமட்டுமின்றி, மற்றவளைப் பார்த்துப் படிக்கும் அவசியமின்றி எது தர்மம், எது அதர்மம் என்னும் நீதியினை உரைத்தே எம்மை வளர்த்திருக்கிறீர். அதனால் தாங்கள் நன்மொழி உரைக்க வேண்டியது அவருக்குத் தானே ஒழிய, எமக்கு அன்று” என ஆத்திரத்துடன் படபடத்துவிட்டு, அந்தக் கோவிலுக்குள் சென்று விட்டாள் சாமினி 

சாமினி அங்கிருந்து நகர்ந்ததும் அவளைச் சமாதானப்படுத்த பின்னோடு சென்ற கயா, அர்னவை விடுத்து விக்ரமைப் பார்த்து முறைத்து விட்டுப் போனாள்.

“இவ எதுக்கு நம்மள பார்த்து முறைச்சுட்டு போறா? இவ பார்வையே சரியில்லையே, என்னமோ போடா விக்ரமா.. உனக்கு ஒரு ஏழரை இருக்கறது உறுதி” என மனத்திற்குள்ளாக சலித்துக் கொண்டான் விக்ரம் 

சாமினியும், கயாவும் அந்தக் கோவிலுக்குள் சென்ற பின்,  மூப்பரும், இளந்திரையனும் அர்னவையும் விக்ரமையும் அழைத்துக் கொண்டு அந்த மந்திரக்காட்டினைக் கடந்து, அவர்கள் முன்பு அத்தீவினில் இருந்த இடத்திற்கு வந்தனர்.

மற்றவர்கள் அனைவரும் கலைந்து சென்றிட, இவர்களுடன் எல்லாளன் மட்டும் இருந்தான்.

“அண்ணே… நீங்கெல்லாம் யாரு? ஏன் இப்படி விசித்திரமா நடந்துக்கறீங்க? உண்மைய சொல்லப் போனா எனக்கு ரொம்பப் பயமா இருக்குதுங்ண்ணா. என்னை… இல்ல.. இல்ல.. எங்களை விட்டுடுங்கண்ணா ப்ளீஸ்” என வெட்கத்தை விட்டுக் கெஞ்சினான் விக்ரம், எல்லாளனிற்கு மட்டும் கேட்கும்படியாக.

“அட அமைதியாய் இரப்பா, எங்கள் வாழ்வே உங்களிருவரின் கைகளில் தான் இருக்கிறது” என எல்லாளன் கூற, தலை சுற்றிப் போனது விக்ரமிற்கு

‘இனி இவனுங்ககிட்ட நீங்க யாரு யாருனு கேட்டோம்னா நாம தான் ரொம்ப டயர்ட் ஆகிடுவோம். இவனுங்களா எப்போ மனசு வந்து சொல்றானுங்களோ சொல்லட்டும். அதுவரைக்கும் காத்துகிட்டு இருக்க வேண்டியது தான். எனக்கு வேற வழியும் இல்ல’ என முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்தான் விக்ரம் 

ஆனால் அர்னவ் மட்டும் கண்களில் கோபக்கனல் பறக்க, எனக்கு இப்பொழுதே உண்மை தெரிந்திட வேண்டும் என்பது போல் அவர்களை இறுக்கத்துடன் நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்து வேண்டாம் என்பது போலத் தலையசைத்த மூப்பர், “வேண்டாம் ஐயா.. உமது சினமும் எம் இனத்திற்கு வேண்டாம். இதற்கு முன்னும் இப்படித் தான், காபந்து செய்ய வந்தவனாலேயே கடும் துன்பம் அடைந்தவர் நாங்கள். நீரும் எம்மைக் கைவிட வேண்டாம். யான் உரைக்கும் கூற்று உமக்குப் பெரும் ஐயங்களை விளைவிக்கலாம், நம்பகத்தன்மையற்றதாய் தோன்றலாம். ஆனால் அவை அனைத்தும் நிதர்சனம் மகனே” எனக் கூற

“முதல்ல எனக்கு எல்லா விஷயமும் சொல்லுங்க, அதுக்கப்பறம் நான் அத நம்பறனா இல்லையானு சொல்றேன்” என இன்னும் சினம் தனியாமல் உரைத்தான் அர்னவ் 

அவன் கூறியதைக் கேட்டு ஒரு பெருமூச்சுடன் தொடங்கிய மூப்பர், “முதலில் நீர் அறிந்து கொள்ள விரும்பும் தகவலை உமக்கு உரைத்து விடுகிறேன் மகனே, நீர் தேடிக் கொண்டு வந்த அம்பரத் தீவு இது தான்” என்றவர் கூற, அதிர்ந்தான் அர்னவ் 

அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்றது இந்திய அரசாங்க ஆவணம். ஆனால் இங்கோ ஓர் பெருங்கூட்டம் மாய வித்தைகள் மூலம் அவ்வளவு பெரிய அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவி சுதந்திரமாய் இருக்கிறார்களே என கொந்தளித்துத் தான் போனான் அர்னவ் 

விக்ரமின் எண்ணமும் கிட்டத்தட்ட அதுவே தான்

‘அடப்பாவிகளா… அவ்ளோ பெரிய அரசாங்கத்தையே மந்திர வேலை காட்டி ஏமாத்தி வச்சுருக்கானுங்களே’ என மனதிற்குள் நினைத்தான் விக்ரம் 

“ஆனால் அம்பரத் தீவுல மனுஷங்க யாரும் இல்லைனு இந்திய அரசாங்கம் சொல்லுதே?”என அர்னவ் கேட்க 

“யாம் மனிதர்கள் என உங்களுக்கு யார் உரைத்தது?” என இளந்திரையன் சற்று ஏளனமாக பதில்  கேட்டார் 

இப்பொழுது மெய்யாகவே விதிர்விதிர்த்தது அர்னவுக்கும் விக்ரமிற்கும்.

அச்சம் படர்ந்த விழிகளால் நண்பர்கள் இருவரும் மற்ற மூவரையும் நோக்க, “இல்லை ஐயா. எங்களைப் பார்த்து அச்சம் கொள்ள எவ்வித முகாந்திரமும் இல்லை. சொல்லப் போனால் நாங்கள் தாம் மனிதர்களுக்கு அஞ்சி இங்கு மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” எனக் கூறினார்.

“இங்க பாருங்க ஐயா, நீங்க விளக்கம் சொல்றேன்னு கூப்பிட்டு எங்களை இன்னும் அதிகமாக குழப்பிட்டு தான் இருக்கீங்க.” என்றான் விக்ரம்.

அதற்கு மூப்பர், “நாங்கள் உரைக்க விழைவதை சற்று பொறுமையுடன் கேட்டால் தங்களுக்கு அனைத்தும் விளங்கும் எனச் சொல்லி விட்டு, விளம்பினார் அவர்கள் கதையை, அதாவது உண்மை நிகழ்வை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பாரத தேசம் என்னும் புண்ணியப் பூமியில் தமிழ் அன்னையின் மூத்த பிள்ளைகளான தமிழின மக்களில் தோன்றிய உத்தம புருடர்களான சித்தர்கள், நந்தி தேவர் முதற்கொண்டு, குதம்பை சித்தர் வரையிலான அனைவரும், இந்தத் தேயத்திற்கு இன்னும் அதிக வலு சேர்ப்பதற்காகப் பல்வேறு யோகங்கள், யாகங்கள் புரிந்து கொண்டிருந்த தருணம் அது

எதையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டால் அதன் மீதிருக்கும் பயமும் மரியாதையும் ஆர்வமும் அற்றுப் போய்விடுமல்லவா? 

அதனால் சித்தர்கள் தாங்கள் கண்டறிந்த வித்தைகளை நேர்பொருள் கொண்டு மக்களுக்கு எடுத்து மொழியாது, மறைபொருளாய், பல்வேறு செய்யுள்களின் உட்கருத்தாய் திணித்துப் பிணைத்து வைத்திருந்தார்கள்.

அந்த யோகங்களை அடிபிறழாது கைக்கொண்ட மாந்தர்கள், உடலும் உள்ளமும் எவ்வித மாசுமின்றித் தூய ஆத்மாக்களாக உலவி வந்தனர்.

அந்த மக்களுக்கு அறியாமல், அவர்களின் இடையூறின்றி யாம் வணங்கும் ஈசனுக்கு ஒரு கோவில் கட்டி, அந்தக் கோவிலைச் சுற்றி ஓர் பெரிய சுனை அமைத்து, அந்தத் தூய சுனை நீரினால், எம் இறைவனுக்கு அபிடேகம் செய்வித்து, அவனது ஆயிரம் திருப்பெயரினை மனதார உச்சரித்து யோகம் செய்ய, சித்தர்கள் மட்டுமே தனித்திருக்கும்படியான ஒரு இடம் வேண்டுமென எண்ணினர்.

அதற்கென ஆகம விதிப்படி ஒரு கோவில் எழுப்பிட வேண்டுமென, ஆகமங்களை மட்டுமல்லாது  அது போலப் பலநூறு கலைகளில் வல்லவரான மயனை அழைத்துத் தங்களது விருப்பத்தினை உரைத்தனர் சித்தர்கள் 

அவர்கள் விருப்பத்தை  கேட்ட மயனும் மனமகிழ்ந்து, இனி யாரும் எம் இறைக்கு இப்படிப்பட்ட கோவிலை எழுப்ப முடியாது எனும் பெயர் வரும்படி ஒரு கோவிலை அமைக்க மனம் விழைந்தார்.

அதற்கென இடம் தேடிக் கொண்டிருக்கையில் தான், பெருங்கடலின் சிறு வைரமாய் இத்தீவு சித்தர்கள் கண்ணில் பட, இந்த இடமே தாங்கள் தனித்திருந்து ஈசனைப் பூசிக்க உகந்ததாக உணர்ந்தனர்.

அதற்கெனவே.. அவனருளாலே அவன் தாள் பணிந்து, எங்கும் நிறைந்து வீற்றிருக்கும் பரம்பொருளான ஈசனை, இந்தப் பூவுலகில் வந்து தேவரும் பூசித்திட விரும்பும் வண்ணம் ஒரு அற்புதப் படைப்பினை உருவாக்கினார் மயன்.

அவர் அவ்வாறு அரும்பாடுபட்டு தேவர்களும், முனிவர்களும் விரும்பி வந்து ஈசன் திருவடி பற்றி அந்த இறையுடன் இணைந்திருக்க உருவாக்கப்பட்ட இடமே, நீங்கள் சற்று முன் சென்ற இடம்.

அது தான் எங்கள் ஓம்கார வனம்

அந்த ஓம்கார வனம் என்னும் அற்புதப் படைப்பினை உருவாக்க மயனுக்கு உதவி புரிய வந்தவர் தான் நாங்கள், ஆம் நாங்களும் மயனின் இனத்தில் உதித்தவர்களே” எனக் கூறி மூப்பர் நிறுத்த, நம்ப இயலாமல் பார்த்தான் அர்னவ், திறந்த வாய் மூடவில்லை விக்ரம் 

இருவரின் நம்பாத பார்வையைக் கண்ணுற்ற மூப்பர், சிறிது நகைத்துவிட்டு மேலே தொடர்ந்தார்.

“ஹ்ம்ம்… ஓம்கார வனத்தினை நேரில் கண்ணுற்ற போதிலும் கூடத் தங்களுக்கு நம்பகத்தன்மை வரவில்லையா? சரி போகட்டும்.. நான் முழுமையாய் மொழிந்த பின்பாவது நீவிர் எம்மை நம்புகிறீரா எனப் பாப்போம்” என்றவர் தொடர்ந்து கூறலானார் 

“இந்தத் தீவில் ஈசனுக்குச் சிறு உறைவிடம் அமைக்க வந்தோம் நாங்கள். ஆனால் ஈசனே மனமுவந்து இங்கு உறைந்திருக்க விரும்பியதாலோ என்னவோ, இந்த ஓம்கார வனம் நாங்கள் நினைத்ததை விடவும் மிகுந்த அற்புத இறைப்பொலிவுடன் உருவானது. ஆனால் அப்படி அந்த இறைவனே தனக்கென விரும்பி உருவான இந்த வனம், அந்த இறையின் நிந்தைக்கே ஆளாகி இவ்வாறு சபிக்கப்படக் காரணமும் நாங்கள் தான்” என கண்ணில் நீர் பெருக, பேச இயலாமல் நிறுத்தினார் மூப்பர்

(தொடரும்… வெள்ளி தோறும்)

#ad

                      

#ad 

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: