in

காக்க! காக்க! ❤ (பகுதி 5) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காக்க! காக்க! ❤ (பகுதி 5)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

கிழம்பூவின் நறுமணமாய், கால் தொட்டுச் செல்லும் கடல் அலையாய்,  விண்மீன்கள் சதிராடும் நந்தவனமாய், பொத்தி வைத்த பூக்குவியலாய், சிருஷ்டியின் சுகந்தம் ரூபனின் இதயமெங்கும் பரவி நிரவி கொண்டிருந்தது.

சிருஷ்டி… உயிர்களைச் சிருஷ்டிக்கும் அவளும் தாய்மையின் உரு தானே? அந்தத் தாயுள்ளம் தானே பிற உயிரின் துயர் பொருக்காது, தன் நலம் கூட மனதில் எண்ணாது, ஆசை ஆசையாய் மணந்து கொண்டவனையும் விட்டுப் பிரிந்து வரச் செய்தது.

இப்பொழுது இதோ… அவளைத் தேடி இங்கே யுவாவிற்கும் வந்தாகி விட்டது. ஆனால் இங்கு வ்ரித்ரா இந்த யுவாவை மறைமுகமாக ஆண்டுக் கொண்டிருக்கிறான்.

சிருஷ்டியை தேடி வந்த காரியம் மிக எளிதாக நடந்தேறிவிடும் என்று அதிரூபன் நினைக்கவில்லை தான். ஆனால் இன்று அந்த வ்ரித்ரா, எப்படி மொத்த உலகத்தையே இவ்விதமாய்ச் சுட்டு விரலால் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறான் என்பதில் அதிரூபனுக்குப் பேரதிர்ச்சி.

ஆனால் நல்லவேளையாக வாசுவின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. இவ்வளவு புத்திசாலியாய், இந்த அளவிற்கு ஹேக்கிங்கில் திறமையானவனாய் இருப்பவனுக்கு இந்த அரசாங்கத்தில் வெறும் கிளர்க் வேலைதான் என்பது, மிகவும் வேதனையாக இருக்கிறது.

அதிலும் இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வரதீபத்தின் ராணுவத்தில் பணிபுரிந்ததாய் கூறியது மிகவும் சிந்தனைக்கு உரியதாக இருக்கிறது.

“அப்படி ராணுவத்தின் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவனை எதற்காக இப்படிச் சாதாரணக் கிளர்க்காக அமர்த்த வேண்டும்?” என்று கேட்டதற்கு

“அதெல்லாம் என்னன்னு தெரியல பா. நான் அப்ப தான் ராணுவத்தில் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆகி இருந்தது அதுவும் சாதாரணச் சிப்பாயாகச் சேர்ந்தேன். நான் ராணுவத்துல கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில் வேலை செய்யத் தான் ஆசைப்பட்டேன், ஆனால் அங்க வேலை கிடைக்கறது அவ்வளவு சுலபமா இல்லை. அதனால முதல்ல சாதாரணச் சிப்பாயாகச் சேர்ந்த நானும் படிப்படியா முன்னேற ஆரம்பிச்ச சமயத்துல தான் என்ன நடந்ததுன்னு தெரியல, அப்போ ராணுவத்தில் இருந்த எல்லாரையும் மாத்திட்டு, ராணுவத்தையே தலைகீழா சுத்தமா தொடைச்சு எடுத்துட்டு, வேற நிறையப் பேர இங்க ராணுவத்தில் சேர்க்க ஆரம்பிச்சாங்க.

ஸ்வர தீபத்தில மட்டுமில்ல, இங்க இருக்கிற எல்லா நாடுகள்லையும் இதே தான் நடந்தது. அது ஏன்னு எங்க யாருக்கும் புரியல, ஆனா இப்படித் திடீர்னு ராணுவத்துல அதிரடி மாற்றங்கள் கொண்டு வந்தது மக்கள் மத்தியில ஏதாவது புரட்சி வந்துடும்னு நினைச்சதாலோ என்னவோ, அப்படி ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட என்ன மாதிரி ஆட்களை அரசாங்க வேலையில வெச்சுகிட்டாங்க. ஆனா ரொம்பவும் சாதாரண இடத்தில வச்சிருக்காங்க.

எனக்குத் தெரிஞ்ச ஹேக்கிங் வெச்சு நான் கண்டுபிடிச்ச சில விஷயங்கள் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிவிட்டேன். இன்னும் அவங்களோட அடுத்தடுத்த ஸ்டெப்ஸ் என்னன்னு நமக்குத் தெரியல. ஒருவேளை இந்த மாதிரி விஷயங்கள் நமக்குத் தெரிஞ்சுடுச்சுன்னு கண்டுபிடிச்சுட்டாங்கன்னா நாம உயிரோட இருக்கிறதே சந்தேகம் ஆயிடும்” என்று கூறியவன், மேலும் அந்த மகிந்தனின் படையில் இருவரும் சேரலாம் என அதிரூபன் கூறியதை கேட்கவும், உண்மையாகவே மிகவும் பயந்து தான் போனான் வாசு.

“ஏய் ஏய் என்னப்பா… நானே இப்ப தான் அந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம தெரிஞ்சுக்கிட்டதே தப்பா போச்சுன்னு பயந்து போய் அங்கிருந்து ஓடி வந்திருக்கேன். இப்போ நீ என்னடான்னா மறுபடியும் அந்தக் குழிக்குள்ளயே என்ன தள்ளிவிடப் பார்க்கிற? இந்த ஆட்டையில நான் இல்லப்பா” என்று முதலில் அலறினான் வாசு.

ஆனால் அதன் பின்பு அதிரூபனின் திட்டத்தைக் கேட்க கேட்க அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. மேலும் நாட்டுக்காகச் சேவை செய்ய நினைத்தவன் இப்படிப் பயந்து ஓடுவானா? ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு அதிபயங்கரமான சதித்திட்டத்தை எதேச்சையாக அறிந்து கொள்ள நேர்ந்த அதிர்ச்சியில் வாசு அப்படித் தப்பித்து ஓடும் மனநிலையில் இருந்தான்.

ஆனால் அவன் ஆழ்மனம் இன்னமும் உண்மையாகவே ராணுவ வீரனாக அல்லவோ இருந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே அதிரூபன் அந்த உணர்வெல்லாம் வெளிக்கிளம்பி வரும்படியாகக் கொஞ்சம் பேசவுமே, மனதின் பயத்தை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு.. ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டினை காப்பதாய் உறுதி ஏற்றான்.

மேலும், “ஏம்பா கெட்டது செய்யணும்னு நினைக்கிறவனே, அவனோட உயிருக்கு பயப்படறதில்ல. நாம ஏன் நம்ம உயிருக்கு பயப்படணும்?” என்று வாசு உணர்வுபூர்வமாக, உள்ளம் உணர்ந்து கூற, அவனை ஆறுதலாக முதுகில் தட்டினான் அதிரூபன்.

“அப்படிக் கெட்டது செய்யறவனுக்கு அவனோட உயிர் மேல பயம் இல்லன்னு உனக்கு எப்படித் தெரியும் வாசு? உயிர் மேல பயம் இல்லாமல் தான் அவன் இத்தனை மெய்க்காப்பாளர்களோட படை சூழ சுத்திட்டு இருக்கானா? அதுமட்டுமில்லாம, அப்படி உயிர் வாழ ஆசை இல்லாம தான் இத்தனை இத்தனை உறுதியா, கொடூரமா, சதித்திட்டம் தீட்டிட்டு இருக்கானா? அப்படிப்பட்ட கொடூரமானவனுக்கே அவனோட உயிர் வெல்லம்ன்னா, நல்லதுக்காகப் போராடற நாம, நம்ம உயிரை ஏன் காப்பாத்திக்க நினைக்கக்கூடாது? நம்ம உயிருக்கு எந்த ஆபத்தும் வராது வாசு. அதுக்கு நான் உறுதி தரேன்” என்று அவன் கூறவும் அந்த வார்த்தைகளால் மேலும் அதிரூபன் மேல் நல்லெண்ணம் அடைந்து அதன் மூலம் அவன் இதயப்பரப்பெல்லாம் ஆசுவாசம் சூழ, இதோ இப்பொழுது அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு உயிரும் யாரோ ஒருவனை ஆறுதலுக்காக, ஆதூரமாய் யாரோ ஒருவனின் தோள் செய்வதற்காகத் தானே ஏங்கிக் கொண்டிருக்கிறது? அது அன்பினாலோ, காதலினாலோ, அல்லது இதுபோன்ற நட்பினாலோ.. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.

அதிரூபன் இவ்வாறெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் அந்த நள்ளிரவில், திடீரென்று அலறிக் கொண்டே அரைத் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தான் வாசு.

எழுந்தவன், “ஐயோ ஐயோ அம்மா காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று இன்னுமாய்க் கத்த, அவன் அருகே ஓடிச்சென்று “ஏய்.. ஏய்.. வாசு என்ன ஆச்சு? என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி அலறிட்டு இருக்க?” என்று கேட்டு அவனுக்கு அருந்துவதற்கு நீர் கொடுத்து அருகில் அமர்ந்து விசாரித்தான் ரூபன்.

உடனே வாசுவும் திருதிருவென விழித்துக் கொண்டு, “கனவுல கூட அந்த மகிந்தன் வந்து என்னோட கழுத்தை நெரிக்கறான் பா..” என்று பரிதாபமாகக் கூறவும், அது ரூபனுக்கு இரக்கத்திற்குப் பதில் சிரிப்பையே வரவழைத்தது.

வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு ரூபன் இருக்க, அதைக் கண்டு கொண்ட வாசு, “என்னோட நிலமைய பார்த்தா உனக்குச் சிரிப்பா இருக்கு தான? ஏன்னா, நான் தானே அந்தப் பாழாப் போன ஹாக்கிங் செஞ்சு இந்தக் கவர்மெண்ட்ல என்ன பித்தலாட்டமெல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டது. அதனால ஏதாவது ஆபத்து வந்தா எனக்குத் தான் வரும். உனக்கு என்ன?” என்று சிறிது நக்கலுடன் கேட்க, அதே சிரிப்பு மாறாத முகத்துடன் இல்லை என்பதாய் தலையசைத்தான் அதிரூபன்.

“நான் அதுக்குக் கூடச் சிரிக்கல வாசு, ஆனா இந்த அர்த்த ராத்திரில தூக்கத்துல கெட்ட கனவு கண்டு பாதியில எழுந்து, இப்போ ஒரு முழி முழிச்சியே.. அத பார்த்து தான் சிரிச்சேன்” என்று கூறவும், இப்போது அந்தப் பரிதாப பார்வை சற்று கோபமாய் மாறியது.

மீண்டும் சிரித்தவாறே வாசுவை சமாதானப்படுத்தி அவனை உறங்க சொன்னான் ரூபன்.

மறுநாள் எப்பொழுதும் போலவே அசாதாரணமான ஒரு நாளாகவே விடிந்தது. ஆம்.. இவர்கள் இருவரும் முந்தைய இரவு எப்பொழுது தூக்கத்தில் ஆழ்ந்தார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் கதவு படபடவென இடியாய் இடிக்கும் ஓசையாலேயே இருவரின் தூக்கமும் கலைய துவங்கியது.

உடனே அது யாராக இருக்கும் என்ற பதட்டத்துடன் வாசு ஓடிப் போய்க் கதவை திறந்து பார்க்க, அங்கே யாருமே இல்லாததைக் கண்டு திகைத்தான். ஆனால் ஒரு சத்தம் மட்டும் மீண்டுமே கேட்டது.

“வாசு வாசு…” என்று அதுவும் அவன் அவனுக்குக் கீழே அந்தச் சத்தம் கேட்டது. உடனே குனிந்து பார்த்தவன் படக்கென்று சிரித்து விட்டான்.

ஏனென்றால் அது அவன் பக்கத்து வீட்டு குட்டி பையன் சின்னு தான். “டேய் என்னடா காலங்காத்தால இப்படிக் கதவை தட்டினா, நீ தட்டினதுலா அது உடைஞ்சுட்டா, உங்க அப்பாவா வந்து சரி பண்ணி தருவார்?” என்று பொய்யாய் வரவைத்த கோபத்துடன் அவனை முறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

அதற்கு அந்தச் சின்னு, “இதுதான் உனக்குக் காலங்காத்தாலயா ? இப்போ மணி 12 ஆகப் போகுது. இந்நேரம் வரைக்கும் தூங்கிட்டு இருக்கிறியே அப்படின்னு தான் என்னாச்சுனு பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்று அவன் ஏதோ பெரிய மனிதன் போலக் கேட்டான்.

அதற்கு வாசுவும், அதே வார்த்தையைக் கொண்டு.. “என்னடா என்னமோ ரொம்பப் பெரிய மனுஷன் மாதிரி விசாரிக்க வந்துட்ட?” என்று கேட்கவும் “

“ஆமாம் நான் பெரிய மனுஷன் தான்..” என்று முதலில் பதில் உரைத்துவிட்டு, “உன்ன நான் விசாரிக்க வரல. நேத்து ஏதோ உன் கூடப் புதுப் பீஸ் யாரையோ கூட்டிட்டு வந்தது மாதிரி இருந்துச்சு. எனக்கு இன்ட்ரொ கொடுக்கவே இல்லையே நீ?” என்று அவன் கேட்க

“ஆமாமா இவன் பக்கத்து நாட்டு அதிபர். இவனுக்குப் புதுசா வர்றவங்கள இன்ட்ரோ கொடுக்கணுமாம். போடா உன் வேலையைப் பாத்துட்டு” என்று வாசு கூற, அந்தக் குட்டி அவனை முறைத்துக் கொண்டே அவர்கள் வீட்டிற்குப் போனது.

இந்நிலையில், அவர்கள் இருவரையும் பார்த்து தனக்குள்ளே ரசித்துக் கொண்டிருந்தான் அதிரூபன். ஆனால் மனதோரம் இன்னொரு விஷயமும் பிசையத் தான் செய்தது. இப்படி வெளியுலகைப் பற்றியும், அவர்களுக்கு நடக்கவிருக்கும் ஆபத்தைப் பற்றியும் ஏதும் அறியாது இந்த மக்கள் இருக்கின்றனர்.

இவர்களைக் காப்பாற்றும் முக்கியப் பொறுப்பு மட்டுமல்லாது, இந்த யுவாவையும் காப்பாற்ற வந்த சிருஷ்டியையும் கண்டுபிடித்துக் காப்பாற்றும் பொறுப்பு மிகவும் கடுமையானது என்று அதிரூபனுக்குத் தோன்றவே செய்தது.

பின்பு அதிரூபனும், வாசுவும், வாசுவின் நண்பனை பார்க்க சென்றனர். அங்குச் சென்று ஆனந்தனை (வாசுவின் நண்பன்) சந்தித்துத் தாங்கள் இருவரும் அந்தத் தனிப்பயிற்சியில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தனர்.

அதற்கு அந்த ஆனந்தன், “இது யாரு புதுசா இருக்கு?” என்று அதிரூபனை பார்த்து கேட்க

“இது என்னோட பழைய கிராமத்து ஃப்ரண்ட். இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மறுபடியும் பார்த்தேன். நீதான் இப்படி ஒரு புது வேலை இருக்குன்னு சொன்ன இல்லயா? அது தான் இவனையும் வர சொன்னேன். இவனும் வேலை இல்லாம தான் இருக்கான்” என்று அதிரூபனைப் பற்றிப் பொய்யாய் ஒரு கதை சொன்னான் வாசு.

ஏனென்றால், அதிரூபன் யார் எவர் என எந்த விவரமும் தெரியாது என்று கூறினால், ஒருவேளை இந்தப் பயிற்சியில் அவனை ஏற்க மாட்டார்களோ என்று எண்ணியே வாசு இப்படிச் சொல்லியது.

அதுவே சரி என்பது போல ஆனந்தன், ரூபனிடம் அவனது அடையாள சான்று கேட்டான்.

உடனே சுதாரித்த அதிரூபன், “நாடோடிகளுக்கு எல்லாம் நீங்க அடையாளச் சான்று குடுப்பீங்களா என்ன?” என்று மீண்டும் அந்த ஆனந்தனை திருப்பிக் கேட்கவும்

ஒரு கணம் அமைதியாய் அவனைப் பார்த்த ஆனந்தன், “சரி கவனமா கேளுங்க.. நான் சொல்ற இடத்துக்கு நாளைக்குக் காலைல 9 மணிக்கு நீங்க இரண்டு பேரும் வந்துருங்க” என்று மட்டுமே கூறிவிட்டுச் சென்றான்.

இவர்கள் இருவரும் மறுநாள் காலை ஆனந்தன் கூறிய அந்த இடத்திற்கு அவன் சொன்ன நேரத்திற்குச் செல்ல, இவர்களுடன் சேர்த்து அங்கு மேலும் ஒரு ஐம்பது அறுபது பேர் அங்கே இருந்தனர்.

அவர்கள் அனைவருமே இந்தப் பயிற்சிக்கு வந்திருப்பதாகவே கூறினர். அங்கு வந்திருந்த அனைவருக்கும் ஏதோ ஒரு பானம் முதலில் கொடுக்கப்பட்டது அதை யாரும் அறியாமல் அதிரூபனும் வாசுவும் மட்டுமே பருகாது கீழே ஊற்றி விட்டனர்.

பின்பு வந்திருந்த அனைவரின் உடல் வலிமையும் சோதிக்க அவர்களது உயரம், உடல் எடை, அடி தாங்கும் வலிமை போன்றவை கூடச் சோதிக்கப்பட்டது. பின்பு அவர்களது பலத்தையும் சோதித்துக் கொள்ள, ஒருவொருக்கொருவர் சண்டையிட வேண்டுமென்ற போட்டி நடத்தப்பட்டது.

அதில் எல்லாம் சேர்த்து மொத்தம் 15 பேர் தேறினர். அந்தப் பதினைந்து பேரில் வாசுவும் அதிரூபனும் அடக்கம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? பின்பு தோற்ற மற்றவர்கள் வெளியேற்றப்பட, மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த 15 பேரும் தனிஅறைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு அடுத்தடுத்து ஒரு சன்னமான அதிர்ச்சி வந்துகொண்டு இருக்கவே செய்தது.

(தொடரும் – புதன்தோறும்) 

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கற்பக மலர்கள் (சிறுகதைப் தொகுப்பு) – எழுத்தாளர் சியாமளா வெங்கட்ராமன் – ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடு

    அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்