2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வெளியே போயிருந்த முருகேஷன் அப்போதுதான் ஷோபாவில் வந்து உட்கார்ந்தார். உடனே அவரது இரண்டாவது மகள் மெல்ல அவரருகில் வந்தாள்.
‘ அப்பா, அக்காவுக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலையாம்பா…’ என்றாள். அதைக்கேட்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் முருகேஷன். அதற்கு காரணமும் உண்டு. இதுவரை பதினைந்து ஜாதகங்கள் பார்த்தாகி விட்டது. அதில் ஒன்பது பொருந்தவில்லை. பொருந்தி வந்த ஆறில் நான்கு பேர் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார்கள். மீதம் இருந்த இரண்டில் ஒருவர் இன்றுவரை பதிலே சொல்லவில்லை. ஒருவர் மட்டும் மனைவி மகனுடன் இன்று வந்து பெண்ணை நேரில் பார்த்துவிட்டு பிறகு சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
‘ ஜானகியோட போட்டோதான் மூணு கொடுத்திருக்கோமே… அப்புறமும் பொண்ணை நேர்ல வந்து பார்த்துட்டுத்தான் சொல்வோம்னா என்ன அர்த்தம்… ‘ என்றாள் வள்ளியம்மை. முருகேஷன் அவளை சமாதானப் படுத்த முயன்றார்.
‘ பார் வள்ளி, எத்தனை ஜாதகம் பார்த்தாச்சு… சிலர்கிட்ட ஜாதகம் பொருந்தி வருதுனு சொல்லியும் அவங்க கண்டுக்கவேயில்லை… இவங்களாவது வந்து பார்த்துட்டுச் சொல்றோம்னு சொல்றாங்களே, சந்தோஷப் படு. அதோட, ஜானகிக்கும் இந்த தை வந்தா இருபத்தாறு முடியப்போவுது. இனிமேலும் தள்ளிப் போட்டுக்கிட்டே போறதுலயும் அர்த்தமில்லை. படிச்ச குடும்பம், சொந்த வீடு கார் வச்சிருக்காங்க, அப்பா பிஸினஸ் பண்றார், அம்மா ஸ்கூல் டீச்சரு, பையன் பிரைவேட் கம்பெனில வேலை பண்றார்… அறுபதினாயிரம் சம்பளம், அவங்க பொண்ணும் டீச்சர்தானாம்… தங்கமான மனுஷங்க… இதுக்கு மேல என்ன வேணும்… நம்ம பொண்ணு கட்டிக்கிட்டு அங்கே போயி சந்தோஷமா வாழ்ந்தா போதாதா நமக்கு… வரட்டும்… பேசாம இரு… ‘ என்றார்.
பத்து மணி போல வந்தார்கள். பேசினார்கள். முருகேஷனுக்கும் வள்ளியம்மைக்கும் பையனை பிடித்துப் போனது. எல்லோரும் நன்றாகவே பேசினார்கள். கிளம்பும்போது, ‘ ரொம்ப சந்தோஷம், நீங்க எங்க வீட்டுக்கு ஒரு நாளு வந்துட்டுப் போகனும்… ‘ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். முருகேஷனுக்கு அவர்கள் பேசியவிதம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ‘ ஒரு வார்த்தை, பொண்ணை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தால், நன்றாக இருந்திருக்குமே ‘ என்று ஆதங்கப் பட்டுக்கொண்டார். வள்ளியம்மையும் அப்படியேதான் நினைத்தாள்.
ஆனால், இப்போது தனம் வந்து இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடுவாள் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ந்துதான் போனார் அவர். இந்த இடம் பொருந்தி வந்தால், அடுத்த மாதமே கல்யாணத்தை முடித்துவிடலாம் என்றல்லவா அவர் நினைத்துக்கொண்டிருந்தார். தனம் இப்படி சொல்லவும் யோசித்தபடி மெல்ல பெரியமகள் ஜானகியிடமே நேராகப் போனார். அவள் அறைக்குள் லேப்டாப்பை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
‘ ஏன்மா… தனம் சொல்றது நிஜமா… ’
லேப்டாப்பிலேயே கவனவமாய் இருந்தாள் அவள். அதற்குள் அங்கே வந்த தனம். ‘ நாந்தான் சொல்றேனேப்பா அவளுக்கு இந்த இடம் பிடிக்கலையாம்… ’ என்றாள் அவரிடம்.
யோசித்தார். அவரது சொற்ப சம்பளத்தில் அவரால் குடும்பம் நடத்த முடிகிறது என்றால் அதற்கு ஜானகியின் ஆதரவுதான் காரணம். அதிலும் கொரோனா காலத்தில் இரண்டு வருடமாக அவரது கம்பெனியை இழுத்து மூடிவிட்டார்கள். பிறகு வேறொரு கம்பெனிக்கு வேலைக்குப் போனார் அதிலும் பத்தாயிரம் குறைவான சம்பளத்தில். நிலைமை அப்படியிருக்க, தன் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஜானகி. அதுதான் அவரால் குடுபத்தை நடத்த உறுதுணையாக இருந்தது. அதனால், இதுவரை ஜானகியிடம் ஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசினவரில்லை, எதிர்த்தும் பேசியதுமில்லை.
அதனால், ‘ சரிமா… என்னதான் காரணம்… ‘ என்றார் பெரிய மகளைப் பார்த்து. அவளோ இன்னும் லேப்டாப்பிலேயே கவனமாக இருந்தாள். மறுபடியும் தனமே குறுக்கே வந்தாள். ‘ அவ மனசுல வேற யாரோ இருக்காராம்… அதான்பா வேண்டாம்கறா… ‘ என்றாள்.
நாம் ஜானகியை கேட்டுக்கொண்டிருக்க, தனம் குறுக்கே வந்து ஒவ்வொருதடவையும் பதில் சொல்கிறாளே என்று கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
ஆனாலும்…அவருக்கு இந்த காதல் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் பெரியமகள் மேல் அவருக்கு அதிகமாய் பாசமும் மரியாதையும் உண்டு. அதனால், மறுத்துப் பேசமாட்டார் என்றும் தெரியும்.
ஒரு முடிவு செய்துவிட்டார். ‘ சரிம்மா… அந்த மாப்பிள்ளைதான் என்ன பண்றார்… ‘
இப்போதுதான் நிமிர்ந்து உட்கார்ந்து, வாய்திறந்தாள் ஜானகி. ‘ அப்பா… அவர் முப்பதினாயிரம் சம்பளத்துல ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பண்றார்… ‘
மறுபடியும் அதிர்ந்து போனார் முருகேஷன். ‘ என்னம்மா சொல்றே… உன்னோட சம்பளத்தைவிட இருபதினாயிரம் குறைவா இருக்கேம்மா… நாளைக்கு ஏதாவது மனஸ்தாபம் வரும்போது சொல்லிக்காட்டிக்க அதுவே ஒரு அஸ்திரமாகிவிடாதா… ’
‘ ஆகாதுப்பா… ஆனா… ‘
அவர் திடுக்கிட்டார்.
‘ அவர் நம்ம ஜாதி இல்லை. ‘ என்றுவிட்டு உடனேயே, ‘ ஆனாலும் நம்ம ஜாதியை விட குறைவான ஜாதியுமில்லை… ‘ என்றாள் குனிந்த தலை நிமிராமல்.
ஆடிப்போனார் அவர். பேச்சற்றும் நின்றார். அவருக்கு காதலே பிடிக்காது… இதில் மாற்றுஜாதி வேறு. கிச்சனுக்குள் வந்தவரை பரிவுடன் நிமிர்ந்து பார்த்தாள் வள்ளியம்மை. ‘ பெரியவ சொன்னதை கேட்டியா… ‘ என்றார்.
‘ நானும் கேட்டுக்கிட்டுத்தாங்க இருந்தேன்… சரி அவ ஆசைப் பட்டுட்டா… இதுவே சின்னவளா இருந்திருந்தா நானே அறைஞ்சிருப்பேன்… ’ என்றாள்.
இருவரும் கொஞ்ச நேரம் சத்தம் குறைவாக பேசிக்கொண்டனர். கடைசியில் மறுபடியும் பெரியமகளிடமே வந்தார், முருகேஷன்.
‘ சரிம்மா… அதுதான் உன் முடிவுனா… நான் வேறென்ன சொல்ல முடியும்… பையனை வந்துப் பார்க்கச் சொல்லு…’ என்றார். உடனே முகமலர்ந்தாள் ஜானகி. தனமோ குதூகலத்துடன் துள்ளினாள்.
மாலை மூன்று மணிக்கே அந்தப் பையன் காரில் வந்து இறங்கினான். கூட வந்த இருவரில் ஒருவர் தன் அக்காள் என்றும் இன்னொருவர் தனது நண்பன் என்றும் அறிமுகப் படுத்தினார் மாப்பிள்ளை. பெற்றோர்கள் திருச்சியில் இருக்கிறார்களாம். உடனே வரவேண்டும் என்பதால் இவர்கள் மட்டும் வந்ததாகச் சொன்னார்கள்.
வந்தார்கள், பார்த்தார்கள், பேசினார்கள். கடைசியில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். ‘ எங்களுக்கு உங்க சின்னப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு… ‘
முருகேஷனும் வள்ளியம்மையும் திகைத்தார்கள். பெரியவளை பார்க்க வந்துவிட்டு, சின்னவளை பிடிக்கிறது என்றால் என்ன அர்த்தம்.
கொஞ்சம் எரிச்சல் பட்டாலும் காலையில் வந்த மாப்பிள்ளைக்கு ஜானகியை சம்மதிக்க வைக்க இதுவும் ஒரு வாய்ப்பு என்று நினைத்தபோது சந்தோசமும் உண்டாகத்தான் செய்தது முருகேஷனுக்கு.
ஜானகி குறுக்கே வந்தாள். ‘ கொஞ்சம் இருங்க… ‘ என்று மாப்பிள்ளை வீட்டார்களைப் பார்த்து சொல்லிவிட்டு, அப்பா அம்மாவை இழுத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் போனாள்.
‘ அப்பா… அவங்க என்ன சொல்றது, எனக்கு இந்தப் பையனைப் பிடிக்கலை… ‘ என்றாள் ஜானகி. முருகேசன் அவளை நோக்கினார். அவளே சொன்னாள், ‘ ஆனா தனத்துக்கு அவரை ரொம்பவே பிடிச்சிருக்கு… சரி சொல்லிடுங்க… ‘
திடுக்கிட்டவர், ‘ என்னம்மா சொல்றே… கம்மி சம்பளம் வாங்கறார், பிரைவேட் கம்பெனி வேறே… மாற்று ஜாதி வேற… ‘ என்றார்.
குறுக்கிட்டாள், ஜானகி. ‘ அப்பா… அதனால என்னப்பா… அவ சம்பளமும் முப்பதினாயிரம்தானே… அதோட… ‘
அவள் இழுப்பதைப் பார்த்த முருகேஷன் புருவங்களை சுருக்கினார்.
‘ தனம் சொன்ன மாதிரி, அந்தப் பையன் என் மனசுல இல்லை, அவள் மனசுலத்தான் இருக்கார். ரெண்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணிட்டிருந்திருக்காங்கறாங்க… அதை அவளே நேரடியா உங்ககிட்டே சொல்லியிருந்தா இந்நேரம் குதிகுதின்னு குதிச்சிருப்பீங்க… அதான் இப்படி நாங்க பேசிவச்சு ஒரு டிராமா போட்டோம்… வந்திருக்கவங்களுக்கும் இந்த டிராமா தெரியும்…. ‘ என்று சிரித்தவள், ‘ வந்து… காலைல வந்த மாப்பிளைக்கும் கூப்பிட்டு எனக்கு சம்மதம்னு சொல்லிடுங்கப்பா… ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மூச்சுல நடத்திடலாம்… ’ என்றபடி வெட்கத்துடன் நின்றாள்.
யோசித்துப் பார்த்துவிட்டு… மனைவியுடனும் கலந்து பேசிவிட்டு… வெளியே வந்தார்.
‘ எங்களுக்கு சம்மதம் தம்பி… ‘ என்று சொல்லி காதலுக்கு எதிரியான அவரே, ‘ காதலுக்கு ஜே ‘ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings