2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆத்யவி, தன் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை, தான் வேலை பார்க்கும் எம்.என்.சி கம்பெனியின் பார்க்கிங் ஏரியாவில் லாவகமாக நிறுத்திவிட்டு அளவை துல்லியமாக காட்டிய கருநீல டெனிம் டைட் ஜீன்ஸ் அணிந்திருந்த கால்களை வெகு ஸ்டைலாக தூக்கி இறங்கினாள். தலையில் மாட்டியிருந்த விலையுயர்ந்த குளிர்க் கண்ணாடியை கண்களுக்கு கொடுத்து தன்னை யார் யார் கவனிக்கிறார்கள் என நோட்டம் விட்டாள்.
“நான் சொன்னேன்ல, வெள்ளிக்கிழமைனா ஒரே கலர்ஃபுல்லாக இருக்கும்னு” என்று இவளை பார்த்தபடியே உடனிருந்த நண்பனிடம் கிசுகிசுத்தபடி கடந்த அவனின் பேச்சைக் கேட்டு ரசித்தாள்.
‘ம்..ஹும்…. யார் எனைப் பார்க்க வேண்டுமோ.. அவன் பார்க்க மாட்டேங்கிறான்’ என நினைத்துக் கொண்டே பெருமூச்சுவிட்டபடி லிஃப்ட்டில் ஏறி ஜந்தாம் எண்ணை அழுத்தினாள்.
“ஹாய் பாந்தினி… குட் மார்னிங்” என்று சத்தமாகச் கூறியவள் அருகில் சென்று “சாமியார் வந்துட்டானா?: என கிசுகிசுத்தாள்.
“ஹாய் ஆத்தூ… இன்னிக்கி செம ஸ்மார்ட்டா இருக்கியே..!! ஜீன்சும் எல்லோ கலர் டீசர்ட் செமையா இருக்கே. போன வாரம் ட்ரெடிஷனல் இந்த வாரம் அல்ட்ரா மார்டனா? ஃப்ரைடே கேஷுவல் வேர்னு என்னைக்கு சொன்னாங்களோ அப்போதலிருந்து நீயும் டைப் டைப்பா விதவிதமா டிரஸ் பண்ணிட்டு வற்ர. ஆனா இந்த விசுவாமித்திரன் தான் தவத்தை கலைக்கிற மாதிரி தெரியல” என கிசுகிசுத்தபடியே சிரித்தாள் பாந்தினி.
“ம் ஆமா…. அந்த அழகான பெரிய கண்கள்ல ஒரு சின்ன காதல் பார்வைப் பூக்காதான்னு தவம் இருக்கேன்” என்று சிறிது சோகமாகவும், சிறிது சிரிப்புடனும் சொன்னாள் ஆத்யவி.
“ஏய் இரு, இங்க எங்கேயோ சாக்லேட் ஸ்மெல் வருதே. யாராவது சாக்லேட் கொண்டு வந்து இருக்காங்களா?” என்று சுற்று முற்றும் பார்த்தாள் பாந்தினி..
“களுக்” என்று சிரித்துவிட்டு ‘அது என்கிட்ட இருந்துதான, புது பெர்ம்யூம், சாக்லேட் ஃப்ளேவர்” என்று காதில் சன்னமாகக் கூறினாள் ஆத்யவி.
ஏதோ பேச ஆரம்பித்த பாந்தினி, எல்லாருடைய பேச்சுச் சத்தம் அடங்கிய நிசப்தம் அறிந்ததும் த்ரிக்ஷன் வருவதை கணித்து அமைதியானாள்.
ஆத்யவி தன் இருக்கைக்கு சென்று கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புகளை எடுத்துக் கொண்டு மேனேஜர் என்று பெயரிடப்பட்ட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
“குட் மார்னிங் சார்” என்று புன்னகையுடன் த்ரிக்ஷனைப் பார்த்துக் கூறினாள். பதிலுக்கு வணக்கத்தைத் தெரிவித்தவன் வேலையைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
எல்லோரும் தன்னை மறந்து அந்த இடத்து சூழ்நிலையை மறந்து, வெளிநாட்டு மக்களின் மருத்துவ காப்பீட்டு கணக்குகளில் மூழ்கினர்.
மதிய உணவு இடைவேளை.
“ஏதாவது சின்ன ரியாக்ஷனாவது தெரிஞ்சுதா?” என்று கேட்டபடியே பாந்தினி சீஸ் பாஸ்தாவை முள் கரண்டியால் எடுத்து சில்லி சாஸில் தோய்த்தாள்.
“எங்க….? ரூமுக்குள்ள கால் வெச்சதும், டாக்குமெண்ட் ரெடியா? ஈ.மெய்ல் அனுப்பிச்சாச்சா? இதே பேச்சுத் தான். ஐயா…. நீ காதல் பார்வை கூட பார்க்க வேண்டாம், சினேகமா ஒரு ஸ்மைல்… ஒன்னு கிடையாது. சரியான ரோபோ… சிறிது இடைவெளி விட்டு கூறினாள். ஆனாலும் எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு… ஏன்னு தெரியல. பெண்களை அவர் கண்டுக்காம இருக்கிறதுதான் எனக்கு பிடிச்சிருக்கா….ன்னு தெரியலை. கல்யாணம் பண்ணிக்கிட்டா அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும் இல்லைன்னா…. பேசாம பேச்சுலராவே காலத்த ஓட்ட வேண்டியது தான். இந்த முடிவுல தான் நான் இருக்கேன்” என்று தீர்மானமாகச் சொன்னாள் ஆத்யவி.
“அப்போ, ஒரு லெட்டர்ல உன்னோட மனசைக் கொட்டிக் குடுத்துடு. நானும் நாலு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். ஒரு முடிவு தெரிய வேண்டாமா? உங்க வீட்டுல வேற உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. த்ரிக்ஷனுக்கு மாட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ண சொல்லி அவங்க அம்மா போன்ல சொன்னாங்கன்னு நம்ம கொலீக் அதிதி நேத்து என்கிட்ட சொன்னா” என்றாள் பாந்தினி.
“ஓ ஓ.கே… இன்னிக்கு ப்ரபோஸ் பண்றேன்” சொல்லும் போதே என்ன பதில் கிடைக்குமோ?என்று மனது வேதனைப்பட கண்ணில் நீர் தழும்பியது.
பாந்தினி ஆதரவாக அவள் கையைப் பற்றி, “உண்மை அன்பு என்றும் தோற்காது” என்றாள்.
அன்று மாலை வேலை முடித்து, தான் எழுதிய கடிதத்தை த்ரிக்ஷனின் அறையில் அவன் அங்கு இல்லாத நேரம் பார்த்து மேஜையில் வைத்துவிட்டு வேகமாக வெளியேறினாள்.
அறைக்கு வந்த த்ரிக்ஷன் பெர்சனல் என்று எழுதப்பட்டு இருந்த அந்த கவரை திறந்து உள்ளே இருந்த காகிதத்தை எடுக்கும் நேரம் தொலைப்பேசி அழைக்க, அதில் பேசிக் கொண்டே லெட்டரை மடித்து பான்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான். வீட்டிற்கு வந்து இரண்டாவது மாடியில் இருக்கும் தன் தாயைக் காண விரைந்தான்.
மூட்டு அறுவை சிகிச்சை ஆகி வீல்சேரில் அமர்ந்திருக்கும் தன் தாயிடம் நலம் விசாரித்தான். இரவு உணவைத் தானே தயார் செய்து தாயுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு நிறைய பேசிவிட்டு, அவர் உறங்கியதும் உதவிக்கு வைத்திருந்த செவிலியிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான்.
அப்பொழுது தான் ஞாபகம் வந்து… பான்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கடிதத்தை எடுத்துப் படித்தான்.
“தங்களுடைய நல்ல குணத்தால் ஈர்க்கப்பட்டு தங்களை நான்கு வருடங்களாக மனதார விரும்புகிறேன். தங்களின் வாழ்க்கைத் துணையாக வருவதற்கு எனக்கு அனுமதி கிடைக்குமா..?
இப்படிக்கு
தங்கள் அன்பைப்பெற்றிட காத்திருக்கும் ஆத்யவி”
கடிதத்தைப் படித்தவுடன் சுரீரென்று எழுந்த கோபத்துடன் ஒரு காகிதம் எடுத்து எழுதத் தொடங்கினான்.
“மிஸ்..ஆத்யவி,
மன்னிக்கவும், தாங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு மிகவும் நன்றி. நீங்கள் எதிர்பார்க்கும் நபர் நானல்ல. தங்களைப் போன்று ஆண்களை கவரும்படி ஆடைகள் அணிந்து, பார்க், பீச், சினிமா..என அலைந்து திரியும் மாடர்ன் மகாலெஷ்மிகள் மேல் எனக்கு விருப்பமில்லை. தங்களுக்கு ஏற்றவர் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்”
என எழுதி வைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை நெடுஞ்சாலை சிக்னலில் த்ரிக்ஷன் காரில் காத்திருக்கும் போது எதேச்சையாக இடதுபுறம் நடைபாதையில் நின்றிருக்கும் பைக்கின் மேல் பார்வை செல்ல, ‘இது ஆத்யவியுடைய பைக் தானே… எங்கே அவள்’ என்று தேடினான்.
திடீரென தனக்கு முன்னால் இருந்த வண்டிகளில் சலசலப்பு அதிகமாக, ஏதோ விபத்து என ஊர்ஜிதமானது. காரிலிருந்து இறங்கி நடைபாதையிலிருந்த கடையின் படிகளில் ஏறி என்னவென்று பார்த்தான்.
அங்கே…. அடிபட்டு இரத்தம் வழிய இருக்கும் ஒரு வயதானவரை மடியில் போட்டு முதலுதவி செய்து கொண்டிருந்தாள் ஆத்யவி. ஆம்புலன்ஸ் வந்ததும் எல்லோரும் விலகிக் கொள்ள தானே அவரை தோளில் சுமந்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி தானும் அமர்ந்து கொண்டாள்.
சிவப்பு சிக்னல் மாறியது… இவன் மனமும் மாறியது. தான் எழுதிய கடிதத்தை கிழித்துவிட்டு ஆத்யவிக்கு சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதினான் என்று சொல்லவும் வேண்டுமா?
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை