in ,

காதலர் தினம் (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நான் சுரேஷ் எனக்கு, 36 வயசு ஆச்சு சார், இந்த வேலண்டைன் டேனு இந்த காலத்துப் பசங்க, பொண்ணுங்க பண்ற கூத்து சகிக்க முடியலை. பிப்ரவரி மாசம் பிறக்கறதுக்கு முன்னாலயே         எத்தனை முன்னேற்பாடுகள்.கவிதைகள் எழுதறதும், பரிசுகள் வாங்கி கிப்ட் பேக் பண்ணி வைக்கறதும், சில பசங்களுக்கு யாருக்கு கொடுக்கப் போறோம்னே தெரியாது.

எனக்கு காதல் ஊதல்ல சுத்தமா நம்பிக்கை இல்லை. அம்மா, அப்பா பாத்து வச்ச இந்த சுசீலாவோட    நான் இந்த 8 வருஷமா வாழ்க்கை நடத்தலையா என்ன. அப்பப்ப கொஞ்சம் சண்டை, கோவம், சமாதானம், கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா, மல்லிகைப்பூ, நடராஜா தியேட்டர்ல ஈவ்னிங் ஷோ,  குழந்தையை தூங்க வச்சிட்டு நைட் ஷோ.

அப்பறம் என்ன, ஆஸ்பத்திரி அது இதுனு அலைஞ்சு ரெண்டாவது பொண்ணுக்கு வழி வகுத்தாச்சு. படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தேள்னு ஏதோ ஓட்டியாச்சு இதுவரை.காதல்னா என்னனு தெரிஞ்சிக்கவே இல்லை. இவ்வளவும் எதுக்கு சொல்றேன்றேளா?

ஜனவரி 1, புது வருஷம் பிறந்ததா, எந்தெந்த ராசிக்கு நல்லது கெட்டதுனு TV ல ஜோதிட சிரோன்மணி சொல்லிண்டிருந்தார். காத்தாலை 7.30 இன்னிக்கும் ஆபீஸ் போகணும் லீவு இல்லை.

காபி டம்ளர் ஒரு கைல, இண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு கைல, காது TVல, நடு நடுவுல பாத்ரூம்ல வாளில வெந்நீர் நிறையறதானு ஒரு பார்வையுமா அஷ்டாவதானம் பண்றப்ப, நம்ம சிரோன்மணி, விருச்சிக  ராசிக் காரர்களேனு முழங்கினார். பேப்பரை கீழே போட்டேன், காபி டம்ளர் டீபாய் மேல, அஷ்டாவதானம் போய் சகல அறிவும் TVல அடுத்து அவர் சொல்றதை கேக்க கூர்மையானது.

எனக்கு ஒண்ணும் ஜோசியத்துல நம்பிக்கை இல்லை, புது வருஷம் முத நாள் ஏதோ பெரியவர்            டி.வி. ல மெனக்கெட்டு சொல்றாரேனுதான் கவனிச்சேன்.”விருச்சிக ராசிக் காரர்களுக்கு இந்த            நவீன வருடம் மிக ஸ்லாக்யமாக உள்ளது. எல்லா விதத்திலும் நன்மையே. முக்கியமாக குரு பகவான் சந்திரனில் பிரவேசிப்பதால் திருமண யோகம், காதல் கை கூடல், புதிதாக காதலில் விழுதல் போன்றவற்றிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.”

இத்தனை வருஷத்துக்கு அப்பறம் என் மனசுலயும் சின்ன நப்பாசை. அவசரமா குளிக்கப் போனேன்  வாளி நிறைஞ்சு வழியற சத்தம் கேட்டு.

குளிக்கறப்பவே மனசுல ஏதேதோ எண்ணங்கள். இந்த ஜோசியம், நட்சத்திரம், கிருகம் எல்லாம் உண்மையா இருக்குமோ? ஒரு வேளை நம்ம வாழ்க்கைல ஒரு புதுக் காதல் வருமோ?                                 சே சுசீலாக்கு துரோகம் பண்ணக் கூடாதுப்பா.

ரெடியாகி சுசீலாக்கு அவசரமா பை சொல்லிட்டு , பைக்கை எடுத்து ஸ்டார்ட் பண்றப்ப, கண்ல பட்டது ,  எங்க வீட்டுக்கு எதுத்தாப்பல ஒரு சின்ன பங்களா.ஆபீசுக்கு புறப்படற அவசரத்துல கூட யாரோ       என்னை அந்த வீட்டுக்குள்ள இருந்து குறுகுறுனு பாக்கற மாதிரி ஒரு உணர்வு.

ஒரு வாரம் விசேஷம் ஒண்ணுமில்லாம போச்சு. ஆனா தினம் ஆபீஸ் போறப்ப யாரோ பாக்கற மாதிரி ஃபீலிங் இருக்கு. இந்த ஞாயித்துக்கிழமை இதைக் கண்டுபிடிச்சிடணும்னு தீர்மானம் பண்ணினேன்.

ஆனா இது எதையும் சுசீலா கிட்ட சொல்லலை. குளிச்சிட்டு நீட்டா டிரஸ் பண்ணிட்டு கண்ணாடில இப்படியும் அப்படியுமா பாத்து பெர்ஃப்யூம் பாட்டில கைல எடுக்கறப்ப சுசீலா பின்னால நின்னு என்னையே பாக்கறது தெரிஞ்சது.

என்னனு திரும்பினேன், “ஒண்ணுமில்லை தடபுடலா கிளம்பறீங்களே ஆபீஸ் இருக்கா , ஏதாவது பங்ஷனா?”

“ஒண்ணும் இல்லையே சும்மாதான், முடிஞ்சா பைக் சர்வீஸ் பண்ணணும்”

“ஓ சரி சரி,முகத்துல பவுடர் திட்டா தெரியறது,சரி பண்ணிக்கோங்க” கிண்டல் தெரிஞ்சது குரல்ல.

நான் ஒண்ணும் பேசலை, மனசுல ஏதோ கள்ளம் இருக்கே. அப்படி இப்படி கொஞ்சம் நேரம் கடத்திட்டு     சுசீ சமையலறைல பிசியா இருக்கறப்ப, மெதுவா எதிர் பங்களா நோக்கி நடந்தேன்.

காலிங் பெல் அழுத்தினேன், கதவு உடனே திறந்தது, கதவை கொஞ்சமா திறந்து ஒரு வெட்கப் புன்னகையுடன் நின்றது ஒரு இளம் பெண், மிக சாதாரண உடையில்.

நான், “ வீட்ல சார் இல்லையா?”

ஒரு நமுட்டுச் சிரிப்புடன்,”எந்த சார் வேணும் உங்களுக்கு?”

வெளில நேம்பிளேட் ஞாபகம் வந்தது, ”சந்திரசூட் சார்தான் வேற யார்”

“ஓ, அப்பாவும் அம்மாவும் மதுரைக்கு போயிருக்காங்க, நானும் எங்க மெய்ட் காவேரியும்தான் வீட்ல, உள்ளே வாங்க, எதுத்த வீடுதானே நீங்க”

உள்ளே போய் ஹால் சோபால உக்காந்தேன். வேலைக்காரப் பொண்ணு ஒரு பிளேட்ல ஜூஸ் கிளாஸ் கொண்டு வந்தா.

அந்த இளம் பெண் எதிரில் அமர்ந்தாள். “தினம் நீங்க ஆபீஸ் போறப்ப மாடி ஜன்னல்ல இருந்து பாப்பேன், உங்க பைக் அழகா இருக்கு”

“ பைக் மட்டுமா”

“ஐய்யே உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சுனு தெரியும், உங்க வொய்ஃப் கூட அழகுதான்”

அவள் தலையை சாய்த்துக் கொண்டு பேசிய விதம் மனசை மயக்கியது.

“நீங்க படிக்கிறீங்களா”

“ஜர்னலிசம் டிகிரி பண்ணியாச்சு,மேலே என்ன பண்றது தெரியலை.”

“ஓ சரி, நான் எதுக்கு வந்தேன்னா, ஒரு டபிள் எண்ட் ஸ்பானர் வேணும் பைக் கழட்ட, இருக்குமானு கேக்கதான்.”

“ஓ அவ்வளவுதானா? இருங்க மாடி வளைவுக்கு கீழே டூல்பாக்ஸ் இருக்கு நீங்களே பாருங்க”

“ஓ அவ்வளவுதானா? இருங்க மாடி வளைவுக்கு கீழே டூல்பாக்ஸ் இருக்கு நீங்களே பாருங்க”

குனிந்து பாத்து கைக்கு கிடைச்ச ஸ்பானரை எடுத்து திரும்பினப்ப பின்னால் நின்ற அந்த பெண்ணின் உடல் என் மேல் உராய்ந்து ஒரு கிறக்கத்தை கொடுத்தது.

“வித்யாக்கா உங்களுக்கு ஃபோன்னு” அந்த வேலைக்கார பொண் வந்தாள்.

அந்த வித்யா என்னைப் பாத்து, “கொஞ்சம் இருங்கனு உள்ளே போனாள்.”

நான் தயங்கி நின்னேன், உடனே வந்த வித்யா,” உங்க பேர் சொல்லலையேனு”கேட்டா சொன்னேன்.

“ஸ்பானர் திரும்ப கொடுக்க எப்ப வருவிங்க, 3 மணிக்கு மேல வந்தா நான் தனியாதான் இருப்பேன், பேசலாம்”

என் உள்ளம் படபடனு அடிச்சிண்டது, “ ஓ வரேன்னு” அவளை கண் இமைக்காம பாத்துண்டே    சொல்லிட்டு அவசரமா திரும்பினேன்.

அவளோட அழகான கன்னக்குழியும், உதடு சுழித்து புன்னகை பூத்ததும் என் கண்கள் வழியே          மனதில் நிறைந்தது.

நான் வீடு திரும்பியதை சுசீ பாத்துண்டுதான் இருந்தா, ஒண்ணும் கேக்கலை. நானே “ஸ்பானர் வேணும்னு எதிர் வீட்ல கேக்கப் போனேன், சரியா கிடைக்கலை கிடைச்சதை பொறுக்கிண்டு வந்தேன்.”

சுசீ,”அந்த வித்யா அழகா இருக்கா இல்லை?”

“ யாரு, ஓ அவ பேரு வித்யாவா சரியா பாக்கலை”

நான் சுசீலாவோட முகத்தைப் பாத்தேன் அதில் கேலி தெரியறதானு.

அன்னிக்கு பூரா ஒரே தவிப்பு 3 மணி எப்ப ஆகும்னு. இதுல என்ன கஷ்டம்னா சுசீக்கு தெரியாம             என் உணர்ச்சிகளை முகத்துல காட்டாம இருக்கறது. ஆச்சு, சரியா 3 மணி,நல்ல வேளை சுசீ தூங்கறா. எதுத்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தின அடுத்த நொடி கதவு திறந்தது.

வித்யா புன்முறுவலுடன் வரவேற்றாள். அந்த கன்னக் குழியை விரலால் தொட கை பரபரத்தது.             அது தெரியும்ன்ற மாதிரி அவள் புன்னகை மேலும் விரிந்தது.

“இங்கேயே உக்காரலாமா, இல்லை…”

“இல்லை, இந்த ஸ்பானரை திரும்ப கொடுத்துட்டு போகலாம்னுதான்……”

“ பரவாயில்லை சார்,எனக்கு தெரியும் உக்காருங்க. நான் சூப்பரா ஃபில்டர் காபி போட்டுத் தரேன்”   சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்ன மாதிரி தெரிந்தது.

அவள் சமையலறைக்கு போனவுடன் நான் சுற்றிப் பார்த்தேன். சுவற்றில் அவளுடைய பெற்றோருடன், தனியாக, ஒரு நாய்க் குட்டியுடன்னு பல ஃபோட்டோக்கள்.எனக்கே ஒரு மாதிரி உறுத்தலா இருந்தது.    நான் என்ன பண்றேன், எதுக்காக மனசுல இப்படி ஒரு திருட்டுத்தனம்.ஆனாலும் இந்த புதிய எண்ணங்கள் மாற்றங்கள் இப்ப தேவையா இருக்கே.

ரெண்டு கப் காபியோட அவள் வந்தாள், அருகில் அந்த பெரிய சோபாவில் அமர்ந்தாள். “காபி குடிச்சுப் பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லணும் சரியா”

“கொண்டு வரும் போதே ஹால் பூரா காபி மணம் பரவுதே”

“சரி அப்பறம், சொல்லுங்க, ஏதோ சொல்லணும்னு நினைக்கறீங்க வார்த்தைகள்ல இன்னும் வரலையே”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ ரொம்ப அழகா இருக்கே”

கடகடவென சிரித்த வித்யா,”அழகா இருக்கேனா,ஒண்ணுமில்லையா”

அவள் கன்னக்குழிகள் மீண்டும் என்னை கவர்ந்து இழுத்தது.

கஷ்டப் பட்டு கைகளை அடக்கினேன்.

ஏதேதோ பொதுவா பேசினோம், சரி நான் பிறகு உங்களை பாக்கறேன்னு எழுந்தேன்

அவளும் எழுந்து கையை நீட்டினாள்,” நைஸ் மீட்டிங் யூ”

ஆர்வத்துடன் அவள் கைகளைப் பற்றினேன் சற்றே அழுத்தமா.

“உஸ்ஸ் ரொம்ப முரடு போல இருக்கே”

“சாரி,சாரி ஏதோ தெரியாம…”

“பரவாயில்லை ஐ லைக் இட்”

மிதந்து வந்தேன், பறந்து வந்தேன் மனசெல்லாம் பஞ்சு மாதிரி ஒரு இனிப்பு பரவ… போங்கப்பா அதெல்லாம் எழுத வராது.

அன்றிலிருந்து தினம் ஆபிஸ் புறப்படறப்ப எதிர் வீட்டு மாடி ஜன்னலை சுசீக்கு தெரியாம பாப்பேன். திரைக்கு பின்னாலிருந்து அந்த தளிர்க் கரங்கள் அசைந்து வழி அனுப்பும். என் மனம் எப்போதுமில்லாத அளவு குதுகலத்துடன் குதித்தாடியது.

இன்னிக்கு பிப்ரவரி 13, ஓ நாளைக்கு காதலர் தினம் வருதே, ஏதாவது சின்ன கிப்ட் வாங்கி கொடுத்து உள்ளத்தை திறந்து காட்டணும், அந்த கன்னக்குழியில் ஆசை முத்தமிட அனுமதி கோரணும். ஆபிஸ் லன்ச் டைம்ல அந்த பெரிய மால் உள்ளே போனேன். என்ன வாங்கலாம்? யோசிக்கறப்பவே சுசீயை      அந்த பிராண்டட் வாச் கடைல பாத்தேன், அவ கண்ல படாம மறையறதுக்குள்ளே பயம் மனசை      கவ்விக் கொண்டது.

எதையோ வாங்கிக் கொண்டு சுசீ வெளியே போனவுடனேதான் மூச்சு நிதானமா வந்தது.

அந்த நகைக்கடைல போய் ஒரு அழகான மோதிரம் வாங்கி கிப்ட் பேக் பண்ணச் சொல்லி, வாங்கினேன். முன் ஜாக்ரதையா, பில், அந்த கடைப் பை எல்லாத்தையும் டஸ்ட் பின்ல போட்டேன். அந்த சின்ன பேக்கிங் கைக்குட்டையில் சுத்தி பேண்ட் பைக்குள் போனது.

சாயந்தரம் ஏதோ ஒரு குற்ற உணர்வோடயே வந்தேன். கப்போர்ட்ல

பத்திரமா கர்சீப் மூட்டைய ஒளிச்சு வச்சேன். வச்சிட்டு சுசீயோட புடவை கொஞ்சம் வெளியே தொங்கறதை பாத்து சரி செய்யப் போனா அது கண்ல பட்டது. ஓ எனக்கு சர்பிரைஸ் கிப்ட் பண்ண வாட்ச் வாங்கியிருக்கா போல. ஒரு ஆர்வத்தில் பாக்கை பிரிச்சு பாத்தேன். அந்த டப்பால அழகான கேசியோ வாட்ச், டப்பா உள் சைட்ல “ to my dear Visu”னு சுசீயோட கையெழுத்து.

எனக்கு குப்னு நெஞ்சு அடைத்தது, யாருக்காக வாங்கி இருக்கா.கண்ணீர் முட்டிட்டு வந்தது.

ராத்திரி சாப்பிட முடியலை, தொண்டை அடைத்தது தலைவலினு படுக்க போயிட்டேன்.தூக்கம் வரலை.மனசெல்லாம் வலி, குழந்தைகளை தூங்கப் பண்ணிட்டு சுசீ படுக்க வந்தது தெரிந்தது.

கண்ணை மூடிக் கொண்டு தூங்குவதாய் பாவனை பண்ணினேன்.

காலை 6 மணி என்மனதில் அந்த வித்யா இல்லை இப்ப, என் சுசீயா இப்படின்ற வலி மட்டும்தான் இருந்தது.

சுசீ காபி கலக்கட்டானு வந்தா.”ஏய் சுசீ இங்க வா”

“என்ன, சொல்லுங்க”

“உனக்கு என்ன குறை வச்சேன்? யாருக்கு கப்போர்ட்ல இருக்கற கிஃப்ட் பாக், உண்மையை சொல்லு”

“ம், அதை பாத்துட்டீங்களா? இருங்க வரேன்”

உள்ளே போனவ மஞ்சள் நாலு மூலையில் தடவிய ஒரு பழைய காகி கலர் கவரை கொண்டு வந்து        என் மடியில் போட்டாள்.

அதுல என்னோட, சுசீயோட ஜாதக பேப்பர்தான் இருந்தது. அவள் முகத்தை ஏறிட்டுப் பாத்தேன்.

“நம்ம ஜாதகத்தை நல்லா பாருங்க, உங்க விருச்சிக நட்சத்திரம்தான் எனக்கும்.ஜோதிட சிரோன்மணி புதுவருஷ பலன் சொல்றப்ப உங்க முகத்தை பாத்தேன்.உங்களுக்கு புதுசா காதல் வரலாம், எனக்கு      வரக் கூடாதா? அதான் விசுவை நான் லவ் பண்றேன்” கண்கள் பளபளக்க சுசீ என்னைப் பாத்தா.

எங்க கல்யாண லக்னப் பத்திரிகையும் அந்த கவர்ல இருந்தது,

அதை எடுத்து என் முகத்துக்கு எதிரே நீட்டினாள்.

கருநீல மசியில் எழுதிய பழைய எழுத்துக்கள்,” சுசீலா என்கிற என் புத்திரியை, சுரேஷ் என்கிற விசுவநாதனுக்கு பாணிக்கிரகணம் செய்து கொடுப்பதாய் பெரியோர்களால்…………..

என் கண்களும் கலங்கியது என் சுசீயை வாரி அணைத்துக் கொண்டேன். சுசீயோட கன்னத்திலும்தான் அழகா குழி விழறது. ரெண்டு கையால அவள் முகத்தை ஏந்தி அந்த கன்னக் குழில முத்தமிட்டேன், உப்பு கரிக்கறதே.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 4) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 23) – தி.வள்ளி, திருநெல்வேலி