in ,

காதலாகி (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“எமாவ்… நீச்சத் தண்ணி குடிச்சிட்டேன்… இந்த ஊரு பொண்டுகளோட சேந்து போயி விறகு வெட்டிட்டு வாரேன்… மதியம் ஒரு புட்டு எடுத்து வையி….” என்றாள் செவ்வந்தி.

“ஆமா… உனக்கு ஒரு புட்டு எடுத்து வச்சுட்டு பத்து நாள் பட்டினி கிடக்கிறதா….? போடி… சிறுக்கி மவளே” என்று மஞ்சம்மா குரலால் பாய

“சரி சரி… அதுக்கு ஏன் உன்னையே வெசவு வைக்கற…” என்றபடியே சிரித்துக் கொண்டு கையில் இந்த குறு அருவாளை உள்ளங்கையில் தட்டியப்படியே குதித்துக் கொண்டு ஓடினாள்.

“ஏ….புள்ள செவ்வந்தி சீலையோட முந்திய இருக்க கட்டிக்க … இந்தா இந்த துணியை தலையில கட்டிக்க …மயிருல முள்ளு மாட்டிற போகுது…சுத்தி முள்ளு காடு…. பாத்து நடந்து வா …என்ன…. நீ ..இந்த ஊருக்கு புதுசு இல்ல அதான் சொல்லுதேன்… என்றாள் அருகிலிருந்த குடிசையிலிருந்து வந்த தாமரை.

இவர்கள் வயதையொத்த பெண்கள், மற்றும் நடுத்தர வயது பெண்மணிகளுடன் சேர்ந்து நடந்தனர். முள்ளுக்காட்டைக் கடந்ததும், பூவரசன் மரங்கள் நிறைந்த வனம் வந்தது. எல்லோரும் விறகு வெட்டத் தொடங்கினர்.

“ஏலே”… தாமரை.. அந்த புள்ளைட்ட சொல்லிட்டியா” என்று காதில் கிசுகித்தாள் அருகில் வந்த வள்ளி.

“இப்பத்தையே பயமுறுத்த வேணாம்… பொறவு சொல்லிக்கலாம்.” என்றாள் தாமரை.

“நான் எதுக்கும் பயந்துக்க மாட்டேன் என்னன்னு சும்மா சொல்லுங்க” என்றாள் செவ்வந்தி.

“அது ஒன்னும் இல்ல…. நீ எங்க கூடவே வா… தனியா எங்கேயும் போயிராத… இங்க சிறுத்தை நடமாட்டம் இருக்கு….அதான்”

“ஓ…அப்படியா” என்றாள் சிறிது பயந்த கண்களுடன்.

ஒரு மாதமாகியது. அந்த காடு முழுவதும் பரிச்சயமானது செவ்வந்திக்கு.

ஒருநாள்…. விறகு வெட்டிவிட்டு முள்ளுக்காட்டை கடந்து வரும் போது , “ஐயயோ…இடது காதுல போட்டிருந்த கம்மலக் காணோமே…ஆத்தா…விளாசிப்புடுமே…” என்று பதறினாள் செவ்வந்தி.

“ஒன்னை யாரு கம்மல் போட்டுட்டு வரச் சொன்னது?….எங்க விழுந்திருக்குமோ….? பொன்னா…?.உனகெல்லா என்னத்துக்கு கம்மல் வாங்குது உங்கம்மா….? போ..போய் தேடு…நா…இங்கனயே…. நிக்கேன்…” என்று கன்னத்தில் இடித்தாள் தாமரை.

நடந்து வந்த பாதை வழியாக பார்த்துக்கொண்டே முள்ளுக்காட்டை தாண்டிவிட்டாள். குனிந்து கொண்டே வந்தவள்… தான் வெட்டிய மரத்தின் அடியில் கம்மல் பளபளத்ததைக் கண்டு “கெடச்சுருச்சு…கெடச்சுருச்சு” என்று குதித்து ஆர்பரித்தாள்.

எடுத்து காதில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். யாரோ…பின்னால் நடந்து வரும் சத்தம் கேட்டது போல இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். இப்பொழுது சத்தம் இல்லை.

யோசித்தபடியே வந்தவளின் சீலையின் முந்தி இழுக்கப்பட்டது. முள்ளில் மாட்டியிருக்கும் என்று நினைத்துத் திரும்பியவள் திகைத்தாள். அங்கே…இளமை ததும்பும் அழகுடன் நின்றிருந்தவன் இவளின் சேலையைப் பிடித்துக் கொண்டே இவளைப் பார்த்துச் சிரித்தபடி ” சேலை முள்ளுல மாட்டியிருக்கறது கூட தெரியாமப் போற….” என்றான்.

சுரீரென்ற கோபத்துடன் ” “மாட்டியிருந்தா உனக்கென்ன..? எடுத்துக்க எனக்குத் தெரியும்” என்று அவன் கைப்பிடித்திருந்த முந்தியை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

அவள் பதிலால் சிறிது கோபம் கொண்டவன் பிறகு முகத்தை மாற்றி, “ஏதோ..தனியா இருக்கியே…சிறுத்தை வந்துடப் போகுதே…னு உதவி செய்ய வந்தேன்” என்றான்.

“ஓ…அப்படியா…உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி” என்று கையை அடித்துக் கும்பிட்டாள். அவளைக் கண்களால் முறைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

வேகமாக நடந்து வந்த செவ்வந்தி தாமரையிடம் நடந்ததைக் கூறினாள்.

“ம்…அதா.. .தனியாளாப் போகக் கூடாது. சீக்கரமா வா…” என்று ஓட்டமும் நடையுமாக அவளை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

“ஏன் தாமரை…இப்படி பயப்படற..அவனால என்ன செய்ய முடியும்? ….நம்மக்கிட்ட தான் அருவாளு இருக்கே….தப்பா நடந்தா சொருகிட வேண்டியது தான்.” என்று சொல்லி சிரித்தாள் செவ்வந்தி.

“தைரியமா இருக்கறது நல்லது தான்…ஆனா…பயப்பட வேண்டியதுக்கு பயந்து தான் ஆகணும்”.என்ற தாமரையிடம் எதுக்காகப் பயப்படனும்? எனக் கேள்வி கேட்டாள் செவ்வந்தி.

தன் வீடு வந்ததும், தாமரை செவ்வந்தியை அமரவைத்து கதவை சாத்திவிட்டு மெல்லியக் குரலில் பேச ஆரம்பித்தாள்.

“இங்கப் பாரு செவ்வந்தி. நாம பொம்பளைங்க… என்ன இருந்தாலும் ஆம்பளைங்க நமக்கு மேல தான். நாம தான் ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும். நம்ம மனசு தைரியமா இருக்கலாம்…ஆனா உடம்பு…? அத காப்பாத்திக்க கொஞ்சம் அடங்கித்தான் போகணும். மானம் போச்சுன்னா திரும்ப வராது. ஆம்பளைங்க துடைச்சிட்டு போயிருவாங்க, அவங்களுக்கு ஒரு பாதகமுமில்லை. நமக்குத்தான் சேதாரம்” என்று சொல்லிவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்து, “புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். நான் ஏன் இவ்வளவு தூரம் அழுத்தமா சொல்றேன்னா… உன்ன மாதிரிதான் முத்தழகியும் அந்த பிரபுகிட்ட வீராப்பு காட்டினா. அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சு மயங்க வச்சு காரியத்த சாதிச்சுக்கிட்டான். அவ ஏமாத்தத்துல தூக்கு போட்டுகிட்டா” என்று சொல்லும்போதே கண்ணீர் பெருகியது தாமரைக்கு.

அதைக் கேட்டதிலிருந்து மனம் கொந்தளிக்க ஆரம்பித்தது செவ்வந்திக்கு/

“ஏன்…? அநியாயத்தை தட்டிக் கேட்க ஒரு ஆம்பள கூட இந்த ஊர்ல இல்லையா…?” என்று கேட்டாள்.

“பணம் பத்தும் செய்யும். தர்மத்தைக் கூட தரைமட்டமாக்கிவிடும்” என்றாள் தாமரை வெறித்த கண்களுடன்.

அன்றிலிருந்து செவ்வந்தியின் மனதில் பிரபுவை தண்டிக்கும் எண்ணம் ஆழமானது.

அன்று.. குளத்தில் துணிகளைத் துவைத்துவிட்டு வெகுநாள் ஆசையை தீர்க்க எண்ணி சுற்றி யாரும் இல்லாததால் சேலையை அவிழ்த்து குளக்கரைக் கல்லில் வைத்துவிட்டு மார்பில் ஏற்றிக் கட்டிய பாவாடையுடன் குளத்தில் நீந்தினாள்.

அவளை மரத்தின் பின்னால் ஒளிந்தபடி பார்த்துக் கொண்டிருந்த பிரபு அவளின் சேலையை எடுத்துக்கும்போது… பார்த்துவிட்ட செவ்வந்தி கடகடவென சிரித்தாள்.

“சரியான குழந்தப்புள்ளயா இருக்க…?”

“நான் குழந்தையா… என்னைப் பத்தி உனக்கு சரியாத் தெரியாது. நான் ரொம்ப மோசமான ஆளு….”

“அதுதான் சொன்னேன்…குழந்த தான் உண்மையைப் பேசும். நீ உன்னைப் பத்தி மறைக்காம சொல்றியே…” என்று சிரித்தாள்.

அவள் பேச்சின் ஏனளத்தில் அவனுக்கு கோபம் ஏறியது. கரையில் வந்த அவளை இழுத்து அணைத்தான்.

“என்ன…? என்னை கெடுக்கப் போறியா? நான் என்னவோ உன்னை பெரிய வீரன்ல நினைச்சேன். சின்னப் பயபுள்ள தான் நீ” என்று சொல்லி சிரித்தாள்.

“ஏய் உன்னை… என்ன செய்கிறேன் பாரு” என்று தரதரவென இழுத்துக்கொண்டு அருகிலிருந்த புதருக்குள் தள்ளிவிட்டு மேலே பாய்ந்தான்.

எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவனை அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டாள். அவளின் செயல் அவனை ஏதோ செய்தது. மனது அதிர்ந்தது. திகைத்து அவளை விட்டு விலகினான்.

“என்னை ஊரறிய கண்ணாலம் கட்டிக்கோ…. அப்பத்தான் உன்னை வீரன்னு ஒத்துக்கிருவேன்.” சொல்லிவிட்டு நடந்தவள் திரும்பி பார்த்துச் சொன்னாள்

“அது உன்னால முடியவே முடியாது, ஏன்னா நீ ஒரு குழந்தப்பய” சொல்லிவிட்டு சிரித்தபடி ஓடிச் சென்று விட்டாள்.

அவளுடையப் பேச்சும், அவள் தந்த முத்தங்களும் அவன் மனதைப் பிசைந்தது. மூளை குழம்பியது. அன்றிலிருந்து தொடர்ந்து ஒருவாரம் அவன் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது. அவளை அடக்க வேண்டும் என்று ஆத்திரம் எழுந்தது. கூடவே இது குழந்தைத்தனமா என மனம் குமுறியது.

மறுநாள் அவளைத் தேடினான். அவள் ஊரிலில்லை என்ற செய்தி அறிந்து , தன்னிடம் பயந்து கொண்டு தான் ஊரை விட்டே ஓடிவிட்டாள் என கர்வம் கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில் எந்த பெண்ணிடமும் வாலாட்ட மனம் விரும்பவில்லை. எதிலும் நாட்டமில்லை. எதுவும் பிடிக்கவில்லை. தனிமையில் படுத்தே கிடந்தான். செவ்வந்தியை காண வேண்டுமென மனம் அடம்பிடிக்க ஆரம்பித்தது.

அதை அடக்க அவனால் முடியவில்லை. நேராக தன் தந்தையிடம் சென்று செவ்வந்தியை திருமணம் செய்ய சம்மதம் கேட்டான். இது நடக்கவே நடக்காது என பதில் கிடைத்தது.

அவளை அழைத்துக்கொண்டு வேறு எங்காவது சென்றுவிடலாமென முடிவெடுத்தான். அவள் எங்கு சென்றாலென்று யாருக்கும் தெரியவில்லை. மனம் வேதனையடைந்தது.

நாட்கள் மாதங்களானது. செவ்வந்தியின் நினைவால் தன் நினைவிழந்து பித்து பிடித்தவன் போல அலைந்தான்.

“இப்படித்தானே முத்தழகியும் வேதனைப்பட்டிருப்பா” என்ற குரல் கேட்டு திரும்பினான். இருட்டில் மரத்தின் பின்னாலிருந்து வெளிவந்தாள் செவ்வந்தி.

அவளைக் கண்டதும் தாங்க முடியாத மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக ஓடினான் அவளருகில்.

“செவ்வந்தி… செவ்வந்தி, என்னை விட்டு செல்லாதே. என்னால் வேதனையை பொறுக்க முடியவில்லை” என்று அழுதான். அவன் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்.

“நானும் உன்னை விரும்பறேன். ஆனா காதல்..னா..என்ன..னு உனக்குத் தெரியணும். அதான் இத்தன நாள் உன் கண்ணுல படாம இருந்தேன்”

“நா..நான்… முத்தழகிக்கு செஞ்சது கொடுமை தான். அதுக்கு எந்த தண்டனைனாலும் ஏத்துக்கறேன். ஆனா… நீ மட்டும் எனை விட்டுப் போயிராத” கண்ணீர் ததும்பும் கண்களால் கெஞ்சினான்.

“இல்லை…போக மாட்டேன். ஆனா… உனக்கு நான் கொடுக்கற தண்டனையை ஏத்துக்க முடியுமா?”

“நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்” என்றான்.

“நாளைக்கு உன்னோட சொத்து எல்லாத்தையும் தானம் செஞ்சுட்டு வா. நாம உழைச்சு வாழலாம்”

அவள் சொன்னபடியே செய்தான். இதுவரை அவனை வெறுப்புடன் பார்த்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டனர். அவனை வசவு பாடியவர்கள் மனதார வாழ்த்தினர்.

இந்த புது அனுபவத்தால் தான் ஒரு சிறந்த மனிதனாக உணர்வு கொண்டான். செவ்வந்தியைக் கண்டான் காதல் தேவதையாக!!

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாசல் வழி வந்தது (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி

    பேச மறந்த ஊமைகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோயமுத்தூர்