in ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 23) – முகில் தினகரன், கோவை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இரவு பதினோரு மணி வாக்கில், பிடிக்காமல் எழுந்து வெளியில் வந்தவர், அங்கே வாட்ச்மேன் வடிவேலு, டேவிட், ராஜா, சரஸ்வதி, இன்னும் பல மாற்றுத் திறனாளிகள் எல்லோரும் இவருக்காகவே காத்திருக்க, “என்ன?… எதுக்கு எல்லோரும் இங்க நின்னுட்டிருக்கீங்க?… தூங்கப் போகலையா?” கேட்டார்.

“என்னாச்சு சார் மும்பை ரிசல்ட்… நம்ம பசங்க எல்லோருமே தேறிட்டாங்களா சார்?”

“ப்ச்… தெரில!… அந்த கோகுல்தாஸ் சார் கால் பண்ணவேயில்லை!… நானும் அது தெரியாமல்தான் டென்ஷனோட இருக்கேன்!” என்றார் ஆறுமுகம்.

“நீங்களே கால் பண்ணிக் கேட்டுப் பாருங்க சார்” என்றாள் சரஸ்வதி.

 “ஏம்மா… இதைக்கூட நீ சொல்லணுமா?… நான் பத்து தடவைக்கும் மேலே டிரை பண்ணிட்டேன்… லைன் போகவேயில்லை!… ஒருவேளை அந்த கேம்ஸ் நடக்கற ஏரியாவுல டவர் இல்லையோ?”

 “என்ன சார்… அந்த ரிசல்ட்டைத் தெரிஞ்சுக்காம எங்களால தூங்க முடியாது சார்” கோபி படபடப்பாய்ச் சொன்னான்.

 “சரி… இப்பவே… உங்க முன்னாடியே ஒரு கால் பண்றேன்…” சொல்லி விட்டு அவசர அவசரமாய் கோகுல்தாஸ் எண்ணுக்குக் கால் செய்தார்.

ரிங் போனது. “ஆஹா… ரிங் ஆகுது… ரிங் ஆகுது” என்றார்.

மறுமுனையில் கோகுல்தாஸ் சாரின் குரல் ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் கேட்க, “சார்… நான் ஆறுமுகம்… என்னாச்சு சார்… உங்க கிட்டேயிருந்து போனே வரலையே?”

 “நம்ம பசங்க மூணு பேரும் மும்பைப் போட்டிகள்ல செலக்ட் ஆயிட்டாங்க!… அடுத்தது டெல்லி… அதுதான் ஃபைனல் போட்டி… அதுல மட்டும் ஜெயிச்சிட்டாங்கன்னா… அப்புறம் பாரீஸ்தான்… பாராலிம்பிக்ஸ்தான்” என்றார் கோகுல்தாஸ்.

“கேட்கவே சந்தோஷமாயிருக்கு சார்… அப்புறம் டெல்லி போட்டிக எப்போ சார்?”

“இன்னும் நாலே நாள்ல… நாங்க இன்னிக்கு நைட் இங்க தங்கிட்டு… நாளைக்கு காலைல டெல்லி கிளம்பறோம்”

“பசக எப்படியிருக்காங்க சார்?” கரகரத்த குரலில் கேட்டார் ஆறுமுகம்.

“மூணு பேரும் ஃபுல் ஃபார்ம்ல இருக்காங்க… இதே ஃபார்ம பாரீஸ் போனானுகன்னா… கோல்ட் மெடல்தான்”

 “ஓ.கே… நன்றி சார்”

இணைப்பிலிருந்து ஆறுமுகம் அந்த சந்தோஷமான விஷயத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள, எல்லோரும் சந்தோஷமாய்க் கலைந்தனர்.

அடுத்த மூன்றாவது தினம் மும்பையிலிருந்து திரும்பிய அந்த மூன்று வீரர்களும் உற்சாகமாய் வரவேற்கப்பட்டனர்.  தாங்களே வென்று விட்டது போல் சக மாற்றுத் திறனாளிகள் மகிழ்ந்த விதம் ஆறுமுகத்தைப் பெருமிதம் கொள்ள வைத்தது.

அதே நேரம் அவரது உள் மனம், “மிஸ்டர் ஆறுமுகம்… பாதிக் கிணறுதான் தாண்டியிருக்கீங்க…. இன்னும் மீதிக்கிணறு இருக்கு!… மூன்றாவதாய் டெல்லியில் ஒரு செலக்‌ஷன் போட்டி இருக்கு… அதுல ஜெயிக்கணும்!… அப்படியே அங்க ஜெயிச்சு பாரீஸ் போனால்… இண்டர்நேஷனல் வீரர்களை எதிர் கொள்ளணும்!… இனி வரப் போறதெல்லாமே சவாலான போட்டிகள்… இப்போதைய பயிற்சி போதாது… இன்னும் கொஞ்சம் அதிகமான…. வித்தியாசமான பயிற்சி வேணும்” என்றது.

“ஒரு ளை நான் ரொம்பவும் அசால்ட்டா இருக்கேனா?…” அந்தச் சந்தேகம் உறுத்திக் கொண்டேயிருக்க, கோகுல்தாஸிற்கு கால் செய்து தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“ம்ம்ம்ம்… உங்க சந்தேகம் நியாயம்தான்!… டெல்லி செலக்‌ஷன் போட்டிய நம்ம பசங்க சாதாரணமாய்க் கடந்திடுவானுக… அதுல துளியும் சந்தேகமில்லை… ஆனா செப்டம்பர் 2024ல் பாரீஸ்ல நடக்கப் போற பாராலிம்பிக்ஸ் போட்டிய நெனைக்கும் போது… எனக்கும் கொஞ்சம் நெருடலாய்த்தான் இருக்கு…” என்றார் அவர்.

“என்ன சார்… நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?…” ஆறுமுகம் கவலைப்பட்டார்.

“மிஸ்டர் ஆறுமுகம்… ஈவெண்ட் ஒரே மாதிரி இருந்தாலும் பயிற்சி நாட்டுக்கு நாடு… வித்தியாசப்படும்!… சில பணக்கார நாடுகள்… ஏற்கனவே பாராலிம்பிக்ஸ் போட்டில ஜெயிச்ச… பதக்கங்கள் வென்ற வீரர்களை… அதிக விலை கொடுத்து வாங்கி… பயிற்சியாளர்களாய் அமர்த்தி… பயிற்சி குடுப்பாங்க!… நாம் அப்படி எதுவும் செய்யலையே?… ஏதோ இங்க இருப்பவர்களை வெச்சுத்தானே பயிற்சி குடுத்தோம்…”

 “சரி… என்ன பண்ணலாம்?… சொல்லுங்க” ஆறுமுகம் கேட்க,

 “ஒண்ணும் பண்ண வேண்டாம்… இப்ப குடுக்கற பயிற்சியையே தொடர்ந்து குடுப்போம்… ஜெயிச்சா முயற்சி…. ஜெயிக்கலேன்னா பயிற்சி…. அவ்வளவுதான்!”என்றார் கோகுல்தாஸ்.

****

2024, ஜூலை.

“பாராலிம்பிக்ஸ் கமிட்டி ஆஃப் இண்டியா”விலிருந்து ஆறுமுகத்திற்கு கடிதம் வந்தது. 

“டெல்லியில் நடைபெறவுள்ள தேர்வுக்கான போட்டிகள் இன்னும் இரண்டு நாளில் அதாவது வருகிற 25ம் தேதி துவங்க இருப்பதால், கீழ் கண்ட வீரர்களை அழைத்துக்  கொண்டு வரவும்.  வீரர்களுடன் ஒரு பாதுகாப்பாளருக்கும்  அனுமதி உண்டு.

முருகன்    – தட்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம்

சுந்தரம்     – வில் வித்தை 

ஈஸ்வரன்   – உயரம் தாண்டுதல்”

பரபரப்பானார் ஆறுமுகம்.  உடனே கோகுல்தாஸுக்குப் போன் செய்து கடித விபரங்களைச் சொல்ல, “அடடே… லெட்டர் வந்திடுச்சா?… தேதி என்ன சொன்னீங்க?”

“இருபத்தியஞ்சு சார்”

“ஒண்ணும் பிரச்சினையில்லை… டிக்கெட் நான் ஏற்பாடு பண்ணிடறேன்… இன்னிக்கோ நாளைக்கோ உங்க இடத்துக்கே டிக்கெட் வந்திடும்… டோண்ட் வொரி… இந்த முறை டெல்லிக்கு நீங்கெளே கூடப் போயிட்டு வாங்க”

 “எப்படி சார் டிரெயின்ல டெல்லி போய்ச் சேரவே மூணு நாளாகுமே?” ஆறுமுகம் கேட்க,

 “தம்பி… நான் சொன்னது ஃப்ளைட் டிக்கெட்… பெங்களூரு வழியா போனால்… ஜஸ்ட் அஞ்சு அல்லது அஞ்சரை மணி நேரத்துல டெல்லிக்குப் போயிடலாம்”

 “ஓ.கே.சார்” என்றார் ஆறுமுகம் சந்தோஷமாய்

அந்த மூன்று வீரர்களையும் டெல்லி புறப்படத் தயாராகச் சொல்லி விட்டு, அவர்களும், தானும்  விமானத்தில் செல்லப் போவதை மற்றவர்களிடம் பெருமையாகக் கூறிக் கொண்டார்.

***

2024, ஜூலை, இருபத்தி ஐந்து.

உலக அளவிலான போட்டிக்கான தேர்வு என்பதால், டெல்லிப் போட்டிகளில் கடும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

முந்தைய தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த போதிலும் உடல் தகுதிக் காரணத்தால் பல வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.  நல்ல வேளையாக ஆறுமுகத்தின் ஆட்கள் எல்லோருமே உடற் தகுதியில் தேர்ச்சியடைந்தனர்.

போட்டி துவங்கும் நாளன்று அனைத்து வீரர்களும் அதிகாலையிலேயே மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ஸ்டேடியத்தில் அமர்ந்து மொத்தப் போட்டிகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆறுமுகம் அவ்வப்போது தகவல்களை கோபிக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார்.

 “என்ன சார்?… இன்னும் நம்ம பசங்களுக்கான போட்டிகள் துவங்கலையா?” கோபி அவசரப்பட,

 “கொஞ்சம் பொறுமையா இருப்பா…” அவனை அடக்கினார் ஆறுமுகம். 

 முதலாவதாக நடைபெற்ற வில் வித்தைப் போட்டியில் சுந்தரம் தேர்வாக, தகவலை மொபைல் வழியாக ஒலிபரப்பினார் ஆறுமுகம்.

அடுத்து உயரம் தாண்டுதலில் ஈஸ்வரனும், தட்டு எறிதலில் முருகனும் தேர்ச்சியடைய, இறுதியாக நடைபெற்ற சக்கர நாற்காலி ஓட்டத்தில் முருகன் தேர்ச்சி பெறுவதற்காகக் காத்திருந்தார்.

இறுதியாக நடைபெற்ற போட்டி என்பதினாலோ என்னவோ முருகனும் கடைசியாக வந்து தோல்வி கண்டான்.

“பரவாயில்லை… தான் முருகன் தட்டு எறிதலில் ஜெயிச்சிட்டானே அது போதாதா?” என்று பாஸிட்டிவாக தகவல் தந்த ஆறுமுகம், கண் கலங்கிய முருகனை புன்னகையோடு ஆறுதல்படுத்தினார்.

அன்று இரவு விமானத்திலேயே தூத்துக்குடி திரும்பினர்.

“என்ன சார் அடுத்தது பாரீஸா?… எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போவீங்களா?” சரஸ்வதி கேட்க,

“ம்ம்ம்… அநேகமா ஒரு கோச் மற்றும் ரெண்டு பேருக்கு அனுமதி கிடைக்கும்ன்னு அங்க பேசிக்கிட்டாங்க!… அது உண்மையென்றால்… பாரீஸுக்கு கோகுல்தாஸோட சேர்ந்து… இன்னும் ரெண்டு பேர் போகலாம்…. அந்த ரெண்டு பேர்….”சொல்லி விட்டு சஸ்பென்ஸாய் நிறுத்தினார்.

எல்லோர் கண்களும் அவர் மீதே பதிந்திருக்க, எல்லோர் காதுகளும் அவர் வாயிலிருந்து வரப் போகும் வார்த்தைகளுக்காகத் தவமிருக்க,

நிதானமாய்ச் சொன்னார்.  “பாரீஸுக்கு… கோபியும், சரஸ்வதியும் போவாங்க”

சரஸ்வதியால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  கோபிக்கு அதிர்ச்சியாயிருந்தது.

“எப்படி சார்?… அதான் எங்க மகன் ராஜா செலக்‌ஷன் போட்டிலேயே அவுட் ஆயிட்டானே?… அப்புறம் எப்படி…?… நாங்க?” இழுத்தான் கோபி.

 “கோபி… ராஜா மட்டும்தான் உங்க மகனா?… அவன் நீங்க பெத்த மகன்!… ஆனா முருகனும், சுந்தரமும், ஈஸ்வரனும் நீங்க பெறாத உங்க பிள்ளைகள்…” என்றார் ஆறுமுகம்.

அழுதே விட்டான் கோபி.  அவன் மனதில் தான் ஒரு ரவுடியாய் இருந்த காலத்தில் அந்த இல்லவாசிகளுக்குச் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி வெட்கினான். 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்புள்ள அப்பா (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 6) – சுஶ்ரீ