in

கடல் தாலாட்டும் கட்டுமரங்கள் (சிறுகதை) – ✍ Dr. பாலசுப்ரமணியன், சென்னை

கடல் தாலாட்டும் கட்டுமரங்கள் (சிறுகதை)

மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரவு மணி 11

சூரைக் காற்று “உஸ் உஸ்” என்று பெரும் சத்தம் கிளப்ப, கருமேகங்கள் கூட்டம் கூட்டமாய் நிலவை மறைக்க, ஆளுயர கடல் அலைகளின் பேரிரைச்சல் காதை பிளந்தது.

தாமஸ் புயல் எச்சரிக்கையையும், கொட்டி தீர்க்கும் கனமழையையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சென்னை நொச்சிகுப்பம் மீனவர் அடுக்குமாடி அரசு குடியிருப்பில் இருந்து, வேகவேகமாக கிளம்பி கடற்கரையை நோக்கி  நடக்கிறான்.

இருபத்தைந்து வயது நிரம்பிய, அவனுடைய  ஒரே செல்லமகள் மீனா, “அப்பா போகாதீங்கப்பா, வேண்டாம்ப்பா. புயல் கோரத்தாண்டவம் ஆடி  இன்றிரவு கரையை கடக்கும்னுட்டு காலையிலிருந்து செய்தியில, திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்காங்கப்பா. ப்ளீஸ் போகாதீங்கப்பா” என கெஞ்சும் குரலோசை  மெல்ல மெல்ல மறைய, அதை சற்றும் சட்டை செய்யாமல் அவன் ஓட்டம் பெருநடையாக செல்கிறான்.

ஒரே கும்மிருட்டு, மயான அமைதி, காற்றின் அசுரவேகம் அதிகரித்து கொண்டே இருந்தது.  மிகவும் பரிச்சியமான இடம் அது என்பதால் அவன் வேகம் தடைபடவில்லை. அவன்  வெறி பிடித்தவனைப் போல ஏதோ ஒரு உத்வேகத்துடன் தன் கட்டுமரம் நோக்கி செல்கிறான். கலங்கரை விளக்கத்தின் ஒளி பாய்ச்சல் சுற்றி சுற்றி வந்து அவன் கண்களில் பிரதிபலிக்கிறது!

அவன் மனம் முழுதும் “கர்த்தரே! இன்று எனக்கு முக்கிய நாள். இன்னும் நான் ரூ.5000 சேர்த்தாக வேண்டும். பரலோகத்தின் பரம பிதாவே, இன்று மட்டும் என் உயிரை எப்படியாவது காப்பாற்றிக் கொடு. என் வலையில், விலை உயர்ந்த மீன்கள் இன்று சிக்க வேண்டும், அவற்றை நல்ல விலைக்கு விற்க நீ  அருள வேண்டும்” என ஏசுவின் நாமத்தை ஜெபித்தபடி செல்கிறான். 

தன் கட்டுமரத்துடன், தூரத்தில் நிற்கும்  கூட்டாளி முருகனை, அந்த இருளிலும் அடையாளம் கண்டு கையசைத்தபடி வேகத்தை கூட்டி நடக்கிறான்.

முருகனோ, “அண்ணா! இன்னிக்கி நாம கடலுக்கு போறது, தற்கொலைக்கு சமம்! ஒரு  ரெண்ட்நாள் கழிச்சி போலாமே” என தயக்கத்துடன் கூற

“முருகா, இன்னிக்கி கண்டி நான் மீன் புடிக்க போலன்னா, என் மவ கனவு பாழாயிடும்! அதுவுமில்லாம இன்னிக்கு எல்லாரும் பொயல்காத்து நால, தொயிலுக்கு வரமாட்டாங்க. அதனால, நிச்சயம் நமக்கு அதிக மீன்கள் கிடைக்கும்ப்பா! உனுக்கு பயமா இருந்தா நீ வராதே தம்பி!, நான் மட்டும் தனியா போய்க்கிறேன்” என்று கட்டு மரத்தில் ஏற

“அதுக்கு சொல்ல அண்ணா!” என ஒரு நிமிடம் தயங்கியப்பின், “ஒங்கள உட்டுட்டு என்னிக்கு நான் பிரிஞ்சிருக்கேன்! வாங்க அண்ணா போலாம்” என புது உத்வேகத்துடன் கட்டுமரத்தை அலையின் திசைநோக்கி வேகமாய் நகர்த்தினான்.

இருவரும் ஏறி அமர, அது சட்டென நீரில் மிதந்து, நகர்ந்து அசுர வேகம் எடுத்து கடலில் கலந்து ஆழமான பகுதிக்கு விரைந்து சென்று, ஒரு சிறு புள்ளியாகி இருட்டில் மறைந்து போகிறது.

மீனா தன் அப்பாவை நினைத்து குலுங்கி குலுங்கி அழுதபடி, “சே! தாயில்லாத நான் ஏந்தான் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டேன். பிரிலிம்ஸ் கிளியர் பண்ணி, என் ஏழை அப்பாவிடம் காசு கேட்டு அடம்பிடித்து, டெல்லி ஐ.ஏ.எஸ் அக்காடமியில் சேர  ஏன் தான் விரும்பினேனோ?

பாவம் அப்பா, குழந்தையில் இருந்து எனக்காக எவ்வளவுதான் கஷ்டப்படுவார்? என் படிப்புக்காக குருவி சேர்ப்பதுபோல் அவர்  சேர்த்து வைத்த பணத்தில், ரூ.5000 குறைவதாலும், நாளை பணம் செலுத்த கடைசி நாள் என்பதாலும், அதை ஈட்டுவதற்கு இன்று தன் உயிரையே பணயம் வைத்து கடலுக்கு போய் விட்டாரே.

பிறந்ததும், தாயை விழுங்கிய நான், இன்று என் அப்பாவையும் இழந்து அனாதை ஆகி விடுவேனோ? ஏசுவே, உயிருக்கு உயிரான என் அப்பாவுக்கு, ஒன்றும் ஆகாமல் காப்பாற்றி பத்திரமாக எனக்கு திருப்பி கொடு” என்று விக்கி விக்கி அழுதாள்.

அழும் சத்தம் கேட்டு பக்கத்து போர்ஷன் அஞ்சல அத்தை உள்ளே வந்து, “அழுவாதடி கண்ணு, அவன் இன்னிக்கி நேத்தா கடலுக்கு போறான். அவன் கடல்லியே பொறந்து, கடல்லியே வளந்து, கடல்லியே பொழப்பு நடத்தர சூரன்மா. அவன எந்த புயலும்  ஒண்ணும் பண்ணாதுமா, நம்ம ஆத்தா கடல்மாதா, நம்புளுக்கு ஒரு கொறயும் வெக்கமாட்டா. பயப்படாத, உனக்கு துணையா உன்கூட  நான் பட்த்துகிறேன். நீ தகிரிமா தூங்குடி ராசாத்தி” என ஆறுதல் கூறி தரையில் படுத்துக் கொள்ள, மீனா கட்டிலில் படுத்து கொண்டு  ஏதேதோ நினைவுகளுடன் லேசாக கண்ணயர்ந்தாள்.

திடீர்ரென்று, தடதட என்று கதவு தட்டப்பட, மீனா கதவை திறந்தாள். வெளியில நான்கைந்து கடலோர காவல் படையினர், “இங்கே யார்மா மீனான்றது?” என வினவ

“நான்தானுங்க மீனா. என்னாச்சி” என பதறினாள்.

“உங்கப்பா தாமஸோட உடல் கரை ஒதுங்கி இருக்கு, வந்து பாரும்மா” என கூற

அவள் துக்கம் பீறிட, “அப்பா… என்ன ஏம்ப்பா அனாதயா விட்டுட்டு  போய்ட்ட. நீ இல்லாம நா உயிர் வாழவே மாட்டேன்” என கதறி துடித்தவாறு பால்கனியில் இருந்து சட்டென கீழே குதிக்க…..

“டமார்” என சத்தம் கேட்டு எழுந்த அத்தை, கட்டிலில் இருந்து கீழே தொப்பென்று விழுந்த மீனாவை உசுப்ப… அவளோ அரை தூக்கத்தில், “அப்பா அப்பா போய்ட்டியாப்பா” என அழுதபடி  கண் விழித்து பார்த்து, அனைத்தும் கனவு என்று உணர்ந்து கொள்ள, சிலபல நிமிடங்கள் பிடித்தது.

பொழுது விடிந்து லேசாக சூரியனும், அப்போது மெல்ல தலைகாட்ட துவங்கி இருந்தான்.

அவள் பரபரப்புடன் டிவியை ஆன் செய்ய, செய்தியில் “சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியது. திசை மாறிய புயல், காக்கிநாடாவை நோக்கி வேகமாக நகர்கிறது. சென்னை மயிர் இழையில் தப்பியது” என்ற செய்தியை கேட்டுக் கொண்டிருந்த போதே

வீட்டினுள் நுழைந்த  தாமஸ், “அம்மா மீனா… நேற்று கடலில் நல்ல வேட்டை, இந்தாமா பணம். ஏசுநாதர் காலடியில் வெச்சி கும்டுக்க. நாளைக்கு நீ டில்லி கிளம்பி, நல்லா படிச்சி ஐ.ஏ.எஸ் பட்டத்தோட திரும்பிவா தாயி. தேவன் உனக்கு துணையா இருப்பாருமா” என ஆனந்த கண்ணீருடன் மகளை கட்டி அணைத்து ஆசீர்வதித்தார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. சிறுகதை நன்றாக உள்ளது. இடையில் அமைந்த கனவு கதைக்கு சுவை கூட்டுகிறது. முடிவு சுபம் ஆனதில் நிம்மதி.
    தங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

மது (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி

பம்புசெட் (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து, சென்னை