எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தினசரி பேப்பரில் மூழ்கியிருந்தபோது மாலினி கூப்பிட்டாள்.
‘ என்னங்க.. காலையில டிஃபனுக்கு உப்புமா பண்ணனும்… டப்பாவைத் திறந்து பார்த்தா ரவை கொஞ்சூண்டுதான் இருக்கு… கடைக்குப் போய் ஒரு அரைக்கிலோ ரவை வாங்கிட்டு வரனுமே… ‘ என்றாள்.
மொபைலையும் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். பணம்தான் தேவையில்லையே. ஒன்லி ‘ ஸ்கேன்… !‘
அரைக்கிலோ ரவை வாங்கிகொண்டு, ஸ்கேன் செய்துவிட்டு திரும்பினேன். பாதி தூரம் வந்திருப்பேன். மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தால், மாலினி. திருப்பிக் கூப்பிட்டேன்.
‘ ஏங்க.. வெங்காயம் இல்லைங்க… கவனிக்க மறந்துட்டேன்… அப்படியே ஒரு அரைகிலோ வாங்கிட்டு வந்துடுங்களேன்… ‘ என்றாள்.
ஒரேதடவையில் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும், அதிலும் பாதிதூரம் வந்தபிறகு சொல்கிறாளே என்று சலித்துக்கொண்டே திரும்பி நடந்தேன்.
கடைக்குப்போய் வெங்காயத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு யோசனை. எதற்கும் ஒருமுறை மாலினிவிற்கு போன் செய்து வேறு ஏதாவது வேண்டுமாயிருந்தால் இப்போதே சொல்லிவிடு, திரும்பத் திரும்ப என்னை அலையவிடாதே என்று கேட்கலாமா என்று.
அப்படிக் கேட்டால் நாம் நக்கல் விடுகிறோம் என்று நினைத்துகொண்டு கோவித்துக்கொள்வாளே என்றும் யோசனை ஓட, பேசாமல் நடந்தேன். அதே நேரம் பார்த்து, மொபைல் அலறியது. எடுத்துப் பார்த்தால், அவளேதான்.
‘ உனக்கு நூறு வயசு ‘ என்று முனுமுனுத்தபடி பட்டனை அழுத்தினேன்.
‘ ஸாரிங்க… அப்படியே மத்தியானம் சாம்பாருக்கு ஒரு முருங்கைக்காயும் கால்கிலோ கத்திரிக்காயும் வாங்கிட்டு வந்துடுங்களேன்… டிபன் சாப்பிட்டுட்டு மத்தியான சாம்பாருக்காக திரும்ப ஒருதடவை நீங்க அலையவேண்டாமில்லையா… ‘ என்றாள் ரொம்பவும் கூலாக.
‘ ஒரே தடவைல சொல்ல மாட்டியா, என்னை எத்தனை தடவை அலைய விடுவே… ‘ என்று சொல்லலாமென்று நினைத்து பிறகு மனதை மாற்றிக்கொண்டேன். அதற்கு ஒரு முறை கோபப்பட்டு ஏதாவது சொல்லுவாள், பதிலுக்கு நாம் ஒன்று சொல்ல, அவள் ஒன்று சொல்ல… வாக்குவாதம் நீண்டுகொண்டேதான் போகும்… அப்புறம் டிபன் பதினொரு மணிக்குத்தான் கிடைக்கும், சாப்பாடு மூன்று மணிக்குதான் கிடைக்கும். சலிப்புடன் திரும்பி நடந்தேன்.
‘ அண்ணே… என்னண்ணே மறுபடியும்… ‘ என்றான் கடைப்பையன். அவனுக்கே தெரிந்திருக்கிறது நாம் மறுபடியும் மறுபடியும் அலைகிறோம் என்று.
ஒரு முருங்கைக்கையும் ஆறேழு கத்திரிக்காய்களையும் எடுத்துக் கொடுத்து எடை போட வைத்து, அவன் சொன்ன ‘ நாற்பத்தஞ்சு ரூபா ‘ யை ஸ்கேன் செய்துவிட்டு, ‘ அப்படியே பையில போட்டுடுப்பா ‘ என்று பையை நீட்டினேன். அவன் காய்களை உள்ளே போடும்போது பை நழவ, நான் கொஞ்சம் பதட்டமடைய, அதனுடைய சைடு எபெக்ட்டாக மொபைலும் நழுவி கீழே விழ… கடைப்பையன், ‘ பார்த்துண்ணே… ‘ என்றான்.
‘ ஒன்னும் ஆகாதுப்பா… அதான் கவர் போட்டிருக்கோம்ல… ‘ என்று கர்வமாய் சொன்னபடி, மொபைலை எடுத்து பெஞ்சில் வைத்துவிட்டு இப்போது பையை நன்றாக விரித்துப் பிடித்தேன். காய்களைப் போட்டுக்கொண்டே சொன்னான், ‘ அண்ணே இனிமே பெரிய பையா எடுத்துக்கிட்டு வந்துடுங்கண்ணே… ‘.
‘ சரிப்பா… இனிமே சாக்கு எடுத்துக்கிட்டு வந்துடறேன்… ‘ என்று வெறுப்பை உமிழ்ந்துவிட்டு வெறியுடன் திரும்பினேன். இன்றைக்கு வீட்டுக்குப் போய் கண்டிப்பாய் ஒரு பிடிபிடிக்க வேண்டும், ‘ எதையும் ஒரே தடவையில் சொல்லமாட்டியா… ‘ என்று.
‘ இந்த வேகாத வெயில்ல இவள் வந்து ரோடுல நடந்து பார்த்தால்ல தெரியும். நிழல்ல உட்கார்ந்துக்கிட்டு ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்கறவளுக்கு எங்கே தெரியப் போகுது நம்ம கஷ்டம்… இன்னிக்கு மறுபடியும் போன் பண்ணட்டும் பேசிக்கறேன்… ‘ என்று யோசனை ஓடியது. அப்போதுதான் திடீரென்று மொபைல் ஞாபகம் வர பாக்கெட்டில் கைவிட்டால் மொபைலைக் காணவில்லை. அதற்குள் வீடும் நெருங்கிவிட்டது.
‘ ஐயய்யோ… மொபைல் எப்படி மிஸ் ஆச்சு… ‘ என்று யோசித்துப் பார்த்தபோதுதான் புரிந்தது, கைகளை பையில் வாங்கும்போது கீழே விழுந்த மொபைலை பெஞ்சில் வைத்தவன், அதை எடுக்காமலேயே வந்துவிட்டேன் என்று. வேகமாய் திரும்பி நடந்தேன்.
பெஞ்சில் மொபைலைக் காணவில்லை. அடிவயிற்றில் இருந்து குபீர் என்று ஒரு பெரிய அலை. ‘ ஐயய்யோ…‘
‘ அண்ணே… மொபைலா… ஒரு அக்கா பார்த்துட்டு சொல்லிச்சு… உங்க மொபைலாத்தான் இருக்கும்னு எடுத்து உள்ளே வச்சேன்… ‘ என்றபடியே மொபைலை நீட்டினான்.
மொபைல் கிடைத்த சந்தோசத்தில் வேகவேகமாக நடந்து வீட்டை நெருங்கி படிகளில் ஏறி, கதவைத் திறந்துகொண்டு நுழைகிறேன்… ஷோபாவில் உட்கார்ந்திருந்தாள் முகம் சுண்டிப்போய்.
‘ வீடு வரை வந்துட்டு ஏன் திரும்பிப் போனீங்க…. நான் கைத்தட்டி கூப்பிட்டேன்… நீங்க கேட்காம ஓடினீங்க… அப்புறம் மொபைல்லேயும் கூப்பிட்டேன். எடுக்கவே இல்லை… ‘ என்று முறைத்தாள்.
சுருக்கமாக நடந்ததை சொல்லி முடித்து, ‘ சரி.. ஏன் கூப்பிட்டே ‘ என்றபடியே மொபைலை அப்போதுதான் எடுத்துப் பார்த்தேன். அது ஆப் ஆகிக் கிடந்தது.
‘ அடக் கடவுளே… ஆப் ஆகிக்கிடக்குது… ‘ மொபைலை ஆன் பண்ணியபடியே, ‘ சரி சொல்லு, ஏன் கூப்பிட்டே… திரும்ப கடைக்குப் போகணும்னு சொன்னே… நடக்கறதே வேற… ‘ என்றுவிட்டு நகர்ந்தேன்.
‘ சரி விடுங்க… ஆனா டீ கேட்காதீங்க… ‘ என்றாள்.
‘ ஏன்… ‘
‘ பாலை அடுப்புல வச்சிட்டு சீரியல் பாத்துக்கிட்டிருந்தேனா, பொங்கி ஊத்திடுச்சுங்க…‘ என்றாள்.
வேறு வழியில்லாமல் மறுபடியும் கடைக்கு போய்க்கொண்டிருக்கிறேன்,
‘ உங்களுக்கும் ஏதாவது வேண்டுமா…? ‘
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings