in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 16) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8  பகுதி 9    பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14    பகுதி 15

இதுவரை:

சஞ்சீவ் ஆராதனா இருவரின் காதல் வாழ்வில் ஏற்படும் சலசலப்பால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனாலும் திருமண உறவை முற்றிலும்  கத்தரித்துக் கொள்ள சஞ்சீவ் ஒத்துக் கொள்ளவில்லை. ஆராதனாவும் வேறு புதிய வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள விருப்பம் இல்லையெனத் தனிமையை நாடி காலத்தைக் கடத்துகிறாள்.

காலம் அவர்கள் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கோவையில் தனியாக வசித்து, வேலைக்குப் போய் வருகிறாள் ஆராதனா. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருண்டோடுகின்றன. இந்தத் தனிமை வாசம் ஆராதனா மனத்தைப் பண்படுத்துகின்றது. அவள் இயல்பில் கலந்துவிட்டிருந்த பிடிவாதம் தளர்ந்தது. பிறர் கருத்துக்கும் மதிப்பளித்து, தன் கருத்தை பிறர் மீது திணிக்காமல், தன் தரப்பு நியாயத்தைப் பொறுமையாக எடுத்துரைக்கும் பக்குவம் வந்தது.

இந்த நிலையில்தான், தன்னுடன் பணிபுரியும் பூஜாவின் திருமணத்தில் சஞ்சீவை எதேச்சையாக சந்திக்கிறாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை எனினும், மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு, இருவர் மனத்திலும் காதலை மீண்டும் துளிர்க்கச் செய்கிறது. துளிர்த்த காதல் வேர்ப்பிடித்து வளர்ந்ததா, மீண்டும் வாடியதா?

பார்க்கலாம்.

இனி:

பூஜாவின் திருமண நிகழ்வில் சஞ்சீவை சந்தித்தது முதல் ஏனோ ஆராதனாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவளுக்கே தன்னிடம் துளிர்விட்ட இந்த மாற்றம் விந்தையாக இருந்தது. சஞ்சீவுக்கு இனி தன் மனத்திலும் வாழ்க்கையிலும் இடமில்லை என்று நினைத்திருந்தவளுக்கு இந்தத் தவிப்பு குழப்பமாக இருந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் இதுபோன்ற சூழ்நிலையைப் பொறுமையாகக் கையாளும் பக்குவத்தைத் தந்திருந்தது.

‘சஞ்சீவைப் பார்த்ததும் ஏன் என்னால சாதாரணமா இருக்க முடியல? கல்யாண மண்டபத்துல நிறைய பேரைப் பார்த்தேன். ஆனா சஞ்சீவோட கண்களை நேருக்கு நேர் பார்த்த நொடிகள் இப்பவும் என் மனசுல சிலிர்ப்பைத் தருது. காதல் அழியாததுன்னு இதைத்தான் சொல்வாங்களோ? அப்படின்னா சஞ்சீவை நான் இன்னும் லவ் பண்றேனா? இவ்வளவு காலமா நான் சஞ்சீவை விட்டுட்டு தனியாதான் இருக்கேன். அப்பெல்லாம்கூட சஞ்சீவோட நினைவுகள் என்னை இந்த அளவுக்கு டிஸ்டர்ப் பண்ணதில்ல.

ஒருவேளை சஞ்சீவை இதுக்கு முன்னால வேற ஏதாவது சந்தர்ப்பத்துல நேர்ல பார்த்திருந்தா, மனசுல மாற்றம் அப்பவே வந்திருக்குமோ?  சஞ்சீவோட காதலை, நினைவுகளை மறக்கணும்னு நானா வலுக்கட்டாயமா எனக்குள்ள திணிச்சிருக்கேனோ? அதனால சஞ்சீவைப் பார்க்கணும்னுகூட எனக்குத் தோணல. ஆனா உள்ளுக்குள்ள காதல் அணையாத தீபமா இருந்திருக்கு போல.

இதெல்லாம் ஏதோ வயசுக் கோளாறுல உளறிக் கொட்டற மாதிரி இருக்கு. ஆனா அதெல்லாம் ஒரு காலம். சஞ்சீவைக் காதலிச்சப்போ கண்மூடித்தனமா எல்லாத்தையும் எனக்கு சாதகமா கற்பனை பண்ணி என்னையே ஏமாத்திகிட்டேன். ஆனா இப்போ தெளிவா இருக்கேன். ஆனா சஞ்சீவ் இதே நிலைமைல இருக்கானா? அவனும் இதே மாதிரி இப்போ என்னை நினைச்சு தவிச்சுட்டிருப்பானா? இருந்தா… நான் எப்படியாவது பேசிப் பார்க்கலாம். இல்லேன்னா???’

சந்தோஷமும் துக்கமும் கலந்து ஆராதனாவை ஆட்கொண்டு அலைக்கழித்தது. சஞ்சீவை மறுபடி சந்திக்க முடியுமா? சந்தித்தாலும் உதறிவந்த வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? அது அவளுக்கே ஒத்து வருமா? சஞ்சீவ் பற்றிய நினைவுகள் அவனைப் பார்த்த பாதிப்பின் விளைவா? அழகாய் வானத்தை அலங்கரித்து, வண்ணக் கலவையாய் வசீகரிக்கும் வானவில் போல ஒன்றிரண்டு நாட்கள் கழித்து சஞ்சீவின் நினைவுகள் மெல்ல மெல்ல மறைந்து போகுமா?

தொடர்ந்து வந்த நாட்களில் எதிலும் கவனம் செலுத்த இயலாமல் திணறினாள் ஆராதனா. வேலையிலும் சீராக கவனம் செல்லவில்லை. திடீர் திடீரென ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவாள். அவளுடன் வேலை செய்யும் தோழிகளுக்கே அவளின் இந்த நிலை புதிதாக இருந்தது.

“என்ன ஆராதனா, எப்பவும் ஏதோ கனவுலகத்துலயே இருக்கியே, என்ன விஷயம்? அநேகமா இது காதல் நோய் மாதிரிதான் தெரியுது. இவ்வளவு காலமா நாங்க காதல் பத்தி பேசும்போதெல்லாம் அதுக்கும் உனக்கும் ஆகவே ஆகாதுன்னு சத்தியம் பண்ணாத குறையா அடிச்சுப் பேசுவியே. இப்போ வசமா மாட்டிக்கிட்டியா? யார் அந்த ஏமாளி? ஆராதனாங்கற இந்தக் குழப்பவாதிகிட்ட வந்து சிக்கிகிட்ட அந்த அப்பாவி யாரு பா? பெயராவது சொல்லேன்.”

தோழிகளின் இத்தகைய கேலிப் பேச்சுகள் கனவில் மிதந்து கொண்டிருக்கும் ஆராதனாவை அவ்வப்போது தட்டி எழுப்பிவிடும். வெட்கப் புன்னகையோடு பதிலேதும் சொல்லாமல் கடந்து செல்வாள் ஆராதனா. ஆனாலும் சஞ்சீவ் அவளின் மனத்தில் நகராமல் உட்கார்ந்து கொண்டு இம்சித்தான். எவ்வளவோ காரணங்களை தனக்குள்ளே சொல்லிக் கொண்டு, அந்த நினைவுகளில் இருந்து வெளியே வர முயற்சித்தாள்.

‘சஞ்சீவ் இப்போ என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்துட்டிருப்பானோ தெரியல. அவன் வாழ்க்கைல இன்னும் எனக்கு இடமிருக்கான்னு தெரியல. புதுசா ஒரு வாழ்க்கையை அவன் சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்தா, என்னோட இந்த கற்பனைக் கோட்டை மறுபடியும் நொறுங்கிப் போய்டும். இப்பவும் அதே தப்பை செய்யக் கூடாது. அவசரப்பட்டு நானா கற்பனை பண்ணிட்டு, அப்புறம் அதுல ஏமாற்றம் வந்தா, அதைத் தாங்கிக்க முடியாம அந்தக் கோவத்தை வேற யார் மேலயாவது காட்டக் கூடாது. பொறுமையா ஒவ்வொரு அடியா கவனமா எடுத்து வைக்கணும்.’

இப்படி தானே கேள்விகளைக் கேட்டு, தானே பதிலும் சொல்லிக் கொண்டு தொடர்ந்து வந்த நாட்களைக் கடத்தினாள். தனிமையில் கரையும் தன் வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தான் இப்போது இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

‘வாழ்க்கை முழுக்க இப்படியே தனியா நான் வாழ்ந்துட முடியாது. அதுக்கு அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார். வேற ஒரு வாழ்க்கையை எனக்காகத் தேடி அமைச்சுத் தரேன்னு ஏற்கனவே அப்பா வற்புறுத்திட்டே இருக்கார். அதுக்கு ஏதாவது முற்றுப்புள்ளி வைக்கணும். ஒண்ணு அப்பா பார்க்கற வேற ஒரு புது வரனை நான் கல்யாணம் பண்ணிக்கணும். சத்தியமா அது சாத்தியப்படும்னு எனக்குத் தோணல.

இரண்டாவது நான் சஞ்சீவோட மறுபடியும் சேர்ந்து வாழறது. அதுக்கு என் மனசுல இப்போ இடமிருக்கும்னு தோணுது. ஆனா சஞ்சீவ் மனசுல எனக்கு இன்னும் இடமிருக்கான்னு தெரியல. என்னோட இந்தக் குழப்பத்தை வேற யார்கிட்டயாவது சொல்லி ஆறுதல் தேடணும். அறிவுரை கேட்கணும்.’

யோசித்து யோசித்துக் குழம்பியவளுக்கு, தன் தாயின் அரவணைப்பே சிறந்த ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. வார இறுதி விடுமுறையில் சென்னைக்குக் கிளம்பி வந்தாள். தன் அம்மாவிடம் இதுபற்றிப் பேசி தன் குழப்பத்திற்கு ஒரு முடிவு கேட்கலாம் என நினைத்தாள்.

ஆராதனாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை சமீப காலங்களாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் சரோஜினி. இப்போது வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் முகத்தில் நிலவும் குழப்பமும் தவிப்பும் சரோஜினிக்குப் புரியாமல் இல்லை. ஏதோ பேச வேண்டும் என்பதற்காகத்தான் அவள் வந்திருக்கிறாள் என்று யூகித்துக் கொண்டார். இருந்தாலும் அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று பொறுமையாக இருந்தார்.

மதனகோபாலும் ஆராதனாவின் இந்தக் குழப்பமான மனநிலைக்குக் காரணம் புரியாமல் தவித்தார். முன்போல் இருந்தால் ஆராதனா இவ்வளவு நேரம் தன்னிடம் எதுவும் சொல்லாமல் இப்படித் தனியே குழம்பிக்கொள்ள மாட்டாள் என்பதும் அவருக்குப் புரியாமல் இல்லை. ஆராதனாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் அவருக்கு வலியைத் தந்தது. தன் மகள் தன்னிடமிருந்து விலகிப் போகிறாளோ என்ற எண்ணமே அவரால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

தன் தந்தை வீட்டில் இல்லாத நேரமாக அம்மாவிடம் மெதுவாகத் தன் மனக் குழப்பத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் ஆராதனா.

“அம்மா, நான் உங்ககிட்ட பேசணும். மனசு ரொம்பக் குழம்பிக் கிடக்கு மா.”

“என்ன குழப்பம் ஆராதனா? மனசுல இருக்கறதை சொன்னாத் தானே தெரியும். நீ வந்ததுல இருந்து நானும் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். நீ நார்மலா இல்ல. ஏதோ சிந்தனைல இருக்கே. திடீர்னு சந்தோஷமா இருக்கற உன் முகத்துல திடீர்னு கவலை வந்து ஒட்டிக்குது. என்ன சிக்கல் சொல்லு ஆராதனா?”

“அம்மா, என் வாழ்க்கை பத்தி என்ன நினைக்கறீங்க மா? நான் இப்போ வாழற வாழ்க்கை இப்படியே தொடர்ந்தா நல்லாத்தானே இருக்கும்.”

“உன் வாழ்க்கை பத்தி திடீர்னு நான் நினைக்க என்ன இருக்கு ஆராதனா? எப்பவும் நீ நல்லா இருக்கணும்னுதான் நான் ஆசைப்படறேன். நீ இப்போ தனியா இருக்கறது உனக்கு நல்லா இருக்கலாம். எனக்கு அது கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக உன்னை வற்புறுத்த நான் விரும்பல. உன் விருப்பம் என்னவோ அப்படி நீ வாழ்ந்தா அதையும் நான் ஏத்துப்பேன். புதுசா கேக்கறியே?”

“இல்ல மா, போன வாரம் என் ப்ரெண்ட் பூஜா கல்யாணம் நடந்தது. அங்க நான் சஞ்சீவைப் பார்த்தேன். ஆனா பேசிக்கல. சஞ்சீவும் என்னைப் பார்த்தான். அவனுக்கு என்கிட்டே பேசணும்னு தோணிச்சா என்னன்னு தெரியல. ஆனா அவனைப் பார்த்ததுக்குப் பிறகு என்னால நார்மலா இருக்க முடியல. என்னவோ திரும்பத் திரும்ப அவன் ஞாபகம் வந்துட்டே இருக்கு. இது தப்புதானே மா.”

“அப்படியா, சஞ்சீவைப் பார்த்தியா? அவன் ஞாபகம் வரதுல ஒண்ணும் தப்பில்லையே ஆராதனா. நமக்கு மனசுக்குப் பிடிச்சவங்களை எதிர்பாராதவிதமா சந்திச்சா, அவங்களைப் பத்தின நினைவுகள் நமக்கு வரத்தானே செய்யும். இது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லையே.”

“மனசுக்குப் பிடிச்சவங்களைப் பார்த்தா அப்படி இருக்கும் மா. ஆனா சஞ்சீவுக்கும் எனக்கும்தான் ஒத்து வரலையே. அப்புறம் ஏன் அவனைப் பார்த்ததும் எனக்கு டிஸ்டர்பிங்கா இருக்கு. என்னால எதுலையும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. மறுபடியும் சஞ்சீவைப் பார்த்துப் பேசணும் போல ஒரு படபடப்பு மனசுக்குள்ள அடிச்சுக்குது. ஆனா அவன் காதலை, அவன் கூட வாழற வாழ்க்கையை நான்தானே வேண்டாம்னு உதறிட்டுத் தனியா வந்தேன். இப்போ நான் அவனைப் பார்த்துப் பேசணும்னு நினைக்கறது எந்த விதத்துல நியாயம்னு என் மேலயே எனக்குக் கோபமும் வெறுப்பும் வருது.

இந்தக் குழப்பம்தான் ஒரு வாரமா என்னைப் பாடாய்ப்படுத்துது. என்னால அவனை நினைக்காம சாதாரணமா இருக்க முடியல. ஆனா அதுக்காக சஞ்சீவும் இதேமாதிரி என்னை நினைக்கணும்னு நான் எதிர்பார்க்கக் கூடாதில்ல. அவனுக்கு வேற ஏதாவது…..”

ஆராதனாவுக்குப் பேச முடியாமல் தழுதழுத்தது. கண்ணீர் முட்டிக் கொண்டு வெளியே வரத் தயாராக நின்றன. ஆராதனாவின் தவிப்பைப் புரிந்து கொண்டார் சரோஜினி.

“ஆராதனா, இப்போ ஏன் கண் கலங்கறே? காம்டவுன் யுவர்செல்ப்.”

“இல்ல மா, சஞ்சீவ் புதுசா வேற ஒரு வாழ்க்கைல சந்தோஷமா இருக்கற மாதிரி எனக்குத் தோணுது. அப்போ நான் அவனை நினைக்கறது தப்புதானே. இவ்வளவு வருஷம் சஞ்சீவ் வேண்டாம்னு இருந்த எனக்கு இப்போ என்னவோ சஞ்சீவைப் பார்க்கணும், அவன்கூட பேசணும், அவன்கூட வாழ்க்கையைத் தொடர…. தொடரணும்…..என….க்கு…..”

வெடித்து அழுதாள் ஆராதனா. அவள் மனக்கலக்கம் கண்ணீராக வழிந்தோடுவதால், அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தார் சரோஜினி. ஆராதனாவின் அழுகை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது. பின் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“என்ன மா, நான் சொன்னதுக்கு நீங்க பதில் எதுவுமே சொல்லல. சஞ்சீவ் வாழ்க்கைல புதுசா வேற யாராவது இணைஞ்சிருந்தா, என் நிலை என்ன மா? நான் இப்போ தவிக்கற தவிப்பு எல்லாம் வேஸ்ட் தானே? இதே மாதிரிதானே நான் சஞ்சீவைப் பிரிஞ்சு வந்தப்போ சஞ்சீவும் தவிச்சிருப்பான். நான் அதைப்பத்தி எல்லாம் அப்போ யோசிக்கவே இல்லையே மா. என் போன் நம்பரைக்கூட அப்பா மாத்திட்டாரு. அவங்க யார் நம்பரும் என்கிட்டே இல்ல. சங்கவி அக்காகூட என் பழைய நம்பருக்கு நிறைய முறை கூப்பிட்டாங்க. ஆனா நான் போனை எடுக்கவே இல்ல. அதுக்கப்புறம் நம்பரே மாறிடுச்சு வேற. எனக்கு ரொம்ப வெறுமையா இருக்கு மா.”

“பொறுமையா இரு ஆராதனா. நீ நிறைய மாறிட்டேன்னு எனக்குத் தெரியும். அந்த மாற்றங்கள் ஒரே நாள்ல நடக்கல. இந்த அஞ்சு வருஷ்மா கொஞ்சம் கொஞ்சமா ஏற்பட்ட மாற்றங்கள். அதை நான் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். அந்த மாற்றத்தாலதான் நீ உங்க அப்பாகிட்ட பேசாம என்கிட்ட பேசறே. பழைய ஆராதனாவா இருந்தா, இந்நேரத்துக்கு இவ்ளோ அலசி ஆராய்ஞ்சு யோசிச்சுப் பேசி, இப்படி மனசுவிட்டு அழுதிருக்க மாட்டே. இதுவே பெரிய விஷயம். இந்த நல்ல மாற்றம் உனக்கு நல்லதைத்தான் குடுக்கும். ஆனா, இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் உறுத்தலா இருக்கு ஆராதனா. அதுதான் உன்னோட இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமா இருக்கும்னு நினைக்கறேன்.”

“என்ன மா சொல்றீங்க? எது உறுத்தலா இருக்கு? நீங்க சொல்றது எனக்குப் புரியலையே.”

“இல்ல ஆராதனா, நீ சஞ்சீவைப் பார்த்தது தப்பில்ல. அது உன் மனசை சலனப்படுத்தினது தப்பில்ல. அதை என்கிட்டே சொல்லி தீர்வு தேடணும்னு நினைச்சது தப்பில்ல. ஆனா சஞ்சீவ் இதே மாதிரி உன்னை நினைச்சுட்டு தவிக்கணும், உனக்காகக் காத்திருக்கணும்னு கொஞ்சம் சுயநலம் உன் மனசுக்குள்ள இருக்கு. அதை உன் பேச்சுல நான் தெரிஞ்சுகிட்டேன். இந்த மாதிரி சுயநலமா மட்டும் யோசிக்காதே ஆராதனா.

நீ சஞ்சீவைப் பிரிஞ்சு வந்தப்பவே சுயநலமா யோசிக்காம, பொதுவா யோசிச்சு முடிவெடுத்திருந்தா இப்போ நிலைமையே வேற மாதிரி இருந்திருக்கும். உன் பிரிவு சஞ்சீவை எந்த அளவுக்கு பாதிக்கும்னு யோசிக்கல. அவங்க வீட்டுல இருக்கற பெரியவங்க எவ்வளவு வேதனைப்படுவாங்கன்னு யோசிக்கல. உன் ஆசைக்கு ஒத்துகிட்டு ஒரே பொண்ணோட கல்யாணம்னு பணத்தைத் தண்ணியா செலவழிச்சு கல்யாணம் பண்ணி வச்ச உன்னைப் பெத்தவங்களான எங்க நிலையை யோசிச்சுப் பார்க்கல. உனக்கு ஒத்து வரலேன்னு மட்டும் காரணம் சொல்லி பிரிஞ்சு வந்துட்டே. இப்பவும் அதே தப்பைப் பண்ணாதே. நிதானம் வேணும் ஆராதனா.”

“புரியுது மா. சஞ்சீவ் வேண்டாம்னு அப்போ தோணிச்சு. விட்டுட்டு வந்துட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் சஞ்சீவ் பத்தின நினைவுகள் தொல்லை பண்ணிச்சு. ஆனா அவன் என்னை ஏமாத்திட்டான்னு மட்டும்தான் என்னால யோசிக்க முடிஞ்சது. சஞ்சீவ் பத்தி எந்த நல்ல விஷயங்களும் எனக்குப் பெருசாத் தெரியல. இல்ல, நல்ல விஷயங்கள் எட்டிப் பார்க்காம நானா தவிர்த்தேனான்னு தெரியல. இப்போ சஞ்சீவைப் பார்த்ததும் என்னவோ தடுமாற்றம். சஞ்சீவைப் பார்த்து ஒரு தடவையாவது பேசிடணும்னு ஒரு அங்கலாய்ப்பு, அதான் வேற எதையும் யோசிக்க முடியல. நீங்க எந்த அர்த்தத்துல சொல்றீங்கன்னு புரியுது மா. எனக்குக் கிடைக்கணும்னு நான் நினைக்கறது, நான் நினைச்ச நேரத்துல எனக்குக் கிடைக்கணும்னு பரிதவிக்கிறேன். இது தப்புன்னு புரியுது மா. நான் இப்போ என்ன செய்யட்டும்?”

“சஞ்சீவ் நம்பர் என்கிட்டே இருக்கு. நான் அப்பப்போ பேசிட்டுத்தான் இருக்கேன். ஆனா உங்க அப்பாவுக்குக்கூடத் தெரியாது. நீ வேணும்னா பேசிப் பாரு.”

“என்ன மா சொல்றீங்க? நீங்க சஞ்சீவ் கூட பேசிட்டிருக்கீங்களா? ஏன் என்கிட்டே சொல்லல?”

ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து கண்களை விரித்தபடி கேட்டாள் ஆராதனா.

ஆராதனா மட்டுமா, அறைக்கு வெளியே நின்று இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மதன கோபாலும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 5) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 2) – வைஷ்ணவி