2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
இதுவரை:
ஆராதனா சஞ்சீவ் காதல் வாழ்வில் சின்னச் சின்ன சிக்கல்கள்கூட பெரிதாக, பூதாகரமாக வெடித்து, பிரிவில் கொண்டுவந்து விடுகிறது. தந்தையின் அன்பும் அக்கறையும் அவள் மனத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக இருக்கும் என்று நம்பி பெற்றோருடன் வசிக்கிறாள். ஆனால் மறுமணத்திற்கு வற்புறுத்தும் தன் தந்தையின் பிடிவாதம் அவளின் நிம்மதியைக் குலைக்கிறது. இடமாற்றம் மனத்திற்கு இதமளிக்கும் என்று தோன்றியது. வேறு ஊரில் வேலை தேடலாமா என்று குழப்பத்தில் இருந்தபோது, எதேச்சையாக ஒரு நாள், தன் பெற்றோருக்கிடையில் நடக்கும் உரையாடலைக் கேட்கிறாள்.
மனம் உடைந்து போனாலும். அதற்குப்பின் ஒரு தெளிவான முடிவுக்கு வருகிறாள்.
என்ன செய்யப் போகிறாள்? சஞ்சீவ் வீட்டில் என்ன நிலைமை?
பார்க்கலாம் வாருங்கள்.
இனி:
ஒரு உறவின் மேல் காலம்காலமாக வடித்து வைத்திருந்த நம்பிக்கை சற்றே அசைத்துப் பார்க்கப்பட்டால் மனம் கலங்கிவிடும். கண்ணாடியைப் போட்டு உடைப்பதுபோல், ஆராதனா தன் தந்தையின் மீது வைத்திருந்த பாசம் கலந்த நம்பிக்கை அன்று இரவு பொலபொலவென்று சரிந்து விழுந்தது. உடைந்து நொறுங்கிய கண்ணாடி முள்ளாகக் குத்தாமல் இருக்குமா? காயப்படுத்தாமல் இருக்குமா?
‘தி க்ரேட் மதனகோபால்’ என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. ஆனால் தன் தந்தைக்கு, மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்த தன்னைவிட, வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய நிறுவனம்தான் முக்கியம் எனத் தெரிந்தபோது நொறுங்கிப் போனாள். அன்றைய இரவு கண்ணீர் நிறைந்து வழிந்தோடிய கண்களில் உறக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை.
அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டே இருந்தது. விசும்பி விசும்பி சிறிது நேரம் அழுவாள். பின் கண்களைத் துடைத்துக் கொண்டு, அப்பா பேசியதை அசை போடுவாள். மீண்டும் அழுகை பெருக்கெடுக்கும். கூடவே அம்மாவின் மனப் போராட்டம், அழுகை சேர்ந்து நினைவில் வர, கட்டுக்கடங்காமல் அழுகை வெடிக்கும். இப்படியே நள்ளிரவு தாண்டியது.
வழிந்தோடிய கண்ணீர் ஆராதனாவின் குழப்பத்தையும் கொஞ்சம் கரைத்துப் போனது. இவ்வளவு நேரம் அப்பா பேசியது வருத்தத்தை மட்டுமே தந்து கொண்டிருந்தது. ஆனால் நீண்ட அழுகையின் முடிவில், அப்பாவின் கவலை நியாயமானது என்றும் தோன்றியது.
‘அப்பாவும் பாவம், என்ன செய்வார்? அவர் கஷ்டப்பட்டு உழைச்சு உருவாக்கின பெரிய நிறுவனத்தை யார்கிட்டயாவது பொறுப்பா ஒப்படைக்கணும். அதைப்பத்தி அவர் கவலைப்படறது நியாயம் தானே. இவ்வளவு காலம் நான் அதைப்பத்தி யோசிக்ககூட இல்லை. என்னைப்பத்தி மட்டும் சுயநலமா யோசிச்சுட்டு இருந்துட்டேன்.
ஆனா அதுக்காக அப்பா சஞ்சீவ்கிட்ட அப்படிப் பேசியிருக்கக் கூடாது. இதுக்கெல்லாம் நானும் முக்கிய காரணமா இருந்துட்டேன். பொறுப்பா யோசிச்சிருந்தா இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு வாழ்க்கை முடிஞ்சிருக்காது. ஆனா உடனே சஞ்சீவ்கிட்ட மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ முடியுமான்னு தெரியல. கொஞ்சம் மனசு ஆறணும். அதுக்கு நான் வேற ஊருக்குப் போய், வேற இடத்துல வேலை பார்த்தா நல்லாயிருக்கும்னு தோணுது.’
அழுது தீர்த்த அந்த இரவின் முடிவில் இப்படியான ஒரு தெளிவான முடிவோடு புதிய விடியலைத் தொடங்கினாள் ஆராதனா. தன் கவனத்தை திருமண வாழ்க்கை, காதல் என்ற கசப்பான விஷயங்களில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும், மன ஆறுதல் தேவை என்பதற்காகவும் வேறு வேலை தேடப் போவதாக தன் பெற்றோரிடம் சொன்னாள். குறிப்பாக வேறு ஊருக்குப் போக விரும்புவதாகச் சொன்னாள். சிறிது காலத்திற்கு அவளை அவள் போக்கில் விட்டுவிடலாம் என அவள் பெற்றோரும் நினைத்ததால் மறுப்பேதும் சொல்லவில்லை.
சென்னை, பெங்களூரு தவிர வேறு எங்காவது, சற்று அமைதியான இடத்தில், தன்னைப் பற்றி, தன் கடந்த காலத்தைப் பற்றி அறியாத, கேள்வி எழுப்பாத, அறிவுரை சொல்லாத இடமாக இருந்தால் நன்றாக இருக்குன் என்று நினைத்தாள். மும்மரமாக வேலை தேடியதில் கோவையில் வேலை கிடைத்தது. அவள் விரும்பியதும் அதுதான். மதனகோபால் அங்கேயும் அவளுக்காக வீடு வாங்கித் தருவதாகச் சொன்னார். ஆனால் ஆராதனா அதை விரும்பவில்லை. அங்கே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்குவதற்கு முடிவு செய்தாள். மதனகோபாலும் சரி மகளைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்பதால், அவள் முடிவிற்கு ஒத்துக் கொண்டார்.
இப்படியாக, ஆராதனா கோவையில் வேலைக்கப் போ ஆரமபித்தபிறகு அவளிம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. தன்னைப் பற்றிய ஒரு புரிதல் வந்தது. தன்னுடைய குணங்களில் எவையெல்லாம் பிறரைக் காயப்படுத்துவனவாக உள்ளன என்று ஆராய்ந்தாள்.
எப்போதுமே மற்றவர்கள் அறிவுரை சொல்லும்போது கேட்காத மனது, சில தோல்விகளுக்குப் பின் தன்னை, தன் மனத்தை சுய ஆய்வு (self analysis ) செய்து கொள்ளும். தன் தவறுகள் என்னவென்று தெளிவு பிறக்கும். தன் தோல்விக்கான காரணமாகப் பிறரைப் பழி சொல்வதை நிறுத்தி, தன்னுடைய தவறை ஏற்றுக் கொள்ளும் மனநிலை வரும். ஆராதனா இப்போது அந்த நிலையில் இருந்தாள்.
அங்கே சஞ்சீவின் நிலை என்ன?
சஞ்சீவ், ஆராதனாவின் நினைவுகளோடு நாட்களை நகர்த்தினான். அவன் வேலை செய்யும் இடத்தில் உள்ள நண்பர்கள் சிலர், அவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் உதவுவதாகச் சொன்னார்கள். யாரும் ஆராதனாவைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டான் சஞ்சீவ்.
ஆனால் வீட்டில்தான் அம்மாவை சமாளிப்பது சிரமமாக இருந்தது. என்ன செய்வது? மனமொத்து இருவரும் விரும்பி, வீட்டில் சம்மதம் வாங்கி, திருமணம் செய்து ஒரு வருடத்திற்குள்ளாகவே முற்றுப்புள்ளி வைத்தால், பானுமதி அதை எப்படி சாதாரணமாகக் கடந்து செல்வார். தன் கண் எதிரே குடும்பத்தோடு நிறைவாக வாழ வேண்டிய ஆசை மகன், தனிமையில் இருப்பததைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா தாயுள்ளம்.
“என்ன சஞ்சீவ், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி அவளை நினைச்சு உருகுவே? அவளுக்கும் உன் மேல பாசம் இருந்தா, உன்கூட வாழணும்னு ஆசை இருந்தா, திரும்பி வந்திருப்பா இல்ல. அவளைப் பெத்தவங்களாவது நல்ல புத்தி சொல்லி, பொண்ணை அனுப்பி வச்சிருக்கணும் இல்ல. இது எதுவுமே இல்லாம நீ மட்டும் அவளை நினைச்சு இப்படித் தனியா இருக்கறது எனக்குக் கஷ்டமா இருக்கு பா.”
“இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு. இவ்ளோ வருஷமா நான் இப்படித்தானே உங்ககூட இருக்கேன். அதேமாதிரி நினைச்சுக்கோங்க.”
“என்ன சஞ்சீவ், புரிஞ்சுதான் பேசறியா? இவ்வளவு காலம் இருந்ததும் இப்போ இருக்கறதும் ஒண்ணா? எல்லாத்துக்கும் ஒரு கால நேரம் இல்லையா பா? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா சஞ்சீவ்? நான் வேற நல்ல வரனா பார்க்கறேன். உனக்குப் பிடிச்சவளா, நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா ஒரு பொன்னைத் தேடிக் கொண்டு வந்து நிறுத்தறேன். நடந்ததை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பி.”
“அம்மா, இந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்னு இதோட நிறைய தடவை சொல்லிட்டேன். ஏன் திரும்பத் திரும்ப அதையே பேசறீங்க? என்னிக்கு இருந்தாலும் ஆராதனாதான் என்னோட வாழ்க்கை. அவ இடத்துக்கு வேற யாரும் வர முடியாது. ஆராதனா திருந்தி, திரும்பி வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படியே அவ வரலேன்னாலும் நான் இப்படியே இருந்துட்டுப் போறேன். நான் உங்ககூடவே இருக்கணும்னு தானே ஆசைப்பட்டீங்க. அதனால நான் இப்படியே உங்ககூட இருந்துட்டுப் போறேன்.”
“என்ன பா இப்படிப் பேசறே? நீ இப்படித் தனியாத் தவிக்கணும்னா நான் ஆசைப்பட்டேன். பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டியே சஞ்சீவ். நீ குடும்பமா, சுபிட்சமா வாழறதை நான் கண் குளிரப் பார்க்க வேண்டாமா? பேரக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் நீ என்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அது தப்பா? அதான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றேன். ஆராதனா அப்பாதான் டைவர்ஸ் கேக்கறாரே, ஒத்துக்கலாம் இல்ல.”
“அம்மா, இந்தப் பேச்சை இதோட விட்டுடுங்க. டைவர்ஸ் பத்தி நான் யோசிக்கக்கூட மாட்டேன். இதுதான் என் முடிவு.”
பானுமதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மகனின் நிலையை நினைத்து கவலைப்படுவதா, அவன் மனம் மாறி வேறு வாழ்க்கைக்கு ஒத்துக் கொள்வான் என்று காத்திருப்பதா என்று புரியவில்லை.
இது போதாதென்று சஞ்சீவ் வாழ்க்கை இப்படி ஆனதற்கு பானுமதியின் குணம்தான் காரணம் என்று சங்கவி வேறு அவ்வப்போது பானுமதிக்கு அறிவுரை சொன்னாள். எல்லாம் சேர்ந்து பானுமதியைப் பாடாய்ப்படுத்தின. தன் மனக்குமுறலை யாரிடம் கொட்டுவார்? வழக்கம்போல் ராகவன்தான் இப்போதும் தேற்றினார்.
“என்னங்க, ஆசையாய் சுமந்து பெத்த நம்ம மகன்கிட்ட நான் அளவுக்கு அதிகமா எதிர்ப்பார்க்கறதா எல்லாரும் என்னைக் குத்தம் சொல்றாங்க. சஞ்சீவ் வாழ்க்கை நிம்மதியா இல்லாமப் போனதுக்கு நான்தான் முக்கிய காரணம்னு நம்ம உறவுகள், அக்கம்பக்கம் எல்லாரும் என் காதுபடவே பேசிக்கறாங்க. பையன் என் கண் முன்னால இருக்கணும்னு ஆசைப்பட்டது தப்பாங்க? இதுக்குக்கூட பெத்தவளுக்கு உரிமை இல்லையா?”
கண்ணீர் வழிந்தோட கலங்கிப்போய் நிற்கும் தன் மனைவியை என்ன சொல்லித் தேற்றுவது என்று அவருக்கும் தெரியவில்லை.
“பானு, ஊர்ல ஆயிரம் பேசுவாங்க. எல்லாத்துக்கும் நாம கவலைப்பட்டா வாழ்க்கை நரகமாயிடும். நீ பேசாம இரு. காலம் எல்லா காயங்களையும் ஆத்தும். சஞ்சீவ் கொஞ்சம் இந்த பாதிப்புல இருந்து வெளில வரட்டும். அவனுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம். அதுக்குள்ளே ஆராதனா மனசு மாறி வரளான்னு பார்க்கலாம். உடனே அடுத்த கல்யாணம் அது இதுன்னு பேசாதே.”
“ஆராதனாதான் தீர்மானமா சொல்லிட்டுப் போயிட்டாளே. தனிக்குடித்தனம் போகணும்னு பிடிவாதமா இருக்காளே.”
“தனிக்குடித்தனம் போனா என்ன பானு? அவங்க வாழ்க்கை, அவங்களுக்குப் புடிச்ச மாதிரி வாழட்டுமே. அப்படித் தனியா போனா நம்ம மகன் நமக்கில்லேன்னு ஆயிடுமா? ஊர் உலகத்துல நடக்காததா இது? என்ன, சஞ்சீவ் பார்க்கற வீட்டுல வந்திருக்கறதுக்கு ஆராதனா ஒத்துக்கிட்டிருந்தா இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. என்ன பண்ணறது, பக்குவமில்லாத வயசு. அப்படித்தான் துள்ளும். ஆராதனா அவ அப்பபாகிட்ட இருந்து கொஞ்சம் தனியா வேற எங்கேயாவது போயிருந்தா கண்டிப்பா நல்லவிதமா யோசிப்பா. அவ அப்பாதான் அவ மனசைக் கெடுக்கறதே. சூழ்நிலை மாறும் பானு. அப்போ எல்லாம் சரியாகும். சஞ்சீவுக்கு அந்த நம்பிக்கை இருக்கு. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. நீயும் நல்லதையே நினைச்சு நம்பிக்கை வை பானு.”
காலங்கள் உருண்டோடின. சஞ்சீவ் ஆராதனா பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த ஐந்து வருடங்களில் ஆராதனா நிறையவே மாறிவிட்டிருந்தாள். அவளுக்கு தன் மேல் என்ன தவறு என்பது புரிந்திருந்தது. சஞ்சீவ் மேல் தவறில்லை என்பதும் புரிந்தது.
ஆனால் அதற்காக தானே இறங்கிப் போய் மன்னிப்பு கேட்பதும், மீண்டும் சேர்ந்து வாழ்வதைப் பற்றி பேசுவதற்கும் அவள் மனம் இடம் தரவில்லை. அந்த ஈகோவை மட்டும் உடைக்க முடியாமல் காலத்தைக் கடத்தினாள்.
அவளைப் பொறுத்தவரை, சஞ்சீவுக்குத் தன் மேல் உண்மையான காதல் இருந்தால், இவ்வளவு வருடங்களில் தன்னைத் தேடி வந்து பேசி, மீண்டும் சேர்வதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். அவனே முயற்சி செய்யவில்லை எனும்போது, தான் மட்டும் எதற்காகப் பணிந்து போகவேண்டும் என்ற ஈகோ ஒட்டிக் கொண்டிருந்தது.
அதனால் அதற்கான முயற்சியில் இறங்காமல்தான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் சமீப நாட்களாக அவளது தனிமை அவளுக்கு வெறுமையைத் தந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தோழியின் திருமண நிகழ்வில் சஞ்சீவைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. இவ்வளவு வருடங்களில் அவனைப் பார்க்க முயற்சி எடுக்காமல் இருந்தவளுக்கு, எதேச்சையாக சஞ்சீவைப் பார்த்ததும் மனதில் ஒளிந்து கிடந்த காதல் வெளிவந்து அவளது பழைய வாழ்க்கையைக் கிளறிவிட்டது. அதைத்தான் முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம்.
தன் தவறை உணர்ந்து கொஞ்சம் தெளிவடைந்திருந்த ஆராதனா, சஞ்சீவை எதிர்பாராதவிதமாக சந்தித்து விட்டாள். இப்போது தொலைந்து போன காதல் மீண்டும் கிளர்ந்தெழுந்தது.
இனி என்னவாகும்? காதல் மீண்டும் கைகூடியதா? ஆராதனா மனம் திருந்தி வந்தால் சஞ்சீவ் ஏற்றுக் கொள்வானா? மதனகோபால் ஒத்துக் கொள்வாரா? அதேபோல் சஞ்சீவின் வீட்டில் வாழப் போனால் பானுமதி அதை எப்படி ஏற்றுக் கொள்வார்? இல்லையெனில் பிரிந்தவர்கள் இனி சேரவே மாட்டார்களா????
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings