டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“பொம்மான்” அந்த ரயில்வே ஸ்டேஷனின் பெயரே வித்தியாசமாக இருந்தது சஞ்சய்க்கு. வெளியே நல்ல மழை பெய்து கொண்டிருந்தது, வானம் இருண்டிருந்தது அவன் மனதைப் போலவே.
ஸ்டேஷனில் இருபுறமும் பார்த்தான், சின்ன ஸ்டேஷன்… ஒருவரையும் காணவில்லை. எப்போதாவது வரும் ஒரு சில ரயில்கள் அந்த ஸ்டேஷனில் நிற்பதே குறைவு என்பதால் கூட்டமில்லை. அதற்காகவே அவன் இந்த ரயில்வே ஸ்டேஷனை தேர்ந்தெடுத்திருந்தான்.
ஆளில்லாத அந்த ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் கதவை அடைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் கதவை மெதுவாக தட்டிக் விட்டு உள்ளே நுழைந்தான்.
தூக்கம் கலைந்த எரிச்சலில் தலையை தூக்கி, “என்னப்பா என்ன வேணும்? என்றார்.
“சார் வண்டி எண்- 17356 பெங்களூரு போறது இந்த ஸ்டேஷன் வழியாதானே வரும்? “
“அட ஆமாங்க.. 17356 இந்த ஸ்டேஷன் வழியாத் தான் போகும், ஆனால் இங்கே நிக்காது. நீங்க அதுக்காக காத்திருந்தா வேஸ்ட். முன்னாடி டிக்கெட் கவுண்டரில் நிக்காதுன்னு சொல்லியிருப்பாங்களே”
“சொன்னாங்க சார்! ஆனால் ட்ரெயினே கடந்து போன மாதிரி தெரியலையே”
“மழை எப்படி அடிச்சு ஊத்திகிட்டு இருக்குன்னு பாருங்க.. எங்க பார்த்தாலும் தண்டவாளத்தில் தண்ணி நிக்குது. அதனால இந்தப் பாதையில போற எல்லா டிரெயினும் 4 மணி நேரம் லேட்”
எதுக்கு நிக்காத ரயிலுக்கு இவ்வளவு விபரம் கேட்கிறான் என்ற சந்தேகம் மனதில் ஓடியது. ஒருவேளை ஏதாவது நாசவேலை பண்றானோ? தீவிரவாதக் கூட்டத்தை சேர்ந்தவனோ… நோட்டம் பாக்கத்தான் வந்திருக்கானோ?
அடுத்த கேள்வி மனதில் தோன்றும் முன் தூங்கிப் போனார்.
வெளியே வந்த சஞ்சய் இன்னும் 4 மணி நேரத்தை எப்படி கழிப்பது… நேற்று வரை மனதில் இருந்த குழப்பம், கவலை, பதட்டம் எல்லாம் மறைந்து, இப்போது மனம் நிம்மதியாக இருந்தது. இனி செயலில் இறங்க வேண்டியது தான் பாக்கி. எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டியது. மனதிற்குள் எந்த சாமியை வேண்டுவது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.
அவன் திரும்பி வந்தபோது பக்கத்து பெஞ்சில் ஒரு வயதானவர் படுத்திருந்தார். குளிர் தாங்க முடியாமல் உடல் நடுங்கியபடி கால்களை மார்புக்கு கொடுத்தபடி படுத்திருந்தார். மழை இன்னும் நின்றபாடில்லை. குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. மேலே ஒரு துண்டை மட்டும் போட்டுக் கொண்டு நடுங்கியபடி படுத்துக் கிடந்தார். உடனே சஞ்சய் தான் போட்டிருந்த கோட்டை கழற்றி அவருக்கு போட்டுவிட்டான்.
“தம்பி எதுக்கு உன்னுடைய கோட்டை கழட்டுனப்பா? உனக்கு வேணாமா?” என்றார்
“இது எனக்கு இனி தேவைப்படாது தாத்தா.. நீங்க போட்டுக்கோங்க..” என்றான்
“தாத்தா எதுக்கு இந்த குளிரில் இங்க படுத்திருக்கீங்க? உங்களுக்கு வீடு எதுவும் இல்லையா?”
“நல்லா கேட்ட போ… அதோ பாரு அந்த கடைசி பிளாட்பார்ம்கு வெளியே போக ஒரு கேட் தெரியுது பாரு, அது வழியா போனா அஞ்சு நிமிஷம் நடந்தா என் வீடு”
“கண்ணாடி உடைஞ்சு போச்சு… கண்ணு மசமசன்னு தெரியுது.. இந்த இருட்டில மழையில போனா கீழே விழுந்துடுவோமோங்கற பயத்தில தான் இங்கேயே படுத்துட்டேன்.”
“வீட்டுல யார் தாத்தா இருக்காங்க? “
“தம்பி எனக்கு வயசு 75 ஆகுது. நல்ல வேலையில் இருந்து ரிட்டையர் ஆனவன். இருந்த சொத்தை 4 பிள்ளைகளுக்கு பிரிச்சு கொடுத்தேன். இப்போ வீட்டுல நானும், கிழவியும், கல்யாணம் ஆகாத என் பொண்ணும் மட்டும்தான் இருக்கோம். மூன்று பசங்களும் தனியா இருக்காங்க”
“ஏன் தாத்தா நீங்க இன்னும் உழைச்சிகிட்டு இருக்கீங்க பையன்கள் உங்களை கவனிக்க மாட்டாங்களா? “
“அட போப்பா என்னையும், கிழவியையும் சேர்த்தாலும், கூட பிறந்தவளை சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் உசுரு இருக்கிற வரைக்கும் அந்த புள்ளைக்கு நான் தான் பொறுப்பு.”
“உங்க மக படிக்கலையா… வேலைக்கு எதுவும் போகலையா?”
“இல்லப்பா அவ படிச்சிருக்கா. வேலையும் பாத்துக்கிட்டு தான் இருக்கா. கிழவியும் சும்மா இருக்கமாட்டா. காலையில் இட்லி காபி தயார் பண்ணி கொடுப்பா.. ஸ்டேஷன்ல நிக்கிற ரயிலுக்கும் இங்கே இருக்கிற ஸ்டேஷன் மாஸ்டர், மத்த ஆட்களுக்கும், நான்தான் டிபனும், காபியும் கொண்டுவந்து கொடுப்பேன்.”
“கிழவி கைப்பக்குவம் நல்லாவே ருசியா இருக்கும், அதனால எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இது ரொம்ப சின்ன கிராமம். இங்கே சாப்பாட்டு கிளப்பெல்லாம் கிடையாது. அது சரி தம்பி.. நீ எங்கிருந்து எப்படி இந்த கிராமத்துக்கு வந்த? இங்க ஒன்ன நான் பார்த்ததில்லையே “
“தாத்தா எனக்கு சென்னை பூர்வீகம். அப்பா அம்மா சென்னையில் இருக்காங்க. நான் இன்ஜினியர் பட்டதாரி பெங்களூரில் வேலை கிடைச்சிருக்கு”
“பெங்களூரு பிள்ளையா… 8 மணி ரயில்ல தெரியாம இறங்கிட்டியா? இப்ப வர்ற ரயிலு நிக்காது…. அதுக்கு அடுத்த ரயிலு தான் நிக்கும். அதுல தான் நீ பெங்களூரு போக முடியும், என்னை எங்க வீட்ல கொண்டு விட்டுட்டு எங்க வீட்டிலேயே தங்கி விடு. விடிஞ்சு எந்திரிச்சு காப்பி டிபன் சாப்பிட்டு இங்கே வந்தேன்னா ரயில் வர சரியா இருக்கும்”
“வேணும்னே விரும்பி தான் அந்த ஸ்டேஷன்ல இறங்கினேன்” என்ற உண்மையை எப்படி சொல்லுவான். இருந்தாலும் இப்போதைக்கு பேச்சுத்துணைக்கு இந்தப் பெரியவரை விட்டால் ஆளில்லை.
“தாத்தா நீங்க படிச்சு வளர்ந்தது எல்லாம் இங்கே தானா ? பெரிய ஊரிலேயே போரடிக்குது இந்த கிராமத்துல உங்களுக்கு எப்படிப் பொழுது போகுது? எரிச்சலா இல்லையா? எப்படி பொறுமையா இந்த இடத்தில் இருக்கிறீங்க? எனக்கெல்லாம் இந்த மாதிரி இடத்தில அஞ்சு நிமிஷம் கூட இருக்க முடியாது”
“நீ மட்டும் இல்ல தம்பி இந்த தலைமுறையே பொறுமை இல்லாம தான் இருக்கிறீங்க… எவ்வளவுக்கு எவ்வளவு திறமை இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு பொறுமை குறைவும் இருக்கு உங்ககிட்ட. அந்த காலத்துல இந்த ஊர் பள்ளிக்கூடத்துல நான் படிக்கும்போது எங்க வாத்தியார் என்ன தப்பு பண்ணினாலும் முட்டிக்கு கீழே உரிச்சிருவாரு.
வாத்தியார்னா அவ்வளவு பயம் இருக்கும். அதே நேரம் வாத்தியார்களுக்கும் பிள்ளைங்க நல்லா வரணும் வாழ்க்கையில நல்லத கத்துக்கணும் படிப்போடு சேர்த்து பண்பும் வளரனும்ங்கறதுல கவனமா இருப்பாங்க.
எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் போனதும் முதல் வகுப்பு மரத்தடில.. உக்காந்து நீதி போதனை கதைகளை சொல்லி தினமும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வதுதான் அரைமணி நேரம் நடக்கும். அதுல நிறைய விஷயம் மனசை பக்குவப்படுத்த சொல்லிக் கொடுப்பாங்க
வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் இருந்த கண்டிப்பும் போதனையும் எங்களை நல்ல தைரியசாலியாக மாத்துச்சு. ஆனா இப்ப உங்களுக்கு அது ரெண்டுமே இல்லப்பா.. என் பிள்ளைகளையும் சேர்த்துதான் சொல்றேன். ஆனா என் பொண்ணு அப்படிப்பட்டவ இல்ல. அவ ரொம்ப தைரியசாலி. வாழ்க்கையை போராடி எதிர்த்து நின்னு ஜெயிக்கணும்னு உறுதியோடு இருக்கிறவ. சரி வா பேசிகிட்டே இருக்கேன். மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு வீட்டுக்கு போயிடலாம்”
தாத்தாவை மெதுவாக அவர் வீட்டுக்கு அவர் கூறிய பாதையிலேயே கூட்டிக் கொண்டு போனான். ஏதோ தன்னால் முடிந்த ஒரு சிறு உதவி ஒரு முதியவருக்கு செய்ய முடிகிறது என்ற மனதிருப்தி. அவர் கூறியபடி ஐந்து நிமிட நடையில் வீடு வந்துவிட்டது. வீட்டு கதவை தட்ட கதவைத் திறந்தவர் தள்ளாத வயதில் ஒரு பாட்டி.
புன்முறுவலோடு “உள்ள வாப்பா” என்று உபசரித்தார்.
உள்ளே இருந்த பெரியவரின் மகளை பார்த்தவன் திடுக்கிட்டான். ரெண்டு கால்களும் சூம்பிப் போய் இரண்டு கட்டைகளின் உதவியுடன் நடந்து வந்தாள்.
“இவதாம்பா என் பொண்ணு மாதவி. பி.காம். படிச்சிருக்கா, எம் காம். தபால்ல படிக்கிறா. அது போக தமிழ் டைப்.. இங்கிலீஷ் டைப் எல்லாம் கத்துக்கிட்டிருக்கா. கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணி இருக்கா. அதனால ஒரு பெரிய கடைல கம்ப்யூட்டர் பில்லிங் செக்சன்லே இவளுக்கு வேலை கிடைச்சிருக்கு, மாசம் 15,000 சம்பாதிக்கிறா. ரொம்ப தன்னம்பிக்கையான, தைரியமான, பொண்ணு”
தன்னைப் பற்றி புகழ்ச்சியாக கூறுவது அந்தப் பெண்ணுக்கு கூச்சத்தைக் கொடுக்க.. “இதெல்லாம் ஒரு சாதனை மாதிரி சொல்லாதீங்கப்பா” என்றாள்.
75 வயதிலும் உழைக்கும் அந்த முதியவர்… அவருக்கு உதவியாய் சமைத்துக் கொடுக்கும் வயதான அவர் மனைவி. கால்கள் நடக்க முடியாத நிலையிலும் மனது நிறைய தன்னம்பிக்கையை நிரப்பிய அந்தப்பெண் மாதவி. சஞ்சய்க்கு தன்னை நினைத்து வெட்கமாக இருந்தது… ஒரு வாரத்திற்கு முன் நடந்த அனைத்தும் நினைவில் நிழலாடியது.
பொறியியல் கல்லூரி இறுதி வருடம். சிட்டுக் குருவியாய் வாழ்க்கை. கவலையற்ற, பொறுப்புகளற்ற நாட்கள், வசதியான சொகுசான வாழ்க்கை.. பொருட்கள் மட்டுமே கனவுகளாய்…
“டேய் சஞ்சய்! நம்ம ராகவ்வ பாத்தியா? புது மாடல் ஐபோன் வாங்கியிருக்கான். விலை என்ன தெரியுமா 50,000 ரூபாய்”
“டேய் எங்கயாவது கொள்ளையடித்தானா? அவனுக்கு எப்படிடா இவ்வளவு காசு வந்தது? அவங்க அப்பாவும் சாதாரண குடும்பம் தானே” ஆச்சரியத்துடன் வாயை பிளந்தான் சஞ்சய்
அங்கு வந்த ராகவ், “டேய் சஞ்சய் இப்ப என்ன உனக்கு ரகசியம் தெரியனும்.. அவ்வளவுதானே எல்லாம் ஆன்லைன் ரம்மி டா.. அள்ளிக் கொடுத்தது..”
“எப்படிடா இவ்வளவு பணம் கிடைத்தது?”
“ஐயாவுக்கு லக் இருக்குல்ல… முதல்ல ஒரு அஞ்சாயிரம் நஷ்டம், பிறகு ஒரு பத்தாயிரம் போச்சு ..அப்புறம் லம்பா ஐம்பதாயிரம் வந்துச்சு”
“அப்ப அதையும் வெச்சு விளையாடி பார்க்க வேண்டியது தானடா…இ ன்னும் நிறைய பணம் கிடைக்கும்ல ” என்றான் சஞ்சய் ஆசையோடு.
“அட போப்பா! அப்படியே போய்கிட்டு இருந்தா ஒரு ஸ்டேஜ்ல பணம் பூராவும் போச்சுன்னா அப்புறம் என்ன செய்ய? அதனால அதோட நிறுத்திட்டேன்” என்றான்.
“எவ்வளவு கனவுகள்.. ஆசைகள்.. இருக்கு எல்லாத்துக்கும் அப்பா அம்மா கையை எதிர்பார்க்க முடியல.. சம்பாதிச்சு, சேர்த்து எந்த காலத்தில் வாங்குறது.. இது நல்ல ஐடியாவா இருக்கே எனக்கும் கத்துக்கொடு” என்றான் சஞ்சய் .
முதலில் ஏற்பட்ட சிறுநஷ்டம் சஞ்சய்கு பெரியதாக தோன்றவில்லை. அதற்கப்புறம் கிடைத்த சிறுதொகை அவனுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கப்புறம் என்ன இன்னும் மேலே மேலே என்று தொடர… போகப் போக ஒவ்வொரு தடவையும் தோல்வி தொகை ஏறிக்கொண்டே போனது.
கையிருப்பு கரைந்ததும் பணத்துக்கு என்ன செய்ய என்று கழுத்தில், கையில் போட்டிருந்ததை வைத்து விளையாட்டைத் தொடர்ந்தான் …பிறகு வட்டிக்கு கடன் வாங்கினான்.
ஒரு வார காலமாக அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை அவன் அம்மாவை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்
“ஏம்பா எப்ப பாரு போன வச்சிகிட்டு இருக்கியே ..உன் முகமும் சரியில்லை ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.
“அம்மா எனக்கு நீ ஒரு நவரத்தின மோதிரம் செஞ்சல்ல, அதை கொடு எனக்கு கொஞ்சம் நேரம் சரியில்ல போட்டுக்கிறேன்” என்றான்.
நவரத்தினம் போட்டால் நல்லது நடக்குமா என்று பார்ப்போம் என்று அதையும் எடுத்துக் கொடுத்தாள் அம்மா. தொடர்ந்து தைரியமாக ஒரு பெரிய தொகையை வைத்து ஆட அதுவும் தோல்வியில் முடிந்த போது தான் வாழ்க்கை பூதாகரமாய் பயமுறுத்தியது சஞ்சயை.
அவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்டுவான்? வட்டிக்கு பணம் கேட்க அவர்கள் வீட்டு பத்திரம் கேட்டார்கள். ஒன்றும் தோன்றாமல் பித்துப் பிடித்தவன் போல் அலைந்தான்.
வீட்டில் இருந்தால் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். தன் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போன்ற விரக்தி மனதை கவ்வியது. இனி பணத்துக்கு எங்கே போக யாரிடம் சொல்ல ..இதற்கெல்லாம் ஒரே முடிவாய் அவன் முன் தோன்றியது….
அவனுடைய நினைவு சங்கிலியை அறுத்தது பெரியவரின் வார்த்தைகள், “என்னப்பா யோசனையில் ஆழ்ந்துட்ட.. இந்தா சுடச்சுட டீயும், இட்லியும் கிழவி கொண்டு வந்து வச்சுருக்கா சாப்பிடு” என்றார் அன்போடு
வாழ்க்கையில் கோழைத்தனமாக ஒரு முடிவுக்கு வந்து வந்தோமே என்ற எண்ணம் அவனை வெட்கம் கொள்ள செய்தது. தள்ளாத வயதில், தன்னம்பிக்கையோடு, தைரியத்தோடு, உழைத்து வாழ்க்கை நடத்தும் அந்த தம்பதி… ஊனத்தையும் வென்று உற்சாகமாக படித்து வேலை பார்க்கும் அந்தப் பெண் மாதவி. அவனைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பது போல இருந்தது.
மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் இருந்தால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியாதா என்ற எண்ணம் முதல்முறையாக அவனுள் பிறந்தது.
தாத்தா அவர் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தார், “மழை மழை என்று மழையை திட்டக்கூடாது. மழையும் எத்தனை பேர் வாழ்க்கையை காப்பாற்றுகிறது தெரியுமா?” என்றார் அவனிடம்.
‘தெரியாது தாத்தா ஆனால் என் வாழ்க்கையை என் உயிரை காப்பாற்றி இருக்கிறது. மழை மட்டும் பெய்யாமல் இருந்து ரயில் உரிய நேரத்தில் வந்து இருந்தால், நான் இப்போ இங்கே உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்’ என்று நினைத்துக் கொண்டான்.
காலை வானம் வெறித்திட… அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஸ்டேஷனை நோக்கி நடந்தான், இந்த தடவை ரயில் அவன் மேல் ஏற அல்ல… அவன் ரயிலில் ஏற.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings