எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மொபைல் சிணுங்கியது. மொபைலைப் பார்த்த பரமேஸ்வரன், ‘ஆபீஸ் நம்பர்…’ என்று முனகியபடியே மொபைலை எடுத்து காதில் வைத்தான்.
அவனுக்கு பெண் பார்க்க குடும்பத்துடன் திருச்சிக்கு கிளம்பி போய்க் கொண்டிருந்தார்கள். தம்பி சுந்தர் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அருகில் அவன் உட்கார்ந்திருக்க, பின்சீட்டுகளில் அம்மா அப்பா தங்கை மூவரும் உட்கார்ந்திருந்தார்கள்.
ஆபீஸ் கால் என்பதால் காலை ப்ளூடூத்தில் போட்டான்.
‘ ரீட்டா, குட் மார்னிங்… அப்படியா… சரி கொடுங்க… வணக்கம்… ஆமா பரமேஸ்வரன்தான்… ஆமா… ஓஹோ… அப்படியா… ஓ… சரி… புரியுது… ஆனாலும்… ஆமா… சரி நேர்ல பேசிக்கலாமே… ஓஹோ… பார்ப்போம்… சரி… சரி…. ’
போனை கட் பண்ணியதும் அம்மா கேட்டாள். ‘ ஆபீஸ் காலா பரமா… ஒருநாளைக்கு லீவு போட்டாக் கூட விடமாட்டேங்கிறாங்களே…’
அப்பா குறுக்கிட்டார், ‘ உன்புள்ளை என்ன சாதாரண போஸ்ட்லயா இருக்கான்…கம்பெனி ஜி.எம். டி தெரிஞ்சுக்கோ…’
‘ அதில்லைப்பா… இது வேற…’ என்று குறுக்கிட்டவன், யோசிக்க ஆரம்பித்தான். ஜாதகத்துடன் சேர்ந்து வந்திருந்த போட்டோவில் பார்த்த மாலதியின் முகம் இப்போது அவனது மனக்கண்களின் முன்னே வந்து போனது.
xxxxxx
கொஞ்சம் முன்னால்…ஆபீஸில்…
‘ குட் மார்னிங்…ஆர்.கே.ஜி.எண்டர்ப்ரைசஸ் லிமிட்டடா…’
‘ எஸ்…மேடம்… குட் மார்னிங்… நான் உங்களுக்கு எப்படி உதவலாம்….’
‘ நான் உங்க ஜி.எம். பரமேஸ்வரன்கிட்டே பேசணும் ‘
‘ மேடம்… உங்க பேரு…’
‘ என் பேரு மாலதி சுந்தரம்…திருச்சிலேர்ந்து …’
‘ ஸாரி… மேடம்… அவர் இன்னிக்கு ஆஃப்ல இருக்கார். அவர் வந்ததும் நீங்க கால் பண்ணினதா சொல்லட்டுமா…’
‘ இல்ல… அவரோட நம்பர் கொடுங்க… நான் அவரோட பேசிக்கறேன். இது கொஞ்சம் பெர்சனல் மேட்டர், எமர்ஜென்சியும்கூட… நான் பேசியே ஆகணும்…’
‘ சரி… கொஞ்சம் லைன்ல இருங்க…லைன்ல கிடைக்கறாரானு பார்க்கறேன்… ‘
‘ …’
‘ குட் மார்னிங் ஸார்… ரிஸப்ஷனிஸ்ட் ரீட்டா…பேசறேன்…’
‘ ரீட்டா, குட் மார்னிங்… ‘
‘ ஸார்…திருச்சிலேர்ந்து மாலதிசுந்தரம்னு ஒருத்தர் பேசறாங்க… ’
‘ அப்படியா… ‘
‘ எஸ்.ஸார்… முதல்ல நம்பர் கேட்டாங்க… நான்தான் லைன் கொடுக்கறேன் பேசுங்கன்னேன்… அவங்க கால் வெயிட்டிங்க்ல இருக்கு… ’
‘ சரி கொடுங்க…’
‘ ஸார் ப்ளீஸ் பேசுங்க…
‘ மேடம் ஸார் லைன்ல இருக்கார் பேசுங்க… ‘
‘ என் பேரு மாலதி சுந்தரம், திருச்சிலேர்ந்து பேசறேன், வணக்கம்…’
‘ வணக்கம்… ‘
‘ மிஸ்டர் பரமேஸ்வரன் தானே…’
‘ ஆமா பரமேஸ்வரனேதான்… ‘
‘ எங்க வீட்டுக்கு பெண் பார்க்க வர்றவர்… ’
‘ ஆமா… ‘
‘ எனக்கு இதுல இஷ்டமில்லை….’
‘ ஓஹோ… ‘
‘ நீங்க வரவேண்டாம்னு சொல்லலை… வந்துட்டு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லணும்…’
‘ அப்படியா… ‘
‘ கணேசமூர்த்தினு ஒருத்தர் என்னை விரும்பறார்… நானும் விரும்பறேன்… ’
‘ ஓ… ‘
‘ அதனாலதான் சொன்னேன்…’
‘ சரி… ‘
‘ நான் சொல்றது புரியுதுதானே… ‘
‘ புரியுது…ஆனாலும்…’
‘ இன்னிக்கு மூணு மணிக்கு இங்கே வர்றீங்கதானே… ‘
‘ ஆமா…வந்துக்கிட்டே இருக்கோம்… ‘
‘ சொன்னதை மனசுல வச்சுக்கங்க…’
‘ சரி நேர்ல பேசிக்கலாமே…’
‘ மிஸ்டர் கணேசமூர்த்தியும் மூணு மணிக்கு இங்கே வர்றேன்னிருக்கார்… எங்க ஆபீஸ் மார்கெட்டிங் மேனேஜர்தான் அவர்…’
‘ ஓஹோ…’
‘ சரி…வாங்க பார்ப்போம்…’
‘ பார்ப்போம்…’
‘ குழப்பிடாதீங்க…’
‘ சரி… சரி…. ’
xxxxxx
பெண் வீட்டார் வீட்டில்…
இன்னோவா வாசலில் வந்து நின்றது. சுந்தர், ‘ அண்ணா, நாலாவது தெரு, வீட்டு நம்பர் 94 இதோ இந்த வீடுதாண்ணா…’ என்றான் சுந்தர்.
அனைவரும் இறங்கினர். வெளியே எட்டிப் பார்த்த ஒரு சிறுபெண் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே ஓடினாள்…
’ கார் வந்துடுச்சு… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க…’’
பெண் வீட்டார் மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர். இவர்களும் புன்னகையுடன் கைகூப்பியபடி உள்ளே நுழைந்தனர்.
‘ பிரயாணம் நல்லபடியா இருந்ததா…நான்தான் பெண்ணோட அப்பா, என் பேரு சுந்தரம்…’
ரங்கநாதன் முந்திக்கொண்டார்…’ பிரயாணம் நல்லபடியா இருந்தது. இதோ இங்கிருக்கற கடலூர்லேர்ந்துதானே வர்றோம்…அதுவும் கார்லே…பிரயாணம் நல்லாவே இருந்தது…’
எல்லோரும் அமர்ந்தனர்.
‘ பை தி பை எங்க குடும்பத்தினரை அறிமுகம் செஞ்சு வெச்சுடறேன்… என் பேரு ரங்கநாதன், நான் பையனோட அப்பா, ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனில ஜி.எம்.மா இருக்கேன். என் மிஸஸ் மங்களம், வீட்டை கவனிச்சுக்கறாங்க… பெரிய பையன், பரமேஸ்வரன், அவன்தான் மாப்பிள்ளை, எம்.காம்.எம்.பி.ஏ., ஆர்.கே.ஜி.எண்டர்ப்ரைசஸ் லிமிட்டட்ல ஜி.எம்., அடுத்தவன் சுந்தர், எம்.டெக். சாப்ட்வேர் இஞ்சினீயர், கோயம்பத்தூர்ல இருக்கான். அடுத்த மாசம் ஒரு ப்ராஜக்ட் விஷயமா யூ.எஸ். அனுப்பறாங்க கம்பனியிலேர்ந்து. மூணாவது நிறைமதி. எம்.எஸ்.சி. கெமிஸ்ட்ரி பண்ணிருக்கா… ஒரு பார்மசூடிகல்ஸ் கம்பெனில அசிஸ்டன்ட் ஜெனெரல் மேனேஜரா மும்பைல இருக்கா…இதான் எங்க குடும்பம்…’
பெண்ணின் அப்பா தொடர்ந்தார். ‘ ரொம்ப சந்தோஷம்…நான் எங்க குடுபத்தை அறிமுகப் படுத்திடறேன்…நான் பெண்ணோட அப்பா, பேரு சுந்தரம், ஒரு இன்ஸூரன்ஸ் கம்பெனில டிவிஷனல் மேனேஜரா இருக்கேன். இன்னும் ஒரு வருஷத்துல ரிடையராகப் போறேன், என் மிஸஸ் ராஜாத்தி, காலேஜ்ல ப்ரோபஸரா இருக்காங்க. மூனு பொண்ணுங்க. மூத்தவ மாலதி சுந்தரம், அவதான் நீங்க பார்க்கவந்த பொண்ணு. பி.எஸ்.சி.எம்.பி.ஏ. பண்ணியிருக்கா, ஒரு கார் ஷோ ரூம்ல ஜி.எம்.மா வேலை பண்றா, ரெண்டாவது ஸ்ருதி. பி.எஸ்.சி., பி.எட். ஒரு பிரைவேட் ஹைஸ்கூல்ல டீச்சர். கடைக்குட்டி ஸ்மிதா… இப்போதான் நயன்த் போறா…’
பஜ்ஜி, வடை, காபி…பரிமாறப்பட்டது. சாப்பிட்டார்கள்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வேலை பற்றி… திருச்சி மலைக்கோட்டை பற்றி… கடலூர் பற்றி… மும்பை பற்றி, டெல்லி பற்றி, அரசியல் பற்றி… பரமேஸ்வரன் மெல்ல அப்பாவின் தொடையைத் தட்டினான். ‘ அரசியல் வேண்டாமே ‘ என்றான் சன்னமான குரலி.
கொஞ்சம் இடைவெளி விட்டு, ‘ சரி…பேசிக்கிட்டே இருந்துட்டோம்… பின்னால இன்னும் நிறைய பேசிக்கலாம்…’ என்று நிறுத்தினார் மாப்பிள்ளையின் அப்பா ரங்கநாதன்.
பெண்ணின் அப்பா குறுக்கிட்டார், ‘ ஆமாமா…இனிமே அடிக்கடி சந்திச்சுக்கத்தானே போறோமே, நிறைய பேசிக்கலாம்….நீங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. வேற ஏதாவது சந்தேகம்னா கேட்கலாம்… எங்களைப் பொருத்தவரை உங்க எல்லாத்தையும் பிடிச்சிருக்கு…’ என்றார்.
உடனே, ‘ எங்க எல்லாருக்குமே மாலதியை பிடிச்சிருக்கு. மாப்பிள்ளை பையனுக்கும் ரொம்பவே பிடிச்சிருக்குன்னு முன்னாலேயே என்கிட்டே ரகசியமா சொல்லிட்டான்… நீங்கதான் சொல்லணும்… ‘
‘ நாங்க சொல்றதைத்தான் என் பொண்ணும் சொல்லுவா… ஒரு நல்ல நாளா பார்த்து நீங்களே சொல்லுங்க…’
‘ மிகச் சிறப்பு….நாங்க கிளம்பறோம்…’
XXXXXX
ஒருவாரம் ஓடியது.
‘ ஹாய்… எப்படி இருக்கீங்க… என்கப்பாக்கிட்டே இருந்து உங்க நம்பரை வாங்கினேன்… ‘
‘ ஹாய்… மாலதியா… என்ன அதிசயம்… சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க… ‘
‘ அன்னிக்கு நான் அவ்வளவு சொல்லியும் நீங்க என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்க இல்லை… ’
‘ நான் உண்மையைத்தானே சொன்னேன்… நீங்க வேணா யாரைவேணாலும் லவ் பண்ணிக்கலாம்… அதுக்காக உங்களை பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னுதானே சொல்லணும். அதுவும் போட்டோவை விட நேர்ல ரொம்பவும் அழகா… அது சரி… உங்கப்பா சொன்னார், நீங்க சரி சொன்னதா… அப்புறம் எப்படி மனசு மாறினீங்க… ‘
‘ ஸாரி… அது ஒரு டிராஜெடி… ’
‘ ஓ… ஸாரி… ‘
‘ ஸாரி இல்லை. இப்போ சந்தோசப் படறேன்… கல்யாணம் பண்ணிக்கிட்டு சிங்கப்பூர் போயி செட்டிலா ஆகலாம்னெல்லாம் கூட சொல்லிட்டிருந்தார். ஆனா நீங்க வந்தன்னிக்கு வர்றேன்னவர் வரவே இல்லை. மொபைல் வேற ஆப் ஆகி இருந்தது. ஆபீஸ்க்கு போன் பண்ணினா அப்புறம்தான் தெரிஞ்சுது ஆபீஸ் பணத்தை அபேஸ் பண்ணி போலீஸ்ல பிடிபட்டு வேலையும் போயி… ‘
‘ சரி விடுங்க… இந்த வார கடைசில திருச்சில ஒரு வேலை… உங்க வீட்டுக்கும் வர்றேன்… ‘
‘ வந்து… ‘
‘ பார்க்கத்தான்… உங்களை… ‘
‘ வாங்க… வந்து பாருங்க… காத்துக்கிட்டிருக்கேன்… உங்களுக்காக…. ‘
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
மறக்க தெரிந்த மனமே
உனக்கு மறைக்க தெரியாதா