in ,

காத்திருக்கிறார்கள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்டேஷன் வாசலில் வந்து ஆட்டோ நின்றதும் வரதனும் கமலாவும் இறங்கினார்கள். பணத்தை வாங்கிக் கொண்ட ஆட்டோ டிரைவர் கூடுதலாக கேட்டு கரைச்சல் செய்ய, மேலும் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள்.

மறுபடியும் மொபைல் சிணுங்கியது. பிரபுதான் பேசினான்.

‘தாத்தா… டிரெயின் ஏறிட்டீங்களா… நானும் அப்பாவும் ஸ்டேஷனுக்கு வந்து காத்திகிட்டிருப்போம்.  அப்பைக்கப்போ அப்டேட் பண்ணிட்டே இருங்க… ஓகேயா தாத்தா…. பாட்டியும் கூட வர்றாங்கதானே… ‘

‘ஆமாம்யா… பாட்டி இல்லாம தாத்தா ஏது… ஸ்டேஷனுக்கே வந்துட்டோம்… பையை ஸ்கேன் செய்ற மிஷின்ல வச்சுட்டோம்… அது வெளியே வந்ததும் எடுத்துக்கிட்டு உள்ளே போய்டுவோம்… மூணாவது பிளாட்பாரமாம்.  தோ பை வந்திடுச்சு… தாத்தா போனை கட் பண்ணிடறேன்… பிளாட்பாரத்துக்குள்ளே வந்துட்டோம்… ‘

கமலா சிரித்துக் கொண்டாள். ‘நானும் வர்றேனானு ஊர்ஜிதப் படுத்திக்கிட்டானா புள்ளை… ஸ்டேஷனுக்கு அப்பாக் கூட தானும் வந்துடுவேன்னு சொல்லியிருப்பானே… ‘

பேரனை மெச்சியபடி உள்ளே நடந்து சப்-வேயில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்து மூன்றாவது பிளாட்பாரம் போய்ச் சேர்ந்தார்கள். ரெயில் தயாராக இருந்தது.  எஸ் 3 என்ற பெட்டியைத் தேடிக் கொண்டே போய் ஏறினார்கள்.  சீட் நம்பரைத் தேடி உட்கார்ந்தார்கள். ஜன்னல் ஓரமாய்… எதிர் எதிர் சீட்டுகள்.  

வேகமாய் நடந்து வந்ததால் உண்டான களைப்பைப் போக்க வேண்டி கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு, பிறகு, சிறிய பையை கொக்கியில் மாட்டிவிட்டு, பெரிய பையை சீட்டுக்கு அடியில் தள்ளினார்கள்.

மணியைப் பார்த்தார் வரதன். மணி பத்து ஐம்பது.

‘ பரவால்ல, பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டோம்… ‘

ஏ.ஸி.யின் காற்று சுகத்தைக் கொடுத்தது. கமலா தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்துவிட்டு அவருக்கும் நீட்டினாள். அந்த நேரம் மொபைல் அடித்தது.

‘ நீங்க குடிங்க… நான் யாருன்னு பார்க்கறேன்… ‘

‘ பேரன்தான்… ‘ என்று பரவசமடைந்தபடி பேசினாள், ‘ ஐயா… நாங்க பெட்டில ஏறி உட்கார்ந்துட்டோம்யா… சரிய்யா…. சரிய்யா… கொண்டாடிலாம்யா… ‘

‘ பிரபுவா…  ‘ என்றபடி வாட்டர் பாட்டிலை கொக்கி பையில் திணித்தார்.

‘ நேத்திக்கே கிளம்பியிருக்கலாம். நீங்கதான் இன்னிக்கு போனா போதும்னீங்க… நாம போயி சேர்ற வரைக்கும் காத்திட்டிருப்பாங்க, கேக் வெட்ட… ‘

‘ சரி… அதான் எப்படியோ வந்தாச்சே… விடு… ‘ 

அந்த நேரம், ஒரு வாலிபனும் வாளிபியும் பரபரப்பாக வந்து அங்கே நின்றபடி, மேலும் கீழும் பார்த்தனர்.  தங்களது கையில் இருந்த பேப்பரையும் பார்த்தார்கள். வரதனைப் பார்த்தார்கள்

‘ அய்யா… நீங்க உட்கார்ந்திருக்கறது எங்க சீட்டு… ‘ என்றான்.

கூட வந்தவள், ‘ ஏங்க… ஜன்னல் சவுகரியமா இருக்கும்னு உட்கார்ந்திட்டாங்க போல. நாம அவங்க இடம் எதுன்னு பார்த்து உட்கார்ந்துக்கலாமே… ‘ என்றாள்.

‘ அய்யா, உங்க இடம் எது… ‘ என்றான் அந்த வாலிபன்.

திகைப்புடன், ‘ தம்பி முப்பத்தஞ்சும் முப்பத்தாறும் நான் புக் பண்ணின சீட்டு தம்பி… நாங்க சரியாத்தான் உட்கார்ந்திருக்கோம்… ‘ என்றார் வரதன்.

மறுபடியும் தன் கையிலிருந்த பேப்பரைப் பார்த்துவிட்டு, ‘ அய்யா… இதோ பாருங்க… நாங்கதான் இந்த சீட்டை புக் பண்ணியிருக்கோம்… உங்க சீட்டு நம்பர் வேறயா இருக்கப் போகுது… இது எஸ். மூணு…  ‘ என்றபடி மறுபடியும் தனது கையிலிருந்த பேப்பரை கலவரத்துடன் பார்த்தான் அவன்.

அப்போதுதான் தனது சீட்டை பர்ஸிலிருந்து எடுத்தார் வரதன்.  ‘ நம்பர் சரிதான் தம்பி. போகி நம்பர் எஸ்.மூணு. சீட்டு நம்பர் முப்பத்தஞ்சும் முப்பத்தாறும்… நீங்கதான் தப்பா ஏறியிருக்கீங்க… உங்க சீட்டை நல்லா பாருங்க…. ‘

‘ இல்ல இல்ல… கரெக்டாதான் எறியிருக்கோம்… எங்களோடதும் போகி நம்பர் எஸ்.மூணு. சீட்டு நம்பர் முப்பத்தஞ்சும் முப்பத்தாறும்தான்…  நீங்கதான் தப்பா ஏறியிருக்கீங்க போல… ட்ரெயின் கிளம்பிடும்… சீக்கிரம் உங்க சீட்டை நல்லா பாருங்க…. இல்லை…  காட்டுங்க, நானாவது பார்க்கறேன்…  ‘

‘ நான் ஏன் காட்டனும்… வேணா உங்க சீட்டை காண்பியுங்க… நான் பார்க்கறேன்… ‘ என்றார் வரதன்.

வேறு வழியின்றி தனது கையிலிருந்த பேப்பரை அவரிடம் அவன் நீட்ட, பார்த்துவிட்டு, ‘சரிதான்… அதெப்படி ரெண்டு பேருக்கும் ஒரே சீட்டை ரெயில்வே ஒதுக்கினாங்க… ‘ என்று புருவங்களை உயர்த்தினார் வரதன்.

வாலிபன் குறுக்கிட்டான், ‘ அய்யா இன்னும் ரெண்டு நிமிஷம்தான் இருக்கு. வண்டிய எடுத்துடுவான்… சீக்கிரம்… ‘ என்றபடி சடக்கென அவர் கையிலிருந்த இரண்டு பேப்பர்களையும் பிடுங்கிக்கொண்டு பார்த்தான்.

‘ அய்யா… ட்ரைன், பெட்டி, நம்பர்லாம் சரிதான். ஆனா நாளைக்குதான் உங்க டிராவல்… பதிநோன்னுக்கு புக் பண்ணியிருக்கீங்க… இன்னிக்கு தேதி பத்து. நாளைக்கு இதே ட்ரைன், இதே பெட்டி, இதே சீட்டு… ‘ என்றவன், ‘ ஓகே.. ஓகே… சட்டுன்னு இறங்கிடுங்க… வண்டி எடுத்துட்டானா இறங்க முடியாது உங்களால… ‘

இருவரும் பதறினார்கள். கமலம் அவசர அவசரமாக பைகளை எடுத்தாள். அந்த வாலிபன் அவர்களுக்கு உதவினான். அவர்கள் கீழே கால் வைக்கவும்,  வண்டி நகரவும் சரியாக இருந்தது.

அவனுக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு நகர்ந்தனர்.

‘ஐயோ… புள்ளை ஆறுமணிக்கே வந்து எக்மோர்ல நிக்கறேன்னு சொன்னானே… எட்டுமணிக்கு கேக் வெட்டனும்னு சொன்னானே… ‘ புலம்பினாள் கமலம். திடீரென்று நினைத்துக் கொண்டவளாய், கணவனை முறைத்தாள். 

வண்டி வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

‘ஏங்க… நீங்கதானே டிக்கட் புக் பண்ணினீங்க… பார்த்து பண்றதில்லை…இப்போ ராஜாவுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க… ‘

கொஞ்சம் கடுப்பானார் வரதன். ‘ கொஞ்சம் இருடி… அதான் யோசிச்சிட்டே இருக்கேன்… மூணு நாலு ட்ரைன்ல டிக்கட் தேடினேன், எல்லாம் வெயிட்டிங் ஆர்.ஏ.ஸி’னு வந்தது. தேதிய மாத்தி மாத்தி தேடினேன்… திடீர்னு டிக்கட் இருந்துச்சு. தேதியை கவனிக்காம டக்குனு புக் பண்ணிட்டேன் போல… தப்பு நடந்து போச்சு… இப்போ என்ன்ங்கறே… ‘

‘ சரி… சென்னைக்கு போறது எப்படி… புள்ளைங்க மனசொடிஞ்சு போகாதுன்களா…  ‘

‘கொஞ்சம் பொறு… தம்பிக்கு போன் போட்டு சொல்லிடறேன்… நாங்க நாளைக்கே வந்துக்கறோம்னு சொல்லிடறேன்… ‘

‘ ஏங்க… புள்ளைக்கு இன்னிக்கு பர்த்டேங்க… இன்னிக்கு போகாம, நாளைக்கின்றீங்க…  ‘

சுள்ளென்று கோபம் வந்தது வரதனுக்கு, ‘இந்தா… திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டிருக்காதே…  நடந்தது நடந்து போச்சு… வீட்டுக்குப் போயி… ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்துக்கலாம். நாம பர்த்டேக்காக மட்டும் போகலை… பதினஞ்சு நாள் தங்கிட்டு வர்ரமாதிரி தானே ப்ளான் போட்டோம். என்ன… இன்னிக்கு போனா பொறந்த நாளதுவுமா கேக் வெட்டும்போது தாத்தா பாட்டி இருக்காங்கன்னு பிரபு சந்தோசப்படுவான்… சரி விடு… நடக்கறதுதான் நடக்கும்… ‘

உடனே போன் போட்டார் மகனுக்கு.  நடந்ததை விளக்கினார்.

‘என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களேப்பா… ஒப்பன் டிக்கட் எடுத்துட்டுக் கூட வரலாம்… ஆனா நல்ல உட்கார்ந்து வரமுடியாது.  ஏழரை மணி நேரம் வர்றதுக்குள்ளே போட்டு நசுக்கி எடுத்துடுவாங்க… பிரபுவை நான் சமாதானம் பண்ணிக்கிறேன்… நீங்க வீட்டுக்குப் போயிட்டு, சாவகாசமா நாளைக்கே வந்துடுங்க… நாங்க நாளைக்கு வந்து பிக்கப் பண்ணிக்கறோம்… ‘ என்றுவிட்டு, ‘ அம்மாக்கிட்ட போனைக் குடுங்க…’ என்றான்.

‘சரி நட, நடந்துக்கிட்டே பேசலாம்… ‘ என்றுவிட்டு மனைவியிடம் மொபைலைக் கொடுத்தார்.

‘அம்மா… நீங்க கவலைப்படாம வீட்டுக்குப் போங்க… போயிட்டு போன் போடுங்க… நான் வாட்ஸப்ல வீடியோ கால் பண்றேன்… பேசுங்க… ராத்திரி கேக் வெட்டும்போதும் லைவா காட்டறேன்… பார்ப்பீங்களாம்.. ஓகேயா… வெளியே போயி ஆளுக்கொரு காஃபி குடிச்சிட்டு டாக்சி பிடிச்சு போங்க… ஆட்டோல வேணாம்… குலுக்கி எடுத்துடுவான்… ‘

காஃபி குடித்துவிட்டு, டாக்ஸி பிடித்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

மகனுக்கு போன் போட்டாள், கமலா.  வீடியோ காலில் பேரன் பிரபு தெரிந்தான்.

‘ஓ…’ வென்று அழுதுவிட்டாள் கமலம்.

‘பாட்டி… அழாதீங்க… இன்னும் முப்பது மணி நேரம்தானே… இங்கே இருப்பீங்க… ராத்திரி கேக் வெட்டும்போது வீடியோ கால் பண்றேன்… லைவா பாருங்க… ஓ.கே… ‘

இருவரும் இரவு எட்டு மணிக்காக காத்திருக்கிறார்கள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாளைய காதல்💗 (பகுதி 1) – ரவி கீதா

    முதல் சம்பளம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு