எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ ஐயய்யோ என் வண்டியை காணோம்… ‘ என்று பதறினான், சிவா. அவன் போட்ட கூக்குரலைக் கேட்டு மக்கள் கூடிவிட்டார்கள்.
வண்டியை பூட்டிவிட்டுத்தான் மருந்து வாங்கப் போயிருந்தான். கடையில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது. மருந்து வாங்கிவிட்டு வெளியே வந்து பார்த்தால் மொபெட்டைக் காணவில்லை.
‘ ஏம்பா, வண்டியை பூட்டி வச்சிட்டுத்தானே போனே…’
‘ ஆமாங்கண்ணா… ‘
‘ தம்பி… பூட்டினே சரி, சாவியை அதுலயே விடலையே… ‘
‘ தோ பாருங்க… சாவி… என் கையில இருக்கு… ‘
‘ சரியா பூட்டியிருக்கானு ஒருதடவை ஹேன்ட்பாரை ஆட்டி பார்த்தியாப்பா… ’
‘ ஆட்டிப் பார்த்துட்டுதாங்க போனேன்…. ‘
‘ ஏன் கேட்டேன்னா, பூட்டாம விட்டால் அப்படியே தள்ளிக்கிட்டுப் போய்டுவானுங்க… அதான்… ’
‘ இப்போ ட்யூப்ளிகேட் சாவியெல்லாம் ஈசியா செஞ்சிடலாம்பா… இங்கே ட்யூப்ளிகேட் சாவி போட்டுத்தரப்படும்னு போர்டு வச்சிக்கிட்டு நிறைய பேரு உட்கார்ந்திருக்கானுங்க. எவனோ ட்யூப்ளிகேட் சாவி போட்டுத்தான் லவட்டியிருக்கான் போல…’
‘ ஏம்பா… வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா… ‘
‘ இல்லீங்க… ‘
‘ நேரா போலிஸ் ஸ்டேஷனுக்கு போ. எழுதிக் குடு. அவங்களுக்கு தெரியும், நிக்கிற வண்டிய எவன் எடுப்பான்னு… நாலு தட்டுத் தட்டி விசாரிச்சு வண்டிய மீட்டுக் குடுத்துடுவாங்க… ‘
ஆளாளுக்கு தெரிந்ததை சொல்ல, இவன் குழம்பிப்போய் விழி பிதுங்கி நின்றான்.
ஒருவர், ‘ ஏம்பா மசமசன்னு நிக்கறே… ’ என்றுவிட்டு, மற்றவர்களைப் பார்த்து, ‘ ஏம்பா… யாராவது இந்ததம்பியை போலீஸ் ஸ்டேஷன் வரை கூட்டிக்கிட்டு போங்கப்பா… ‘ என்றார்.
‘ இல்ல ஸார்… நான் வீட்டுக்குப் போறேன்… ‘ என்றுவிட்டு மருந்து கவருடன் நடக்க ஆரம்பித்தான் அவன். அம்மாவுக்குத் தெரிந்தால் மொத்துவார்களே என்ற கவலை உடனே வந்து பயமுறுத்தியது அவனை.
xxxxxxxxx
விவரம் அறிந்ததும் அவனை அடிக்க ஓடிவந்தாள் அம்மா. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடினான். ‘ உங்கப்பா வரட்டும்… இனிக்கு இருக்கு… உனக்கும் சரி… அவருக்கும் சரி… ‘ கத்தினாள் அவள்.
தங்களது சக்திக்கும் மீறி, பைனான்ஸில் கடன் வாங்கி மொபெட் வாங்கிக் கொடுத்த புருஷனின் மேலும், அதை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியாத பிள்ளையின் மேலும் அவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.
எங்கோ போய் தலைமறைவாய் இருந்துவிட்டு விளக்கு வைக்கும் நேரத்திற்குத்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அவன். வரும்போதே அப்பாவின் சைக்கிள் வீட்டுமுன் நிற்கிறதா என்று முன்னெச்சரிக்கையாக பார்த்துக் கொண்துதான் வாசலை நெருங்கினான். அப்பா, அம்மாவைப்போல அல்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் டைப். ஆனாலும் இப்போது விஷயம் தெரிந்திருந்து கத்தினாலும் கத்துவார். மாதா மாதம் அவரல்லவா தவணைக் கட்டுகிறார்.
மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்த்தான். பதட்டத்துடன் உட்கார்ந்திருந்தார் அப்பா. இவனைப் பார்த்ததும் திடீரென்று கத்த ஆரம்பித்தார்.
‘ இப்படி தறுதலையாட்டம் ஏன்டா அலையறே… ஒழுங்கா, படிக்கப் போகலை, எங்கேயாவது வேலைக்குப் போடான்னா அதுவும் போகலை. இப்படியே காலிப் பயலுகளோட சுத்தவேண்டியது. வேளாவேளைக்கு வந்து வீட்டிலே சாப்பிட வேண்டியது… பத்தாயிரம் ரூபா சுளையா முன்பணம் கட்டி வண்டிய வாங்கி, மாசா மாசம் ஆறாயிரம் ரூபா தவணை வேற கட்டிக்கிட்டிருக்கேன். என் கஷ்ட காலம் இந்த ரெண்டு மாசமா வேற பணம் கட்டமுடியலை… நீ எந்தக் கஷ்டமுமே உணராம வண்டியை தொலைச்சிட்டு வந்து நிற்கிறியேடா… ’ என்று கத்தினார். இடையிடையே அவனது அம்மாவும் அதற்குத் தூபம் போட்டாள்.
கொஞ்ச நேரம் விட்டு, ‘ சரி… பூட்டியிருந்த வண்டி காணாம போனா நீயுந்தான் என்ன பண்ணுவே… ‘ என்று அலுத்துக் கொண்டவர், ‘ சரி வா… ஸ்டேஷனுக்குப் போய் புகார் தந்துடலாம்… ‘ என்று அவனையும் கூட்டிக் கொண்டு கிளம்பலானார். அவன் சைக்கிளை மிதிக்க, பின்னால் உட்கார்ந்து புலம்பிக்கொண்டே வந்தார் அவர்.
xxxxxxxxx
‘ எப்போ வண்டி காணாமப் போச்சு, எங்கேயிருந்து காணாமப் போச்சு… ‘ துருவித் துருவிக் கேட்டார் போலீஸ் காரர். விவரத்தைச் சொன்னார் ராமசாமி.
‘ வண்டி எப்போ வாங்கினது… சொந்த காசா, பைனான்ஸா… ‘ என்றார் அவர்.
‘ ஆறு மாசமாகுதுங்க வண்டி வாங்கி. ஆர்.கே.ஆட்டோ பைனான்ஸ்ல வாங்கினது… ‘ என்றார் இவர்.
‘ தவணை கரெக்டா கட்டிக்கிட்டு வர்றீங்களா… ‘
‘ ரெண்டு மாசமா கட்டலைங்க… ‘
‘ அப்போ அவங்கதான் தூக்கியிருக்கணும்… போய் பார்த்துட்டு அவங்க எடுக்கலைனா மட்டும் இங்கே வாங்க… ‘ சிரித்துக்கொண்டே சொன்னார் அவர்.
அப்பாவும் பையனும் மறுபடியும் சைக்கிளில் புறப்பட்டனர்.
‘ ரெண்டு மாசமா தவணை கட்டலைன்னதும் ட்யூப்ளிகட் சாவி போட்டு அய்யா சொன்ன மாதிரி அவங்கதான் தூக்கிட்டுப் போயிட்டாங்களோ… ‘ புலம்பிக்கொண்டே வந்தார் ராமசாமி.
மொபெட் பத்திரமாக அங்கேதான் இருந்தது..
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings