in

காகித ஓடம் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

காகித ஓடம் (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“அமுதா ரெடியாயிட்டியா?”

“மாரி அண்ணே… இதெல்லாம் சரிப்பட்டு வருமா? ஒரே பதட்டமாயிருக்கு… மனசு படபடக்குது. அத்தைக்குத் தெரிஞ்சா தாம் தூம்ன்னு  குதிக்கும்”

“அமுதா… உன்னை என் சொந்த தங்கச்சியாத் தான் பாக்கறேன். ஏதாவது ஒரு முடிவு எடுத்துத் தானே ஆகணும். யோசிச்சுகிட்டேயிருந்தா கதைக்கு ஆகுமா? கண்ணு தெரியாத மாமியாளையும் ஆறு மாச பச்சை புள்ளையயையும் வச்சிகிட்டு வாழ்க்கைய எப்படி ஓட்டுவ? உன்னக் கட்டிகிட்டவன் பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டான். இருந்தவரை உன்னை ராணியாத் தான் வச்சிருந்தான்”

ஸ்டண்ட் நடிகனாக இருந்த அமுதாவின் கணவன் ராமு, சூட்டிங்கில் நடந்த விபத்தில் இறந்தது ஞாபகத்திற்கு வர, அமுதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது

வேகமாக பறந்து ஓடும் ரயிலை, பைக்கில் தாண்டும் காட்சி. எதிர்ப்பக்கத்தில் அட்டைப் பெட்டிகள் நிறைய அடுக்கப்பட்டு இருந்தன. அம்மாதிரி காட்சியெல்லாம் ராமுவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. திறமையானவன் என்பதாலேயே அக்காட்சியில் கதாநாயகனுக்கு டூப்பாய் போட்டிருந்தார்கள்.

அவனது கெட்ட நேரம் அன்று டைமிங் மிஸ்ஸாக, பைக்கின் ஒரு பகுதி ரயிலில் லேசாக இடிக்க, அட்டைப் பெட்டியின் மீது விழ வேண்டியவன், தரையில் விழ, தலை கல்லில் மோதி அந்த இடத்திலேயே பலியானான்.

விஷயம் தெரிந்து கதறி துடித்த அமுதா,  அப்போது ஏழு மாத கர்ப்பிணி. பிரசவத்திற்கு அப்பா வீட்டிற்குப் போனவள், குழந்தை ராஜா பிறந்தவுடன், மூன்று மாதங்கள் கழித்து கணவன் வீட்டிற்கு வந்தாள்.

கண் தெரியாத மாமியாரை கவனிக்க ஆளில்லை. அவள் அப்பா வீட்டிலும் அவளை தாங்கும் அளவு வசதியில்லை

ராமு ஷுட்டிங்கில் இறந்ததால் கிடைத்த இழப்பீட்டுத் தொகையை, பேங்கில் போட்டு, அதன் வட்டியை வைத்து அரைகுறையாகத் தான்  வாழ்க்கை நடத்த முடிந்தது.

மாரி துணை நடிகர்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜென்ட், ராமுவின் நண்பன்.  படத்தில் நடிக்க ஒரு குழந்தை தேவைப்படுவதாக தெரிந்து கொண்டவன், அதை அமுதாவிடம் கூறினான்.

“வேணாம்’ண்ணே… அந்த மனுஷனை பறிகொடுத்ததே போதும். கை புள்ளைய நடிக்க வைக்க வேண்டாம்” என்றாள் மனபாரத்தோடு

“அமுதா… இந்த சினிமா தொழில விட்டா நமக்கு வேற என்ன தெரியும்? வேற எந்த வேலைக்கு உன்னால போக முடியும்? கைக்குழந்தையையும், கண்ணு தெரியாத கிழவியையும் காப்பாத்த வேணாமா? தினப்படி செலவுக்கு பணம் வேணாமா?

எல்லாம் குழந்தை கொஞ்சம் வளர்ற வரை தான்.  அப்புறம் நீயே வேற ஏதாவது வேலைக்குப் போகலாம். பேருக்கேத்த மாதிரி உன் குழந்தை ராஜாவாட்டம் இருக்கான். அது தான் சான்ஸ் கிடைக்குது. கிழவிகிட்ட சொல்லாத, வேற ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிச்சிடு”

அமுதா யோசித்தாள். ‘பணம் இல்லாவிட்டால் தினசரி வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? காசிருந்தால் அத்தைக்கு கண் ஆபரேஷன் செய்யலாம். ராஜாவை நன்கு வளர்க்கலாம். ராமுவுக்காக  அனுதாபப்பட்டு உதவி செய்பவர்கள் காலம் முழுவதும் செய்வாங்களா? ஏதாவது வருமானம் தேவை தான்’

ஒரு முடிவுக்கு வந்தாள். மாமியாரிடம் தான் வேலை தேடிப் போவதாக சமாளித்து விட்டு, மாரி வீட்டிற்கு நடந்தாள்

“அமுதா வந்துட்டியா? குழந்தைக்கு வாசனைப் பவுடர், புது டிரஸ், எல்லாம் போட்டு விடு. பெரிய வீட்டு குழந்த மாதிரி இருக்கணும்”

செட்டிற்கு வந்து சேர்ந்ததும், புரொடக்ஷன் மேனேஜரைப் போய் பார்த்தான் மாரி

“என்ன மாரி… குழந்தை ரெடியா?  ஸ்டண்ட் ராமுவோட குழந்தை தான, ஜோராத் தான் இருக்கான்.   ஹீரோயின் ராகினிஸ்ரீயோட  பிள்ளையா  நடிக்குது. குழந்தை சுத்தமாய் இல்லைன்னா… அழகா இல்லேன்னா… கையாலக் கூட தொடாது.  மூட் அவுட் ஆயிடுச்சுன்னா  ஷூட்டிங் கேன்சல் தான். பாத்து நடந்துக்கோ. டிரஸ், டயபர்  எல்லாம் ரெடியாயிருக்கு. அந்த அம்மா வந்துட்டா, ஒரு நிமிஷம் கூட டைரக்டர்  டைம் வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு சொல்லுவார். குழந்தைக்கு மேக்கப் போட்டு ரெடியா இருக்க சொல்லு”

“சார்…” மாரி இழுக்க

“என்னப்பா?”

“குழந்தை வெறும் தாய்ப்பாலை குடிச்சுகிட்டு கிடக்கு. கொஞ்சம் பணம் கொடுத்தால் நல்லது. பால்பவுடர், டானிக், வாங்கி கொடுத்தா, கொஞ்சம் புஷ்டியா இருக்கும்”

“சரி சரி… ஆயிரம் ரூபா வாங்கிக்கோ. மேனேஜர்கிட்ட சொல்லிடறேன். ஷூட்டிங் முடியிற வரைக்கும் குழந்தை ஹெல்தியா இருக்கணும்”

பணத்தை வாங்கி அமுதாவிடம் கொடுத்தான் மாரி. குழந்தை மேக்கப் போட்டுக் கொண்டு ரெடியாக இருந்தாலும் ராகினிஸ்ரீ வருவதற்கு இரண்டு மணி நேரமாக… குழந்தை தூங்கிப் போயிருந்தது. செட்டுக்குள் எட்டிப் பார்த்த அமுதா ஆச்சரியப்பட்டுப் போனாள்

அழகாக வீடு மாதிரி அலங்கரிக்கப்பட்டு இருந்த செட்டில், குழந்தையின் தொட்டில் பட்டுத் துணி விரித்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தது.

குழந்தையை தொட்டிலில் போடுகிற பங்ஷன். ராகினிஸ்ரீ அழகான உடையில், கையில் குழந்தையை அணைத்தபடி ஆடிப் பாடுவது போல சீன் படமாக்கப்பட்டது.

தன் குழந்தையை சீராட்டி பாராட்டி தொட்டிலில் போடுவது நிஜ வாழ்க்கையில் கிடைக்காத பேறு. அது நிழல் வாழ்க்கையில் நடப்பதைப் பார்த்து அமுதாவின் தாய் மனம் நிறைந்தது.

அன்றைய ஷூட்டிங் முடிந்ததும், பணத்தை புரெடக்ஷன் மேனேஜரிடம் வாங்கி, அவளிடம் கொடுத்தான் மாரி

“அமுதா… குழந்தையை கவனமா பார்த்துக்கோ. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து சூட்டிங்கிற்கு குழந்தை வேணுமாம்”

“சரி அண்ணே” என்றவள், சந்தோஷமாக மாமியாருக்கு பழங்கள், மருந்து மாத்திரைகள்  சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்

முதல் நாளைப் போலவே அடுத்த மூன்று நாட்களும் சுமூகமாக கழிந்தது. அன்று சூட்டிங்கில் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு ஹீரோவுடன் சண்டை போடுவது போல சீன் எடுக்க, குழந்தை பதறி அழுதது. அமுதா மனம் தாங்காமல் குழந்தையை சமாதானப்படுத்த நகர்ந்தாள்.

அவளை தடுத்த மாரி, “அமுதா என்ன காரியம் செய்ற… அவங்க வேலைக்கு நடுப்புற நாம போனா அவங்களுக்குப் பிடிக்காது. அவங்க தானா கொண்டு வந்து கொடுத்தால் தான் உண்டு. நமக்கு வேற வழியில்லை. அவங்களுக்கு நம்மள விட்டால் நூறு பேர் கிடைப்பாங்க. உனக்கு கஷ்டமா இருந்தா வெளியே போய் நில்லு”

வெளியே வந்து நின்ற அமுதாவின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்க,  மனம் தவித்தது

‘குழந்தையை தந்தால் தாய்ப்பால் கொடுத்து சமாதானப் படுத்தலாம்’ என்று தாய் உள்ளம் உருகியது.

ராகினிஸ்ரீ  குழந்தையின் அழுகையில் எரிச்சலானாள்

“ஏம்பா… இந்த குழந்தைக்கு என்ன வந்தது? மூன்று நாள் நல்லாத் தானே இருந்தது. இது கத்துற கத்துல எனக்கு தலைவலி வந்துடும் போலருக்கு” என்று சிடுசிடுத்தாள்.

அவள் மூட் அவுட் ஆகி விடக் கூடாதே என்று ஒரு  நிப்பிளை குழந்தையின் வாயில் திணித்தான் உதவியாளன். பாலுக்கு ஏங்கிய குழந்தை வெறும் ரப்பரைச் சப்பிக் கொண்டே தூங்கியது

ஒருவழியாக ஷுட்டிங் மாலை 6 மணிக்கு முடிய, குழந்தை அமுதாவிடம் வந்தது. அவசரமாக மரத்தடி பக்கம் சென்று தாய்ப்பால் கொடுத்தாள். வாடிப் போயிருந்த குழந்தை அசதியில் தூங்க ஆரம்பித்தது

அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தவள் அதிர்ந்து போனாள். நெருப்புக்கு நடுவே ராகினிஸ்ரீ குழந்தையுடன் தப்பி வெளியே ஓடி வருவது போன்ற சீன்

“அண்ணே… என்ன அண்ணே… நெருப்பு சூடு எல்லாம் குழந்தை தாங்குமா? இப்படி ஒரு சீன் இருக்குன்னு நம்மகிட்ட சொல்லவே இல்லையே”

“உன் குழந்தை பத்து படத்துல நடிச்சு ஸ்டாரானாத் தான் இதெல்லாம் சொல்லுவாங்க. பயப்படாத அமுதா… குழந்தை தாங்கினாலும், அந்தம்மா ராகினிஸ்ரீ  லேசான வெக்கையைக்  கூட  தாங்க மாட்டாங்க. அதனால ஜாக்கிரதையாகத் தான் எடுப்பாங்க”

மாரி சொன்னது போல குழந்தையின் உடையை ஈரமாக்கி, ஜாக்கிரதையாக எடுத்தாலும், சின்ன குழந்தைக்கு அதுவே தாங்க முடியவில்லை. அழுது அழுது சோர்ந்து போனது

அந்த அழுகையும் ஈர உடையும் சேர்ந்து, குழந்தையை காய்ச்சலில் தள்ளியது

“அண்ணா… இனியும் என்னால் தாங்க முடியாது. அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும் சரி, இல்ல பட்டினி கிடந்து செத்தாலும் சரி, குழந்தையை மட்டும் நடிக்க வைக்க வேண்டாம். அதுக்கு பதிலா நான் வேற வேலைக்கு போறேன். ராமுவின் நினைவாய் இருக்கிற அந்த சின்ன ஜீவனைக் கஷ்டப்படுத்த மாட்டேன்” என்று கதறி அழுதாள் அமுதா.

மாரிக்கு அவள் தாயுள்ளம் புரிந்தது

“அமுதா… இதுக்கு மேல உன்னை வற்புறுத்த மாட்டேன். நான் உனக்கு உதவி செய்யணும்ங்கற ஒரு ஆதங்கத்தில் தான் இப்படி செஞ்சேன். எனக்கும் அந்த பச்சைக் குழந்தை படுகிறபாடு தாங்கல.   வாக்கு கொடுத்ததால  இந்த ஒரு படம் மட்டும் முடிச்சு கொடுத்துடுவோம், பிறகு விலகிடலாம். அப்புறம் நீ என்ன செய்ய பிரியப்படுறியோ அதையே செய். உன் கஷ்டம் எனக்கு புரியுது மா. வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையே கிடந்து போராடுற. உன் தாய்மைக்கு முன்னால உனக்கு எந்த கஷ்டமும் பெருசில்ல எனக்கு நல்லா புரியுது மா”

பூஞ்சிட்டுக் கன்னங்கள்,

பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே …

பொங்கல் பிறந்தாலும்,

தீபம் எரிந்தாலும் ,

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே…

இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே…

காற்றில் மிதந்து வந்த பாடல் காதில் விழ, அமுதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழா (சிறுகதை) – ✍ சுமத்ரா அபிமன்னன், மலேசியா

    பல வலி (சிறுகதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை