ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
என் கனவில் உனைக் காணும் நாளொன்றில்..
காதலே பொழிகிறது என் வானமதில்!
என் வாழ்வின் நிஜமென நீயிருக்க,
வானவில்லில் கூடுகட்டி நாம் வசிக்க,
பனி நிலவும் பால் பொழியும்.. -உன்
பார்வையில் என் உயிர் கரையும்!!
கண் கொண்டு நான் காணும் காட்சியாவும்,
காதலே நீயெனத் தோன்றிடவே,
என்ன மாயம் செய்தாயோ என் மனதில்..
முப்பொழுதும் நனைகிறேன் உன் நினைவில்!!!
காதல்வயப்படுவது தான் பெரும்சுகம் எனக்கொண்டால்..
காதலிக்கப்படுவது தான் பரமசுகம் ஆகாதோ?
வானமெங்கும் நீலமில்லா வெண் மேகம்.. பூமியெங்கும் நிலமில்லா.. நீலம் பூசிய ஆழ்கடல். அந்தப் பெருஞ்சாகரத்தில்.. ஒரே ஒரு ஒற்றைப் படகில், அவனும் அவளும் மட்டும் தனித்திருக்க.. அவர்களிருவரும் சுற்றி இருக்கும் எதையும் உணராது, அவனுள் அவளையும், அவளுள் அவனையும் தொலைத்து… விழி வழி உயிர் கரைந்து கொண்டிருந்தனர்.
திடீரென்று வானம் கிடுகிடுத்து இடிஇடிக்கும் சத்தம் கேட்க, விருட்டெனப் படுக்கையில் இருந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் லயா… அபிலயா.
சே.. எல்லாம் கனவா என்று எண்ணியவள், அருகிலிருந்த தனது கைபேசியில் மணியைப் பார்த்தால். அது மணி நான்கரை என்று காட்டியது.
“என்னதிது இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா எழுப்பறாங்க? என்ன விஷயமா இருக்கும்?” என்று யோசித்தவள், தனதருகில் கதவு தட்டப்படும் ஓசையால் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் அபிரதியை உலுக்கி எழுப்பினாள்.
“ஹே அபி அங்க பாரு அம்மா கதவு தட்றாங்க.. என்னாச்சுன்னு தெரியல, வா சீக்கிரம் என்னனு போய்க் கேட்கலாம்” என்று அவளையும் இழுத்துக் கொண்டு கதவைத் திறந்தாள் லயா.
“என்னம்மா எதுக்கு இவ்வளவு காலையில எழுப்பறீங்க?” என்று வரும் கொட்டாவியை அடக்கியவறே இருவரும் கேட்டனர்.
அதற்கு அவர்கள் தாயாரோ, “அபி, உனக்குத் தெரியுமா? உங்க பாட்டி கூப்பிட்டு இருந்தாங்க. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போ தான் நம்மள பற்றிய விவரம் கிடைச்சுதாம். அது மட்டுமில்லாம, உங்க மாமா.. அதான் என்னோட அண்ணா, உங்க அப்பா கிட்ட மனசார மன்னிப்பும் கேட்டுட்டாரு. உடனே உங்க அப்பாவும் சமாதானம் ஆகிட்டாரு.
அதான் இன்னும் ரெண்டு வாரத்துல நம்ம குலதெய்வம் கோவில்ல பொங்கல் வருதாம்.. அதுக்கு நம்மல வரச்சொல்லி கூப்பிட்டிருக்காங்க. உங்க அப்பாவும் போகலாம்னு பர்மிசன் தந்துட்டாரு. நாம இன்னைக்கே, இப்போவே கிளம்பறோம். சீக்கிரம் கிளம்புங்க” என்று மூச்சுவிடாமல் கூறினார் அவர்களின் தாய் துளசி.
அப்பொழுது அங்கே வந்த செழியனைக் கண்டா லயாவோ, “எப்படியோ அம்மா… சார் இத்தனை வருஷம் கழிச்சாவது அவரோட மச்சான் கூடச் சமாதானம் ஆகிட்டாரு” என்று கூறவும், செழியனின் முகம் கூம்பிப் போனது.
“இங்க பாரு லயா… நானும் உன்கிட்ட எத்தனையோ முறை என்ன அப்பான்னு கூப்பிடுன்னு சொல்லிட்டேன். என் மனசுல உனக்கும் அபிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. ஆனா நீ உன் மனசார என்ன அப்பாவா நினைக்கல இல்ல?” என்று கேட்டதும் தான், தான் வழக்கமாகச் செய்யும் அதே தவறை இம்முறையும் செய்து விட்டதை உணர்ந்தாள் லயா.
உடனே அவள், “சாரிப்பா… தொட்டில் பழக்கம்ன்னு சொல்லுவாங்கல்ல, அந்த மாதிரி தான் இதுவும். சின்ன வயசுல இருந்து அம்மாவ நான் இப்படியே தான் கூப்பிடறேன். ஆனா உங்கள சார்ன்னு தான கூப்பிட்டேன். அதான் என்னால் மாத்திக்க முடியல. ஆனா.. இனி நான் வாய் தவறி கூட உங்கள சார்ன்னு கூப்பிட மாட்டேன். இது என் அப்பா மேல சத்தியம். அதாவது உங்கமேல சத்தியம்.. சரியா அப்பா?” என்று கேட்டாள்.
லயா இனி உங்களை என்றுமே அப்பா என்று தான் அழைப்பேன் எனக் கூறியதும், தனது விழியோரம் கசிந்த சிறுதுளி நீரை யாரும் அறியாது துடைத்துக் கொண்டார் செழியன்.
அப்பொழுது அந்த நிலைமையைச் சீராக்கும் பொருட்டு இடைபுகுந்த அபி, “அப்பாவைப் பாத்தியா லயா, எப்படி அதுக்குள்ள உணர்ச்சிவசப் படறாருன்னு. ஆனா நீ தான் அவரை ஹிட்லர் ரேஞ்சுக்கு வச்சு பயப்படற. அதனால தான் நான் அவரைக் காமெடி போலீஸ் மாதிரி, காமெடி ஹிட்லர்ன்னு சொல்றேன். புரியுதா?” என்று லயாவிடம் கூறியவள்,
செழியனிடம் திரும்பி, “என்ன மிஸ்டர் காமெடி ஹிட்லர்? உங்க செல்லப் பொண்ணுக்கு, நம்ம தாத்தா பாட்டிக்கும், நமக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியணுமாம். அந்த மொக்க ஸ்டோரிய நீங்களே தான் சொல்லணுமாம். சொல்றீங்களா?” என்று அவரையும் பேச்சினுள்ளே இழுத்து விட்டாள்.
அவளது முயற்சி பலித்தது போல, அந்தச் சம்பவத்தைச் சொல்லும்படி கேட்டதும் செழியனின் முகத்தில் அசடு வழிந்தது.
அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட லயாவோ, “என்னப்பா? அது என்ன அப்படிப்பட்ட விஷயம்? ரொம்பச் சஸ்பென்ஸ் வைக்காதீங்க.. சீக்கிரம் சொல்லுங்களேன் ப்ளீஸ்…” என்று கொஞ்சவும், அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்லலானார் அவர்.
“அது வந்து லயாமா… நாங்க அப்போ நம்ம ரதிக்கு மொட்டை போடறதுக்காக நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போயிருந்தோம். அங்க மொட்டை எல்லாம் போட்டுட்டு காது குத்தும் போது, உங்க அம்மாவுடைய அண்ணன் கோவேந்தன், அவன் பையன் கிருஷ்ணனையும் நம்ம ரதியையும் சேர்த்து வச்சுத் தமாஷா பேசினான். நான் பொண்ண பெத்தவன் இல்லையா? அதனால எனக்கு மனசுக்குள்ள பயம் வந்துடுச்சு. அது என்னன்னா… என்ன மாதிரியே என் பொண்ணும் அந்தக் குடும்பத்துல வழுக்கி விழுந்துடக் கூடாதுன்னு நினைச்சாலும், அதைவிட ஒரு பெரிய காரணம் இருந்துச்சு…” என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தியவரைத் துளசி நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளினார்.
“என் குடும்பத்துல வந்து நீங்க வழுக்கி விழுந்துட்டீங்களா?” என்று அவர் முறைத்ததும்
“ஸ்ஸு.. கதை சொல்றப்போ குறுக்கப் பேசாத” என்று தன் மனைவியை அடக்கி விட்டு மகள்களுக்குத் தெரியாது சிறிது கண்ணடித்தும் விட்டு மேலே தொடர்ந்தார்.
“அந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா… நாம சின்னப் பசங்க மனசுல எந்த ஆசையும் வளர்க்கக் கூடாது இல்லையா? நாளைக்குப் பெருசானதுக்கு அப்பறம் அந்தப் பையனுக்கு வேற பொண்ணு மேல பிரியம் வந்துட்டா, என் பொண்ணு அவனையே மனசுல நினைச்சுட்டு கஷ்டப்படக் கூடாதுல்ல? அதனால இவ அண்ணன்கிட்ட, மச்சான் இப்பவே குழந்தைங்ககிட்ட இப்படிப் பேசிக் கூடாது. அதுவும் இத்தனை பேருக்கு மத்தியில இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு சொல்லிட்டேன்.
அதுக்குப் போய் உங்க மாமனுக்குக் கோவம் வந்துடுச்சு. அது கடைசியில கைகலப்புல முடிஞ்சுடுச்சு. ஹ்ம்ம்.. அன்னைக்கு நின்னு போன சொந்தம் தான்… நானும் வீறாப்புல இருந்துட்டேன். அவங்களுக்கும் நாம வேற ஊருக்கு வந்துட்டதால, நம்மல கண்டுபிடிக்க முடியாம போய்டுச்சு” என்று கூறி பெருமூச்சொன்றை விட்டார் அவர்.
“சரி விடுங்கப்பா… அதான் இவ்வளவு வருஷம் கழிச்சாவது அவங்க நம்மள கண்டு பிடுச்சுட்டாங்கல்ல… அதுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு மூட்ட கட்டற வேலையைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் லயா.
அவள் கூறியதைக் கேட்ட அனைவரும் ஆமோதிக்கும் பொருட்டுத் தலையசைத்தவர்கள், மனதில்… மகிழ்ச்சி, நிம்மதி, என்ற கலவையான உணர்வுடன் ஊருக்குச் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் அறைக்குள் வந்த பின்பே லயாவின் மனது மேலும் குழம்பியது. குழம்பியது மட்டுமல்லாது சிறிது பயமும் கொண்டது.
அங்கே இவர்களது சொந்த ஊரான கோவைக்குச் சென்ற பின்பு அவர்கள் தன்னைப் பற்றி என்ன கேட்பார்களோ? தன்னைப் பற்றித் தெரிந்த பின்பு என்ன சொல்லுவார்களோ என்றெண்ணி சஞ்சலத்துடனே இருந்தாள் அவள்.
அவளது சஞ்சலத்தை உணர்ந்த அபிரதி, அவளிடம் எதுவும் பேசாது தன் தாயிடம் சென்று விஷயத்தைக் கூறினாள். ஏனென்றால், என்னதான் லயா தன்னைத் தோழியாக ஏற்றாலும், சகோதரியாகக் கொண்டாலும், தாயிடம் தான் தனது மனத்தினை முழுவதுமாகப் பகிருவாள் என்பதை அபிரதி அறிந்தே இருந்தாள்.
எனவே தான், தானே அவளிடம் என்ன ஏதென்று அவளை நோண்டி அவளது மனவருத்தத்தை மேலும் அதிகரிக்க விரும்பாது, தாயிடம் பிரச்சனையைக் கூறினாள்.
“அவ அங்க இருக்கறவங்க எல்லாரும் அவளை என்ன நினைப்பாங்களோன்னு பயப்படறா மா. அவளுக்கு ஏற்கனவே சுயமரியாதை அதிகம். அவங்க ஏதாவது நம்ம லயாவ சொல்லிட்டாங்கன்னா என்னால தாங்க முடியாது. நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கங்க” என்று தாயிடம் தனது உடன்பிறவா சகோதரிக்காக வாதிட்டாள்.
“டேய் அப்படி எல்லாம் நடக்காது டா… இல்ல அப்படி நடக்க விட்டுட்டு நாம கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருப்போமா சொல்லு? அது மட்டும் இல்லாம, இவளைப் பத்தி அவங்களுக்கு ஏதாவது சந்தேக வந்தாலே, நாம அவங்ககிட்ட லயாவைப் பத்தி முழுசா சொல்லி , அவ நம்ம வீட்டு பொண்ணு, எங்களோட சொந்த மகதான்னு புரிய வைப்போம். அவங்களுக்கு அதுல ஏதாவது பிரச்சனைனா… அந்த உறவே நமக்கு வேணாம் டா…” என்று சாதாரணமாகச் சொல்லவும், அபி அதிர்ந்து.. ” அம்மா..” என்று கூறினாள்.
“ஆமா அபி.. எனக்கு என்னோட அப்பா அம்மாவை விட, என் சொந்தங்களை விட, லயா தான் முக்கியம்” என்று உறுதிப்படக் கூறினார் அவர்.
“நல்லா யோசிச்சு தான சொல்றீங்க அம்மா? லயா அவ வாழ்க்கையில நம்மளால… அதுவும் என்னால இழந்தது எல்லாம் போதும். இனிமேலும் அவளுக்கு எந்த ஏமாற்றமும், வருத்தமும் வர நான் விட மாட்டேன். அதனால நாம அங்க போனதுக்கு அப்பறம் அவங்க லயாவ ஏதாவது சொல்லி, அதையெல்லாம் நாம அனுசரிச்சுட்டுப் போகக் கூடாது. அதனால தான் நான் இவ்வளவு தூரம் சொல்றேன்” என்று கூறினாள் அபிரதி.
“நீ நம்ம லயா மேல இவ்வளவு பாசம் வச்சுருக்கறதுல எனக்கு ரொம்பச் சந்தோசம் அபி மா.. அதே சமயம் நீ என்ன நம்பனும் டா. எந்த அம்மாவும், எந்தவொரு சூழ்நிலையிலயும் அவளோட குழந்தை கஷ்டப்படறதையோ, அவமானப்படறதையோ தாங்கிட்டு சும்மா இருக்க மாட்டா. அப்படித் தன்னோட குழந்தையை வருத்தப்பட வைக்கறது அந்தக் கடவுளாவே இருந்தாலும் சரி, இல்ல அவளோட பெத்தவங்களா இருந்தாலும் சரி… அவ தன்னோட குழந்தைக்குத் தான் எப்பவுமே ஆதரவா இருப்பா” என உணர்வுப்பூர்வமாகக் கூறினார் துளசி.
அவரது இந்த முழு உரையையும் கேட்டப் பின் தான் பெண் மனம் சற்றுச் சாந்தப்பட்டது. பின்பு சற்று நேரத்தில் அனைவரும் தயாராகிவிட, காரில் ஏறி வேலூரிலிருந்து கோவைக்குக் கிளம்பினர்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
Nice👍👍👍👍👍👍😀😀😀😀😀