அந்த பெட்ரோல் பங்கில் வரிசையாக வாகனங்கள் பெட்ரோல் போடக் காத்திருக்க, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன், அந்த வரிசையைப் பற்றிக் கவலையே படாமல், இடையில் தன் வாகனத்தை நுழைத்தான். அதைக் கண்டு பலர் கத்த, அதை இம்மியளவும் சட்டை செய்யாமல், முன்னதாகவே பெட்ரோலை நிரப்பிக் கொண்டு பறந்தான் அவன். எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது.
“ஹூம்! நாடே கெட்டுக் கிடக்குப்பா” .
தன் வீட்டுக் குப்பைகளை கொஞ்சமும் தயங்காமல் சாலையில் கொண்டு வந்து, அந்தப் பெண் கொட்டி விட்டுச் செல்ல, அதே குரல் மீண்டும் ஒலித்தது,
“காலம் கலிகாலமாப் போச்சுப்பா!”
வயது வித்தியாசமில்லாமல் சிறுவர்களும் பெரியவர்களும் மதுபானக் கடையில் ஒன்றாக நின்றிருக்க, மறுபடியும் குரல் கேட்டது.
“இந்த நாடு எப்பத்தான் திருந்துமோ?”
தன்னைத் தொட்டுப் பிச்சை கேட்டு விட்ட ஒரே காரணத்திற்க்காக அந்த ஏழைச் சிறுவனை, நையப் புடைத்து விட்டு அந்தப் பணக்காரன் நகர்ந்ததும், சன்னமாய் அந்தக் குரல்,
“இது சமூகமா?.. இல்லை.. சாக்கடையா?”
இப்படியாக, தொடர்ந்து நம்மைச் சுற்றிப் பல இடங்களில், பல நிலைகளில் நாம் இது போன்ற குரல்களைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். அதே நேரம், ஒரு முக்கியமான விஷயத்தை நாம் எல்லோருமே மறந்து விடுகின்றோம். அது என்னவென்றால், இங்கு கெட்டுப் போனது நாடுமல்ல, காலமுமல்ல, சமூகமுமல்ல… அதில் வாழும் மனிதர்களாகிய நாம்தான், என்பதையும், அதேபோல், திருந்த வேண்டியதும் நாடல்ல… சமூகமல்ல.. நாட்டு மக்களாகிய நாம்தான் என்பதையும், எல்லோருமே மறந்துதான் திரிந்து கொண்டிருக்கின்றோம்.
இதற்கெல்லாம் தலையாய காரணம், ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றை வாழும் மக்களாகிய நாம் தொலைத்து விட்டதுதான்.
“ஒழுங்கு” என்பது ஒருவன் தன்னை ஒரு வரம்பிற்குள் உட்படுத்திக் கொள்ளும் பயிற்சியாகும். மனித வாழ்வின் நன்மைக்காக நம் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல நன்னடத்தைச் செயல்பாடுகளைப் புரிந்து கொண்டு, பகுத்தறிவிற்கும், மனச்சான்றுக்கும் கட்டுப்பட்டு, அதன் வழி நின்று வாழ்வதே சீரான வாழ்க்கையாகும்.
ஒழுக்கம் என்றால் என்ன?
முறையான நடத்தையோ, செயலோ ஓழுங்கு/ஒழுக்கம் என்று கருதலாம். முறையான நடத்தை என்பது நம் சிந்தனையோ செயலோ சமூகத்திற்கு தீங்கு விழைக்காமல் நல்லனவற்றை விழைவிப்பதாகும். நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும் ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும்
ஒரு மனிதனின் ஓழுக்கம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
பார்வையில்
சிந்தனையில்
செயலில்
பார்வையில்,
நமது பார்வை நற்சிந்தனையை தூண்டுவதாக இருத்தல் வேண்டும்.
கண்கள் படம் பிடிக்கும் ஒரு காட்சியை மனதிற்கு எப்படிப்பட்ட எண்ணங்களை கடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க பார்வை ஒழுங்கு என்பது அவசியமாகும்.
சிந்தனையில், –
நமது எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் நற்செயலை உருவாக்குமாயின் அது நற்சிந்தனை.
பார்வை ஒழுங்கு, சிந்தனை ஒழுங்கு எப்படி வளர்த்துக்கொள்வது?
நாம் காணும் காட்சியில், நேர்மறை (positivity) எண்ணங்களை நம் மனதிற்கு கடத்திக் கொள்வது பார்வை ஒழுங்கு ஆகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு வெள்ளை காகிதத்தின் நடுவில் கருப்பு புள்ளி வைத்த காட்சியை பார்க்கும் பொழுது, காகிதத்தின் பெரும்பான்மையான இடம் வெள்ளையாக இருக்கிறது என்று எண்ணுவது நேர்மறை (Positivity) சிந்தனை.
காகிதத்தின் நடுவில் ஒரு கருப்பு புள்ளி இருக்கிறது என்று எண்ணுவது எதிர்மறை (Negativity) சிந்தனை.
செயலில் –
நமது செய்கை சமூகத்தில் நற்விளைவுகளை உண்டாக்குமாயின் அது நற்செயல் ஆகும். உதாரணத்திற்கு, அதே வெள்ளை காகிதத்தை கொண்டு ஒரு விழிப்புணர்வு வருமாறு ஒரு செய்தியை அடுத்தவர் மனதிற்கு/சமூகத்திற்கு கடத்துவது.
இந்த ஒழுங்கு விதிகள் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அவன் கூடவே, கட்டாயம் இருந்து வரும், எழுதப்படாத சட்டங்களாகும், பல இடங்களில் அவைகள் சரியானதொரு வேகத்தடைகளாகவும் செயல்படுகின்றன. மனிதன் அவற்றை மறக்கும் போதுதான் மேற்கூறிய அவலங்கள் தோன்றுகின்றன.
தனி மனித ஒழுங்குகள்:
ஒருவன் தனக்கென்று ஏற்படுத்திக் கொள்ளும் சுய ஒழுங்கு முறையே தனிமனித ஒழுங்காகும். உதாரணமாக, வைகறையில் எழுவது, கோவிலுக்குச் செல்வது, குறித்த நேரத்தில் உணவு உண்பது, குறித்த நேரத்தில் உறங்குவது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே படிப்பது, என்று தனக்கென்று ஒரு கால நிலைப் பட்டியலை உருவாக்கிக் கொண்டு அதன்படி வாழ்வது தனி மனித ஒழுங்காகும். ஒரு உயர் கொள்கையை தனக்கென உருவாக்கிக் கொண்டு, துணிவோடும் (COURAGE), தூய்மையோடும் (CLEANILINESS), மன நிறைவோடும் (CONTENTMENT) அதனைச் செய்வதும் தனி மனித ஒழுங்கே. சுய ஒழுங்கு முறைகள் மேம்படும் போது தனி மனிதன் ஊக்கம் (DILIGENCE) பெறுகிறான், நேர்மையுடையவனாகிறான், அவனுள் மன முதிர்ச்சியும் (MATURITY), நம்பிக்கையும் (CONFIDENCE), எளிமையும் (SIMPLICITY) உருவாகி அவனை சுய செயலூக்கச் செயல்பாடு (SELF MOTIVATION) கொண்டவனாக மாறி விடுகிறான். மேலும், ஒருவன் தனி மனித ஒழுக்கத்தைத் தீவிரமாகக் கடைப் பிடிக்கும் போது, அவனது நடை, உடை, பாவனைகள் அனைத்துமே சீராகி விடுவதால் அவன் சமூக அந்தஸ்திலும் உயர்ந்தவனாகிறான். அவனிடம் பொறுமை, விவேகம், தெளிவு, தீர்க்கம் போன்ற நற்குணங்கள் தாமாகவே வந்து சேர்ந்து விடுகின்றன.
சமூக ஒழுங்குகள்:
இந்தச் சமுதாயம் கட்டுக் குலையாமல் இருக்கவும், மக்கள் எல்லா நலன்களையும் அடையவும், தனி மனிதன் தன்மானம் இழக்காமலிருக்கவும், சமூகத்தில் சில ஒழுங்கு முறைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. சமுதாய மக்கள் அனைவரும் அவ்வொழுங்கு முறைகளை கடைப்பிடிக்க கடமைப்பட்டுள்ளனர். அவ்வாறு கடைப்பிடிக்கும் போது சமூகத்தில் சகோதரத்துவம், நய நாகரீகம், சூழல் குறித்த அக்கறை, கடமையுணர்வு, நட்புறவு, சக மனிதர்களுடனான அன்புறவு, ஆதரவு, பகிர்வு குணம், இரக்க உணர்வு, சட்டங்களை மதித்தல் போன்றவை செறிவு பெறுகின்றன.
மனிதனானவன், தன் தனி மனித ஒழுங்கு முறைகளையும், சமூக ஒழுங்கு முறைகளையும், ஒரு பொறுப்புணர்வோடு, மிகுந்த ஈடுபாட்டோடு, கடைப்பிடிப்பானேயானால்,
“ஹூம்! நாடே கெட்டுக் கிடக்குப்பா”, “காலம் கலிகாலமாப் போச்சுப்பா!”, “இந்த நாடு எப்பத்தான் திருந்துமோ?”, “ இது சமூகமா?..இல்லை..சாக்கடையா?” போன்ற குரல்கள் எங்கும் கேட்காது, எப்போதும் கேட்காது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings