ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
எங்கள் குடும்ப விசேஷங்களில் தவறாமல் இடம் பெறும் காய்கறிகள் சில உண்டு. அதில் எல்லோருக்கும் பிடித்தது, இஞ்சி புளி.
விரத மற்றும் விசேஷ நாட்களில், பல வகையான உணவுகள் உண்ணும் சமயத்தில், இஞ்சி புளி தொட்டு உண்ணும் போது நன்கு ஜீரணமாகும்.
குழந்தைகள், வயதானவர்கள் சில நேரங்களில் சாப்பிட பிடிக்கவில்லை, பசிக்கவில்லை என்று சொல்பவர்கள், இஞ்சி புளி தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் நன்கு பசி எடுத்து உண்ணத் தூண்டும்
ஆரோக்கியம் தரும் இஞ்சி புளி செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்
கருப்பு புளி – பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 அங்குல நீளம்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – 2 கொத்து
வெல்லம் – 1 துண்டு
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிறு துண்டு
தனி மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. முதலில் புளியை தண்ணீரில் அலசி, பிறகு ஊற விடவும்.
2. அடுப்பில் ஒரு கடாய் வைத்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய், சிறிது வெந்தயம், பெருங்காயம், இரண்டு, மூன்று கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து எண்ணெய் விடாமல், வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆற விடவும்.
3. இஞ்சியை தோல் நீக்கி, கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, கூடவே பச்சை மிளகாயும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. புளியை கரைத்து, வடிகட்டி எடுத்து வைக்கவும்.
5. வறுத்த சாமான்களை, மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக பொடித்து வைக்கவும்.
6. அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
7. எண்ணெய் காய்ந்தவுடன், கடுகு சேர்த்து, வெடித்த பிறகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிறிது, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவந்த பிறகு, நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
8. அடுப்பை மிதமாக எரிய விடவும். இஞ்சி பச்சை மிளகாய் சுருங்கும் வரை வதக்கவும்.
9. கரைத்து வைத்த புளி கரைசல் ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி, சிறிது தனி மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
10. பச்சை வாசனை போகும் வரை கொதித்த பிறகு, பொடித்து வைத்த கொடியைப் போட்டு கட்டி ஏற்படாது கலந்து விடவும்.
11. புளி கரைசல் சுண்டி, எண்ணெய் தெளிந்து வரும் போது வெல்லம் போட்டு கரைய விட்டு இறக்கி விடவும்.
12. நன்கு ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.
குறிப்பு:-
தேங்காய் எண்ணெய் நன்கு வாசனையாக இருக்கும்.
கருப்பு புளி, இஞ்சி வெல்லம் சேர்த்து செய்வதால் இரும்பு சத்து கிடைக்கும்.
அளவாக சேர்த்து கொள்ள நன்மை பயக்கும்.
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings